திரிபுவாதத் திம்மன்கள் யார் (4)

1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் ஜெயலலிதா தiலைமையிலான பார்ப்பன ஆட்சி நடந்தது. ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சென்னையில் நடந்த பெரியார் விழாவில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு கி.வீரமணியிடம் ரூ. 5 லட்சம் நன்கொடை வழங்கினார். நன்கொடையைப் பெற்றுக் கொண்ட கி.வீரமணி, அதே மேடையிலேயே இந்த பணத்தை சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கு பதிலாக, பெரியார் மணியம்மை கல்வி அறக்கட்டளைக்கு வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

ஜெயலலிதாவும் அதை ஏற்றுக் கொண்டார். பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்துக்கான நன்கொடை என்றால் அதை பெரியார் கொள்கைப் பரப்பும் நூல் வெளியீடு போன்ற பிரச்சாரங்களுக்குத்தான் பயன்படுத்த முடியும். ஆனால் அதைவிட - வீரமணி நடத்தும் கல்வி நிறுவனங்கள் தான் அவருக்கு முக்கியம் என்பதால், அந்த நிதியை அந்த அறக்கட்டளைக்கு மாற்றித் தருமாறு கி.வீரமணி கேட்டார்.

69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்து, இடஒதுக்கீடு இடைக்காலத் தடைக்கு உள்ளானபோது அரசியல் சட்டத்தை திருத்த - 69 சதவீத இடஒதுக்கீட்டைக் காப்பாற்ற வேண்டும் என்று தி.மு.க. போன்ற கட்சிகள் கோரிக்கை வைத்தன. அப்போது கி.வீரமணி அரசியல் சட்டத்தைத் திருத்தத் தேவையில்லை என்றும், 31(சி) சட்டப் பிரிவின் கீழ் தமிழ்நாட்டின் 69 சதவீத இடஒதுக்கீடு சட்டத்தைக் கொண்டு வந்துவிட்டால், பிறகு நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் ஆலோசனைகளை வழங்கினார்.

ஜெயலலிதாவும், அன்பு சகோதரர் வீரமணியின் ஆலோசனையை சட்டமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றினார். ஆனால் உச்சநீதிமன்றம் இப்படி ஒரு சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது என்பதை கண்டுகொள்ளவே இல்லை. உச்சநீதிமன்றம் மட்டுமல்ல, ஜெயலலிதா ஆட்சியே உச்சநீதிமன்றத்தில் இப்படி ஒரு சட்டம் நிறைவேற்றியிருப்பதை சுட்டிக் காட்டவில்லை. அதன் பிறகும் உச்சநீதிமன்றம் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான விசாரணையை தொடர்ந்து கொண்டுதான் இருந்தது.

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டு, அதை நீதிமன்றத்தில் தெரிவிப்பதற்குக்கூட மறுத்த ஜெயலலிதாவுக்கு, கி.வீரமணி, 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டத்தைச் சூட்டினார். தமிழக அரசு சார்பில் 'பெரியார் விருது' ஒன்றை அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முதல்வர் ஜெயலலிதா முன் வைத்தார். அதை ஜெயலலிதா ஏற்றார். முதல் பெரியார் விருதை - விருதுக்கு பரிந்துரைத்த கி.வீரமணிக்கே வழங்கினார். விருதைப் பெற்றுக் கொண்ட கி.வீரமணி, 'ஆயுள் உள்ளவரை உங்களுக்கு துரோகமிழைக்க மாட்டேன்' என்று அதே மேடையில் உறுதிமொழி வழங்கினார்.

இப்படி கி.வீரமணி பார்ப்பனப் புகழ் பாடிக் கொண்டிருந்த அந்த ஜெயலலிதா ஆட்சி காலத்தில் 'தினமணி' நாளேட்டுக்காக அன்று 'தினமணி' நாளேட்டின் ஆசிரியர் பொறுப்பில் இருந்த மாலன், கி.வீரமணியிடம் பேட்டி ஒன்றை எடுத்தார். அந்தப் பேட்டியில் கி.வீரமணி வெளியிட்ட கருத்து மிக முக்கியமானது. என்ன கூறினார்?

கேள்வி : வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பார்ப்பனர் எதிர்ப்பு, கடவுள் மறுப்பு இவற்றை திராவிட இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் என்று சொல்லலாம். இந்த நான்குமே இன்றைய சமூகத்தில் நடைமுறையில் மழுங்கி தேய்ந்து போய்விட்டதா?

வீரமணி பதில் : ஒரு திருத்தம் நான் சொல்லலாம் என்று நினைக்கிறேன். இந்த நான்கும் பெரியாருடைய கொள்கைகள் அல்ல. பெரியாருடைய லட்சியம் சுயமரியாதை, பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம். நீங்கள் சொன்ன நான்கும் அந்த லட்சியங்களை அடைய ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரியார் கையாண்ட வழிமுறைகள்.

விமானத்தில் போவது, பஸ்ஸில் போவது, நடந்து போவது மாதிரி, போர் முறைகளில் முப்படை இருக்கிறது. அந்த மாதிரி போர் முறைகள் இந்தப் போர் முறைகள். இந்த முறைகளைப் பொறுத்தவரையில் அந்த லட்சியங்களுக்கு ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் வரும், ஒரு காலகட்டத்தில் முக்கியத்துவம் குறையும்.

23.9.94 'தினமணி'

பார்ப்பனர் எதிர்ப்பு, கடவுள்மறுப்பு, கடவுள் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு எல்லாம் பெரியார் கொள்கைகள் அல்ல என்று, பார்ப்பன ஜெயலலிதாவை ஆதரிக்கும் தனது நிலைப்பாட்டை நியாயப்படுத்த, பெரியார் கொள்கைகளையே இப்படி திரித்தவர்தான் கி.வீரமணி. இதைவிட பெரியார் கொள்கைக்கு - துரோகம் - திரிபுவாதம், வேறு ஏதாவது இருக்க முடியுமா?

வீரமணி கூறிய சுயமரியாதை, பகுத்தறிவு, மனித நேயம், சமத்துவம் என்ற லட்சியங்களை இந்து மகாசபையும் காங்கிரசும் சங் பரிவார்களும் எவருமே எதிர்க்கவில்லை. அவரவர் அவரது கொள்கைகளுக்கும், 'இந்துக்களின் சுயமரியாதை', 'தேசிய சமத்துவம்', 'காந்திய மனித நேயம்', 'பாரதி-விவேகானந்தரின் பகுத்தறிவு' என்று தான் கூறி வந்தார்கள்.

இந்தக் கொள்கைகள் - பார்ப்பன ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் 'வர்ணாஸ்ரமங்கள்' என்றார். பெரியார் அதிலிருந்து மாறுபட்டு வடவர் எதிர்ப்பு, இந்தி எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு ஆகிய கொள்கைகளை உண்மையான சுயமரியாதைக்கும், பகுத்தறிவுக்கும், மனித நேயத்துக்கும், சமத்துவத்துக்கும் முன் வைத்தார். அவை வெற்றி பெறுவதில்தான் உண்மையான சுயமரியாதையும், பகுத்தறிவும், மனித நேயத்தையும், சமத்துவத்தையும் எட்ட முடியும் என்றார். ஆனால், வீரமணியின் பார்வையில் இவை மாறுதலுக்குரிய 'போர் முறைகள்' என்றாகிவிட்டன.

வீரமணியின் வாதப்படி, போர் முறையை மாற்றிக் கொள்ளலாம் என்றால் பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு என்ற போர் முறைகளைக்கூட கைவிட்டு, பார்ப்பன ஆதரவு, பக்திப் பிரச்சாரம் என்ற போர் முறைகளை மாற்றிக் கொள்ளலாமா?

'குடிஅரசு' தொகுப்புகளை பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும்போது கொள்கைகளைத் திரித்து விடுவார்கள் என்கிறார் வீரமணி. அதற்காகவே - பெரியார் திராவிடர் கழகத்தை 'துரோகிகள்' என்கிறார். 'திரிபு வாத திம்மன்கள்' என்கிறார். பார்ப்பன எதிர்ப்பும், கடவுள் மறுப்பும், பெரியாரின் கொள்கைகள் அல்ல என்று கூறுவதைவிட திரிபுவாதம் வேறு ஏதாவது இருக்க முடியுமா?

இவையெல்லாம் ஒவ்வொரு காலகட்டத்தில் கையாளும் வழிமுறைகள் என்பதைத் தவிர, கடைந்தெடுத்த பித்தலாட்டம் வேறு ஏதாவது உண்டா? இவை மாற்றங்களுக்குரிய போர் முறைகள் என்பதைவிட மகத்தான திரிபு வேறு இருக்க முடியுமா?

இவர்களிடம் 'குடிஅரசு', 'பகுத்தறிவு', 'திராவிடன்', 'ரிவோல்ட்' முடங்கிப் போய்விட்டால் அவை வெளி உலகத்துக்கு தெரியாமல் போய் விட்டால், இன்னும் எப்படி எல்லாம் கொள்கைகளை புரட்டி, குழிதோண்டி புதைத்து விடுவார்கள் என்பதை நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் நடுங்கவில்லையா? யார் கொள்கை துரோகிகள்? யார் திரிபுவாத திம்மன்கள்? எழுத்தாணிப் புலவர்களே! எங்கே, பதில் கூறுங்கள் பார்க்கலாம்!

(புரட்டுகள் உடைப்பு தொடரும்)

Pin It