1983 ஆம் ஆண்டில்தான் - பல ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்கள் உருவெடுத்தன. அவர்கள் இந்தியாவின் உதவி கோரி வந்த போது, அவர்களுக்கு அடைக்கலம் தந்து, பல்வேறு இடங்களில் இந்திய உளவு நிறுவனம் அவர்களுக்கு ராணுவப் பயிற்சிகளை ஒழுங்கு செய்த முக்கிய காலகட்டம். அந்தச் சூழலில் - இந்த தமிழ்ப் போராளிக் குழுக்கள் எல்லாவற்றுடனும் நேரடி தொடர்பு கொண்டு செயல்படுவதற்காக, நியமிக்கப்பட்டார் ஒரு ‘ரா’ அதிகாரி. அவரது பெயர் கே.வி. உன்னிகிருஷ்ணன். ஈழத் தமிழ்க் குழுக்களின் தலைவர்கள் - முன்னணியினர் எல்லோரிடமும் இவருக்கு நேரடியான தொடர்பு உண்டு.

இவர்தான் ஒருங்கிணைப்பு அதிகாரி. ‘ரா’ - இந்திய வெளியுறவுத் துறை எடுத்த முடிவுகள்; தமிழ்க் குழுக்களுடன் நடத்திய ரகசிய பேரங்கள். அவர்களுக்கு இந்தியா தந்த ராணுவப் பயிற்சிகள் பற்றிய முழு உண்மைகளும் இவருக்குத் தெரியும். சென்னையில் அனைத்துக் குழுக்களுடனும் நேரடியாகத் தொடர்பு கொண்டு செயல்பட்ட மிக முக்கிய பொறுப்பை ஏற்றிருந்த இந்த அதிகாரியின் பின்னணி என்ன? இது தான் அதிர்ச்சிக்குரியதாகும்.

1981 இல் இவர் கொழும்பில் ‘ரா’வுக் காக வேலை செய்த போது - அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவருடன் நட்பு கொண்டார். இருவரும் நெருக்கமாகி, பல ‘ஒழுக்கக் கேடான’ செயல்களில் ஈடுபட்டனர். பல பெண்களுடன், பாலியல் உறவுகளை வைத்திருந்தனர். அப்போது - அமெரிக்க தூதர் வழியாக - இந்திய உளவுத் துறையின் செய்திகளை அமெரிக்க உளவு நிறுவனமான ‘சி.அய்.ஏ.’க்கு அனுப்பி வந்தார்.

1983 களில் தமிழ்ப் போராளிக் குழுக்களுடன் - நேரடி தொடர்பு கொண்டிருந்த காலத்தில், அவர், ‘ரா’வின் அதிகாரி மட்டுமல்ல; ‘சி.அய்.ஏ.’வுக்கும் உளவாளி! தமிழ்ப் போராளிக் குழுக்களின் செயல்பாடுகளுக்கு பொறுப்பு ஏற்ற பிறகு, அவர் - சிறீலங்கா உளவுத் துறைக்கும் நெருக்கமானார்.

கொழும்பில் - அவருக்கு பல பெண்களுடன் இருந்த உறவை சிறீலங்கா உளவுத் துறைப் பயன்படுத்திக் கொண்டு, உன்னிகிருஷ்ணனை தனது வலையில் சிக்க வைத்தது. ஒரே கட்டத்தில் ‘ரா’ - ‘சி.அய்.ஏ.’ - சிறீலங்கா உளவுத் துறைகளுடன், ரகசியமாக செயல்பட்டுக் கொண்டும், அதே காலத்தில் ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுடனும் நேரடி தொடர்பு கொண்டும் செயல்பட்டுள்ளார்.

1985 இல் சென்னையில். இவர் தமிழ் ஈழப் போராளிக் குழுக்களுடன் தொடர்பு கொண்டிருந்தபோது - பம்பாயில் - அமெரிக்காவின் ‘பான் விமான சேவை’ யில் வேலை செய்த ஒரு அமெரிக்கப் பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.

இந்தத் தொடர்பை ஏற்படுத்தித் தந்தவர் உன்னி கிருஷ்ணனின் நண்பரான கொழும்பில் இருந்த அமெரிக்க தூதரக அதிகாரி. சென்னையிலிருந்து - பம்பாய்க்குப் பறந்து கொண்டு, விமானப் பணிப் பெண்ணுடன், அடிக்கடி சிங்கப்பூருக்குப் போய், உல்லாசமாக இருந்தார், உன்னி கிருஷ்ணன். இவர்கள் இருவரும் ‘இணைந்த நிலையில்’ இருந்த படங்கள் எடுக்கப்பட்டன. ஈழத் தமிழர்ப் பிரச்சினையில் இந்தியா மேற்கொண்ட நடவடிக்கைகள்; இந்தியாவின் வெளியுறவுத் துறை முடிவுகள்; ‘ரா’வின் திட்டங்கள் பற்றிய அனைத்துத் தகவல்களும் - உன்னிகிருஷ்ணன் வழியாக - சிறீலங்கா அரசுக்குக் கிடைத்து வந்தன.

இது பற்றி - கொழும்பில் இந்திய தூதராகவிருந்த ஜே.என்.தீட்சித் தனது நூலில் குறிப்பிடும் போது 

“1986 ஆம் ஆண்டுகளில் - முதல் 6 மாதங்களில் - நான் லலித் அதுலத் முதலியுடன் (இவர் இலங்கையில் செல்வாக்குள்ள அமைச்சர்) நடத்திய உரையாடல்களில் - அவர் தெரிவித்த கருத்துக்கள் - என்னை வியப்பில் ஆழ்த்தின. இந்தியாவின் வெளி நாட்டுத் துறை அதிகாரிகள்; உளவு நிறுவன அதிகாரிகள்; இவர்களின் செயல்பாடுகள் பற்றி, ஏராளமான தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டது. என்னை வியப்பில் ஆழ்த்திவிட்டது. உடனே நான், இதுபற்றி டெல்லிக்கு தகவல் கொடுத்தேன்”
- என்று எழுதியுள்ளார். (நூல்: Assignment colombo) இந்தத் தகவல்களை சிறிலங்காவுக்கு கொடுத்தது யார் என்பதையும் - ஜே.என்.தீட்சித் குறிப்பிடுகிறார்.

“சிறீலங்காவுக்கு, இந்தத் தகவல் களைத் தந்தது, எங்களது உளவு அமைப் பில் பணிபுரிந்த அதிகாரி உன்னி கிருஷ்ணன்தான் அவர். அமெரிக்க விமானப்பணிப்பெண் ஒருவர் மூலமாக, அமெரிக்கர் வலையில் வீழ்ந்துவிட்டார். அவரது ‘எதிர்மறையான’ நடவடிக்கைகள் 1986 மத்தியில் தெரிய வந்தது. தொடர்ந்து - அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. உன்னிகிருஷ்ணன் “அமைதியாக்கப் பட்ட” பிறகு, சிறீலங்காவுக்கு இந்தியா பற்றி கிடைத்து வந்த தகவல்கள் கடுமையாகக் குறைந்துவிட்டன. சிறீலங்காவுக்கு உன்னி கிருஷ்ணன்தான் ரகசியத் தகவல்களைத் தந்தார் என்பது இதன் மூலம் உறுதியானது”

என்று எழுதியுள்ளார், ஜே.என். தீட்சித்.

“The Sri Lanka source of information was a senior operative of our own intelligence agency, Unnikrishnan, who had been subverted most probably by the Americans through a foreign lady working for Pan-American Airlines. His negative activities were discovered sometime towards the middle of 1986, which was followed by appropriate procedural action against him. The fact that the Sri Lankan Government’s advance knowledge about Indian policies and intentions clearly diminished after Unnikrishnan was neutralized proved that he was a major source of information to the Sri Lankans. (Assignment Colombo-(1998) pg. 61)”

உண்மைகளை மறைக்க முடியாமல் - மென்மையான வடிவில் ஜே.என்.தீட்சித் தந்துள்ளார் என்றாலும், கே.வி.உன்னி கிருஷ்ணனின் நடவடிக்கைகளை அவரால் மறைக்க முடியவில்லை.

1985-86-இல் மூன்று உளவு நிறுவனங்களுடனும் கே.வி.உன்னி கிருஷ்ணன் தொடர்பு கொண்டிருந்த காலகட்டத்தில்தான் - தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தர்மலிங்கம், ஆலால சுந்தரம் ஆகியோர் - ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டனர். வழக்கம் போல் விடுதலைப்புலிகள் மீதே பழிபோட்டு, பிரச்சாரங்கள் நடந்தன. ஆனால், அந்தக் காலகட்டத்தில், உளவுத் துறைக்காக இந்தக் கொலைக்கான கொலைக்காரர்ளைத் தேர்வு செய்தது கே.வி. உன்னி கிருஷ்ணனாகத்தான் இருக்க முடியும் என்று எழுதுகிறார், ஆய்வாளரும், விஞ்ஞானியுமான சச்சி சிறீகாந்தா தனது ‘Pirabakaran Phenomenon’ என்ற நூலில்.

“It is an easy guess that this Unikrishnan could have been a probable conspirator for the 1985 assasinations of Dharmalingam and Alala Sundaram.” (pg. 193)

தங்களை நம்பி வந்த தமிழ்ப் போராளிக் குழுக்களை, இந்திய உளவுத் துறை பகடைக்காய்களாக்கி, தனது விளையாட்டு மைதானங்களில் இப்படித்தான் பந்துகளாக்கியது; இந்த வலையில் சிக்காத ஒரே தலைவர் பிரபாகரன் மட்டும்தான்!

இந்திய தேசிய அதிகார வர்க்கத்தின் பார்ப்பன ஆணவ அணுகுமுறைக்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?

சிங்கப்பூரில் - அமெரிக்க விமானப் பணிப் பெண்ணுடன் கேவி.உன்னி கிருஷ்ணன் நெருக்கமாக இருந்த படங்கள் கைப்பற்றப்பட்டு, அவரது கீழறுப்பு வேலைகள் கண்டறியப்பட்டு, 1987-இல் அவர் கைது செய்யப்பட்டார்.

(பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய ‘ஈழத் தமிழர் பிரச்சினையில் இந்திய உளவு நிறுவனங்களின் சதி’ நூலிலிருந்து)

Pin It