கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

அனைத்து ஜாதியும் அர்ச்சகராகும் உரிமை பக்தி சார்ந்தது அல்ல; அது சுயமரியாதை சார்ந்தது. ‘சூத்திரர்கள்’ என்ற இழிவைக் கடவுள் வழியாக பெரும்பான்மை மக்கள் மீது சுமத்தி வந்த “பிராமணிய” வல்லாதிக்கத்தை தகர்க்கும் சமத்துவத்துக்கான போராட்டம், பெரியார் தனது இறுதிப் போராட்டமாக இதை அறிவித்தார். தி.மு.க. ஆட்சிக்கு வந்த 100வது நாளில் இந்த சமூகப் புரட்சியை அறிமுகப்படுத்தியது.

அண்மையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் (நவம்பர் 12,2024) தனது சமூக வலைதளத்தில் “அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதைத் தடுக்கும் அனைத்துத் தடைகளையும் அரசு தகர்க்கும். ஒரு காலத்தில் வீதிகளில் நடப்பதற்குக் கூட தடை போட்டனர். அதை எதிர்த்து நின்றது திராவிட இயக்கம். கர்ப்ப கிரகத்தில் நுழைய உங்களுக்கு தகுதி இருக்கிறதா என்று கேட்டார்கள்; தகுதி உண்டு என்று கூறி சட்டம் கொண்டு வந்தோம். இந்த சட்டம் நிறைவேற எந்தத் தடை வந்தாலும் தகர்ப்போம்” என்று உணர்வுபூர்வமாக பதிவு செய்துள்ளார்.

2024ம் கல்வி ஆண்டில் கோயில்களில் நடத்தப்பட்ட ஓராண்டு அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் படித்த 115 மாணவர்களுக்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சான்றிதழ்களை வழங்கியிருக்கிறார். இதில் 11 பேர் பெண்கள். அனைவரும் ஓதுவார் பயிற்சி பெற்றவர்கள். இந்து அறநிலையத் துறையின் கீழ் அரசு அதிகாரிகளாக பெண்களையே நியமிக்கத் தடை இருந்தது. திராவிடர் விடுதலைக் கழகம் தான் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்தடையை தகர்த்தது. வாதாடி வெற்றி பெற்றவர் வழக்கறிஞர் எஸ்.துரைசாமி. அதன்பிறகு தான் அறநிலையத் துறையில் பெண்கள் அதிகாரிகளாக வர முடிந்தது. பார்ப்பனரல்லாத பெண்கள் தடைகளைத் தகர்த்து அதிகாரிகளாக வந்திருக்கிறார்கள்.

ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் தொடங்கப்பட்ட பண்பாட்டுப் புரட்சியான இத்திட்டம், இப்போது பல்வேறு சட்டத் தடைகளை சந்தித்து முடங்கி நிற்பதை முதல்வரின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

அமைச்சர் சேகர்பாபு சுட்டிக் காட்டியிருப்பதைப் போல இதுவரை 29 அர்ச்சகர்களுக்கு மட்டுமே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. 2008இல் பயிற்சியை முடித்துவிட்டு 16 ஆண்டுகளாக காத்திருக்கும் 178 மாணவர்களுக்கும், 2021இல் படித்து முடித்த 204 மாணவர்களுக்கும் பணி நியமனங்கள் வழங்கப்படவில்லை. இப்போது ஓராண்டு பயிற்சி முடித்துள்ள 115 பேருக்கு தேர்வுச் சான்றிதழ் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. பயிற்சிப் பெற்றவர்களில் ஏற்கனவே அய்ந்து பேர் மரணமடைந்து விட்டனர். ஏற்கனவே பணி நியமனம் பெற்ற 24 தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட அர்ச்சகர்கள், பல கோயில்களில் பார்ப்பன அர்ச்சகர்களின் அவமதிப்பு – புறக்கணிப்புகளை எதிர்கொண்டு கடமையாற்றி வருகிறார்கள்.

இத்திட்டத்தை முன்னெடுக்க விடாது நீதிமன்றத்துக்குப் பார்ப்பனர்கள் படையெடுத்து வருகிறார்கள். மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன், இரண்டு அர்ச்சகர்கள் நியமனங்கள் ஆகமத்துக்கு எதிரானது என்று கூறி தடை விதித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஸ்வர் நாத் பண்டாரி, அர்ச்சகர் நியமனம் தொடர்பாக அறநிலையத் துறை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட விதிகளைத் தடை செய்து விட்டார். கோயில்களை ஆகமக் கோயில்கள் – ஆகமம் இல்லாத கோயில்களாக பிரித்துவிட வேண்டும் என்றும் ஆகமக் கோயில்களின் விதியை மாற்றக் கூடாது என்றும் அத்தீர்ப்பு திட்டவட்டமாக கூறி விட்டது. இதுகுறித்து பரிசீலிக்க குழுக்களையும் அறிவித்தது. ஆகமக் கோயில்களை கண்காணிக்க முன்னாள் தேர்தக் ஆணையர் கோபால்சாமி அய்யங்காரை நீதிமன்றம் நியமித்தது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் நோக்கத்தையே தோற்கடித்து விட்டது இத்தீர்ப்பு. 2023இல் வந்தது இந்தத் தடை. இந்த தடையை எதிர்த்து அறநிலையத்துறை மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். என்ன காரணத்தினாலோ, ஓராண்டு ஓடிய பிறகும் அதை செய்யவில்லை. ஏற்கனவே உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆகமங்களில் ஜாதி தடையாக இருக்க முடியாது என்ற ஒரு சிறந்த தீர்ப்பை வழங்கிய நிலையில் அர்ச்சகர் நியமனங்களை அறநிலையத் துறை செயல்படுத்தத் தவறியது. இறுதியாக 2023இல் உச்ச நீதிமன்றத்தின் எம்.எம்.சுந்தரேஷ் தலைமையிலான அமர்வு, ஏற்கனவே அர்ச்சகர் நியமனங்களில் இருந்த அதே நிலை அப்படியே நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுதான் இப்போதைய நிலை. பணி நியமனங்களுக்கான தடைகள் நீடித்து வரும் போது கோயில்களில் ஓராண்டு பயிற்சிகளைப் பெறுவோருக்கு சான்றிதழ்களை வழங்க முடியுமே தவிர பணி நியமனம் செய்ய இயலாது.

எனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் 26 பேருக்கு வழங்கி விட்டோம் என்ற அடையாள சட்டமாக இருந்து விடக்கூடாது. உயிர்த்துடிப்புடன் இந்த சமுதாயப் புரட்சி செயல்வடிவம் பெற தமிழ்நாடு முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். “பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்” என்று இந்தத் திட்டம் பற்றி கலைஞர் கூறினார். அந்த முள்ளை அகற்ற மிகவும் கவலை எடுத்துக் கொண்டார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும் அதே உணர்வுடன் இத்திட்டத்தை அமுல்படுத்த முன்வந்தார். ஆனால் அது செயல்படாமல் முடங்கி நிற்கிறது. அறநிலையத் துறை ஏன் முனைப்புக் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது. தடைகளை அகற்ற முதல்வர் முன்வர வேண்டும். இதற்கு உரிய ஆலோசனைகளைப் பெற்று செயல்படுத்த சட்ட வல்லுநர் குழு ஒன்றை அமைக்க அரசு முன்வர வேண்டும் என்று உரிமையுடனும் கவலையுடனும் கேட்டுக் கொள்கிறோம்.

- விடுதலை இராசேந்திரன்