saraswati murder copy15.4.2021 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தேவியாநந்தல் கிராமத்தில் சரஸ்வதி என்கிற இளம்பெண் (19) அதே ஊரில் வசிக்கும் ரங்கசாமி என்ற இளைஞர் சரசுவதி காதலிக்க மறுத்ததால் கொலைச் செய்துவிட்டார் என்ற செய்தி வெளிவந்தது. கொலைச் செய்ததாக ரங்கசாமி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

பாதிக்கப்பட்ட குடும்பத்தை நேரில் பார்க்கவும், சரஸ்வதி கொலைக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறியவும் கடந்த 22.4.21 அன்று தேவியாநந்தல் கிராமத்திற்கு சென்றோம். உண்மை நிலவரத்தை இரு தரப்பு மக்களிடமும் விசாரித்தோம். உண்மைத் தகவலை உங்களோடு பகிர்ந்துக் கொள்கிறோம்.

பழைய விழுப்புரம் மாவட்டம் இன்றைய கள்ளக்குறிச்சி மாவட்டம், கெடிலத்திலிருந்து பண்ருட்டி செல்லும் பாதையில் தேவியாநந்தல் என்கிற கிராமம் உள்ளது. ஊரின் தொடக்கத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது.

தேவியாநந்தல் கிராமத்தில் சுமார் 200 வன்னியர் குடும்பங்களும், 100 நாயுடு குடும்பங்களும், 10 கோனார் குடும்பங்களும் வசிக்கின்றன. அதற்கடுத்து 250 பறையர் குடும்பங்கள் வசிக்கின்றன. பெரும்பாலும் கஷ்டப்படும் உழைக்கின்ற குடும்பங்கள்தான். சிறு குறு நடுத்தர உழவர்களே. 

இதுவரை அக்கிராமத்தில் எந்தச் சாதி சண்டையும், சாதிரீதியிலான கொலையும் நடந்ததில்லை. ஏப்-2 அன்று நடந்த சரசுவதி கொலையே முதல் கொலை என்பது தெரியவந்தது. தேவியாநந்தல் கிராமத்தில் வன்னியர் தரப்பில் பாமகவோ பறையர்கள் தரப்பில் விசிக வோ என சாதி ரீதியான அரசியல் கட்சிகளே இல்லை.

சரசுவதியின் தந்தை வீரமணி ஒரு திமுக காரர். அந்த ஊரில் திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட், தேமுதிக போன்ற கட்சிகளே உள்ளன. பொது கட்சி கொடி தவிர  வேறு எந்தக் கொடியும் பொது இடத்தில் ஏற்றுவதற்கு அந்த ஊரில் அனுமதியில்லை. அதையும் மீறி தற்போது ஒருவர் தன் வீட்டின் அருகில் பாமக, பாஜக கொடியை ஏற்றியுள்ளார்.

கொல்லப்பட்ட சரசுவதியின் குடும்பத்தை முதலில் சந்தித்தோம். தந்தை வீரமணி, தாய் ஜெயகாந்தி. ஜெயகாந்தி தற்காலிக தூய்மைப்பணியாளராக பணிபுரிகிறார். தந்தை வீரமணி, லாரி டிரைவர். இவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள், ஒரு ஆண் பிள்ளை.

மூத்த பெண்தான் சரசுவதி என்பதை தெரிவித்தனர். சரசுவதி நர்ஸிங் படித்துவந்ததாக கூறினர். சரசுவதி கொல்லப்பட்ட விவரத்தைக் கேட்டோம். ஜெயகாந்தியும், வீரமணியும் சொன்ன பதில்கள்.

ஜெயகாந்தி: “என் கணவனும் நானும் வீட்டிற்கு வெளியில் கட்டிலில் படுத்திருந்தோம். என் பொண்ணு சரசுவதியும் மகனும் வீட்டிற்குள் படுத்திருந்தனர். விடியற்காலை 4 மணி இருக்கும் எழுந்து உள்ளே படுக்க சென்றோம். அப்பொழுது உள்ளே மகள் இல்லை. எங்கே என்று தேடிப் பார்த்தோம். அழுது கத்தி அழைத்தேன் ஒரு சத்தமும் இல்லை. அப்பொழுதுதான் 50 அடி தொலைவில் என் பொண்ணு கிடப்பதை என் மகன் அழைத்து காட்டினான். பார்த்தால் கழுத்து இறுக்கப்பட்டு மயங்கி கிடந்தாள்.

தண்ணீர் தெளித்து எழுப்பிப் பாத்தோம். எந்த சலனமும் இல்லை. வீட்டிற்கு பின் புறத்தில் 100 அடி தொலைவில் அவளின் செருப்பு இருந்தது. அங்குதான் அவர்கள் பேசியிருக்கிறார்கள். “என் பொண்ணை காதலிக்க சொல்லி மிரட்டி தொந்தரவு செய்திருக்கிறான். என் மகள் அதை என்னிடம் சொல்லவில்லை. அவளை கொலைசெய்து வீட்டின் அருகில் 50 அடி தொலைவில் போட்டுவிட்டு சென்றுள்ளான் என்றார் ஜெயகாந்தி.

பக்கத்திலேயே அவர்கள் பேசியிருப்பதாக சொல்கிறீர்கள், உடல் அருகிலேயே கிடக்கிறது. உங்களுக்கு சத்தம் ஏதும் கேட்கவில்லையா? என்றோம்.

எப்பொழுதும் இரவில் 3 முறையாவது எழுவோம். அன்றைக்கு இருவருமே அசந்து நல்ல தூங்கிவிட்டோம். நடந்தது தெரியவில்லை என்றார்.

தந்தை வீரமணி: “அண்ணங்காரகுப்பம் என்கிற கிராமத்தைச் சேர்ந்த எங்களின் சொந்தத்திலுள்ள மாப்பிள்ளையை பார்த்தோம் மாப்பிள்ளை பெயர் மகேந்திரன். மகளுக்கு நிச்சயம் செய்துவிட்டோம். அடுத்து கொஞ்ச நாளில் திருமணம் நடக்கப்போகிறது. திருவிழாவிற்காக மகளை கொண்டுவந்து விட்டுட்டு போக சொல்லி மாப்பிள்ளையிடம் நான்தான் சொன்னேன். அவரும் கொண்டு வந்துவிட்டுவிட்டு சென்றார்.

அடுத்த நாள் இப்படி இறந்துக் கிடக்கிறாள். அன்றிரவு அந்த பையன் அழைத்துதான் இவள் போயிருக்கிறாள். அவர்கள் அடித்து கொலை செய்து தூக்கிக்கொண்டுவந்து இங்கு போட்டுவிட்டு சென்றுள்ளனர்.“ உடலை பார்த்ததும் கதறி அழுதோம். காவல்துறை வந்து எடுத்துசென்றனர். நாங்கள் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை. போலீசே சந்தேக மரணம் என்றுதான் பதிவு செய்தனர்.

கொலை நடந்தது ஏப்-2. காவல்துறையோ எங்கள்மீது சந்தேகம் கொண்டு தொடர்ந்து அழைத்து விசாரித்து வந்தனர். 15 நாட்களுக்கு பின்புதான் போலீசே அந்த பசங்கல கைதுசெய்திருக்காங்க. நாங்கள் யார் பெயரையும் கொடுக்கவில்லை. அந்த பையன்கிட்ட இருந்து அடிக்கடி போன் வந்துள்ளதை வைத்து விசாரித்திருக்கிறார்கள். அந்த பையன்களே ஒத்துக்கொண்டார்கள். பல கட்சிக்காரங்க வந்து எங்கள பார்த்தாங்க.“ என்றார்.

ஊரில் உள்ள வன்னியர் மக்களுடன் பேச்சுக் கொடுத்தோம். சிலர் பதட்டமாகவே “எங்களுக்கு ஒன்றும் தெரியாது. நாங்கள் வேலை வெட்டிக்குப் போய்விட்டோம். அன்று ஊரிலேயே நாங்கள் இல்லை என்று சொல்லி பல பேர் ஒதுங்கிக் கொண்டார்கள். ஒருவர் மட்டும் “நாங்கள் சொன்னா எங்களையும் கொல பண்ணவா? எதுக்கு வம்பு எனக்கிருப்பது ஒரே பையன், நீங்க கௌம்புங்க“ என்றார். சில சந்தேகங்களோடு அந்த இடத்திலிருந்து புறப்பட்டோம்.

அடுத்து, பறையர் மக்களிடம் சென்றோம். கொலை செய்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள நபர்களான, ரங்கசாமி(21), அவரின் தம்பி கிருஷ்ணசாமி (15), ரவீந்திரன் (22) ஆகியோர் தற்போது விழுப்புரம் சிறையில் உள்ளனர். ரங்கசாமியின் குடும்ப நண்பர் ரவீந்திரன். முதலில் ரவீந்திரன் குடும்பத்தை சந்தித்தோம். ரவீந்திரனின் அம்மா கனகவல்லி, அப்பா மற்றும் இரு அண்ணன்கள், மூத்த அண்ணனின் மனைவி ராதிகா ஆகியோர் இருந்தனர். எங்களை பார்த்தவுடன் கதறி அழுது கும்பிட்டார் கனகவல்லி.

“ஒன்னும் செய்யாத என் பையன இப்படி பொய் கேசு போட்டு ஜெயில போட்டுட்டாங்களே, என் பையன் ஏதும் அறியாதவன், ஆந்திராவிற்கு நெல் அறுவை மிஷின் ஓட்டும் டிரைவராக இருக்கிறான். அவனுக்கு நிச்சயம் செய்துவிட்டோம். வரும் வைகாசி 30 அன்று கல்யாணம் வச்சிருந்தோம். இப்படி அவன் வாழ்க்கையை நாசம் செஞ்சுட்டாங்களே அம்மா. வீட்டில் தூங்கியிருந்தான் என் பையன். ராத்திரி 9.45 மணிக்கு போலீசு வந்தாங்க.

ரவீந்திரன அனுப்புங்க சும்மா விசாரிச்சுட்டு உடனே அனுப்பிடறோம். ஒன்னும் பண்ணமாட்டோம்“ னு சொல்லிதான் அழைச்சுட்டு போனாங்க. உடனே பின்னாடியே போயி உளுந்தூர்பேட்டை, நாவலூர் ஸ்டேசன்ல தேடிப்பார்த்தோம். அங்க இல்லனு சொல்லிட்டாங்க. எங்க ஊருக்கு இந்த இரண்டு ஸ்டேசன்தான் வரும்.

ஆனா. எங்க பையன எடக்கல் ஸ்டேசன்ல வச்சு அடிச்சு கொடுமை பண்ணிருக்காங்க. அடிச்சதுல முகம் கை கால், பிறப்புறுப்பு எல்லாம் வீங்கி கிடக்குதாம். அடுத்த நாள் காலைலை நாங்க போனா எங்கள பாக்க உடல போலீசு. அங்கிருக்கிற ஒரு அதிகாரிக்கு 5,000 ரூ பணம் கொடுத்த பின்னாடி எம் பையன காட்டுனாங்க. அவன் எங்கள பார்த்ததும் தலைய தலைய அடிச்சுக்கிட்டு அழுதான். போலீசு “நாங்க சொல்ற மாதிரிதான் சொல்லனும்னு சொன்னத என் புருஷன் காதால கேட்டிருக்காரு. இப்படி கொலபழி போட்டுட்டாங்களே என் பையன் எப்போ வருவான், நீங்க உதவுங்க.“ என்று அழுதார்.

ரவீந்திரனும் கொலை கேசுல சேத்திருக்காங்களே  எதனால்?

ரவீந்திரன் அண்ணி ராதிகா; “சரசுவதியும் ரங்கசாமியும் 5 வருஷமா காதலிச்சாங்க இது ஊருக்கே தெரியும். இரண்டு முறை கூட்டிட்டு ஓடிருக்காங்க. ஊர்க்காரங்களே அழைச்சிவந்து பிரிச்சு வச்சாங்க. அவன் பேர அந்தபொண்ணு நெஞ்சுல பச்ச குத்தியிருக்கு. அவள் பேர அவன் நெஞ்சுல குத்தியிருக்கான்.

அந்த பொண்ணும் ரங்கசாமியும் என் மச்சினன் போனிலிருந்துதான் அப்பப்போ பேசுவாங்க. அந்த பொண்ணு இந்த ரங்கசாமிகூடதான் வாழுவேன்னு பிடிவாதமா இருந்துச்சு. கடைசியா அவளுக்கு நிச்சயம் பண்ணப்போறாங்கன்னு தெரிஞ்சதும் காதலிச்ச ரங்கசாமி மருந்து குடிக்க போயிட்டான்.

என் மச்சினன் ரவீந்திரன்கிட்ட வந்து அவங்க அப்பா, அம்மா அழுதாங்க என் பையன காப்பாத்து, அந்த பொண்ணால இவன் செத்துடுவான் போல, வா  என்று வந்து அழைச்சிட்டுபோனாங்க. ரவீந்திரன் ஆஸ்பிடலுக்கு அழைத்துச்சென்று காப்பாத்தி விட்டான். உயிரைக் காப்பாத்துனது குத்தமா? இந்த பழியை வைத்துதான் போலீசு ரவீந்திரனை பொய்கேசுல சேத்திருக்காங்க.

ரங்கசாமி தம்பி சின்ன வையசு மைனர். அந்த பையனுக்கும் இதுக்கும் என்னங்க சம்மதம்? அந்த பையன கொல கேசுல போட்டிருக்காங்களே அவன் வாழ்க்கை என்னாகிறது? கல்யாணமாகுறவரு இப்போ ஜெயில்ல இருக்காரு. கொரோனான்னு ஜெயில்லயும் பார்க்க விடல. இதுக்கெல்லாம் யார் பதிலு சொல்றது?“ என ஆத்திரத்துடன் கொட்டித்தீர்த்தார்.

அடுத்து, ரங்கசாமியின் குடும்பத்தை பார்க்கச் சென்றோம். வீடு பூட்டியிருந்தது. அருகில் உள்ள பொது மக்களிடம் விசாரிக்கத் தொடங்கினோம். “சரசுவதி கொலை எப்படி நடந்துச்சு? எனப் பேச்சுக்கொடுத்தோம். அப்பகுதியிலுள்ள பெண்கள், ஆண்கள் தயக்கமில்லாமல் கோபத்துடன் பேசத்தொடங்கினார்கள்.

“இந்தப் பசங்க கொல செய்யுற பசங்க இல்லிங்க. இரண்டு பேரும் லவ் பண்ணாங்க. ஓடிப்போயி திருப்பூரில் தங்கி பனியன் கம்பனியில வேலை பார்த்தாங்க. அந்த பொண்ணுக்கு நகை துணி எடுத்துக்குடுத்து நல்லா பார்த்திருக்கான். ரங்கசாமி நல்ல சம்பாதிக்கிற பையன். பொறுப்பா அவன் உண்டு தொழிலுண்டுனு இருந்தான்.

அந்த பொண்ணுக்காக இவன் மருந்து குடிக்க போனான். அவன் எப்படிங்க அந்த பொண்ண கொன்னுருப்பான்? சொல்றதுக்கு ஒரு மனசாட்சி வேணாமா? அப்படியே கொன்னிருந்தாலும் நாங்க சொல்லிடுவோம். தப்பு செஞ்சவன் தண்டனைய அனுபவிக்கட்டும்னு சொல்லுவோம். செய்யாத பழிக்கு தண்டனை அனுபவிக்கனுமா? அந்த பொண்ணு செத்து போச்சே னுதான் கொலப் பழியை சுமந்துகிட்டு ஊரே அமைதியா இருக்கோம்.

என்னன்னு போலீசு விசாரிக்காம இந்த பசங்க மேல கேசுபோட்டு ஒத்துக்க சொல்லி அடிச்சி ஜெயில வச்சி, இப்போ எங்க ஊரே கொல செஞ்ச ஊருன்னு வெளியில பேசுறாங்க. எந்தக் கட்சிக்காரங்களும் எங்க கிட்ட வந்து உண்மைய விசாரிக்கல.“ எனப் பெண்கள் கூறினர்.

அந்த ஊர் முக்கியஸ்தர் சிலரை விசாரித்தோம். “அந்த பொண்ணும் பையனும் விரும்புனது உண்மை. வெளியூர் போனவங்கள கூட்டிட்டு வந்து பேசி பிரிச்சிவிட்டோம். ஒரே ஊரு, சண்ட வரக்கூடாதுன்னு அப்படி இருதரப்பும் அப்படி பண்ணோம். திடீர்னு இப்படி கொலை நடந்திருக்கு. கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் சீனிவாசன்-யிடம், பறையர் தெருவில் உள்ள முக்கியப் பிரமுகர்கள் காவல்துறையினரை அணுகி “ஏன் இப்படி பொய்யாக மூன்று இளைஞர்களை குற்றம் சாட்டி பழிவாங்குகிறீர்கள் என்று கேட்டபோது, அம்மக்களிடம், “இப்படியெல்லாம் கேள்வி கேட்டால் நாங்கள் மூன்றுபேருடன் இன்னும் முப்பது பேரைச் சேர்த்து வழக்கில் கைது செய்வோம் என்று மிரட்டியுள்ளனர். எனவே தான் பறையர்கள் தரப்பில் இளைஞர்கள் கைதைக் கண்டித்து எந்தவிதமான போராட்டங்களையும் நடத்தாமல் மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர்.

“எங்க ஊரச் சேர்ந்த திமுக கார் முக்கியஸ்தர் விழுப்புரம் காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார். அந்த சாதியை சேர்ந்தவர்களும் வெளியில் இருந்து வந்த வழக்கறிஞரும் கூடி தனியாக பேசியிருக்கிறார்கள். என்னன்னு இவரு கேட்டிருக்காரு. ஒன்னுமில்ல என்று ஒதுங்கிச் சென்றுள்ளனர். இதுமாதிரி ஒருவாரமாக நடந்துக் கிட்டிருந்தது அப்புறமாதான் இந்த பசங்கள புடிச்சிட்டு போனதாக ஒரு பெரியவர் சொன்னார்.

“காதலிச்சவங்க ரெண்டுபேரும் போன்ல பேசிக்காமல் இருப்பாங்களா? போன் பண்ணது செல்லுல காட்டுதுன்னு ஒரே காரணத்த வச்சி எப்படிங்க கொல பண்ணாங்கனு சொல்ல முடியும்? விவரமா விசாரிக்கனுமா இல்லையா? இத கேட்க யார் இருக்கா? போலீசும் அவங்க பக்கம்தான் இருக்கு.

இன்ஸ்பெக்டர் சொல்றாரு “இது ஆணவக்கொலை, எங்க பசங்க செய்யல னு வெளியில பேசுறதும், போராட்டம் பண்ணுவோம் னு கிளம்புனிங்கனா ஊருல இருக்குற மொத்த பசங்க மேலயும் கேசு போடுவேன். இன்னும் 30 பேர் இதுல சம்மந்தப்பட்டிருக்காங்க அவங்களையும் பிடிக்க வேண்டிவரும்.“ என்று மிரட்டியதாக பயத்துடன் சொன்னார்கள்.

“சரசுவதி பொண்ணோட அப்பா கத்தி எடுத்துக்கிட்டு ஊரையே மிரட்டிக்கிட்டு திரிவாரு. அவரு மேல நெறைய கேசு இருக்கு. பொண்டாட்டியோட விரலையே வெட்டியிருக்காரு. மாமனா, மாமியார் வீட்டை கொளுத்தியிருக்காரு. அதனால அவங்களே கேசு கொடுத்து 1வருசம் ஜெயில்ல இருந்துட்டு வந்தாரு. வன்னியர் ஊருக்குள்ளே பெண் விசயத்தில் தட்டிக்கேட்ட வன்னியர் இருசன் என்பவரின் கை, கால வெட்டியிருக்காரு.

அண்ணங்காரங்குப்பம் தான் வீரமணி ஊரு. அங்க இந்த மாதிரி அட்டூழியம் செஞ்சதால துரத்திவிட்டிருக்காங்க. ஊரே பயந்துக்கிட்டுதான் இருக்கு. இந்த ஊர சேர்ந்த ஆள் இல்ல அவரு. அந்த பொண்ணு செத்தபின்னாடி கத்திய தூக்கிக்கிட்டு எங்க ஊருக்குள்ள வந்து கலாட்டா பண்ணிட்டு போறாரு. வெட்டிருவேன்னு மிரட்டுறாரு.

போலீசு ஒன்னும் பண்ணல. நாங்க கேசு குடுக்க போறதுக்குள்ளே போலீசு பிடிச்சிட்டுபோயி உடனே விட்டுடுச்சி. இதே நாங்க யாராச்சும் இப்படி பண்ணா போலீசு சும்மா இருந்திருக்குமா? எங்களுக்கு ஒரு நீதி மற்றவங்களுக்கு ஒரு நீதியா?

இதேமாதிரி அவங்க சாதியிலே ஒரு பொண்ணு எங்க ஊருல வாழுறாள். எந்தப் பிரச்சனையும் இல்லை. அதேமாதிரி இன்னொரு பொண்ணு பக்கத்து ஊருல உள்ள இந்த சாதி பையன கல்யாணம் பண்ணிக்கிட்டு போய் நல்லா வாழுது. அந்த குடும்பம் எந்த பிரச்சனையும் பண்ணல.

அந்த பொண்ணோட அப்பா  செல்லப்பெருமாள் அவரோட கழுத்துல வீரமணி கத்திய வச்சி மிரட்டிருக்காரு. உன் பொண்ண அடக்கிவைக்காதனாலதான் என் பொண்ணுக்கு துணிச்சல் வந்துடுச்சி நீ தான் காரணமுன்னு சண்டைபோட்டிருக்காரு. அந்த குடும்பம் ஸ்டேசன்ல கேசு கொடுக்க போனாங்க. அப்புறம் வேணாமுன்னு அவங்களுக்குள்ளேயே பஞ்சாயத்து பேசி இப்போதைக்கு அமுக்கி வச்சிருக்காங்க.

இப்படி அட்டகாசம் பண்றவரு தான் வீரமணி. அதனாலதான் போலீசு அவர் மேலேயே சந்தேகம்பட்டது. அப்பாவி பசங்கள அடிச்சு பொய் வாக்குமூலம் வாங்கத்தெரிந்த போலீசுக்கு அந்த கொலைய யார் செஞ்சதுன்னு மிரட்டி கண்டுபிடிக்க தெரியாதா? இன்னும் கொஞ்ச நாள்ல உண்மை வெளியே வரும். வன்னியர், கோனார், நாயுடு சாதியிலுள்ள அங்குள்ள நல்லவங்களே பேசிக்கிறாங்க.“ என்றனர்.

எழும் ஐயங்கள்

1. ஏப்-2 சம்பவத்தன்று அவர் தானே எழுந்து வெளியே சென்றதற்கான அடையாளமாக அவரது செருப்புகள் சரசுவதி கொல்லப்பட்டதாகச் சொல்லப்படும் (100 அடி) இடத்திலேயே கிடந்ததையும் அது எப்படிக் கிடந்தது என்பதையும் சரசுவதி தாயார் செயகாந்தி சுட்டிக் காட்டினார்.

2. கணவர் வீரமணி வாக்குமூலத்தில் அந்த பையன் போன் பண்ணி அழைத்தப் பின் பார்க்கச் சென்றிருக்கிறாள் அங்கு கொலைசெய்து 3 பேரும் தூக்கிக்கொண்டுவந்து இங்கு போட்டுள்ளனர் என்றார். செயகாந்தியும் அவரது கணவர் வீரமணியும் சொல்லும் தகவலே முரணாக இருக்கிறது. வீட்டுக்கு வெளியே கட்டிலில் தூங்கிய இடத்துக்கும் இடையே நூறு அடி தூரம்தான். இப்படி பெற்றோர் அருகில் உறங்கும் நிலையில் வெளி ஆள் அந்தப் பெண்ணைப் கொலை செய்தார்கள் என்பது ஐயத்திற்கிடமாக இருக்கிறது. உடலை பெற்றோரின் கட்டிலுக்கு அருகிலேயே காதலன் ரெங்கசாமி கிடத்துவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. நூறு அடி தூரத்தில் ஒரு சம்பவம் நடந்தும் தனக்கு எதுவுமே தெரியாது, தானும் தன் மனைவியும் நன்றாக அசந்து தூங்கிவிட்டோம் என்று வீரமணியின் மனைவி சொல்லுவது நம்பத்தகுந்ததாக இல்லை.

3. சரசுவதியும் ரங்கசாமியும் பள்ளிக்காலத்திலிருந்தே காதலித்துவந்ததை மறைத்து, காதலிக்க சொல்லி துன்புறுத்தினான் என்ற செய்தி உண்மைக்கு மாறாக இருக்கிறது.

4. போலீசார் தன் விசாரணையை அருகிலேயே உளுந்தூர்பேட்டை, திருநாவலூர் காவல்நிலையம் இருக்க, அங்கு விசாரிக்காமல், தொலைவில் உள்ள எடைக்கல் என்ற காவல் நிலையத்தில் வைத்து மூவரையும் அடித்து துன்புறுத்தியே வாக்குமூலம் பெற்று கைது செய்துள்ளனர். ரவீந்திரன் என்ற இளைஞனை வீட்டிலிருந்தும், ரங்கசாமியை ஆந்திராவிலும், அவர் தம்பியை சென்னையிலும் பிடித்து கைதுசெய்துவிட்டு தலைமறைவாக இருந்ததாக கதை கட்டுகிறது காவல்துறை.

5. வீரமணி தன் மகளைக் கொலை செய்ததாக தன் பெயரில் புகார் செய்யவில்லை. அதே நேரத்தில் தன் மகளுக்கு நிச்சியிக்கப்பட்ட மணமகன் மாமனார் வீரமணி மீது திருநாவலூர் காவல் நிலையத்தில் சரசுவதின் கொலையில் மாமனார் வீரமணிமீது சந்தேகம் இருப்பதாக புகார் செய்துள்ளார்.

6. அதேபோல் சரசுவதியின் உடலை பார்த்து தாய் ஜெயகாந்தியும் அவரது பாட்டியும் “படும்பாவி எம் பிள்ளையை, பேத்தியை இப்படி கொன்னுட்டீயே? என்று ஆத்திரத்தில் கதறியதாக சிலர் கூறினார்கள். அடுத்தடுத்து அவை மறைந்துவிட்டது.

7. காதல் விவகாரத்தால் சரசுவதியை பல முறை அவர் அப்பா வீரமணி வாசலில் இழுத்து அடித்ததாக அக்கம் பக்கம் இருந்தவர்கள் கூறினர்.

8. 15 நாட்களாக இந்தக்கொலை சம்பவம் வெளிவரவில்லை. பாமக, வன்னியர் சங்கம் தலையிட்டு இதனை சாதி அரசியலாக்கிட திட்டமிட்டபின்புதான் வழக்கின் திசை வேறாக மாறியிருக்கிறது. இந்த 3 இளைஞர்களும் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

9. கொலையாளிகளாக கைதுசெய்யப்பட்ட ரெங்கசாமியின் தம்பி கிருஷ்ணன் மைனர். அவர் செஞ்சி இளைஞர் சீர்திருத்தப்பள்ளியில் இருக்கிறார்.ரவீந்திரன் ரெங்கசாமியின் நண்பர்.ஒரே சாதிக்காரர்.அவருக்கு வைகாசி முப்பது தேதியில் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. திருமணம் நிச்சியிக்கப்பட்ட ஒருவர் கொலை செய்யும் குற்றத்திற்கு தன்னை உட்படுத்திக் கொள்வாரா என்பது பெரிதும் ஐயத்திற்குரிய கேள்வியாகும்.

10. இதற்கு முன்னரே பறையர் தெருவில் அதே ஊரைச்சேர்ந்த வன்னியர் பெண் ஒருவர் காதலித்து திருணம் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்கிறார். இன்னொருவர் செல்லம் பெருமாள் என்பவர் (வன்னியர்) தன் மகளை வேறொரு ஊரைச் சேர்ந்த பறையர் இளைஞருக்கு மணம் முடித்துக் கொடுத்துள்ளார். அவரை 20.04.21ல் வீரமணி அவமரியாதையாகப் பேசி மிரட்டியதன் பேரில் திருநாவலூர் காவல்துறையினர் வீரமணியை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.

வீரமணி இதற்கு முன் பல கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட வழக்குகள் இருக்கின்றன. பாமக, வன்னியர் சங்கம் அதிகார வர்க்கத்தின் தலையீட்டின் பெயரிலேயே மூன்று பறையர் இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே ஐயத்துக்கிடமான இந்தக் கொலையின் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தமிழக அரசு இந்த வழக்கை CBCID விசாரணைக்கு ஆணையிட வேண்டும்.

11. சரசுவதி மரணம் 90 சதவீதம் ஆணவக்கொலையாக இருப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. உண்மையை சிபிசிஐடி கண்டறிய வேண்டும் என்பதை எங்கள் கள ஆய்வுகுழு பரிந்துரை செய்கிறது.

12. இதுவரை நடந்த ஆணவக்கொலையிலேயே வெளியில் வந்த இரண்டாவது விசித்திரமான மர்மமான கொலை. ஏற்கனவே விருத்தாச்சலம் திலகவதி ஆணவக்கொலை செய்யப்பட்டு அதற்கு காதலன் பலியாக்கப்பட்டான். அதேபோல் இன்று சரசுவதியின் கொலையும் மறைக்கப்பட்டு காதலன் மீதே பழிபோடப்பட்டுள்ளதற்கு கள நிலவரமே சாட்சியாகிறது. முன்பு சொந்த சாதி பெண்ணை, தலித் இளைஞனை கொலைச் செய்தால் சிறைக்கு சென்றாக வேண்டும்.

அவமானத்தை தாங்க வேண்டும். இந்த வழக்கு காதலித்த இருவரையும் பலியாக்குகிறது, கொலை செய்தவர்கள் தப்பித்துக்கொள்வது என்ற உத்தியை பாமக சாதிவெறி கும்பல் புது வழியை கண்டுபிடித்திருக்கிறது. இவற்றில் யாரும் சந்தேகப்பட முடியாது. நிரூபிக்கவும் முடியாது என்பதாக வழக்கு சோடிக்கப்பட்டுள்ளது. பாமக தரப்பிற்கு நற்பெயர் கிடைப்பதையும் உறுதிசெய்கிறது. இந்த கோணத்திலிருந்து இவ்வழக்கை பார்க்கவேண்டும்.

ஆக, களத்தில் விசாரித்ததில் கிடைத்த உண்மையை வைத்துப்பார்க்கும் போது, “காதலிக்க மறுத்ததால் கொலை“ என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை முற்றிலும் பொய் என்பது உண்மையாகிறது. பாமக ராமதாஸ் ஏதோ சாதி அரசியலுக்கும் தலித் விரோத கூட்டணிக்கும் நடக்கும் ஆணவக்கொலைகளுக்கும் எரியும் குடிசைகளுக்கும் பாமகவிற்கும் தொடர்பில்லாததுபோல் ஒரு நாடகத்தை அண்மைக்காலமாக அரகேற்றி வருகிறார்.

இது உண்மையல்ல என்பதைத்தான் சரசுவதி கொலை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. கொலை நடந்த 15 நாட்களுக்குப் பிறகு பாமக வைச் சேர்ந்த வழக்கறிஞர் பாலு தலைமையிலான வழக்கறிஞர் அணி தலையிட்டு அழுத்தம் கொடுத்து வழக்கை வேறு திசைக்கு மாற்றியிருக்கிறது என்கிற தகவல் உண்மையாகியிருக்கிறது அரசியலிலிருந்து பாமக போன்ற சாதிவன்முறை அரசியல் செய்யும் கட்சிகளை மக்களிடமிருந்து அப்புறப்படுத்துவதில் நாம் தவறிவிடக்கூடாது.

பரிந்துரைகள்

1. சரசுவதியின் கொலைக்கு நீதி கிடைக்க வேண்டும். உண்மைக் குற்றவாளிகள் கைதுசெய்யப்பட வேண்டும்.

2. சரசுவதி கொலையில் உள்ள மர்மத்தை வெளிக்கொண்டுவர இவ்வழக்கை சிபிசிஐடி (CBCID) விசாரிக்க வேண்டும்.

3. பொய் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள ரங்கசாமி, ரவீந்திரன், கிருஷ்ணசாமி ஆகியோரை உடனடியாக விடுதலைச் செய்ய வேண்டும்.

- ரமணி, பொதுச்செயலாளர், சாதி ஒழிப்பு முன்னணி

  அரங்க குணசேகரன், தலைவர், தமிழக மக்கள் புரட்சிக்கழகம்

  செல்வமணியன், பொதுச்செயலாளர், தமிழ்நாடு பொதுவுடைமைக் கட்சி

  8508726919/9047521117 / 9443305294 /

Pin It