Chennai High Courtதமிழ்நாடு அரசு, தமிழ்நாட்டு கோவில்களில் முறைப்படி பயிற்சிப் பெற்ற சில பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களை, துணை அர்ச்சகர்களாக நியமித்தது, பார்ப்பனர்களால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. ஆகாயத்துக்கும், பூமிக்கும் துள்ளி குதிக்கிறார்கள். கோவில்களில் கடவுள்களே இல்லை என்று கூறுகிறார்கள். நீதிமன்றங்களில் வழக்குகளை தொடர்கிறார்கள். உச்சநீதி மன்றம் வரை சுப்ரமணியசாமி சென்றிருக்கிறார். சென்னை உயர்நீதி மன்றத்திலும் இது தொடர்பாக ஏராளமான வழக்குகள் வந்திருக்கின்றன.

20.10.2021 அன்று இது தொடர்பாக வழக்கு விசாரனையை சென்னை உயர்நீதிமன்றம் எடுத்திருக்கிறது. அதில் ஒரு பிரச்சனையில் உயர்நீதி மன்றம் திட்டவட்டமான ஒரு கருத்து கூறியிருக்கிறது. தமிழ்நாடு அரசு பிறப்பித்திருக்கிற இந்த அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகும் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறி, இரு தரப்புக்கும் உரிய விளக்கம் கேட்டு தாக்கீதுகளை அனுப்பியிருக்கிறது. அர்ச்சகர்கள் சார்பில் இப்போது என்ன வாதங்களை முன் வைக்கிறார்கள்?

1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத்துறை சட்டம் வந்தது. அந்த சட்டத்தின் படி கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்கும் அதிகாரம் கோவிலில் இருக்கும் அறங்காவலர்களுக்குத் தான் உள்ளது. இந்து அறநிலையத்துறைக்கு அந்த அதிகாரம் கிடையாது என்று அவர்கள் வாதாடுகிறார்கள். 2020ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு இந்து அறநிலையத்துறை சட்டங்களில் சில திருத்தங்களை கொண்டு வந்திருக்கிறது.

அந்த திருத்தத்தின் படி ஒருவர் அர்ச்சகராக இருக்க வேண்டும் என்று சொன்னால், 18 வயதில் இருந்து 35 வயது வரை தான் அர்ச்சகராக இருக்க முடியும். அதுவும் மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற்றவராக இருக்க வேண்டும். இந்த இரண்டு விதிகளும் செல்லாது என்று பார்ப்பனர்கள் நீதிமன்றத்தில் வாதாடுகிறார்கள். தங்களுக்கு ஓய்வு கிடையாது, வயது வரம்பை தங்களுக்கு நிர்ணயிக்க முடியாது, மூன்று ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது, எங்களுக்கு ஆகம, வேத அறிவு பாரம்பரியம் பாரம்பரியமாக எங்களது குடும்பத்தில் இருந்து வந்து கொண்டிருக்கிறது, என்று அவர்கள் நீதிமன்றத்தை நாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

மற்றொரு வாதத்தையும் அவர்கள் முன் வைக்கிறார்கள். ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகம விதிமுறைகள் உள்ளன. மொத்தம் 26 ஆகமங்கள் இருக்கின்றன. வைணவத்திலே இரண்டு ஆகமங்கள் உண்டு. ஒரு கோவிலில் உள்ள ஆகமத்தை மற்றொரு கோவிலுக்கு பின்பற்றக்கூடாது. என்றெல்லாம் வாதிடுகிறார்கள். எந்த கோவிலுக்கு எந்தெந்த ஆகமங்களை பின்பற்ற வேண்டும் என்று நிர்ணயித்தது யார்? எந்த காலத்தில் நிர்ணயிக்கப்பட்டது? என்ற கேள்விகளுக்கெல்லாம் அவர்களிடம் பதில் இல்லை. இவர்கள் சொல்வதையெல்லாம் வேத வாக்காக நீதிமன்றம் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். சரி இருக்கட்டும்.

ஒவ்வொரு கோவிலுக்கு ஒவ்வொரு ஆகம முறை இருக்கிறதென்றால், அர்ச்சகராக நியமிக்கப்படுபவர், அந்த கோவிலுக்குரிய ஆகமங்களை கண்டறிந்து, அதன்படி அர்ச்சகர், பூசை முறைகளை செய்வதில் என்ன தடை இருக்கிறது? அதை ஏன் இவர்கள் எதிர்க்க வேண்டும்? இதில் பிரச்சனை என்னவென்று சொன்னால், ஒவ்வொரு கோவிலுக்கும் ஒவ்வொரு ஆகம முறை இருக்கிறது.

அதே போல ஒவ்வொரு கோவிலுக்கும், எங்கள் பிராமண குலத்தைச் சேர்ந்த சாஸ்திரியோ, ஷர்மாவோ, அய்யரோ, அய்யங்காரோ மட்டும் தான் பூசை செய்ய வேண்டும். அந்த ஆகமத்தை ஓத வேண்டும் என்ற விதியும் அதில் சேர்ந்திருக்கிறது என்று ஆகமத்தை தங்களுடைய பார்ப்பனிய தர்மத்தோடு, பார்ப்பனிய அடையாளத்தோடு இணைத்துக் கொண்டு பேசுகிறார்கள். இதை வெளிப்படையாகப் பேசாமல் சட்டங்களில் புகுந்து கொண்டு வியாக்கியானம் செய்து கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

2021 ஆம் ஆண்டிலும் கூட, எங்களுக்கு பயிற்சி என்ற ஒன்று கிடையாது. பாரம்பரியமாக வேத வழிமுறையில் வந்தவர்கள். எங்களுக்கு ஓய்வு வயது என்று யாரும் நிர்ணயிக்க முடியாது. நாங்கள் எந்தக் கோவிலில் இருக்கிறோமோ, அந்தக் கோவிலில் நாங்கள் மட்டுமே தான், அந்தக் கோவில் இருக்கும் வரை, அந்தக் கடவுள் இருக்கும் வரை அர்ச்சகராக இருக்க வேண்டும். நாங்கள் பூ தேவர்கள், தேவர்களாக பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டவர்கள். என்றெல்லாம் சொல்லிக் கொண்டு இன்றைக்கு ஒரு கூட்டம் நீதிமன்றம் வரை சென்று வழக்குகளை தொடுத்துக் கொண்டு இருக்கிறது.

இதை வெளிப்படையாகக் கூறாமல் 1959 ஆம் ஆண்டு சட்டம், 2020 ஆம் ஆண்டு சட்டம், அறநிலையத் துறைக்கு உரிமை கிடையாது, திருத்தப்பட்ட விதிகளை ஏற்க முடியாது என்று சட்டங்களிலே புகுந்து கொண்டு தங்களுடைய சனாதன வைதீகத்தை பாதுகாக்க துடித்துக் கொண்டு இருக்கிறார்கள்.

இப்படித்தான் இந்து மதத்தின் பிடி என்பது, பார்ப்பனியத்துக்குள், சனாதனத்துக்குள் வலுவாக சிக்கிக் கொண்டு இருக்கிறது. இதில், நாங்கள் 'தமிழ் இந்து' ஆரியத்தை வீழ்த்தப் போகிறோம் என்று சொல்கிறவர்கள் இதிலிருந்து எப்படி மீண்டு வரப்போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது.

- விடுதலை இராசேந்திரன்

Pin It