தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கடந்த ஒரு வாரமாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதில், 11.11.2024-இல், ஒரு நிகழ்ச்சியாக, “ஸ்ரீ நரசிம்மர்” புராண நாடகம் நடத்தப்படும் அறிவிப்பு வெளியாகி இருந்தது கண்டு, கடும் அதிர்ச்சி அடைந்து, பல தரப்பிலும் அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டது. உடனடியாக, இந்த நிகழ்ச்சியை ரத்து செய்து, இன உணர்வோடும், திராவிடர் இயக்க கொள்கைப் பற்றோடும் நடவடிக்கை எடுத்த அரசினைப் பாராட்டி, வணங்குகிறோம்! இந்த நிகழ்வினை ஒட்டி, வரலாறு தெரியாத இளையோருக்கும், கொள்கை வறட்சி ஏற்பட்டு வழிமாறிக் கிடக்கும் ஒரு சில திராவிடரியக்கத் தோழர்களுக்கும் சில செய்திகளை அறியத் தந்திடவே இந்தப் பதிவு!

தோழர்களே! ஆரியர்களின் ரிக், யஜுர், சாம, அதர்வண வேதங்களில் முதலிரண்டு சமஸ்கிருத ஸ்லோகங்கள் அனைத்துமே தேவர்களின் எதிரியான அசுரர்களை அழிக்க எமக்கு பலம் தா எனவும், அவர்கள் அழிந்திட அருள் புரிவாயாக என மேலோக தேவேந்திரவாதிகள் இறைவனை வேண்டுவதாகவே உள்ளன. இதில், அசுரர்கள் என்போர் திராவிட அரசர்களே என பண்டித ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர்கள் நிறுவி உள்ளனர்.

இதன் அடிப்படையிலேயே, கடவுளர் கதைகள் புனையப்பட்டு, அழிக்கப்பட்ட நமது திராவிட மன்னர்களான சூரபத்மன், இராவணன், கும்பகர்ணன், இந்திரஜித் என்கிற வரிசையிலே இரண்யனும் இடம் பெறுகிறான். இந்த வகையிலே, திராவிட அரசனான இரண்யனை, திருமாலின் அவதரமான ஸ்ரீ நரசிம்மர், நாராயணனை ஏற்க மறுத்தும், தனது மகன் பிரகலாதன் வணங்கிடுவதைத் தடுத்தும் ‘மாபாதகம்’ புரிந்த திராவிட மன்னனை வதம் செய்ததாகக் கூறும், ‘பக்த பிரகலாதன் கதை’ பாகவதப் புராணத்தில் வருகிறது.

சங்க இலக்கியத்தில் உள்ள கடையேழு வள்ளல்களான பாரி, ஓரி, தலை கொடுத்த குமணன் போன்ற நாடகங்களும், அறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துராஜ்யம், நீதி தேவன் மயக்கம் போன்ற நாடகங்களும் நாம் தானே போட முடியும்? இவற்றைக் கருத்தில் கொள்ளலாமே! நிற்க. திராவிட இன மக்களை இழிவுபடுத்தும் இராமாயண காவியம் என்பதற்கு மறுப்பாக, தன்மான இயக்கப் பெரும் புலவர் குழந்தை, ‘இராவண காவியம்’ எனும் பெரு நூலைப் படைத்தளித்தார்கள்! இதே உணர்வோடு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், ‘இரண்யன் அல்லது இணையற்ற வீரன்’ எனும் நாடகத்தைப் படைத்தார். இந்த நாடகத்தின் கதைச் சுருக்கம் என்பது,

‘வெற்றி கொள்ள முடியாத பெரும் வீரனாகத் திகழ்ந்த இரண்ய மன்னனை வீழ்த்திட, ஆரிய மங்கை சித்ரபானுவை அனுப்பி, இளவரசன் பிரகலாதனை மயக்கி, அவனை, ‘நாராயண பக்தனாக்கி’, சூழ்ச்சி செய்து, இரண்யனை ஆரியப் படை ஆட்கள் சூழ்ந்து கொண்டு முதுகில் குத்திக் கொல்வதாக அமைத்துள்ளார் பாரதிதாசன்! இந்த நாடகத்தின் உச்சக் காட்சியில் பிரகலாதன், ‘இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்றதும், வீராவேசம் கொண்ட இரண்யன் வாளேந்தியபடி தூணை எட்டி உதைப்பார். தூணின் மறைவான இடத்தில், ஏற்கனவே சிங்கத்தோல் போர்த்தியபடி பதுங்கியுள்ள எதிரி, இரண்யன் மீது பாய்ந்ததும், ‘அடே! நான் தூணை உதைத்ததும் நாராயணன் வருகிறான்; நாராயணனையே உதைக்கிறேன்; யார் வருகிறான் பார்ப்போம்’ என ஆவேசத்தோடு முழங்கியபடியே அவனை எட்டி உதைத்து வெட்டிக் கொல்வான் இரண்ய மன்னன்! இந்தச் சூழலில், திரைச் சீலைகளுக்குப் பின்னே பதுங்கியிருந்த ஆரியர்கள், இரண்யன் முதுகில் குத்திக் கொல்வர் சூழ்ந்தபடி!

காட்சியின் நிறைவிலே, பிரகலாதன், சித்ரபானு உள்ளிட்ட எதிரிகளை வெட்டிக் கொன்று, சேனாதிபதி முழங்கிடும் வீர வசனங்கள் நம் இரத்தத்தை இன உணர்வுத் தீயாகக் கொதிக்க வைக்கும்! அந்தப் போர் முழக்க வசனங்கள் புரட்சிக் கவிஞரின் திராவிட நாட்டு விடுதலை முழக்கமாகவே அமைந்துள்ளன! திராவிடரியக்கப் புலவரும், பின்நாளில் தமிழ்நாடு சட்டமன்றத் துணைத் தலைவருமாக இருந்த புலவர் கோவிந்தன், காங்கிரஸ் அரசால் தடை செய்யப்பட்ட இந்த நாடகத்தை செய்யாறில் நடத்திக் கைதான வரலாறும், திராவிடரியக்க ஆட்சியில் அறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர் முன்னிலையில், பொங்கல் விழா நாடகமாக புலவர் நடத்தினார் என்பதும் வரலாறு! அதுமட்டுமல்ல; ‘இராமனை, செருப்பால் அடித்தார் பெரியார்’ என எதிரிகள் பிரச்சாரம் செய்த, வரலாற்றுச் சிறப்புமிக்க சேலம் மாநாட்டு நிகழ்ச்சியில் போடப்பட்ட இன உணர்வு நாடகமே, ‘இரண்யன் அல்லது இணையற்ற வீரன்’ என்பதாகும்!

இத்தகைய வீர வரலாறும், தன்மான உணர்வும் கொண்ட, திராவிடரியக்க நாயகனான இரண்யனை வதம் செய்கிற புராணப் புளுகு நாடகத்தை, திராவிட அரசின் அங்கமான தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமே அரங்கேற்றத் துணிந்தது கடும் கண்டனத்துக்கு உரியது. இதனை அறிந்த திராவிட மாதிரி ஆட்சி, எவ்விதத் தயக்கமும் இன்றி இந்த நிகழ்ச்சியை ரத்து செய்தது என்பது போற்றிப் பாராட்டி, நன்றி சொல்லக் கூடிய நிகழ்வாகும்!

- தடா ஒ.சுந்தரம், M.A., B.L., முகநூல் பதிவில் இருந்து..

***

இரணியன் யார்?

இரணியன் ஒரு சுயமரியாதை வீரனேயாவான். இரணியன் கதை ஒரு சுயமரியாதைக் கதையேயாகும்.

 (பெரியார், குடிஅரசு, 26.2.1944)

பாகவதத்தை எடுத்துக் கொண்டால் இரணியன் எவ்வளவு தூரம் ஜாதியை ஒழிக்கப் பாடுபட்டு இருக்கிறான் என்பதைத் தெரிந்துகொள்ளலாம். அவன் தீவிரமாகவே வேலை செய்திருக்கிறான். “பார்ப்பனர் (அதாவது பார்ப்பனீயம்) எங்கு எங்கு இருக்கிறார்களோ அவர்களுடைய வீட்டை எல்லாம் இடித்துத் தள்ளுங்கள்; கையிலே மண்வெட்டி, பிக்காசுகளுடன் போங்கள், மூக்கைப் பிடித்துக்கொண்டே உட்கார்ந்து இருக்கின்றவர்களைக் கண்டால் மண்டையிலேயே அடியுங்கள். செய்கின்ற ஓமங்களைக் கலைத்து விடுங்கள்” என்று கூறி தனது ஆள்களை அனுப்பினான் இரணியன் என்பதாகப் பாகவதம் கூறுகிறது.

(பெரியார், விடுதலை, 21.1.1951)