முந்தைய பகுதி: ஈழம் - ஏகாதிபத்தியங்களின் ஆடுகளம்
அமெரிக்காவும் இலங்கையும் - இலங்கைத்தோல் போர்த்திய அமெரிக்கா
சோசலிச முகாம் வீழ்ச்சியடைந்தபிறகு இந்திய அரசு தனது கடைசி சோசலிச ஏமாற்று கோமணத்தையும் கழற்றி வீசிவிட்டு அமெரிக்காவின் ஆசிய கைக்கூலியாக மாறுகிறது. இந்திய அரசு அமெரிக்காவின் கட்டுக்குள் வந்த 90களின் இறுதியில் அமெரிக்கா தனது நீண்ட நாள் திட்டமான திரிகோணமலை கப்பற்படை முகாமை அமைத்துக் கொள்வதற்கான நகர்வுகளை மேற்கொள்கிறது. இதற்கான அடிப்படையை 2002 ஆண்டு தனது அக்ஸா ஒப்பந்த்திற்கான முதல் கட்ட பேச்சுவார்த்தை மூலமாக வைக்கிறது. 70களில் இந்திரா அரசால் கடுமையாக எதிர்க்கப்பட்டு பின்னர் இலங்கையும்-அமெரிக்காவும் உறுதியாக இருப்பது கண்டு தமிழ் போராளிகளுக்கு பயிற்சி அளிப்பது வரை சென்றது என்பது இதே ஒப்பந்தத்தினை முடக்குவதற்காகவே. இந்த முறை அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தினை பேசியபொழுது இந்திய அரசு வாய் திறக்கவே இல்லை.
9/11 இரட்டை கோபுரத்தாக்குதலை காரணமாக வைத்து பல நகர்வுகளை அமெரிக்கா மேற்கொள்கிறது. அதில் ஒன்று புலிகளை பயங்கரவாத குழுவாக சித்தரித்து அதன் மூலமாக தெற்காசியா பகுதி அரசியல் விவாதத்தினை தனக்குள் மேற்கொள்கிறது. இதன் அர்த்தம் தற்பொழுது கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்தி தனது தெற்காசிய ஆதிக்கத்தினை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தினை இலங்கையுடன் உபயோகித்து உறவு நிலையை மேற்கொள்கிறது. இலங்கை இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொள்கிறது. அமெரிக்க அரசால் உயர்பதவியில் இருந்த ரிச்சர்ட் ஆர்மிட்டேஜ் 2004 இல் இலங்கைக்கான தினசரி நடவடிக்கையை கவனிக்க நியமிக்கப்படுகிறார். இதற்கு முன்னதாக 2002இல் அமெரிக்காவின் இராணுவ தளபதி திமோத்தி கோர்மல்லி, கடற்படை பயணப்படையின் பிரிகேடின் தளபதி, அமெரிக்காவின் தெற்காசிய துணை அரச அதிகாரியான கிரிஸ்டினா ரோக்காவுடன் இலங்கையின் ரணில் விக்கரமசிங்கே, பாதுகாப்பு அமைச்சர் திலக் மரப்போனா மற்றும் இராணுவத்தின் மூத்த அதிகாரிகள் பலாலி இராணுவ முகாமில் சந்திக்கிறார்கள். இதற்கு அடுத்த மாதம் ரகசிய பயணம் ஒன்றை அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் சட்ட நிபுணர் குழு இலங்கைக்கு பயணிக்கிறது. இதற்கான காரணமாக பயங்கரவாதத்திற்கு எதிரான பயிற்சிக்கான ஒத்துழைப்பு என சொல்லப்படுகிறது.
இந்த ஒப்பந்தமானது பாகிஸ்தானில் இருக்கும் தனது தளம் ஒருவேளை அகற்றப்படவேண்டிய கட்டாயம் ஏற்படுமானால் ஆசியாவில் உள்ள தனது தொடர் கடற்பாதுகாப்பு தளத்தின் மையமாக இலங்கையை மாற்ற உதவும் என்று அமெரிக்கா நினைத்ததன் விளைவாக உருவானதுதான். இது அமெரிக்காவை மேலும் பலம் உள்ளதாக மாற்றும். தற்போதைய நிலைப்படி, பாகிஸ்தானுக்கு பிறகு அமெரிக்கா இந்தோனேசியாவின் மலாக்க சலசந்தியின் அருகே தான் நிலை கொண்டுள்ளது. இந்த சமயத்தில் தான் இராபர்ட் பிளேக் புலிகள் தான் தமிழர்களுக்கான அரசியல் தீர்வில் தடைக் கற்களாக இருக்கிறார்கள் எனச் சொல்லி அதற்கு புலிகளுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதே போன்றதோரு கருத்தைத்தான் பாலத்தீனத்திலும் “பாலத்தீன தீர்விற்கு எதிராக தடைகல்லாக யாசர் அராபத் இருக்கிறார்” என்றார்கள். அதன் பின்னர் அவர் அகற்றப்பட்டார். இதே போன்றதொரு நிலையை இலங்கையில் தமிழர்களின் தலைவர்களுக்கு ஏற்படுத்த திட்டமிட்டே புலிகளின் நிதி ஆதாரத்தையும், ஆயுத ஆதாரத்தையும் அழிக்க இரு குழுக்களை ஏற்படுத்தி ஆஸ்திரேலியா, பெல்ஜியம், கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, இங்கிலாந்து, ஜப்பான், மலேசியா, பிலிப்ப்பைன்ஸ், சிங்கப்பூர், சுவிட்சர்லாந்து, தாய்லாந்து எனப் பல நாடுகளில் உள்ள புலிகளின் நிதி ஆதாரங்களையும் ஆயுத ஆதாரங்களையும் அழித்தார். இதுவே புலிகளின் பின்னடைவிற்கு காரணமாக இருந்தது.
மேலும் புலிகளின் கடல்வழித்தடத்தினை மறித்து ஆயுதக் கப்பலை அழிப்பதற்கு உதவியதும் இவரே. பிரபாகரனின் மறைவிற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களுக்கு தீர்வு அளிக்காமல் ஒருவேளை சென்றால், இந்தியாவும் அமெரிக்காவும் விட்டுவைக்காது என போர் நடந்து கொண்டு இருந்த 2009 மார்ச் மாதம் 11 ம் தேதி கொழும்புவில் தெரிவித்தார். ஆக, தலைவர் பிரபாகரனை தீர்த்துக்கட்டுவதில் வேறு எவரையும் விட அமெரிக்காவே கவனமாக இருந்தது என்பதை நாம் கவனிக்க வேண்டும். மேலும் இதற்காகவே தேசியத்தலைவரின் நகர்வுகளை செயற்கை துணைக்கோள் மூலம் இலங்கை அரசுக்கு அறிவித்ததாகவும் சொல்லப்படுகிறது (அதுபோக தோழர் சுப. தமிழ்ச்செல்வன் இலங்கை அரசால் படுகொலை செய்யப்பட்டபோது இலங்கை அதிபர் ராசபக்சே புலிகளின் தலைவர்களின் மறைவிடங்கள் எங்களுக்குத் தெரியும், எங்களால் அவர்களை தேடி அழிக்க முடியும் என்று ஆணவமாக மிரட்டல் விடுத்ததிலிருந்து அமெரிக்க இந்திய உளவு நிறுவனங்கள் சோப்ளாங்கி இலங்கை அரசுக்கு அளித்த உதவிகள் இப்போது நன்றாகத் தெரியவரும்). இப்பொழுது இவரே தமிழர்களுக்கான பேச்சுவார்த்தை, தீர்வை முன்னின்று பேசுகிறார். இதுவே நமது கவலைக்குரிய ஒன்று.
ராபர்ட் ஓ பிளேக் இலங்கைக்கு முன்பு இருந்த அனைத்து நாடுகளான துனிசியா, எகிப்து, நைஜீரியா, அல்ஜீரியா என அனைத்து நாடுகளிலும் (நைஜீரியா தவிர்த்து) வெற்றிகரமாக ஆட்சிமாற்றம் ஏற்பட்டு விட்டது. நைஜீரியாவில் இனவிடுதலை போராட்டம் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அமெரிக்காவினுடய மிகச்சிறந்த அதிகாரிகளுள் ஒருவராக வெற்றிகரமாக அமெரிக்காவின் திட்டத்தை செயல்படுத்தியவராக இன்று ராபர்ட் பிளேக் திகழ்கிறார். இவரே இலங்கையின் எதிர்காலத்தையும் தமிழர்களின் எதிர்காலத்தையும் நிர்ணயிக்கவராக மாறினால் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஆனால் இவரின் திட்டம் பிற்போக்கானதாகத்தான் இருக்கும் என்பதில் நமக்கு அய்யமேதுமிருக்கப் போவதில்லை. ஏனெனில் நாம் இவரின் தமிழர் போராட்டத்தைப் பற்றிய கருத்துருவாக்கம் என்பதை நாம் கவனிக்க வேண்டும், "ஒசாமா பின்லேடனும், பிரபாகரனும் பயங்கரவாதிகள்.." என்று ராபர்ட் ஓ பிளேக் மே மாதம் 5ம் தேதி, 2011ல் கூறியதை மறக்கமுடியாத ஒன்று. இந்த ஒரு கருத்தே இவரின் பிற்போக்கு எண்ணத்தையும் ஏகாதிபத்திய சார்பு மனப்பான்மையும் இவர் ஏன் ராணுவரீதியாக மிகமுக்கியத்துவம் வாய்ந்த இலங்கையிலும் ஈழத்திலும் நிலைகொண்டுள்ளார் என்பதை விளக்கும்.
அமெரிக்காவும் தமிழீழப்போரும்
2002இல் அமெரிக்கா முன்னெடுத்த அக்சா ஒப்பந்தத்திற்கு பிறகு வெகு வேகமாக காய்களை நகர்த்துகிறது. இரணிலின் சூழ்ச்சி நிறைந்த அரசியல் நகர்வுகள் இந்தியாவின் கொல்லைப்புறத்தின் வழியே நகர்த்தப்பட்டன. இதில் முக்கியமாக அமெரிக்க அதிகாரிகளின் வருகை. வெகுகாலத்திற்கு (8 ஆண்டுகளுக்கு பிறகு) அமெரிக்காவின் ஹாப்பர் போர்க்கப்பல் ஏப்ரல் 2002இல் கொழும்பு வந்தது. இந்தியாவிற்கு தெரியாமல் திரிகோணமலையில் அமெரிக்காவிற்கு பெட்ரோலிய எண்ணை கிடங்குகளை அமைக்க இரணில் அரசு ஒப்பந்தம் ஏற்படுத்த முயன்றதை டிசம்பர் மாதம் 2002இல் வாச்பாயி அரசு அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகியது. வாச்பாயி கொழும்புவிற்கு தூதுவர்களை அனுப்பி அதிருப்தியை வெளிப்படுத்தியபோது ரணில் மறுத்தார்.
2004 பிப்ரவரி 8 ஆம் தேதியில் அமெரிக்காவிற்கான இலங்கையின் தூதர் தேவிதா சுபசிங்கே இலங்கையின் அமெரிக்க வாழ்மக்களிடத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தில் பேசும்போது அமெரிக்காவின் இலங்கைக்கான முக்கியத்துவத்தைப் பற்றி பெருமையடித்தார். அவரின் பெருமையில் உண்மை இருந்தது. அமெரிக்கா இலங்கையின் பயங்கரவாத்திற்கு எதிரான போரில் உதவும் அறிகுறியையே அவர் பெருமையாக பேசினார். அதற்கான ஆதாரமும் இருக்கவே செய்தது. அமெரிக்காவின் பசிபிக் கடற்படையின் தளபதியை அவரும், இலங்கை கடற்படையின் வைஸ் அட்மிரல் (துணை கப்பற்படைத்தளபதி) தயா சந்தாகிரியும் சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு இராணுவ உறவுகளை பேசி இருந்தனர். இதில் ஆயுதம் மற்றும் பாதுகாப்பு கருவிகள் சார்ந்த பேச்சும் நடைபெற்றது. மேலும் இலங்கையின் முத்தரப்பு தளபதிகள் அமெரிக்காவின் முத்தரப்பு தளபதிகளை சந்தித்துப் பேசி பகிர்ந்த பின்னரே இந்த தூதரின் பேச்சு அமைந்தது. அதாவது இந்தியாவிடம் இந்தியா அறியாமல் எதுவும் அமெரிக்காவிடம் பேச மாட்டோம் என கூறிய இரணில் மிகத்திறமையாக இந்திய அரசின் முதுகுப்புறத்தில் அமெரிக்காவிடத்தில் உறவுகளை உறுதிபடுத்தி இருந்தார். இதில் மிகமுக்கியமாக இலங்கை அமெரிக்க உறவுகள் கடலோரக்காவல் படையை பலப்படுத்துவதாக அமைந்தது. இந்த காலக்கட்டத்தில் தான் தமிழக மீனவர்கள் வேறு எப்போதையும் விட அதிக அளவில் கொல்லப்பட்டனர். இந்த அறிவிப்பு நடந்த ஒரு வருடத்தில் 21 பிப்ரவரி, 2005இல் அமெரிக்கா இலங்கைக்கு முதல் முறையாக ஒரு போர்க்கப்பலை வழங்குகிறது. இந்த வசதி மிக்க கப்பல் கடலோர பாதுகாப்பை திறம்பட செய்கிறது. இந்தக் கப்பலே பின்னர் சமுத்திரா என இலங்கையால் அழைக்கப்படுகிறது.
இதற்கு நடுவே இலங்கை அரசின் கப்பற்படை அமெரிக்காவின் கடல்படையால் பெருமளவு பயிற்சியளிக்கப்பட்ட்து. இதன் விளைவிலேயே இலங்கை தனது காலி துறைமுகத்தை காக்கவும், திரிகோணமலையில் மீதான தாக்குதலை முறியடிக்கவும் முடிந்தது, அதற்கு பின்னணியில் அமெரிக்காவின் பயிற்சி உதவியது என்பதை நாம் சொல்லித்தெரியவேண்டியதில்லை. இதற்கு பின் 2006இல் அமெரிக்கா 1000 கப்பற்படை வீரர்களுடன் இலங்கையின் அம்பந்தோட்டா அருகே மாபெரும் கடற்போர் பயிற்சியை செய்தது. இந்த பயிற்சியானது விடுதலைப் புலிகள் ஜெனீவாவில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சற்று முன்னதாக நடைபெற்றது என்பது கவனிக்கத்தக்கது. இது சரியாகச் சொல்லப்போனால் புலிகளுக்கு எச்சரிக்கை விடுப்பதாக இருந்தது.
இதற்கு இரு வருடங்களுக்கு முன்னதாக மறைந்த புலிகளின் அரசியல்பிரிவுச் செயலாளர் தோழர் சுப.தமிழ்ச்செல்வன் எரிக் சோல்ஹைமிடம் தமக்கு பாரபட்சம் காட்டப்படுவதாக தெரிவித்ததை அவர் அமெரிக்க தூதரகத்தில் தெரிவித்து இருந்தார். இதை தனது தலைமையகத்திற்கு தெரிவித்த தொடர்பில் தூதரகம் பின் குறிப்பாக “.. இப்பொழுதுதான் புலிகளுக்கு புரிகிறது ..” எனக் கிண்டலாக அனுப்பப்பட்டு இருந்ததை சமீபத்திய விக்கீலீக்ஸ் தெரிவிக்கிறது. அமெரிக்கா தனது போர்க்கப்பலை இலங்கைக்கு கொடுத்த அதே நேரம் அய்ரோப்பிய ஒன்றியம் புலிகளை பயங்கரவாத இயக்கம் என அறிவிக்கக் கேட்ட இலங்கை அரசின் கோரிக்கையை அய்ரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதரகம் ஒப்புதல் அளித்து தனது தலைநகரான புரஸ்ஸல்ஸ்க்கு பரிந்துரைகளை அனுப்புகிறது. அதாவது அமைதிப் பேச்சுவார்த்தையில் புலிகள் ஈடுபட்டுக் கொண்டு இருந்த அதே நேரத்தில் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பு என அய்ரோப்பிய ஒன்றியம் தடைசெய்கிறது; அமெரிக்கா ஒருபடி மேல்சென்று இலங்கையை போருக்குத் தயார் செய்கிறது. இதன் நடுவிலேயே துரோகி கருணாவின் பிரிவும் அமெரிக்க-அய்ரோப்பிய-இந்திய உளவு துறைகளின் உதவியால் நடைபெறுகிறது.
நவம்பர் 21, 2006இல் வாசிங்டன் நகரில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடுவத்தின் நாடுகளான ஜப்பான், நார்வே, அய்ரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா, இலங்கை மற்றும் புலிகளின் ஒப்பந்த மீறலைக் கண்டிக்கின்றனர். இதில் தமிழர்களின் பிரச்சனைகள் கவனமாக மறைக்கப்பட்டு இலங்கைக்கு ஆதரவான நிலையை வெளிப்படுத்துகின்றனர். அமெரிக்காவின் நிக்கோலஸ் பர்ன்ஸ் இலங்கை அரசின் புலிகள் மற்றும் தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதுடன் புலிகளை ஓரங்கட்டுகின்றனர். அதாவது புலிகளை பயங்கரவாதிகள் என அய்ரோப்பிய ஒன்றியம் முடிவெடுத்த பின் இது நடக்கிறது. இத்தகைய நிகழ்வுகளின் வழியாக உலக ஏகாதிபத்தியங்கள் தமது கட்டுப்பாட்டிலிலுள்ள ஊடகங்கள் வழியாக புலிகள் மாபெரும் பயங்கரவாதிகள் என்ற புனைக்கதை முன்தள்ளப்பட்டு அவர்களின் நியாயமான கோரிக்கை பின்தள்ளப்படுகிறது. இதை அமெரிக்க மற்றும் இதர உளவு நிறுவனங்கள் செம்மையாக செய்து முடிக்கின்றன. முக்கியமாக இந்திய உளவுத்துறை ஒரு படிமேலே போய் களத்திலேயே நின்று வழிகாட்டியது.
வெளிநாட்டு ஆளும் வர்க்கங்களின் சதி எவ்வாறு தமிழீழத்திற்கு எதிராக செயல்பட்டது என்பதை நாம் அவர்கள் தேசியத்தலைவரின் உடல் என்று காட்டியபோது அங்கிருந்த புகைப்படக்காரர்களில் ஒருவர் வெள்ளைப்பெண்மணி என்பதிலிருந்து எந்தளவிற்கு இந்த நாடுகளுக்கு போர்க்களச்செய்திகள் அனுப்பப்பட்டிருக்கிறது என்று அறிந்து கொள்ளலாம். கடுமையான யுத்தம் நடந்து கொண்டிருந்த, சராமரியாக கொத்துக்குண்டுகளை இலங்கை வீசிக்கொண்டிருந்த போர்க்களங்களில் செஞ்சிலுவைச்சங்கம் உட்பட அத்தனைபேரும் வெளியேற்றப்பட்ட நிலையில் இந்த வெள்ளைப்பெண்மணி பத்திரிக்கையாளர் எப்படி உடனடியாக அந்த உடலை புகைப்படம் எடுக்க அழைக்கப்பட்டார் என்ற கேள்விக்கான பதில் ஈழ எதிர்ப்பில் ஏகாதிபத்தியங்களின் பங்கென்ன என்பதை தெள்ளத்தெளிவாக எடுத்துக்காட்டும்.
2004 இல் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அமெரிக்காவின் கைப்பாவையாக மன்மோகன் சிங் பதவி ஏற்றதும் அவர் அமெரிக்காவிற்கு விசுவாசமாக இந்தியாவின் கைக்கூலித்தனத்தை மிகவேகமாக நகர்த்துகிறார். இதனால் நிலைமைகள் வெகுவாக இலங்கைக்கு சாதகமாக நகருகின்றன. அமெரிக்காவால் தெற்காசியாவில் மேற்கொள்ளப்பட்ட இலங்கை சார் நகர்வுகள் எதுவும் இந்தியாவால் கேள்வி கேட்கப்படுவதில்லை. முழுமையாக அமெரிக்கவின் மாநிலமாக மாற்றப்பட்டதைப் போல இலங்கையில் அமெரிக்காவின் எந்த ஒரு காலடிபதிவும் இந்தியாவின் கவனத்திற்கு வரமறுக்கின்றன. இந்த சமயத்தில் தான் இந்தியாவில் தேசிய பாதுகாப்பு செயலாளர் ஜெ.என் தீக்சித்திற்குப் பிறகு எம்.கே நாரயணன் நியமிக்கப்படுகின்றார். இவர் அமெரிக்காவின் போர்டு பவுண்டேசனின் நிதியில் செயல்படும் செண்டெர் பார் செக்யூரிட்டி அனாலிசிஸில் பணிபுரிந்து கொண்டு இருந்தபோது இந்தப் பதவிக்கு கொண்டு வரப்படுகிறார். இவரே போர்க் காலத்தில் அமெரிக்க-இந்தியாவின் அச்சமான தமிழகத்தில் அதன் அரசியல்வாதிகளாலும், அரசாலும் எதிர்ப்பு வரக்கூடாது என கருணாநிதி அரசை மிரட்டி பணிய வைத்தவர். அதுபோக மிரட்டாமலே பணியக்கூடியவர்தான் கருணாநிதி என்பதை அவரின் தொடர்ச்சியான தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாடும், அவரின் துரோக வரலாறும், இந்திய ஆளும்வர்க்க சார்பும் நன்கு தூலமாக விளக்கும்.
அதுபோக அமெரிக்காவிற்கு அதன் துணை நாடான இந்தியாவில் அதன் மாநிலத்தில் தேசிய இனப்பிரச்சனை வரக்கூடாது எனக் கவலை. இந்திய தேசிய இனங்கள் இந்திய ஆளும் வர்க்கத்தின் பிட்டத்தில் கத்தியை சொருகிக்கொண்டிருப்பது நாம் சொல்லி ஒன்றும் தெரியவேண்டியதில்லை. ஒருவேளை இந்தியா அம்மாதிரியான இனப்பிரச்சனைகளில் சிக்குவது அமெரிக்காவின் வர்த்தக நலனையும் பாதுகாப்பு நலனையும் விரிவடைந்த சந்தை பற்றிய அமெரிக்க கனவையும் இந்திய தரகு முதலாளிகளின் கனவையும் கடுமையாக பாதிக்கும். எனவே தான் தமிழகத்தை அடக்குவதற்கு எம்.கே நாரயணன் அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் இந்திய தரகுமுதலாளி அரசின் பிரதிநிதியாக முயற்சி எடுத்தது முக்கியத்துவம் பெறுகிறது. மேலும் இவர் இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட்தற்கு மிக முக்கிய காரணங்களில் ஒன்றாக இவரின் உறுதியான தமிழின எதிர்ப்பும் இந்திய தரகுமுதலாளித்துவ அடிவருடித்தனமும் அமைந்தது. பிரதமரின் ஆலோசகராக இருந்த இவர் இந்தியாவின் ரா உளவுத்துறையின் தலைவர் ரபிந்திரசிங் அமெரிக்காவிற்கு உளவுத் தகவல்களை கடத்தியதையும் பின் அவர் அமெரிக்காவிற்கு தப்பிச் செல்ல உதவி செய்த தோமர் என்பவரை அமெரிக்காவிலேயே பதவியேற்க வைத்தவர் என்பது இவர் பற்றிய கூடுதல் தகவல். இதுபோன்ற சின்னஞ்சிறு நடவடிக்கைகளுக்கும் பின்புலமாக இருந்து அமெரிக்க மிக நுணுக்கமாக தனது ஏகாதிபத்திய சார்பு காய்களை நகர்த்தியது.
இக்காலகட்டத்தில்தான் இலங்கையின் வடக்குப் பகுதியில் அமெரிக்காவின் கடல் பாதுகாப்பை கவனிக்கும் அதி நவீன ராடார்கள் பொருத்தப்பட்ட்து. இதை இந்தியாவின் பாதுகாப்பு செயலர் எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவின் ராடார்களை தெற்கு பகுதிக்கு நகர்த்திவிட்டு வடக்கில் இந்தியா அளித்த ராடார்களை நிறுவச் சொன்னார். அதனை அமெரிக்காவிடம் தெரிவித்த இலங்கையின் கமடோர் இலங்கோகோன். இதற்கு அவரிடம் அமெரிக்கா இந்தியாவிடம் உறுதியாக இருக்கவும் என்று சொன்னதுடன் தேவைப்பட்டால் இந்தியாவின் எதிர்ப்பை மீறி செயல்படுமாறும் அறிவுறுத்தினார். இது 2007இல் நடைபெற்றது. இந்தியாவினை சந்தித்தபோது இந்தியா அவரிடம் தனது ஆட்சேபணையை திரும்பப் பெற்றது எனச் சொல்லப்பட்டது, அவசியமெனில் இந்தியாவின் ராடார்களை அமெரிக்க ராடார் கவனிக்காத சிறு சிறு இடைவெளிப் பகுதிகளில் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்ட்து. இந்த சமயத்தில் தான் புலிகளின் ஆயுதக்கப்பல்கள் மறிக்கப்பட்டு மூழ்கடிக்கப்பட்டன. இதை அமெரிக்காவின் உளவு தகவல்களுடன் இலங்கை செய்து முடித்தது. இலங்கை அரசின் வார்த்தைகளில் கூறுவதெனில் புலிகளின் கப்பல்களைப் பற்றிய தகவல்கள் மட்டுமல்ல அதில் இருந்தவர்களை பற்றியத் தகவல்களும் இலங்கை அரசுக்கு அமெரிக்காவால் அளிக்கப்பட்டன. அமெரிக்கா இந்த தொண்டூழியத்தை செய்து கொண்டிருந்ததை பலமுறை புலிகளிடம் அடிவாங்கி ஓடிய சோப்ளாங்கி இலங்கை, தோழர் தமிழ்ச்செல்வனை படுகொலை செய்ததிலிருந்தே அறியலாம்.
2007, மார்ச் 5 இல் தெற்காசியாவின் மிக முக்கியமான அக்ஸா ஒப்பந்தம் அமெரிக்காவின் ராபர்ட் பிளேக்குக்கும், இலங்கையின் கோத்தபயா ராசபக்சேவிற்கும் கையெழுத்தாகிறது. அதாவது கோத்தபயா ஓர் அமெரிக்க பிரஜை, ராபர்ட் பிளேக்கும் அமெரிக்க பிரஜை. இருவரும் இலங்கைக்கான ஒப்பந்த்தில் கையெழுத்திடுகிறார்கள். இப்பொழுதும் இந்தியா அமைதி காக்கிறது. இந்த கையெழுத்திற்கிடையே இலங்கைக்கு அமெரிக்கா இஸ்ரேலிடம் இருந்து ஆயுதம் வாங்க உதவி செய்கிறது. இதற்கு அர்த்தம் அமெரிக்கா இந்த ஆயுதத்திற்கு நிதியளிக்கும் என்பது. இதுவே இந்த ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கிடைத்த உடனடி பலன். அமெரிக்காவின் இந்த மாபெரும் உதவியை கோத்தபய ராசபக்சே கொழும்புவின் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் நன்றி பாராட்டிப் பேசுகிறார்; இதை இலங்கையின் பயங்கரவாதத்திற்கான பேராசிரியர் ரோகன் குணரத்தன அதே மாநாட்டில் உறுதி செய்கிறார்.
போருக்கு முந்தைய தயாரிப்புகளில் அமெரிக்காவின் பங்கு எத்தகைய முக்கியமானதோ அதே முக்கியத்துவம் போரின் போதும் அதற்கு பின்னர் நடைபெற்ற இனப்படுகொலையின் போதும் முக்கியத்துவமானது. இலங்கையை தனது பிடியினுள் முழுமையாக கொண்டுவந்த அமெரிக்கா தனது திட்டத்தின் கடைசி கட்டமான அமைதியாக்கப்பட்ட வடக்கு கிழக்கு தமிழர்களை ஒரு போலி- ஊழல் மிகுந்த தமிழர் தலைமையின் கீழ் அமைத்து தனது கப்பல்படைத் தளத்தையும் அதனூடாக எண்ணைய்க்கிடங்கு மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்களை உருவாக்கப் போகிறது. இந்த திட்டத்திற்கு தமிழீழத்தில் பொம்மை பிரதிநிதிகள், இந்தியாவில்-தமிழகத்தில் தமிழர்களால் நம்பக்கூடியவாறு ஜெயல்லிதா அரசை உருவாக்குதல், புலம்பெயர் நாடுகளில் தமிழீழம் கேட்கும் நேர்மையான கட்டமைப்புகளை உடைத்தல், புலித்தலைவர்களை நெருக்குதல் என பல்வேறு கட்டங்கள் நம் கண்முன் நடைபெறும்.
வேறு எங்கேயும் விட தமிழீழப்போராட்டம் என்பது பலவழிகளில், அரசியல், பொருளாதார, ராணுவரீதியில் தனித்துவம் பெற்றது. அதுபோக இது உலகெங்கிலும் ஆயுதம் தாங்கிய மக்களின் அவர்களின் ஆயுதப்போராட்டத்தின் உளவியலோடு சம்பந்தப்பட்டது. இப்போது ஈழத்தில் ஆயுதப்போராட்டத்திற்கு நேரிட்ட தற்காலிக அலையிறக்கத்தை, கடுமையான பின்னடைவை உலகெங்கிலும் உள்ள ஆயுதப்போராட்டங்களுக்கும் நேரப்போகும் கதியாக சில திருபுவாதிகள் முன்னெடுத்தை நாம் கண்ணுறுலாம். ருவாண்டாவைபோல இது இனக்கலவரம் அல்ல, சூடானைப்போல ஒற்றை அதிபரால் ஆளப்படும் சர்வாதிகார அரசு அல்ல. போஸ்னியா, செர்பிரினிக்காவில் நடைபெற்ற இனப்படுகொலை என்பது ஓர் இனவிடுதலை போராட்டம் சார்ந்த இனப்படுகொலை அல்ல. தமிழீழத்தில் நடைபெற்றது ஒரு விடுதலைப் போராட்டம். உலகின் 40க்கும் அதிகமான நாடுகளின் ஆதரவு தீர்மானத்தினைக் கொண்டுள்ள காசுமீர் போராட்டத்தினைப் போன்றதல்ல. அந்த விடுதலை போராட்டத்திற்கு சனநாயக ரீதியிலான பின்புலமாக ஒரு மக்கள் வாக்கெடுப்பும், அகிம்சை முறையிலான போராட்டமும் உள்ளது. அதுபோக சோசலிச நாடுகளும், புதிய சனநாயகப்புரட்சிகளும் முடிவடைந்துவிட்டதாகவும், இருபத்தொன்றாம் நூற்றாண்டில் புரட்சிக்கான புதிய பாதை ஒன்றை அனைத்து போராடும் மக்களும் கைக்கொள்ளவேண்டும் என்றும் நேபாள மாவோவியர்கள் போன்றவர்களே மார்க்சிய லெனினிய போராட்ட வழிமுறைகளை, பேராசான் மாவோவின் நீண்டகால மக்கள் யுத்தத்தை திரிக்கும்போது புலிகளின் போராட்டம் என்பதும், ஈழத்தின் விடுதலை என்பதும் வேறுவழியின்றி உலக புரட்சிகரயுத்தத்தின் நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகிறது, தனிச்சிறப்புடையதாகிறது. மேலும் இந்த 2009 இனப்படுகொலைக்கு முன் தமிழர்கள் முற்றிலுமாக 2005 இல் இலங்கை அதிபர் தேர்தலை புறக்கணித்ததையும், புலிகளின் ஆயுதப் போராட்டத்தின்பின் அணிதிரண்டதையும் நாம் கவனிக்க வேண்டும். இரணிலோ, இராசபக்சேவோ, சந்திரிகாவோ என யார் வந்தாலும் இந்தப் படுகொலைப் போர் நடந்தே இருக்கும். இதை தடுக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் யாவும் தடுக்கப்பட்டதும், அமெரிக்காவின் பின்ணனியும் தமிழீழ விடுதலைப் போரின் பின்னடைவிற்கு காரணம்.
அமெரிக்காவின் தொண்டு நிறுவனமும் போரும்
ஒசாமா பின்லேடனைக் கொல்ல எப்படி அமெரிக்கர்கள் அவர் இருக்கும் இடத்தை மிகச்சரியாக கண்டறிந்தார்கள் என்பதன் பின்னணியில் அமெரிக்காவின் ஆதரவு பெற்ற அரசுசாரா தொண்டு நிறுவனங்களின் பங்கும் தெள்ளத்தெளிவாக தெரியவந்துள்ளது. பின்லேடன் தங்கியிருந்த வீட்டிற்குள் நுழைந்து யார் யாரெல்லாம் அங்கே தங்கியிருக்கிறார்கள் என்று கண்டறிவதற்காக அமெரிக்க உளவு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் அபோதாபாத்தில் ஒரு நோய் தடுப்பு மருத்துவ பரிசோதனை முகாமை நடத்தியது. அதன்மூலமாக அது பின்லேடன் அங்கு இருப்பதை உறுதி செய்துகொண்டபின்பு அந்த கோழைத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டது. இதிலிருந்து நாம் அமெரிக்கா தொண்டு நிறுவனங்களை எந்தவொரு நிலைக்கும் பயன்படுத்தத் துணியும் என்பதை புரிந்துகொள்ளலாம். இதுபோன்றுதான் ஈழத்திலும் அமெரிக்கா தொண்டுநிறுவனங்களை பயன்படுத்திக்கொண்டது.
2009இல் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒவ்வொரு வாரமும் அமெரிக்காவின் தொண்டு நிறுவனமான யு.எஸ்.எய்ட் போரில் பாதிக்கப்படும் மக்களைப் பற்றியும், அவர்களுக்கான உதவிகள் பற்றியும் தகவல் அனுப்பிக் கொண்டு இருந்தது. (இந்த தொண்டு நிறுவனம் உலகின் பல்வேறு நாடுகளில் தான் செயல்பட்ட இடங்களில் ஆட்சிக்கவிழ்ப்பையும், அரசியல் நிலையற்ற தன்மையையும் உருவாக்கியது என “பொருளாதார அடியாளின் வாக்குமூலத்தில்” அதன் ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.) புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளுக்குள் செயல்பட்ட பெருமளவு தொண்டு நிறுவனங்கள் புலிகளுக்கு எதிரான உளவு வேலையை திறம்படச் செய்தது. இந்த தொண்டு நிறுவனம் பிப்ரவரி மாதம் இரண்டு-மூன்றாம் வார செய்தியில் முல்லைத்தீவு பகுதியில் போருக்கு நடுவே மாட்டிக் கொண்ட உள்ளூர் அகதிகள் என 70,000 மக்களே உள்ளார்கள் என தகவல் அனுப்பியதைக் காணலாம். இந்த எண்ணிக்கையை தானே இலங்கை அரசும் பேசியது, இந்தியாவின் பிரணாப் முகர்ஜியும் உறுதிப்படுத்தினார். இது எப்படி சாத்தியம் என்பது புரியவில்லை, ஏனெனில் அங்கு இருந்த மக்கள் தொகையை தமிழர்கள் மறுவாழ்வு மையமும், இலங்கை அரசின் தமிழர் பகுதி அரசாங்க ஏஜெண்டும் வேறு ஒரு கணக்கை முன் வைத்து இருக்கிறார்கள். இப்படியாக தனது சாம தான பேத தண்டங்களை அமெரிக்கா ஈழத்திற்கு எதிராக பயன்படுத்தியது. தனது பிராந்திய நலனை, ராணுவ நலனை வலுப்படுத்த அது எதுவும் செய்ய தயாராக இருந்தது.
தொடர்ச்சி: தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்
- திருமுருகன் காந்தி (