காஞ்சிபுரம் மாவட்டம், மகாபலிபுரத்தில் நடைபெற்ற கோடி வன்னியர்கள் கூடும் ‘சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா’வையொட்டி 25.4.2013 அன்று கிழக்குக் கடற்கரைச் சாலை மரக்காணம் காலனி (தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பு) கட்டையன் தெரு, இடை கழியூர், கூனிமேடு ஆகிய இடங்களில் தலித் மக்கள் தாக்கப்பட்டது மற்றும் குடியிருப்புகள் கொளுத்தப்பட்டது குறித்த உண்மைகளை அறிய மக்கள் சிவில் உரிமைக் கழகம் (ம.சி.உ.கழகம்), தமிழ்நாடு -பாண்டிச்சேரி, ஒரு குழுவினை அமைத்தது.

பேராசிரியர் சரசுவதி-தலைவர் (ம.சி.உ.க.), பா. செயப்பிரகாசம், எழுத்தாளர், த. முகேஷ், பொறியாளர் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர், ராகவராஜ் - ம.சி.உ. கழக மாநில பொதுக் குழு உறுப்பினர், கௌதம் பாஸ்கர் - புதுவை சட்டக் கல்லூரி மாணவர் ஆகியோர் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

உண்மை அறியும் குழுவினர் 29.4.2013 திங்களன்று தாக்குதலுக்குள்ளான பகுதிகளையும் வீடுகளையும் தலித் மக்களையும் நேரில் சென்று பார்த்தனர். மக்களைச் சந்தித்தனர்.

பாண்டிச்சேரியிலிருந்து / பாண்டிச்சேரி வழியாக விழாவிற்கு வந்தவர்கள், பாண்டிச்சேரியில் ஏராளமான காலி மது பாட்டில்களையும் சேகரித்திருக் கிறார்கள். தாங்கள் பயணம் செய்த வாகனங்களிலேயே தாக்குதல்களுக்கான ஆயுதங்களையும் எடுத்து வந்திருக்கிறார்கள். தாக்குதலை நடத்தியவர்கள் வெளியூர்காரர்கள்தான் என்றாலும், அவர்களுக்குத் தேவையான தகவல்களைத் தந்து உதவியிருப்பவர்கள் உள்ளூர்க்காரர்களே. பிற சாதியினர் வீடுகள் எதுவும் தாக்கப்படவில்லை. உதாரணமாக, கழியூர் குப்பத்தில் பிற சாதியினர் வீடுகளைத் தாண்டி இருக்கும் தலித் வீடுகளை, உள்ளூர்காரர்கள் தான் அடையாளம் காட்டியிருக்க வேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அதைப் போலவே மரக்காணம் கி.க. சாலையிலிருந்து பார்க்கும்போது, காடுகள் அடர்த்தியாக இருப்பதன் காரணமாக, காலனி இருப்பதே கண்களுக்குத் தெரியாது. உள்ளூர்க்காரர்கள் காட்டியிருக்காவிட்டால், வெளியூர்க்காரர்கள் அறிய வாய்ப்பில்லை.

2002 ஆம் ஆண்டிலிருந்தே சமுதாய மோதல் வரலாறு கொண்ட பகுதி என்பதாலும், அண்மையில் தருமபுரி தாக்குதல் நடந்திருப்பதைக் கருத்தில் கொண்டும் காவல்துறை கூடுதல் கவனம் செலுத்தி, தாக்குதல்களும் மோதல்களும் நிகழாமல் செயல்பட்டிருக்க வேண்டும். அன்று அந்தப் பகுதியில் போதுமான காவலர்கள் இல்லை என்பது, காவல் துறையின் மெத்தனப் போக்கையும், அலட்சிய அணுகுமுறையையும் காட்டுகிறது

Pin It