‘வாஸ்து’ நம்பிக்கை - மத மூடநம்பிக்கைகளால் கழிப்பறை கட்டுவதற்கு மறுக்கும் மக்கள் இருக்கிறார்கள். கழிப்பறை கட்டாமல் பொதுவிடங்களில் மலம் கழிக்கும் பழக்கம் - இந்த மூடநம்பிக்கைகளால் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாமக்கல் மாவட்டம் பரலி பஞ்சாயத்துக்குட் பட்ட பகுதியில் அருணா (42), பெரியசாமி (45) தம்பதியினர் வீட்டுக்கு கழிப்பறைக் கட்டுவதற்கு குழிதோண்டி முடித்த பிறகு, சோதிடர் வீட்டுக்கு அருகே குழி தோண்டினால் 5 வயது மகனுக்கு ஆபத்து வரும் என்று கூறினாராம். உடனே கழிப்பறைக் கட்டுவதை கைவிட்டுவிட்டனர். அனியாபுரம் பஞ்சாயத்தில் ரூ.6000 செலவிட்டு கழிப்பறையைக் கட்டி முடித்த தச்சுத் தொழிலாளி சிவசக்தி (30), ‘வாஸ்து’ சோதிடர் ஒருவர் பேச்சைக் கேட்டு கட்டிய கழிப்பறையை இடித்துத் தள்ளியுள்ளார்.

கோயில் விழாக்கள் நடக்கும் காலத்தில் கழிப்பறை கட்டுவது கெட்ட சகுனம் என்று நம்பி, கிராம மக்கள் கழிப்பறை கட்டுவதையே நிறுத்தி வருகிறார்கள்.

2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நாமக்கல் மாவட்டத்தில் 43.8 சதவீத மக்கள் பொதுவிடங்களிலேயே மலம்-சிறுநீர் கழிக்கிறார்கள். கிணறுகள், ஆழ்குழாய்கள் அருகே கழிப்பறை அமைப்பது சுகாதாரக் கேடு என்றாலும், பல வீடுகளில் ‘வாஸ்து’ சோதிடர் கருத்துப்படி கிணற்றுக்கு அருகிலேயே கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார் தொண்டு நிறுவனம் நடத்தும் பால் அருண். கழிப்பறைகளை ஊக்குவிக்கும் தொண்டு நிறுவனங்களை நடத்திவரும் எஸ்.எஸ்.சத்தியநேசன் என்பவர், மக்கள் மூடநம்பிக்கையில் தீவிரமாக இருக்கும் வரை அவர்களிடம் கழிப்பறை கட்டக் கோரும் இயக்கம் வெற்றிப் பெற முடியாது என்று கூறுகிறார்.

நாமக்கல் மாவட்டத்திலுள்ள கிராமங்களில் இது குறித்து ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. ஆண்டு ஒன்றுக்கு மதப் பண்டிகைகளுக்கு ரூ.8000 வரை செலவிடும் பல குடும்பங்கள், அதே செலவில் ஒரு கழிப்பறை கட்டிக் கொள்ள தயாராக இல்லை என்று அந்த ஆய்வு கூறுகிறது. வீட்டுக்கு கழிப்பறை கட்டாயத் தேவை என்றாலும், பலரும் வீட்டுக்குள்ளே கழிப்பறை கட்டுவதில்லை. வீட்டுக்குள் கெட்ட வாடை வீசும் என்று அஞ்சுகிறார்கள். வீட்டுக்குள்ளே கழிப்பறை கட்டுவதால் செலவு குறையும். ஆனால், வீட்டைவிட்டு வெகுதொலைவில் கழிப்பறை கட்டுகிறார்கள். இரவு நேரங்களில் பெண்கள் பயன்படுத்துவதில் சங்கடம் ஏற்படுகிறது என்கிறார், இத்திட்டத்துக்கான பெண் அதிகாரி வனிதா தெய்வமணி. ‘இந்து’ நாளேடு (மே 6) முதல் பக்கத்தில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. மனிதர்கள் மலம் கழிப்பதே குடும்பத்துக்கு கேடு என்று ‘வாஸ்து’ பண்டிதர்கள் கூறினாலும் அதை நம்பும் கூட்டம் இங்கே இருக்கிறது! இதையெல்லாம் மக்களிடம் விளக்கிட - பகுத்தறிவுப் பரப்புரை வேண்டாமா?

Pin It