கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

மக்களிடம் விளக்குவோம்

தமிழக முதல்வர் கலைஞர் ‘சகோதர யுத்தம்’ காரணமாக ஈழத் தமிழர் பிரச்சினையில் பின்னடைவு ஏற்பட்டள்ளது என்ற குற்றச்சாட்டை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இப்படி பல்வேறு குழுக்களை உருவாக்கி, அவர்களுக்குள் மோதலை உருவாக்கியதே இந்தியாவின் ‘ரா’ உளவு நிறுவனம் தான். இது பற்றி உண்மையை வெளிச்சப்படுத்துகிறது - இக்கட்டுரை.

‘ரா’ உளவு நிறுவனம், அவ்வப்போது, பல ஈழத் தமிழர் குழுக்களை உருவாக்கி, விடுதலைப் புலிகளுக்கு எதிராக, அந்தக் குழுக்களைப் பயன்படுத்தி வருவது கல்லில் செதுக்கப்பட்ட உண்மையாகும். ஆனால், விடுதலைப்புலிகளை முழுமையாக அழிக்கும் இலக்கில் தோல்வி அடைந்து, இந்திய ராணுவம் இந்தியா திரும்பிவிட்டது.

அதன் பிறகு விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை - இந்திய ராணுவத்துக்கு பதிலாக, இந்திய உளவுத் துறையே ரகசியமாக நடத்தி வருகிறது என்பதே பல ஆய்வாளர்களின் கருத்தாகும். ஆனாலும், விடுதலைப்புலிகள் - மக்கள் பேராதரவோடு சிறிலங்கா ராணுவ ஒடுக்கு முறைகளை எதிர்த்து - உலகமே வியக்கும், விடுதலைப் படையாக போராட்டக்களத்தில் நிற்கிறது.

1983 ஆம் ஆண்டிலிருந்து, வலிமை மிக்க இந்திய ராணுவமும், ஏகாதிபத்திய நாடுகளின் ராணுவ உதவிகளைப் பெற்ற சிறிலங்கா ராணுவமும், தமிழ் மக்கள் மீது நடத்திய ராணுவத் தாக்குதல்கள், குண்டு வீச்சுகள், அழித்தொழிப்புகளை எதிர் கொண்டு, தமது தாயகத்துக்கான விடுதலை போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறது. பார்ப்பன-பனியா அதிகாரவர்க்கத்தின் ஆதிக்கத்தில் இயங்கும் உளவு நிறுவனம் - தனது முழு ஆற்றலையும் பன்படுத்தி, ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை நிலைகுலையச் செய்யும் முயற்சிகளில் முனைப்பாக பங்காற்றி வருகிறது.

விடுதலைப்புலிகளை ஒழிக்க வேண்டு மெனில் அவர்களின் மக்கள் ஆதரவுத் தளத்தை அழித்தொழிக்க வேண்டுமென்ற நோக்கத்தோடு, பல போராளிக் குழுக்களை ‘ரா’ உளவு நிறுவனமே உருவாக்கியது. ‘டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப். என்ற அமைப்புகள் ஈழத்தின் விடுதலைக்காக - ஆயுதம் ஏந்திப் போராடும் அமைப்புகளாக தங்களை அறிவித்துக் கொண்டவை. ‘டெலோ’ அமைப்பின் தலைவர் சிறீ சபா ரத்தினம். அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சுட்டுக் கொல்லப்பட்ட சிறி சபாரத்தினத்துக்கும் ‘ரா’ உளவு நிறுவனத்துக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. விடுதலைப் புலிகளுக்கு எதிராக வெளிவந்த நூலிலிருந்தே இதற்கு சான்று காட்டலாம். எம்.ஆர். நாராயணசாமி, ஆங்கிலத்தில் எழுதி, உளவு நிறுவனங்களால் பெரிதும் போற்றப்படும் நூல் ‘கூபைநசள டிக டுயமேய’. நூலில் இவ்வாறு நூலாசிரியர் குறிப்பிடுகிறார்:

“1983-ல் ‘ரா’ தமிழ்ப் போராளி குழுக்களுக்கு ராணுவப் பயிற்சி தந்தது. அப்போதே பல்வேறு குழுக்களுக்கிடையே பகைமையையும், முரண்பாடுகளையும் ‘ரா’ உருவாக்கியது. செயலிழந்த குழுக்களுக்கு ‘ரா’ உயிரூட்டும் முயற்சிகளில் இறங்கியது.

இதனால் எல்.டி.டி.ஈ. கவலைக் கொண்டது. ‘டெலோ’வை ‘ரா’ ஊக்குவித்தது. ‘ரா’வுக்கு மிகவும் நெருக்கமான குழு ‘டெலோ’ தான் என்றும், அந்தக் குழுவைத்தான் ‘ரா’ உண்மையாக ஆதரிக்கிறது என்றும், ‘ரா’ கருத்துகளைப் பரப்பி, ‘டெலோ’வை உற்சாகப்படுத்தியது. இதனால், ஒவ்வொரு ராணுவ நடவடிக்கையையும் - சிறீசபா ரத்தினம் ‘ரா’வோடு கலந்து ஆலோசித்தார். ஒவ்வொரு தாக்குதலுக்கும், எத்தனை போராளிகள் தேவை என்பதைக்கூட ‘ரா’வின் ஆலோசனைகளைப் பெற்றே செயல்பட்டார். (நூல்: பக். 326)” இப்படி, ‘டெலோ’வின் மூளையாகவே செயல்பட்டது ‘ரா’ உளவு நிறுவனம் தான்.

ஈ.பி.ஆர்.எல்.எப். - இந்திய ராணுவத்தின் மற்றொரு செல்லப் பிள்ளை. மக்கள் ஆதரவற்ற அந்த அமைப்பு இந்திய ராணுவத்தின் வலிமையில் தான் ஆட்சியில் அமர முடியும் என்ற நிலையில், இந்திய ராணுவம் இந்தியா திரும்பியவுடனேயே அந்த அமைப்பினரும், அந்த அமைப்பின் சார்பில் வடக்கு-கிழக்கு மாகாண சபையில் முதல்வராக அமர வைக்கப்பட்ட வரதராஜப் பெருமாளும் இந்திய ராணுவத்துடனேயே இந்தியாவுக்கு கரை சேர்ந்து விட்டனர். அவர்களை பத்திரமாக கரை சேர்த்தது இந்திய உளவுத்துறை தான்.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக - அப்போது உளவு நிறுவனத்தால் உருவாக்கப் பட்ட மற்றொரு அமைப்பு ‘ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி’ என்று அழைக்கப்படும் ‘ஈ.என்.டி.எல்.எப்.’ அமைப்பாகும். இந்த அமைப்பை உருவாக்கியது யார்? எப்படி உருவாக்கப்பட்டது? ‘இந்து’, ‘பிரன்ட் லைன்’, ‘சண்டே லீடர்’ போன்ற பத்திரிகைகளில் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகள் எழுதி வரும். செய்தியாளர் டி.பி.எஸ். ஜெயராஜ் கட்டுரையிலிருந்து இதற்கு விடை தர முடியும். அவர் எழுதுகிறார்:

“ஈ.என்.டி.எல்.எப். - உருவான கதை மிகவும் சுவையானது. (இதன் தலைவராக உள்ள) பரந்தன் ராஜன் என்பவர் ஆரம்பத்தில் ‘புளோட்’ அமைப்பில் இருந்தார். லெபனான் நாட்டுக்குப் போய் பயிற்சி பெற்றவர். இவர் புளோட்டில் - ராணுவத் தளபதி பதவியை எதிர்பார்த்தார்.

ஆனால், ‘புளோட்’ தலைவர் உமாமகேசுவரன் அப்பதவியை வேறு ஒருவருக்கு தந்ததால் - பரந்தன் ராஜன் வெறுப் படைந்து, தனது ஆதரவாளர்களுடன் வெளியேறினார். இப்படி வெளியேறிய குழுவினரும், ஏற்கனவே ‘டெலோ’, ‘ஈ.பி.ஆர்.எல்.எப்.’ அமைப்புகளிலிருந்து அதிருப்தியுற்று வெளியேறிய குழுவினரும் இணைந்து - ‘மூன்று நட்சத்திரங்கள்’ என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கினார். மூன்று அமைப்புகளின் அதிருப்தியாளர்கள் உருவாக்கிய குழு என்பதால் - மூன்று நட்சத்திரம் என்று பெயர் சூட்டப் பெற்றது.

பிறகு ‘புளோட்’ அமைப்பிலிருந்து ஈசுவரன் என்பவர் தலைமையில் மற்றொரு அதிருப்தி குழு விலகியது. அதேபோல் ஈ.பி.ஆர்.எல்.எப். அமைப்பிலிருந்து பத்மநாபா தலைமையில் ஒரு குழுவும், டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஒரு குழுவும் ஆக, 2 குழுக்கள் விலகின. அப்போது ‘ரா’ 1987-ல் மூன்று நட்சத்திர அமைப்பையும், டக்ளஸ், ஈசுவரன் தலைமையிலான குழுக்களையும் ஒன்றாக்கி ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பை உருவாக்கியது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத் துக்குப் பிறகு பரந்தன் ராஜனிடமிருந்து டக்ளஸ் தேவானந்தா விலகி ஈழம் மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) என்ற அமைப்பை தனியே ஏற்படுத்திக் கொண்டார். இதனால் - ‘ஈ.என்.டி.எல்.எப்.’ பரந்தன்ராஜனின் முழுக் கட்டுப் பாட்டுக்குள் வந்தது - இதுதான் ஈ.என்.டி.எல்.எப். தோன்றிய கதை. இந்த அமைப்பை உருவாக்கியது இந்தியாவின் ‘ரா’ உளவு நிறுவனம்.”

டெல்லியிலிருந்து வெளிவரும் ‘டெகல்கா’ ஆங்கில வார ஏட்டில் (ஜுலை 1, 2006) பி.சி. வினோஜ்குமார் எழுதிய கட்டுரையிலும் - “பரந்தன்ராஜன் தலைமையிலான ஈ.என்.டி.எல்.எப். என்ற அமைப்பு விடுதலைப் புலிகள் செல்வாக்கைக் குறைப்பதற்காக ‘ரா’ உளவு நிறுவனத் தால் உருவாக்கப் பட்டதாகக் கூறப்படுகிறது” என்றும் விடுதலைப்புலிகளுக்கு எதிரான குழுக்களை ஒருங்கிணைக்கும் மய்யப் புள்ளியாக இந்த அமைப்பு திகழுகிறது என்றும் குறிப்பிடுகிறார். இதில், இந்திய உளவுத் துறையின் ஆதரவோடு செயல்பட்ட டக்ளஸ் தேவானந்தாவைப் பற்றி குறிப்பிட வேண்டும். யார் இந்த டக்ளஸ் தேவானந்தா?

ஈ.பி.டி.பி.யின் தலைவரான டக்ளஸ் தேவானந்தா - இலங்கையில் இப்போது சமூக நலத்துறை அமைச்சர் - 1986-ல் சென்னையில் இவர் தங்கியிருந்தபோது, பொது மக்களிடம் ஏற்பட்ட தகராறில் இவர் துப்பாக்கியால் சுட்டபோது ஒருவர் இறந்தார். நான்கு அப்பாவி பொது மக்கள் காயமடைந்தனர்.

சென்னை சூளைமேட்டில் இந்த சம்பவம் நடந்தது. அப்போது அவர் மீதும், அவரது ஆதரவாளர்கள் 9 பேர் மீதும் தமிழக காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. வழக்கு இப்போதும் நிலுவையில் இருக்கிறது. ஆனாலும், இந்திய உளவு நிறுவனத்தின் முழு ஆதர வோடு இவர் செயல்பட்டு வருகிறார்.

இதே டக்ளஸ்தான் சென்னையில் 10 வயது பையனைக் கடத்திப் போய், ரூ.7 லட்சம் பணம் கேட்டார் என்று ஒரு வழக்கு கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவர் 1989-ல் சென்னையில் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

ஓராண்டு கழித்து விடுதலை செய்யப்பட்டார். இவரை விடுதலை செய்ய வைத்து, அதன் பிறகு இந்திய ராணுவ விமானத்தில் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி விடுதலைப்புலிகளுக்கு எதிராக ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட வைத்தது - இந்திய உளவு நிறுவனமாகிய ‘ரா’ தான் என்று ‘டெகல்கா’ வார ஏடு (ஜூலை 1, 2006) எழுதியுள்ளது. (தொடரும்)

 ‘ஈழப் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி’ நூலிலிருந்து