சென்னை கழகத் தலைமை அலுவலகத்தில் 29.10.2024 அன்று நிமிர்வோம் வாசகர் வட்ட சார்பில் குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு சிறப்புக் கூட்டம் நடந்தது. அடிகளார் படத்தைக் கழகப் பொதுச்செயலாளர் திறந்து வைத்து ஆற்றிய உரை. கடந்த இதழின் தொடர்ச்சி..
குன்றக்குடி அடிகளார், திருநாவுக்கரசரையும், திருமூலரையும் தான் அதிகமாகப் பேசியிருக்கிறார், அதைவிட திருக்குறளை அதிகமாகப் பேசியிருக்கிறார். தமிழனுடைய நெறி என்பது திருக்குறள் நெறி என்று சொல்லும் அவர், மார்க்சியத்தையும் ஆதரித்துப் பேசியுள்ளார். வள்ளுவ நெறிப்படி மார்க்சியம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்றும் விரும்பினார். ஜாதி ஒழிப்புப் போராட்டங்கள் ஒருபுறமும், வர்க்கப் போராட்டங்கள் இன்னொரு புறமும் நடக்க வேண்டும் என்றார்.
பெரியார் –- மறைமலை அடிகளார்
மறைமலை அடிகளார் பார்ப்பனியத்தையும், சமஸ்கிருதத் திணிப்பையும் கடுமையாக எதிர்த்தார். நீதிக்கட்சித் தொடங்கப்பட்ட போது அதை ஆதரித்தும், சர்.பிடி.தியாகராயர் மறைந்த போது தனது வேதனையையும் பதிவு செய்திருக்கிறார். ஆனால் நாத்திகம்? எதிர் ஆத்திகம்? என்ற நிலை வருகிற போது நாத்திகத்தைக் கடுமையாக சாடியுள்ளார்.
மறைமலை அடிகளார் தொடக்கத்தில் பெரியாரையும், சுயமரியாதை இயக்கத்தையும் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார். சுயமரியாதை இயக்கத்தை எப்படி எந்த வழியில் எதிர்ப்பது என்பதே அவரது சிந்தனையாக இருந்திருக்கிறது என்பதற்கு அவரது நாட்குறிப்பில் அவர் பதிவு செய்துள்ள கருத்துக்களே சான்றுகளாக இருக்கும். பார்ப்பனரல்லாதார் உரிமைக்காக தொடங்கப்பட்ட இயக்கம், சைவத்தை ஏன் எதிர்க்க வேண்டும்? வைணவ மதம் சார்ந்த இராமாயணத்தை எதிர்க்கட்டும், சைவ மத நூலான பெரியாபுராணத்தை ஏன் எதிர்க்க வேண்டும் என்ற கேள்விகள் தீவிர சைவர்களிடம் இருந்து எழுந்தன.
பெரியாரின் ‘குடிஅரசு’ இராமாயணத்தை ‘அக்குவேறு ஆணிவேராக’ அலசி எடுத்தது. சந்திர சேகரப் பாவலர் என்ற பெயரில் இ.மு.சுப்பிரமணியபிள்ளை கண்டம் கண்டமாக இராமாயணத்தை கிழித்துப் போட்டார். சைவர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றனர். அதைத் தொடர்ந்து ‘குடிஅரசு’ பார்வை பெரிய புராணத்தின் மீது விழுந்தது. ‘மெய்கண்டான்’ என்ற புனைப் பெயரில் 1928 ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் எழுதத் தொடங்கினார். ‘சமயச் சண்டைகளை உருவாக்கும் நூல் பெரிய புராணம். ஜாதி பேதத்தைப் புகட்டும் நூல் பெரிய புராணம். கொலை செய்திகளை சைவத்தின் தொண்டு என்று கூறும் நூல் பெரிய புராணம் என்ற கட்டுரைகள் இடி எனத்தாக்கியது. அவ்வளவுதான் சைவத் தீவிரவாதிகள் வெகுண்டெழுந்தனர். சைவ மதம் ஆரிய மதமல்ல என்றும் தமிழர் மதம் என்று முன்வைத்த கருத்துக்களை பெரியார் ஏற்கவில்லை.
திராவிட இயக்க ஆய்வு நூல் எழுதிய ‘இர்ஷ்விக்’ போன்ற ஆய்வாளர்கள். அது பார்ப்பனரல்லாத உயர்ஜாதி வெள்ளாளர்கள் நலனுக்காகத் தொடங்கப்பட்டது என்ற உண்மைக்கு மாறான செய்திகளை உள்நோக்கத்தோடு பதிவு செய்தனர். அடிப்படையில்லாத அப்பட்டமான பொய் என்பதற்கு சைவத்துக்கும், சுயமரியாதை இயக்கத்துக்கும் இடையே நடந்த போராட்டங்களே வலிமையான சான்றாகும்.
‘சைவ சித்தாந்த மதச் சமாஜம்’ என்ற சைவ இதழில் அதன் ஆசிரியராக இருந்த ம.பாலசுப்ரமணிய முதலியார் இப்படி எழுதினார்.
“சுயமரியாதை இயக்கத்தில் உள்ள நல்ல கருத்துகள் எல்லாம் மறைமலை அடிகள் என்ற ஞானத் தந்தை போட்ட பிச்சை என்பது தமிழ்நாடு நன்கு அறிந்ததே. இப்பிச்சை வாங்கிப் பிரச்சாரம் செய்பவர்கள், பிச்சையிட்ட பிதா செய்த நன்றியை மறப்பாராயின் அப்பிரச்சாரம் முழுமையும் கடலில் பெய்த மழை போல் ஒரு பயனும் தராது” (மேற்குறிப்பிட்ட இதழ் ஜூன் 1929)
மறைமலை அடிகள் அம்பலவாணன் என்ற புனைப் பெயரில் சுயமரியாதை இயக்கத்தை “வைணவர்களின் குறும்பு” என்று எழுதினார்.
“சுயமரியாதை இயக்கம் என்பது சைவ சமயத்தை அழிப்பதற்கு சில வைணவர்கள் சூழ்ச்சியாகத் துவங்கிய ஒரு தீய முயற்சியாகும். சுயமரியாதை இயக்கத்துக்கு தலைவரென நிற்கின்றவர் வைணவர். அவர் தம் தமையனாரும் அறிவில்லாத எத்தனையோ சைவ மக்களுக்குப் பட்டை நாமத்தை பரக்கச் சாத்தி அவர்களை வைணவ மதத்தில் சேர்த்துவரும் கொடிய வைணவர் என்று கேள்விப்படுகிறோம். இவர்களுக்குத் துணையாக நிற்கின்ற சிலரும் வைணவர்கள், நியாயவாதிகள் எனும் பொருளுடைய ஜஸ்டிஸ் கட்சிக்கு தலைவர் என நிற்கின்ற சிலரும் வைணவர்கள். இவர் எல்லாம் வைணவராதலோடு தெலுங்கு மொழிப் பேசுந் தெலுங்கர்கள்” என்று எழுதினார். (சிவநேசன் இதழ் 1926, ஆனி விபவ)
பார்ப்பனரல்லாதார் சுயமரியாதைக்காக பெரியார் களமாடிய போது அவரை தெலுங்கன், தமிழர் விரோதி என்று ‘முத்திரை குத்தும்’ துரோகக் குரல்கள் 1925ஆம் ஆண்டில் இருந்தே தொடங்கி விட்டன. சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பன – பார்ப்பனரல்லாத மாணவர்களிடையே பாகுபாடுகளை திணித்ததை எதிர்த்து பெரியாரும், வரதராஜுலு நாயுடுவும், திருவிகவும் போர்க்கொடி உயர்த்திய போது தெலுங்கு நாயுடுவும், கன்னட பெரியாரும் இணைந்து எதிர்க்கிறார்கள் என்று வ.வே.சு அய்யர் கூறினார். பார்ப்பனியம் தனது ‘வர்ணாசிரம ‘முகத்தை’ வெளிப்படுத்தாமல் பதுங்கும் முகமூடியாக இந்த தெலுங்கர், கன்னடர் அடையாளங்களை கையில் எடுப்பது தொடர்ந்து அரங்கேறிவருகிறது. (அண்மையில் பார்ப்பனர் ஆர்ப்பாட்டத்தில் கஸ்தூரி என்ற பார்ப்பன நடிகை இதே மொழியைத் தான் தரம் தாழ்ந்து பேசியிருக்கிறார்.)
குருகுலப் போராட்டத்திலும் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து நடந்த போராட்டத்திலும், பெரியாரோடு கரம் கோர்த்து நின்றவர் திருவிக. அவரும் பிறப்பால் ஒரு சைவர் தான். மறைமலை அடிகளாரின் ‘சைவ வெறி’ சார்ந்த அணுகுமுறையை திரு.வி.க ஏற்கவில்லை. அப்போது ‘நவசக்தி’ பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் திரு.வி.க, மறைமலை அடிகள் எழுதிய இந்தக் கட்டுரையை திரு.வி.க ‘நவசக்தியில்’ வெளியிட மறுத்துவிட்டார் என்பதாலேயே – தீவிர ‘சைவ’ இதழாக வெளிவந்த ‘சிவநேசன்’ பத்திரிகையை மறமலை அடிகள் நாட வேண்டியிருந்தது என்கிறார் ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி. இந்த நிலையில் மறைமலை அடிகளாரின் சுயமரியாதை இயக்க எதிர்ப்பு 1928. ஜூலை 22இல் எரிமலையாக வெடித்தது.
இராயப்பேட்டையில் பக்த ஜன சபா என்ற இடத்தில் மறைமலை அடிகளார் பங்கேற்ற கூட்டம் ஒன்று நடைபெற்றது. 22, ஜூலை 1928 அன்று அந்தக் கூட்டத்தில் இந்துமதத்தின் பெருமைகளை அடிகளார் பேசிக்கொண்டிருந்த வேளையில்
“நாத்திகம் என்ற கருத்து இன்றைக்கு சமூகத்துக்குப் பெரிய கேடாக வந்திருக்கிறது” நாத்திகம் பேசுபவர்களை சும்மாவிடக்கூடாது. இந்து மதத்தையும், சைவத்தையும் பார்த்து நாத்திகம் பேசுகிறவர்கள், இஸ்லாமியர்களிடம் இப்படி பேசியிருந்தால் அவன் இவர்களின் குடலை உறுவி மாலையாகப் போட்டிருப்பான். ஆனால் நம்முடைய சமுதாயம் இப்படிப்பட்ட பேச்சுக்களையெல்லாம் வேடிக்கைப்பார்த்துக் கொண்டிருக்கிறது"
என்று பேசினார்.
அந்த கூட்டத்தில் பங்கேற்றிருந்த சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த தண்டபாணி பிள்ளை, திராவிடன் பத்திரிகையின் ஆசிரியரான கண்ணப்பர் ஆகியோர் மறைமலை அடிகளாரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அந்தக் கூட்டம் அடிதடியில் முடிந்தது.
குடிஅரசு இதழிலும் மறைமலை அடிகளாரைக் கண்டித்து தலையங்கங்களும், கட்டுரைகளும் வெளியாகின. ‘சுவாமி வேதாச்சலத்தின் வித்தைக்கு வணக்கம்- அவர் புத்தியை என்ன செய்வது? என்ற தலைப்பில் கைவல்ய சாமி ஒரு கடுமையான எதிர்வினையாற்றினார்.
“சைவம் பேசிக் கொண்டு மறைமுகமாகப் புலால் உண்ணுகிறார் என்று குற்றம் சாட்டினார்” சாமி வேதாச்சலம் மதத்தை நிலை நிறுத்தவர் ஆச்சாரியல்ல; விதிகர்த்தாவுமன்று, கூலிக்குப் படிப்புச் சொல்லுவதற்கு ஒப்பந்தம் பேசும் வித்வான்” என்றும் கடுமையாகச் சாடினார். (குடிஅரசு 2.08.1928)
மறைமலை அடிகள் பேசியதை தெளிவுபடுத்த வேண்டும். இல்லையேல் கடுமையாக எழுத நேரிடும் என்று ‘குடிஅரசு’ இரண்டு முறை எச்சரித்தது. இறுதியாக பெரியாருக்கும் மறைமலை அடிகளாருக்கும் சமரசம் உருவாக்கும் முயற்சிகள் நடந்தன. திரு.வி.கவும், கி.ஆ.பெ.விஸ்வநாதமும் மறைமலை அடிகளாரின் பல்லாவரம் இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்கள். (1928 – ஆகஸ்டு 24)
அதில் நான் எந்தவொரு சூழ்நிலையிலும் பெரியாரையும், மற்றவர்களையும் எதிரியாகக் கருதவில்லை. அவர்களது வாழ்க்கையை முடிக்க வேண்டும் என்ற நோக்கம் எனக்கு சிறிதும் கிடையாது. நான் பேசியதை தவறாகப் புரிந்து இப்படி வெளிப்படுத்திவிட்டார்கள். உண்மையிலேயே அவர்களுக்கு அப்படி ஒரு புரிதல் இருக்கும் என்று சொன்னால் அதற்காக என்னுடைய வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் பிரச்சனையில் அவருடன் எனக்கு முழு உடன்பாடு உள்ளது. ஆனாலும் இந்த நாத்திகப் பிரச்சனையில் அவருடன் எனக்கு கருத்து வேறுபாடு உண்டு. ஆனால் இந்தப் பிரச்சனையில் அவர் மனம் புண்பட்டிருந்தால் நான் வருத்தம் தெரிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
பெரியாருக்கு எழுதப்பட்ட இந்தக் கடிதத்தை அப்போது பெரியார் சுற்றுப்பயணத்தில் இருந்ததால் திராவிடன் இதழ் ஆசிரியர் கண்ணப்பரிடம் வழங்கினார் கி.ஆ.பெ.விசுவநாதனிடமிருந்து. அதை பெற்றுக் கொண்ட கண்ணப்பர் தனது திராவிடன் பத்திரிகையில் “மறைமலை அடிகளார் மன்னிப்புக் கேட்டார்” என்ற தலைப்பில் அந்தக் கடிதத்தை வெளியிட்டார். சுற்றுப்பயணம் முடித்து வந்த பெரியார் இதைப் பார்த்தவுடன், இந்தக் கடிதம் எனக்கு தனிப்பட்ட முறையில் எழுதப்பட்டது. இதை நீங்கள் வெளியிட்டு அவரை அவமானப்படுத்துவதை நான் ஒப்புக் கொள்ள மாட்டேன். இப்படி அடிகளார் மன்னிப்புக் கேட்டார் என்று பத்திரிகையில் பிரசுரமானதுக்கு நான் வருந்துகிறேன். இந்த கடிதத்தை வெளியிட்டதற்காக அடிகளாரிடம் நான் தலை தாழ்ந்த மன்னிப்பைப் கேட்டுக் கொள்கிறேன் என்று பெரியார் ஒரு அறிக்கை வெளியிட்டார்.
அதற்கு பிறகு அவருடைய அறிவுக் கொத்து எனும் நூலில் யார்? அயலார்? யார் உள்நாட்டார்? என்று சொல்லுகிற போது, பிரிட்டீஷ்காரர்கள் மட்டுல்ல, வந்தேறி ஆரியப் பார்ப்பனர்களும் அயலார் தான் என்பதை சான்றுகளுடன் நிறுவியிருந்தார். அது சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தது. அதைப் பாடத்தில் இருந்து எடுக்க வேண்டும் என்று பார்ப்பனர்கள் கடுமையாகப் போராடிய போது மறைமலை அடிகளாருக்கு ஆதரவாக களத்தில் நின்று போராடியவர் பெரியார்.
(தொடரும்)