1970 ஆம் ஆண்டு வரை வாரிசு அடிப்படையில் தான் தமிழ் நாட்டில் உள்ள இந்துக் கோவில்களுக்கு அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். 1970இல் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சட்டத்தை அன்றைய கலைஞர் மு. கருணாநிதி தலைமையிலான தமிழ் நாடு அரசு திருத்தியது. அதை எதிர்த்து சேஷம்மாள் என்பவர் நீதிமன்றம் சென்றார். அன்று தொட்டு இன்று வரை தமிழ்நாட்டு கோவில்களில் அர்ச்சகர் நியமனம் தொடர்பாக சர்ச்சை இந்திய உச்ச நீதிமன்றத்திலும் சென்னை உயர்நீதிமன்றத்திலும் பல வழக்குகளின் ஊடாக தொடர்கிறது. இவ்வழக்குகள் தொடர்பான கட்டுரை “அனைத்துச் சாதி அர்ச்சகர்: நடந்ததும், நடக்க வேண்டியதும்” என்ற தலைப்பில் கீற்றில் ஏற்கெனவே (https://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-18-14/44216-2022-09-07-05-22-49) வெளிவந்துள்ளது.

பல சட்டத் திருத்தங்கள், வழக்குகள் ஊடாக பரிணமித்த அனைத்துச் சாதி அர்ச்சகர் விவகாரம் 2021 ஆகஸ்டு 14 ஆம் தேதி ஒரு குறிப்பிட்ட திசை நோக்கிய பயணத்தை தொடங்கியது. அதாவது, குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களே பெரிய இந்துக் கோயில்களில் அர்ச்சகர்களாக பணியாற்ற முடியும் என்றிருந்த நிலையை மாற்றி, முறையான பயிற்சிப் பள்ளிகளில் அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் இந்துக் கோவில்களில் அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்டனர்.madras high courtஅர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சிபெற்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 28 மாணவர்கள், 2021 ஆகஸ்ட் 14ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலினிடம் பணி நியமன ஆணை பெற்ற அந்த நிகழ்வு, கோவில் கருவறைகளில் சமத்துவத்தை நிலைநாட்டும் செயல்களின் தொடக்கம் எனக் கருதப்பட்டது. இருப்பினும் தமிழக அரசின் இந்த நியமனங்களை எதிர்த்து வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கில் ஆகமக் கோவில்களில் அர்ச்சகர் பணி நியமனம் ஆகம முறைப்படியே இருக்க வேண்டும் என தீர்ப்பளித்தது. மேலும் ஆகம விதிகளின்படி இயங்கும் கோயில்களைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழுவை நியமிக்கவும் உத்தரவிட்டது. எனினும் திமுக அரசின் 28 நபர்களின் பணி நியமனங்களையோ, எடப்பாடி பழனிசாமி அரசு உருவாக்கிய கோயில் பணியாளர்கள் (2020) பணி நிபந்தனை விதிகளையோ செல்லாது என அறிவிக்கவில்லை.

அதன்பிறகு, கடந்த சில மாதங்களில் அனைத்துச் சாதி தொடர்பாக இருவேறு வழக்குகளில் இரு வேறு தீர்ப்புகள் தரப்பட்டுள்ளன.

வழக்கு 1: திருச்சி குமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் நியமிக்கப்பட்ட பிராமணரல்லாத இரு அர்ச்சகர்களின் பணி நியமனத்தை எதிர்த்து சிவாச்சாரியார்கள்/ஆதி சைவர்கள் பிரிவைச் சேர்ந்த இரண்டு அர்ச்சகர்கள் தொடர்ந்த வழக்கில் பிராமணரல்லாத அர்ச்சகர்களின் பணி நியமனம் செல்லாது என சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2023 பிப்ரவரி 23 ஆம் தேதி தீர்ப்பளித்தது. ஏனெனில், குமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் காமிகா ஆகமத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதில் எவ்வித சர்ச்சையும் இல்லை என உயர்நீதிமன்றம் கருதியது. அதன் நேரடியான உட்பொருள் என்னவெனில் ஆகமங்களில் புலமை கொண்ட சைவர்கள்/சிவாச்சாரியர்கள்/குருக்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் மட்டுமே மேற்படி கோவிலுக்கு அர்ச்சகர்களாக நியமிக்கப்பட தகுதி பெற்றவர்கள் என்பது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையின் கருத்து.

ஆகமங்களின் படி ஸ்மார்த்த பிராமணர்களே கோவில் கருவறைக்குள் நுழைய முடியாது. எனவே ஸ்மார்த்த பிராமணரை அர்ச்சகராக பணி நியமனம் செய்யமுடியாது என்பதை சுட்டிக்காட்டுவதன் மூலம் அரசியலமைப்பின் 17வது பிரிவை மீறியதாக சொல்ல முடியாது. ஆனால் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகர்கள் ஆக முடியாது எனச் சொல்லும் ஆகம விதியை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று புறக்கணிக்க முடியும் என்று விளக்கமளித்த நீதிமன்றம், அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யப்பட்ட பிராமணரல்லாத இரு அர்ச்சகர்கள் சைவர்கள்/சிவாச்சாரியர்கள்/ குருக்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பதால், அவர்களை காமிகா ஆகம விதிகளின் படி அமைந்ததாக சொல்லப்படும் குமாரவயலூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அர்ச்சகர் பணியில் இருந்து நீக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பின் உள்ளார்ந்த பொருள் என்னவெனில், சைவர்கள்/சிவாச்சாரியர்கள்/குருக்கள் பிரிவைச் சாராத மற்ற அனைவரும், அவர்கள் எந்தச் சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பினும், காமிகா ஆகமக் கோவிலில் அர்ச்சகர்களாக பணிபுரிய தகுதி அற்றவர்கள் என்பதே. அவர்கள் முறையாக அர்ச்சகர் பயிற்சி பெற்றிருந்தாலும் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட முடியாது.

மத விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம். பொது ஒழுங்கிற்கு உட்பட்டு, ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் (Denomination) உரிமை உண்டு எனச் சொல்லும் அரசியலமைப்புச் சட்டத்தின் 26 ஆவது பிரிவின் படி சைவர்கள்/சிவாச்சாரியர்கள்/குருக்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் மதப்பிரிவினர் (Denomination) என்ற வரையறைக்குள் வருவதால், அவர்கள் மட்டுமே அர்ச்சகர் உள்ளிட்ட சில மதச்சடங்குகளைச் செய்யமுடியும் என்கிறது மதுரைக் கிளை தீர்ப்பு. அது அவர்களின் அடிப்படை உரிமை. அந்த உரிமையில் சைவர்கள்/சிவாச்சாரியர்கள்/குருக்கள் பிரிவினைச் சேராதவர்களுக்கு பங்கில்லை என உத்தரவிட்டால், அரசியலமைப்புச் சட்டத்தை மீறியதாக பொருள் கொள்ள முடியாது என்பதே மேற்கண்ட தீர்ப்பின் பொருள். 

வழக்கு 2: 18.01.2018 அன்று, அர்ச்சகராக பயிற்சி பெற்ற, தகுதியுள்ளவர்களை அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பிக்க கோரும் அறிவிப்பை சேலம் சுகவனேஸ்வரர் கோவிலின் நிர்வாக அலுவலர் வெளியிடுகிறார். இதனை எதிர்த்து முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் தொடர்ந்த வழக்கில் முறையான பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை பணி நியமனம் செய்வதில் எவ்வித விதிமீறலும் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் இன்று (June 26, 2023) தீர்ப்பளித்துள்ளது.

சேலம் சுகவனேஸ்வரர் கோவில் ஆகம விதிப்படி அமைந்த கோவில், எனவே இக்கோவிலின் அர்ச்சகர்/ஸ்தானிகர் நியமனங்களை வழக்கங்கள் மற்றும் பயன்பாட்டிற்கு (Customs and Usage) அடிப்படையில் மட்டுமே செய்ய முடியும். ஆனால் கோவிலின் நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிவிப்பு ஆகமங்கள் பற்றி குறிப்பிடவில்லை, எனவே இந்த அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என முத்து சுப்பிரமணிய குருக்கள் வைத்த வாதத்தை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை.

சென்னை உயர் நிதிமன்றம் அமைத்த குழு, ஆகமக் கோவில்களை கண்டறியும் வரை, ஆகமக் கோவில்களில் புதிய அர்ச்சகர்களை நியமிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் விசாரித்த சென்னை நீதிமன்றம், ”சுகவனேஸ்வரர் கோவிலில் காரண ஆகமம் பின்பற்றப்படுகிறது. சேஷம்மாள் வழக்கில் அர்ச்சகர் நியமனங்கள் ஆகமங்களை பின்பற்றி நடைபெற வேண்டும் என தீர்ப்பளித்துள்ளது. எனவே ஆகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு அர்ச்சகர் நியமனம் மேற்கொள்ளப்படுவதை தடைசெய்ய வேண்டியதில்லை” எனத் தீர்ப்பளித்தது.”

ஆகமங்களில் குறிப்பிட்டுள்ளபடி, பூஜைகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களாகவும், முறையான பயிற்சி பெற்றவர்களாகவும், தகுதி பெற்றவர்களாகவும் இருப்பவர்களை அர்ச்சகராக நியமனம் செய்ய அறங்காவலர்கள் அல்லது தக்கார்களுக்கு அதிகாரம் உண்டு” என்கிறது சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு. மேற்குறிப்பிடப்பட்டுள்ள ஆகமத் தகுதிகளைப் பெற்றுள்ள அர்ச்சகர் நியமனத்தில் சாதிக்கு எந்தப் பங்கும் இருக்காது என்பது தெளிவாக தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது,

இங்கு விவாதிக்கப்பட்ட இரு கோவில்களும் ஆகமக் கோவில்கள் என்பதை நீதிமன்றம் சந்தேகத்திற்கு இடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கு முந்தைய பல வழக்குளில், நீதிமன்றங்கள் உத்தரவிட்ட படி, ஆகமக் கோவில்களில் அர்ச்சகர் நியமனங்கள் ஆகம விதியைப் பின்பற்றி நடைபெற வேண்டும் என்பதை இரு தீர்ப்புகளும் சுட்டிக்காட்டுகின்றன.

ஆனால் மதுரைக் கிளையின் குமாரவயலூர் கோவில் வழக்குத் தீர்ப்பு, ”சைவர்கள்/சிவாச்சாரியர்கள்/குருக்கள் பிரிவினைச் சேர்ந்தவர்கள் மட்டுமே அந்தக் கோவிலில் அர்ச்சகர்களாக நியமனம் செய்யப்பட வேண்டும்” என்கிறது. இதற்கு மாறாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் சுகவனேஸ்வரர் கோவில் வழக்குத் தீர்ப்பு, ”ஆகமங்களில் பயிற்சி பெற்ற எவரும், சாதி வேறுபாடின்றி, அர்ச்சகர்களாக நியமிக்கப்படலாம். அங்கு சாதிக்கு வேலையில்லை என்கிறது.

ஒரே மாதிரியான வேலைகள், ஒரே சட்டம், ஒரே நீதிமன்றம், ஒரே மாதிரியான இரு வழக்குகள். ஆனால் இருவேறு தீர்ப்புகள். இருப்பினும் நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் அவர்களின் தீர்ப்பு நமக்கு சில தெளிவுகளை அளிக்கிறது.

இருவரும் ஆகமங்களை பின்பற்றி அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என்கின்றனர். இது உச்சநீதிமன்றம் சேஷம்மாள் வழக்கு தொடங்கி சிவாச்சாரியர்கள் (2015) வழக்கு வரை சொல்லியது விஷயம் தான். புதிதல்ல. இந்த இரண்டு தீர்ப்புக்கும் உள்ள வேறுபாடு என்னவெனில், GR சுவாமிநாதன் ஆகமத்தை முன்வைத்து பார்ப்பனர் அல்லாதோர் அர்ச்சகர் ஆகமுடியாது என்கிறார். ஆனந்த வெங்கடேஷ் அனைத்து சாதியினர் அர்ச்சகர் ஆக ஆகமத்தில் எந்த தடையும் இல்லை என்கிறார்.

ஆகமக் கோயில்களை கண்டறிய குழு அமைக்கவேண்டும் என 2022இல் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு பின்னர் கீழ்க்கண்ட விஷயங்களை தமிழ்நாடு அரசு செய்ய வேண்டும் என எழுதினேன்.

இனி தமிழக அரசு செய்யவேண்டியது என்ன?

1. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை தொடர்ந்து நடத்த வேண்டும்.

2.அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களை காலியாகும் அர்ச்சகர் பணி இடங்களில் நியமிக்க வேண்டும்.

தமிழக அரசு தொடர்ந்து அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகளை நடத்தி வருகிறது. ஆனால் அர்ச்சகர் பணி நியமனங்கள் இன்னும் நடைபெற வில்லை.

நீதிபதி ஆனந்த வெங்கடேசின் தற்போதைய தீர்ப்பு, ஆகமக் கோயில்களிலும் அனைத்து சாதியினரை அர்ச்சகர்களாக பணி நியமனம் செய்யலாம் என்ற தெளிவைக் கொடுத்துள்ளது. எனவே தமிழக அரசு எதற்கும் அஞ்சாமல் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவர்களை காலியாகும் அர்ச்சகர் பணி இடங்களில் நியமிக்க வேண்டும்.

- சு.விஜயபாஸ்கர்

Pin It