சிங்கள விமானக் குண்டுவீச்சில் சிக்கித் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் படுகாயம் அடைந்திருப்பதாகவும், அவரை இந்தியா உட்பட ஏதாவது ஒரு வெளிநாட்டிற்குச் சிகிச்சைக்கு கொண்டுசெல்ல முயற்சிகள் நடைபெறுவதாகவும் பரபரப்பான செய்தி ஒன்று சிங்களப் பத்திரிகைகளிலும், இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியிடப்பட்டது.
இந்தச் செய்திக்கு ஆதாரம் என்ன என்பதை யாரும் கூறவில்லை. புலிகளின் எதிர்ப்பாளரான டி.பி.எஸ். ஜெயராஜ் என்பவர் தான் நடத்தும் இணையதளத்தில் 15-12-07 அன்று ஒரு கட்டுரையாக இச்செய்தியை வெளியிட்டிருந்தார். அதையே சிங்கள ஊடகங்கள் எடுத்தாண்டன. இந்திய ஊடகங்களும் சிங்கள ஊடகங்களைப் பின்பற்றி பொய்ச்செய்தியைப் பரப்பின.
சிங்கள இனவெறி அரசானாலும் சரி, அல்லது தமிழருக்கு எதிரான அரசுகளும் சரி தமிழீழ விடுதலைப் போராட்டம் நசுக்கப்படவேண்டுமானால் பிரபாகரனை ஒழித்துக்கட்ட வேண்டும் என நினைக்கின்றன. வெறும் நினைப்போடு இவர்கள் நின்றுவிடவில்லை. சிங்கள இராணுவ உளவுத்துறையும் அதன் கையாட்களாக இயங்கும் துரோகக் குழுக்களும், இந்திய ரா உளவுத்துறையும் இதே திட்டத்துடன் பல ஆண்டுகாலமாகத் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
1984ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி ஒரு அதிர்ச்சிகரமான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன. சிங்கள இராணுவம் பிரபாகரனைச் சுட்டுக்கொன்றுவிட்டது என்பதே அச்செய்தியாகும். இச்செய்தியைக் கேள்விப்பட்ட தமிழக மக்கள் மட்டுமல்ல உலகத் தமிழர்களும் பெரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். உண்மையை அறிவதற்காக என்னைத் துளைத்தெடுத்தார்கள். இச்செய்தி உண்மையாக இருக்கமுடியாது என என் மனதிற்குப் பட்டாலும் அன்று இரவு முழுவதும் உறக்கம் இல்லாமல் நானும் மற்ற தோழர்களும் தவித்தோம். மறுநாள் காலை பொழுது புலர்ந்தபொழுது. ஒரு இன்ப அதிர்ச்சி எங்களை எதிர் கொண்டது. மதுரையில் உள்ள எங்கள் வீட்டிற்கு முன்னாள் ஒரு ஜீப் வந்து நின்றது. அதிலிருந்து சிரித்த முகத்துடன் பிரபாகரன் இறங்கிவந்தார். எங்கள் குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியால் திளைத்தனர். சிரித்துக்கொண்டே உள்நுழைந்த பிரபாகரன் குழந்தையான எனது மகள் உமாவை அருகில் இழுத்துக்கொண்டு "மாமாதான் வந்திருக்கிறேன், மாமாவின் ஆவியல்ல" என்றார் அடுத்த நிமிடம் மேலும் மகிழ்ச்சியில் மூழ்கினோம். உடனடியாக இந்த மகிழ்ச்சியை தொலைபேசி முலம் உலகத்தமிழர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.
1986ஆம் ஆண்டு முதலில் ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்தையும் அடுத்து டெலோ இயக்கத்தையும் பிறகு பிளாட் இயக்கத்தையும் தூண்டிவிட்டு ஏராளமான ஆயுதங்களைத் தந்து விடுதலைப்புலிகளை ஒழிக்க ரா உளவுத்துறை அனுப்பிவைத்தது. ஆனால் அந்த முயற்சியில் தீவிரமாக இறங்கிய மேற்கண்ட இயக்கங்கள் புலிகளுடன் மோதி அழிந்துபோயின. அவர்களுக்கு ரா உளவுத்துறை வழங்கிய ஆயுதங்களைப் புலிகள் கைப்பற்றிக் கொண்டனர்.
அதற்குப்பின் சென்னையில் தங்கியிருந்த பிரபாகரனை இங்கேயே தீர்த்துக்கட்ட ரா உளவுத்துறை திட்டங்களைத் தீட்டியது.
இதனை அறிந்து கொண்ட பிரபாகரன் இந்தியாவிலிருந்து தப்பிச்சென்றார். ஆனாலும் அவரைக் குறிவைத்து ரா உளவுத்துறையும் சிங்கள இராணுவ உளவுத் துறையும் தொடர்ந்து வேட்டையாடி வந்தன. 1987ஆம் ஆண்டு ராஜீவ் ஜெயவர்த்தனா உடன்பாடு கையெழுத்திடப்பட்ட உடன் இந்திய அமைதிப்படை தமிழீழத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. புலிகளை ஒழிக்கும் முயற்சியில் இந்திய அமைதிப்படை தீவிரமாக ஈடுபட்டது.
காட்டுக்குள் இருந்த பிரபாகரனைச் சுற்றி வளைத்து அழிப்பதற்காக கானகப்போரில் சிறப்புப் பயிற்சி பெற்ற கூர்க்கா படை அசாமில் இருந்து வரவழைக்கப்பட்டு ஏவிவிடப்பட்டது. வெறிகொண்ட மதயானைகளைப் போல அவர்கள் அந்தக் காட்டிற்குள் புகுந்தார்கள். காட்டின் உட்பகுதிவரை அவர்களை முன்னேறுவதற்கு அனுமதித்தார். ஆனால் பிறகு தனது தோழர்களுடன் வேறுவழியில் காட்டைவிட்டு வெளியேறிச்சென்று கூர்க்கா படையைச் சுற்றி வளைத்து பிரபாகரன் தாக்கினார். புலிகளின் முற்றுகையில் சிக்கிக்கொண்ட கூர்க்கா படை காட்டில் இருந்து வெளியேற வழிதெரியாமல் தவித்தது. அவர்களுக்கு உதவியாக வந்த இந்திய உலங்கு வானூர்திகளை புலிகள் சுட்டுவீழ்த்தினார்கள். இறுதியில் இந்தப் போரில் கூர்க்கா படைக்குக் கடும் சேதம் ஏற்பட்டது. அப்படையின் தளபதியான கர்னல் பக்சி புலிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டதும் கூர்க்கா படை நிலைகுலைந்து ஓடியது.
அண்மையில் இந்திய அமைதிப்படைத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஹர்கிரத் சிங் தான் எழுதிய நூலில் ஒரு திடுக்கிடும் உண்மையை வெளியிட்டிருக்கிறார். இந்திய அமைதிப்படையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு பிரபாகரன் வரும்போது அவரைச் சுட்டுக்கொல்லவேண்டும் என்று இந்தியத்தூதுவர் ஏ.என். தீட்சித் தனக்குக் கட்டளையிட்டதாகவும் மேலும் பிரதமரின் உத்தரவுப்படிதான் இது சொல்லப்படுவதாகவும் தன்னிடம் கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு செப்டம்பர் 14, 15 தேதிகளில் தீட்சித் இவ்வாறு கூறியதை தனது மேலதிகாரியான லெப். ஜெனரல் தீபேந்தர் சிங்கிடம் தான் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். இத்தகைய கோழைத்தனமான வேலைகளை இந்திய இராணுவம் ஒருபோதும் செய்யாது என தீட்சித்திடம் திட்டவட்டமாகத் தெரிவிக்கும்படி தீபேந்தர் சிங் கூறியதாகவும் அவர் எழுதியுள்ளார்.
இப்படி தங்கள் முயற்சிகளில் அவர்கள் வெற்றிபெறமுடியாத நிலையில் பிரபாகரனைப் பற்றிய பொய்யான செய்திகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.
1989ஆம் ஆண்டில் திடீரென ஒரு பரபரப்பான செய்தியை ஊடகங்கள் வெளியிட்டன. விடுதலைப்புலிகளின் துணைத் தலைவரான மாத்தையாவுக்கும் பிரபாகரனுக்கும் மோதல் ஏற்பட்டு அதன் விளைவாக பிரபாகரன் சுட்டுக்கொல்லப்பட்டதாகச் செய்தி வெளியிடப்பட்டது.
இலங்கையின் வட-கிழக்கு மாநில முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் பிராபகரன் கொல்லப்பட்டதாக செய்தி உறுதி செய்து அறிவித்தார்.
ஆனால் சில நாட்களிலேயே இந்தச் செய்தி பொய்யானது என்பது அம்பலமாயிற்று.
மீண்டும் 2005ஆம் ஆண்டில் மற்றொரு கட்டுக்கதை புனையப்பட்டது. தமிழீழத்தை ஆழிப்பேரலை தாக்கியபோது பிரபாகரனும் உளவுப் பிரிவுத் தலைவர் பொட்டு அம்மானும் அதில் சிக்கி இறந்துவிட்டதாகச் செய்தி பரப்பப்பட்டது. சிங்கள ஊடகங்கள் மட்டுமல்ல, இந்திய ஊடகங்களும் குறிப்பாக இந்து, தினமலர் போன்ற ஊடகங்கள் இச்செய்தியை முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டன. ஆனால் இந்தச் செய்தி வெளியான சில நாட்களில் நார்வேயின் வெளிநாட்டமைச்சர் ஜான்பீட்டர்சன் கிளிநொச்சியில், பிரபாகரனைச் சந்தித்துப் பேசிய புகைப்படமும் இதே ஏடுகளில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.
பொய்ச் செய்தி வெளியிட்டதற்கு இந்த ஏடுகள் சிறிதளவு கூட வருத்தம் தெரிவிக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து பிரபாகரனைப் பற்றிய பொய்யான செய்திகளை இந்த ஊடகங்கள் திட்டமிட்டுப் பரப்புகின்றன. புலிகளுக்கு ஆதரவு தரும் தமிழ் மக்களை அதிர்ச்சியடையச் செய்வதற்கும் அவர்களின் அச்சத்தை அதிகரிப்பதற்கும் இத்தகைய செய்திகளை அவ்வப்போது பரப்புவதில் இந்த ஊடகங்கள் ஈடுபட்டுவருகின்றன.
கியூபா மக்களின் இணையற்றத் தலைவர் பிடல் காஸ்ட்ரோ அவர்களை ஒழித்துவிட்டால் தென் அமெரிக்க நாடுகளில் தனது செல்வாக்கை நிலைநாட்டிக்கொள்ள முடியும் என அமெரிக்கா கருதி அவரைக் கொலை செய்ய பலமுயற்சிகளைச் செய்து படுதோல்வி அடைந்தது. பிடல் காஸ்ட்ரோ கியூபாவில் மட்டுமல்ல உலகில் உள்ள முற்போக்காளர்கள் அனைவராலும் மதித்துப் போற்றப்படும் தலைவராக உயர்ந்தார்.
தமிழீழ மக்களின் தேசியத் தலைவராக விளங்கும் பிரபாகரன் அவர்களை ஒழித்துவிட்டால் தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஒடுங்கிவிடும் என சிங்கள இன வெறித் தலைவர்களான ஜெயவர்த்தனா முதல் இராசபக்சே வரை இடைவிடாது முயற்சி செய்து தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பிரபாகரன் தமிழீழ மக்களுக்கு மட்டுமல்ல உலகம் முழுவதிலும் உள்ள தமிழர்களின் தன்னிகரில்லாத தலைவராக உயர்ந்துகொண்டே இருக்கிறார் என்பது மட்டுமல்ல தேசிய இன விடுதலைப் போராளிகள் எந்த நாட்டில் இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்ந்துகொண்டிருக்கிறார்.
நன்றி: தென்செய்தி
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
பிரபாகரனைக் கொலை செய்ய தொடர் முயற்சி!
- விவரங்கள்
- பழ.நெடுமாறன்
- பிரிவு: கட்டுரைகள்