‘தாழ்த்தப்பட்டோரும் மொழிப்போரும் - ஒரு வரலாற்றுப் பார்வை’ என்னும் ரவிக்குமாரின் கட்டுரை காலச்சுவடு மே 2005 இதழில் வெளி வந்துள்ளது. ரவிக்குமாரின் சமீபத்தைய அரசியல் நடவடிக்கைகள் அனைத்தும் சுயநல சந்தர்ப்பவாதம் சார்ந்ததாக உள்ளதையும் அதன்பின்னுள்ள காலச்சுவடின் பார்ப்பனீய மனோநிலையையும் நாம் பலமுறை விமர்சித்துள்ளோம். ஆனாலும் அத்தகைய விமர்சனங்களை ஒட்டுமொத்த தலித்துகளுக்கு எதிரான வசை பாடல்களாகச் சுருக்கிவிடும் தந்திரமே மேற்கொள்ளப்பட்டு வந்திருக்கிறது என்றபோதும் இன்றைய மூன்றாம் மொழிப்போர் கூத்துக்களும், தமிழ்ப் பாதுகாப்பு இயக்க நடவடிக்கைகளும் தலித்துகளை எத்தனை தலைமுறைகள் பின்தள்ளும் என்பதை உணர்வதாலேயே இந்த கட்டுரை எழுத வேண்டியிருக்கிறது.

ரவிக்குமார் கட்டுரையின் ஆரம்பமே விஷம் பொதிந்ததாய் உள்ளது. ‘தமிழன்’ என்பதற்கு ‘பறையனொழிந்த இதர சாதியான்’ என்று சென்னைப் பல்கலைக்கழகம் பேரகராதி குறிப்பிட்டுள்ளதைச் சுட்டிக்காட்டும் ரவிக்குமார், இது ‘சமூகத்தின் பொதுப்புத்தியில் திராவிட இயக்கத்தவர் பதித்துள்ள மதிப்பீட்டின் வெளிப்பாடேயாகும்’1*
என்கிறார்.

திராவிட இயக்கத்திற்கும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதிக்கும் என்ன தொடர்பு உள்ளது? சென்னைப் பல்கலைக்கழக பேரகராதியைத் தொகுத்தவர்கள் திராவிட இயக்கக் கருத்தியலுக்கு எதிரானவர்கள் இந்திய தேசிய கருத்துக்களை ஏற்றுக்கொண்டவர்கள் என்பதே தமிழ்த் தேசியர்கள் இதுவரை வைத்துள்ள குற்றச்சாட்டு. உண்மையில் ‘தமிழர்’ என்பதற்கான வரையறை காலந்தோறும் மாறி வந்துள்ளது. ‘பறையனொழிந்த சாதியான்’ என்றும், ‘மாட்டு மாமிசம் உண்ணாதார்’ என்று வெள்ளக்கால் சுப்பிரமணியம் (பிள்ளை) கொடுத்த வரைய றையிலும் வெள்ளாளக் கருத்தியலின் தாக்கமே தெரிகிறது. பின்னி மில் போராட்டத்தின் போது பறையர்கள் கூடித் தமிழர்களை அடிக்க வந்ததாகத் திரு.வி.க. எழுதியதும் நினைவிற் கொள்ளத்தக்கது இத்தகைய வெள்ளாளத் தூய்மைவாதக் கருத்தியலே, முஸ்லீம்கள், பிறரை ‘தமிழர்கள்’ என்று அழைப்பதற்கான காரணமென்றும் கொள்ளலாம்.

வெள்ளாளர்கள் ‘தமிழ்’ அரசியலை கையிலெடுக்கும் முன்பே 1800களில் இத்தகைய ‘தமிழ்’ அரசியலை முன்வைத்தவர் அயோத்திதாசர். அயோத்திதாசர் ‘தமிழர்கள்’ குறித்த வரையறைக் கதையாடல்களைக்கட்டத் தொடங்கும் பொழுது, அவர்களைப் ‘பூர்வ பௌத்தர்கள்’ என்கிறார். இத்தகைய வரை யறைகளிலிருந்து அருந்ததியர்கள், குறவர்கள், தோட்டிகள் ஆகியோரை விலக்கிவைக்கவும் செய்கிறார்.

தாழ்த்தப்பட்டோர் / பட்டியலினத்தார் பட்டியலில் குறவர், அருந்ததியர், தோட்டிகள் ஆகியோரைச் சேர்ப்பதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். அயோத்திதாசர், அவர்கள் ‘தாழ்த்தப் பட்டோர்’ அல்லர்; ‘சக்கிலிகள், தோட்டிகள், குறவர் ஆகியோர் இயல்பாகவே தாழ்ந்தோர்’ என்கிறார். இவர்களின் குழந்தைகளை பறையர் குழந்தைகளோடு சேர்த்து ‘பஞ்சமர் பாடசாலை’ எனப் பெயரிடுவதையும் வன்மையாகக் கண்டிக்கிறார். சான்றாக ஒன்றைச் சொல்லலாம்.

வினா: சாக்கையரென்று வழங்கும் புத்தருடைய குடும்பத்தார் தற்காலம் எங்கிருக்கின்றார்கள்?

விடை: (அயோத்திதாசர்): பூர்வகாலத்து அரசர், வணிகர், வேளாளரென்ற முத்தொழிலாளர்களாலும் சிறப்புற்றிருந்த சாக்கையர்கள் தற்காலம் பறையரென்றும், பஞ்சமரென்றும், சாம்பானென்றும், வலங்கையரென்றும் தாழ்த்தப்பட்டு நிலை குலைந்திருக்கிறார்கள்.2*

மேற்கண்ட அயோத்திதாசரின் கூற்றின் மூலம் பவுத்த வாரிசுகளாக அருந்ததியர்களை அவர் ஏற்கவில்லை என்பதை அவதானிக்கலாம். ஆனால், தற்போது, அருந்ததிய அறிவு ஜீவிகள் புத்தமித்திரன், கவிஞர் மதிவண்ணன் போன்றோர் புத்தரின் சாக்கிய குலத்திற்கும், ‘சக்கிலியர்’ என்னும் சுட்டுப் பெயருக்குடிடையிலான தொடர்பைக் கவனப்படுத்துகின்றனர். அயோத்திதாசரின் கதையாடல்களில் புலப்படும், அருந்ததியருக்கு எதிரான சாதிய ஒதுக்கல் மனோபாவத்தையும் கடுமையாக விமர்சிக்கின்றனர். இத்தயை விமர்சனங்களுக்கு ரவிக் குமார் உள்ளிட்ட அயோத்திதாசர் வழிபாட்டாளர்கள் பதில் ஏதும் கூறாதது கவனிக்கத்தக்கது. மேலும்,

‘அருந்ததியர்கள் மலங்கழித்து கால்கழுவாமல், பூனைகளையும், பெருச்சாளிகளையும் பிடித்து உண்பவர்கள்’3* என்று வசைபடும் அயோத்திதாசர் தான் முன்வைக்கும் எல்லா வரையறைகளின்றும் இம்மூன்று சாதியாரையும் விலக்கி வைப்பதன் மூலம், ‘தமிழர்’ என்னும் அடையாளம் வெள்ளாளரால் கட்டப்பட்ட போதும், அயோத்திதாசரால் கட்டப்பட்ட போதும், தனக்கு சாதியப் படிநிலையில் கீழுள்ள சாதிகளை ஒடுக்கு, விலக்கி வைக்கும் சாதிய அதிகார மனோபாவமே நுட்பமாகத் தொழிற்பட்டு வந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். இதுவரை நடைபெற்ற இரண்டு மொழிப் போராட்டங்களுக்கும், தற்சமயம் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கம் நடத்தும் மூன்றாம் மொழிப்போருக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் உள்ளன.

1. இந்த மூன்றாம் மொழிப்போர் நடத்துவதற்கான புறச்சூழல் ஏதுமில்லை. அரசின் இந்தித் திணிப்பிற்கு எதிராக நடைபெற்ற மக்கள் திரள் போராட்டங்களாகிய முன்னைய முதல் மற்றும் இரண்டாம் மொழிப்போராட்டங்கள் சில சனநாயகக் கோரிக்கைகளை முன் வைத்தன. அதில் ஓரளவு வெற்றியும் பெற்றன. ஆனால் இப்போதைய மொழிப்போர் என்பது ஆங்கில எதிர்ப்பை உள்ளடக்கிய தமிழ்த் தேசியவாதிகளின் பல்வேறுபட்ட காலகட்டங்களில் நடைபெற்ற சிறுசிறு போராட்டங்களின் தொடர்ச்சியே எனலாம். முக்கியமாக ‘நந்தன்’ இதழாசிரியர் அருணாசலம் முன்னெடுத்த ‘தமிழ்ச்சான்றோர் பேரவை’ நடத்திய ‘தமிழ் வழிக் கல்விக்காக நூறு தமிழர்களின் பட்டினிப்போர்’ போன்ற போராட்டங்களின் தொடர்ச்சியென இதைக் கொள்ளலாம். எனவே, போராட்டங்களை முன்னின்று நடத்தும் அமைப்புகளுக்கு வெளியேயுள்ள மக்கள் இதில் பங்கேற்பதில்லை.

2. முதல் இரண்டு மொழிப்போராட்டங்களும் ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ என்னும் ஆதிக்க நடவடிக்கையை எதிர்த்து நடத்தப்பட்டவை. இவை வெறுமனே மொழியைக் காப்பதற்காகவோ அல்லது இன்னொரு மொழியை எதிர்ப்பதற்காகவோ நடத்தப்படாமல், ‘இந்தித் திணிப்பு’ என்பதே சமஸ்கிருத திணிப்பு, சாராம்சத்தில் பார்ப்பன மற்றும் பார்ப்பனீய மேலாண்மை திணிப்பு, இந்திய தேசிய எதிர்ப்பு என்கிற ரீதியிலேயே புரிந்து கொள்ளப்பட்டு மேற்கொள்ளப்பட்டன. “மொழிப்போராட்டம் என்பது கலாச்சாரப் போராட்டத்தின் ஒரு பகுதியே தவிர அதுவே முழுமையான போராட்டமாகாது’’ என்னும் பெரியாரின் கூற்று இதற்கு ஒரு சான்று. இத்தகைய புரிதல்கள் இருந்ததால் தான் முதல் இந்தி எதிர்ப்புப்போரில் சர்.எம். கிருஷ்ணன் நாயர் என்னும் மலையாளியும், சர்.கே.வி. ரெட்டி என்னும் தெலுங்கரும் பங்கு பெற்றனர். ஆனால் இப்போது நடத்தப்படும் மூன்றாவது மொழிப்போரோ, இத்தகைய பார்ப்பனீய எதிர்ப்பு நோக்கம் ஏதுமற்று வெறுமனே மொழி உணர்ச்சி அடிப்படையில் நடத்தப்படுவது.

3. இந்த மூன்றாவது மொழிப்போர், மற்ற இரு மொழிப் போர்களிலிருந்து வேறுபடும் புள்ளியாக, தலித்துகள் இந்த போராட்டத்திற்கு தலைமையேற்றுள்ளனர் என்று முன்வைக்கப்படும் வாதமும் பொருத்தமானதில்லை. முன்பே சொன்னதுபோல் ‘தமிழர்கள்’ என்பதற்கு கால காலத்திற்குமான, இறுதியான பொது வரையறை ஏதுமில்லை. ‘தமிழர்கள் என்றால் யார்?’ என்பதற்கான சமீபத்தைய வரையறையன்று பலரால் முன்வைக்கப்படுகிறது.

‘தமிழ்பேசும் சாதிகள் மட்டுமே தமிழர்கள்; மற்றவர்கள் தமிழ்நாட்டிலிருந்து விரட்டியடிக்கப்பட வேண்டியவர்கள்’ என்னும் அரசியல் சமீபகாலமாக உரத்த குரலில் முன் வைக்கப்படுகிறது. அயோத்திதாசரின் ‘தமிழர்கள்’ பற்றிய கதையாடல், அருந்ததியர், தோட்டிகள், குறவர்கள் ஆகியோரை விலக்கி வைக்கிறதெனில், மேற்குறித்த வரையறை, அருந்ததியர்கள், படகர் முதலான பழங்குடியினர், நரிக்குறவர், உருது பேசும் முஸ்லீம்கள் என பலரையும் ஒதுக்குகிறது.

ம.பொ.சியிடம் பலமின்றி ஒலித்த குரல், குணாவின் ‘திராவிடத்தால் வீழ்ந்தோம்’ நூலில் உரத்த குரலில் முன் மொழியப்பட்டு, இந்த பாசிச கதையாடல் கணிசமான ஆதரவாளர்களைத் தன்வசம் உருவாக்கியுள்ளது. இதில் வரலாற்று வினோதமென்னவெனில், விளிம்புநிலை மக்கள் குழுக்கள் பலவற்றையும் வெறுத்து ஒதுக்கும் இக்கதையாடல், வரலாற்றில் காலகாலமாய் ஒடுக்கப்பட்டு வந்த சாதியினரில் ஒரு சிலரால் முன்வைக்கப்படுவதே. குருசாமி சித்தர், குணா, தமிழர்களம் ஆகிய பள்ளர் மற்றும் பறையர் சமூகத்தைச் சார்ந்த சிலர் முன்வைப்பதே சோகமானது. (தேவர் சமூகத்தில் நகைமுகன் இத்தகைய அரசியலை முன்வைக்கிறார்)

பறையர் சமூகத்தின் பெரும் மக்கள் திரளைத் தன்னகத்தே அமைப்பாகக் கொண்ட விடுதலைச் சிறுத்தைகளும், அதன் அமைப்பாளர் தொல்.திருமாவளவனும் வெளிப்படையாக இத்தகைய அரசியலை முன் வைக்காத போதும், அவர்களுக்கும் இத்தகைய அரசியலில் உடன்பாடு உள்ளது என்று நம்புவதற்கு இடமுண்டு. குறிப்பாக திருமாவளவனை ஆதரித்து வெளிவந்த ‘தாய்மண்’ இதழின் இணை இதழ் எனச் சொல்லத்தக்க ‘உலகத் தமிழர் சக்தி’ இதழ் இத்தகைய அரசியலை முன்வைத்தது கவனிக்கத்தக்கது. விஜயகாந்தை ‘தெலுங்கர்’ எனத் திருமா வளவன் கண்டித்ததும் நினைவிற் கொள்ளத்தக்கது.

இதனாலோ என்னவோ, அருந்ததியர்கள் இத்தகைய மூன்றாம் மொழிப்போர் களியாட்டங்களிலிருந்து விலகியே நிற்கின்றனர். தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொள்ளவுமில்லை. (இங்கு ஒன்றைச் சொல்வது அவசியம். அருந்ததியர்களின் மக்கள்திரள் அமைப்புகளாகிய ஆதித்தமிழர் பேரவையும், தமிழ்நாடு அருந்ததியர் சனநாயக முன்னணியும் இணையும் விழா மே 18, 2005இல் மதுரையில் ஒப்பிடும் பொழுது, பெரிதும் அரசியல் வளர்ச்சியும், அமைப்புருவாக்கமும் அற்ற அருந்ததியர்கள் ஒன்று சேர்ந்து ஒரு பெரும் அமைப்பாக உருவாவது வரவேற்கத்தக்கது. ஆனால், அந்த இணைப்பு விழாவில் ‘ஆயிரம் பேர்களுக்கு இனிய தமிழ்ப்பெயர் சூட்டு விழா’வும் நடைபெற்றதாக அறிகிறோம். ‘பெயர் மாற்றமும், மதமாற்றமும் எங்கே போகிறது தலித் அரசியல்?’ என்னும் நூலில் திருமாவளவனின் பெயர் மாற்ற நடவடிக்கைகளை விமர்சித்திருந்தோம். அம்பேத்கரின் மதமாற்றம் முதலியவற்றைக் கைவிட்டு, தலித் அரசியலினின்று விலகிய, தமிழ் அரசியல் நோக்கிய தொல் திருமாவளவனின், தொடர்ச்சியான இத்தகைய நடவடிக்கைகளே, சறுக்கலுக்கும், வீழ்ச்சிக்கும் காரணமாயிற்று. எனவே, ஆதித் தமிழர் பேரவை இத்தகைய நடவடிக்கைகளிலிருந்து விலகி, தலித் பிரச்சனை களில் கவனம் குவிப்பதே, அருந்ததியர்க்கு நலம் பயக்கும்.)

அதேபோல, பள்ளர்களில் கணிசமான மக்கள் திரளைக் கொண்டுள்ள ‘புதிய தமிழகம்’ கட்சியும், இத்தகைய மொழிப்போர் நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. பறையர் அமைப்புகளில் விடுதலைச் சிறுத்தைகள் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு தலைமையேற்ற போதும், ‘பறையர் பேரவை’ என்னும் அமைப்பு அக் 23, 2004இல் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தி, கொடும்பாவி எரித்துள்ளது.4* குறிப்பிடத்தக்கது.

எனவே, ஒட்டுமொத்த தலித்துகள் மூன்றாம் மொழிப் போருக்குத் தலைமையேற்கிறார்கள் என்று சொல்வதில் பொருளேதுமில்லை.

4. தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம் தமிழ் வழிக்கல்வி போன்ற கோரிக்கைகளைவிடவும் திரைப்படப் பெயர்களைத் தமிழில் மாற்றுவது என்னும் கோரிக்கைக்கே முக்கியத்துவம் தருகிறது. ‘தீம்தரிகிட’ ஞாநி போன்ற பலரும் இதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

“தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் பல்வேறுபட்ட கோரிக்கைகளில் ஒன்றுதான், தமிழ்த் திரைப்படங்களுக்குத் தமிழில் பெயர் சூட்டுவது என்பது’’ போன்ற விளக்கங்கள் சொல்லப்படுகின்றன. ஆனாலும், அதற்கே கூடுதல் அழுத்தம் தருவதாலேயே, ஊடகங்களில் விளம்பரம் கிடைக்கிறது.

தேவர்மகன், சண்டியர் முதலான திரைப்படங்களைப் ‘புதியதமிழகம்’ கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி எதிர்த்ததில் நியாயங்கள் உள்ளன. ‘நமது கடவுள் சாதி காப்பாற்றும் கடவுள்; நமது மொழி சாதி காப்பாற்றும் மொழி...’ என்று பெரியார் சொன்னதைப் போல, நமது சினிமா சாதி காப்பாற்றும் சினிமாவாக இருக்கிறது. அதற்கெதிரான போராட்டங்கள் நிச்சயம் வரவேற்கத்தகுந்தவை.

தேவர்மகன், சின்னக்கவுண்டர், வல்லரசு, நரசிம்மா, ரோஜா, பம்பாய், இருவர், உயிரே, மறுமலர்ச்சி ஆகிய அனைத்துத் தமிழ்ப் பெயர்களே. ஆனால் இத்தகைய திரைப்படங்கள் அனைத்தும், சாதி காப்பாற்றுபவையாகவும், தலித் மற்றும் இசுலாமியர் விரோதத் தன்மையுடையனவாகவும், தேசிய இனப்போராட்டங்களுக்கு எதிராகவுமே உள்ளனவே?

ஒருவேளை B.F பெயரிட்டு Blue Flim எடுத்தால் தான் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்திற்குப் பிரச்சினை. ‘நீலப்படம்’ என்று தமிழில் பெயரிட்டு, நீலப்படம் எடுத்தால் தமிழ்ப்பாதுகாப்பு இயக்கத்திற்கு சம்மதம்தானோ?

5. மற்ற இரண்டு மொழிப்போராட்டங்களுக்கும், இந்த மூன்றாம் மொழிப்போருக்கும் இடையிலான முக்கியமான வேறுபாடு, முதல் மற்றும் இரண்டாம் மொழிப் போர்களில் குறிப்பிட்ட சாதி அமைப்புகள் எனச் சொல்லத்தக்க இயக்கங்கள் எவையும் பங்கேற்கவில்லை. மாணவர்கள் குறிப்பாகத் தன்னெழுச்சியாக பங்கேற்றனர். பிற வெகுமக்கள் குழுக்களும் பங்கேற்றன. ஆனால் தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கேற்பதில் முக்கியமானவை டாக்டர் ராமதாசின் ‘பாட்டாளி மக்கள் கட்சி’யும், சேதுராமனின் ‘மூவேந்தர் முன்னேற்றக் கழகமும்’.

பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சமூகத்தின் கட்சி என்பதும் சேதுராமன் அமைப்பு தேவர் அமைப்பு என்பதும் தமிழ்ச் சமூகத்தில் பகிரங்கமான உண்மைகள். உண்மையில் ஒரு சாதியினர் அமைப்பாகி தங்கள் உரிமைகளுக்காய்ப் போராடுவதென்பதில் தவறொன்றுமில்லை. ஆரம்பகாலங்களில் வன்னியர் சங்கம் அதையே செய்தது. ஆனால் தனக்குக் கீழான சாதிகளிடத்தில் எவ்வாறு நடந்துகொள்கின்றன என்பதே கேள்வி. சாதி ஆதிக்கத்தை தக்கவைத்துக் கொள்ளும் முனைப்பே இரண்டு டாக்டர்களிடத்தும் தெரிகிறது. இவ்விரு அமைப்புகளும் தங்கள் மேல் விழுந்த சாதிய முத்திரைகளும் களைந்து, ஒரு பாரிய அடையாளத்தைக் கட்டமைப்பது என்பதே தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் அவர்கள் பங்கேற்பதின் பின்னணி. குறிப்பாக டாக்டர் ராமதாஸ், தன் மகன் அன்புமணியை மய்ய அமைச்சராக்கியதன் பின் தில்லிப் பாராளுமன்ற அரசியலுக்குப் பயணிப்பதற்கு இத்தகைய அடையாளம் தேவைப்படுகிறது. இவ்விரு அமைப்புகளும் தி.மு.க. (அ) அ.தி.மு.க.வுடன் “எங்களிடம் தலித் வாக்கு வங்கியும் உள்ளது என்று தொகுதிப் பேரம் பேசுவதற்கு இது உதவலாம். ஆனால், இதனால் தலித்துகளுக்கு விளையும் நன்மைதான் என்ன?

சிதம்பரம் பாராளுமன்றத்தில் தொகுதியில், தொல். திருமாவளவன் போட்டியிட்டபோது, பா.ம.க. ஆடிய வன்முறையாட்டம் நாமறிந்ததே. கீரிப்பட்டி, பாப்பாபட்டி தேர்தலில் நடைபெறும் சாதியாதிக்கச் செயற்பாடுகளைக் காணும் போது கண்ணீர் சுரக்கிறது. ‘தலித் ஒருவர் ஊராட்சித் தலைவராவது குலதெய்வத்திற்கு அடுக்காது, எஸ்.பி. எங்கள் இனம்; ஆனால் கலெக்டரோ தேர்தல் நடத்த முரண்டு பிடிக்கிறார். அவர் தேர்தலை வலியுறுத்தியதால் குலதெய்வத்தின் கோபத்திற்கு ஆட்பட்டு உட்கார்ந்தவரால் எழமுடியவில்லை; திருமாவளவனுக்கோ கார் டயர் பஞ்சரானது (குமுதம் 09.05.2005) என்னும் ரீதியில் அப்பகுதி மக்கள் பிதற்றுவது பார்ப்பனீயம் வழங்கிய சாதிய மனோபாவத்தின் நன்கொடை.

தி.மு.க., சி.பி.எம். ஆகியவை ஆதரவளித்தும், விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் திரு.நரசிங்கன் மர்மமான முறையில் மரணமடைகின்றார். இம்மூன்று தொகுதிகளிலும் தமிழக அரசால் தேர்தலை நடத்த முடியவில்லை. எனவே, பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் பகுதிகளில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல் செய்து, இராணுவத்தைக் கொண்டு தேர்தலை நடத்த வேண்டும்’ என்று பா.ம.க. பாராளுமன்றத்தில் வலியுறுத்துமா?

‘தலித் தலைமை’யை தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தில் ஏற்றுக் கொண்ட ராமதாசும், சேதுராமனும், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத்தேர்தல்களில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஆதரவளிக்கவில்லை. எனவே ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்பது இடை நிலைச்சாதிகளின் அரசியல் லாபங்களுக்குப் பயன்படுமேயன்றி தலித்துகளுக்குக் கிஞ்சிற்றும் பயனில்லை.

மேலும் முக்கியமானதொரு வேறுபாடு என்னவெனில் ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்பதே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்காகவே உருவாக்கப்பட்டதாகவே பரவலாக நம்பப்படுகிறது. இரண்டாம் மொழிப்போருக்குப் பிறகு, அதைப் பயன்படுத்தி தி.மு.க. ஆட்சிக்கு வந்ததெனினும், அது தேர்தலுக்காகவே உருவாக்கப்பட்டதில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கம்’ என்ற ஒன்று இருக்குமா என்பது அய்யமே.

இத்தகைய வேறுபாடுகளை அலசும்பொழுது, இன்னொரு கேள்வியையும் எழுப்ப வேண்டிய அவசியமிருக்கிறது. ஆங்கிலக் கல்வியைப் புறக்கணிப்பது தலித்துகளின் முன்னேற்றத்திற்கு உதவுமா?

பெரியார், முதல் மொழிப்போரை முன்னெடுத்த போதும், இரண்டாம் மொழிப் போராட்டத்தை ஆதரிக்கவில்லை. இதைச் ‘சந்தர்ப்பவாதம்’ என்று சில ஆய்வாளர்கள் விமர்சிக்கின்றனர். (தேர்தலுக்காகவே உருவாக்கப்பட்ட ‘தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின்’ சந்தர்ப்ப வாதத்தை இவர்கள் விமர்சிப்பதில்லை என்பது வேறு விஷயம்). மேலும்

“நீதிக்கட்சியினர் தான் இந்தியை முதன் முதலில் கொண்டு வந்தனர் என்று கோ. கேசவன் தொடங்கி ரவிக்குமார் வரை தொடர்ந்து பிரச்சாரம் செய்வதன் மூலம், ராஜாஜி காங்கிரசைவிட திராவிட இயக்கமே மோசமானதென்றும், மொழிப்போராட்டத்தில் திராவிட இயக்கத்தின் நிலைப்பாடுகள் சந்தர்ப்பவாதமானவையென்றும் ‘நிறுவ’ முயல்கின்றனர். ஆனால்

கோ. கேசவனுக்கு எஸ்.வி.ராஜதுரை கவிதாசரன் (செப் - அக் 1996) இதழில் அளித்துள்ள விரிவான மறுப்பே தகுந்த பதிலாயிருக்கு மென்பதால் விரிவஞ்சித் தவிர்க்கிறோம். ஆனால், பெரியாரைப் பொறுத்தவரை ‘இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ என்பதை, ‘பார்ப்பனீய எதிர்ப்பு’ என்னும் பொருளிலேயே பயன்படுத்தி வந்திருக்கிறார். அவரது ‘தனித் தமிழ்நாடு’ கோரிக்கையும் இத்தன்மை வாய்ந்ததே என்றும் பலமுறை விளக்கியிருக்கிறோம். ஆனால் பெரியாரின் ‘தமிழ்’ பற்றிய விமர்சனங்கள் ‘அறிவியல் பூர்வமானவையல்ல’ என்று ஒற்றை வரியில் நிராகரிப்பது ஆய்வு நேர்மையாகாது. தமிழ் இலக்கணம் மற்றும் இலக்கியங்களில் காணப்படும் சாதிய மற்றும் ஆணாதிக்கத் தன்மை குறித்து பெரியார் விரிவாகவே விமர்சித்திருக்கிறார். மேலும் இந்தித் திணிப்பு எதிர்ப்பை பெரியார் மேற்கொண்டபோதும், தனது நிலைப்பாட்டை வெளிப்படையாக முன்வைக்கவும் அவர் தயங்கியதில்லை.

“எனது இந்தி எதிர்ப்பு என்பது இந்தி கூடாது என்பதற்கோ, தமிழ்வேண்டும் என்பதற்கோ அல்ல. ஆங்கிலமே பொது மொழியாக, அரசாங்க மொழியாக, தமிழ் நாட்டு மொழியாக, தமிழன் வீட்டு மொழியாக ஆக வேண்டுமென்பதற் கேயாகும்’’ (விடுதலை 27-1-1969)

“இன்றைய தினமும் ஆட்சி நம்முடையது என்று சொல்லப்பட்டாலும், இதில் இங்கிலிஷ் படித்தா லொழிய அந்த இங்கிலீஷிலும் “திறமையான படிப்பாளி’’ என்கின்ற தகுதி இருந்தாலொழிய ஆட்சியில் பங்கு பெற முடியாது என்கின்ற நிலை இருந்து வருவதை யாராலும் மறுக்க முடியுமா என்று கேட்கிறேன்’’8*

தமிழ்க்கல்வி என்ற பெயரில் சமயக்கல்வி கற்பிப்பதை எதிர்த்த பெரியார், பெண்கல்விக்காகப் போராடியபோதும், பெண்கல்வி என்ற பெயரில் அரிச்சந்திரன், நளாயினி புராணம் கற்பிக்கப்படுவதை விமர்சித்தார். (கிட்டத்தட்ட இதற்கு இணையாக, அயோத்திதாசரின் கூற்று ஒன்றைக் குறிப்பிடுகிறார் ரவிக்குமார். “பாரதக் கதையைச் சிறுவர்களுக்குப் படிப்பித்தால்’’ இரிஷிகளே கைம்பெண்களைச் சேர்ந்திருக்க நாம் சேருவதினால் என்ன கெடுதியென்ற’’ எண்ணமே அவர்களுக்குத் தோன்றும் (காலச்சுவடு மே 2005 பக்.13). விதவைகள் மணத்திற்கு எதிரான அயோத்திதாசரின் இத்தகைய சிந்தனைகள் அயோத்திதாசரின் ‘ஆணாதிக்க மனம்’ சார்ந்ததா, ‘தமிழ்மணம்’ சார்ந்ததா என்பது தனியே ஆய்வுக்குரிய விஷயம்)

‘ஆங்கிலக் கல்வியைப் புறக்கணித்தால் பார்ப்பனர்கள் மட்டும் ஆங்கிலம் படித்து முன்னேறி விடுவார்கள்’ என்னும் பெரியாரின் எச்சரிக்கையையும் சுலபமாக நிராகரிக்கத்தக்கதல்ல.

நான், மதுரை அருகேயுள்ள கிராமமும், நகரமும் அல்லாத ஒரு பிரதேசத்திலிருந்து வேலைவாய்ப்பிற்காக சென்னை மாநகரத்திற்குப் புலம்பெயர்ந்து வந்தவன். பள்ளி இறுதிவரை அரசுப் பள்ளியில் தமிழ்வழிக் கல்வியே படிக்க நேர்ந்தது,

திராவிட இயக்க குடும்பப் பிண்ணனியாலோ, தமிழ்ப்பற்றாலோ அல்ல; பொருளாதாரச் சூழலினாலேயாகும். கல்லூரியில் படித்த கணிதமும், இலக்கங்களும், எண்களும் நிறைந்ததேயன்றி, ஆங்கில அறிவுக்குச் சற்றும் சம்பந்தமற்றது. Call Center என அழைக்கப்படும் அழைப்பு மய்யத்தில் நேர்முகத் தேர்விற்காகச் சென்றிருந்த போது, இரண்டு மூன்று தலைப்புகளைத் தந்து, ஆங்கிலத்தில் உரையாடப் பணித்தனர். பிறகு, எனது ஆங்கிலப் பேச்சில் வி.ஜி.மி. இருக்கிறதென்று நிராகரித்தனர். அதுவென்ன வி.ஜி.மி. என்றால் Mother Tongue Influence (தாய்மொழித்தாக்கம்).

கிராமப்புறம் சார்ந்த அரசுப்பள்ளிகளில், வறுமையின் காரணமாய்ப் பயிலும் தலித்துகளின் நிலையென்ன? தலித் மக்களிடம் தமிழ்வழிக் கல்வி பற்றி பிரச்சாரம் செய்வதை விடவும் அபத்தமானதொன்றில்லை.

இன்றைய உலகமயமாக்கச் சூழலில், தமிழ்வழிக்கல்வி என்ற பெயரில் தலித்துகள் ஆங்கிலக் கல்வியைப் புறக்கணிப்பது எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்குவதோடு, அறிவையும், அனுபவத்தையும் விசாலமாக்குவதற்கும் தடையாயிருக்கும். அரசுப்பள்ளிகளில் ஆங்கிலக் கல்வியை நடைமுறைப்படுத்து எனப் போராடுவதே சரியான நடைமுறை.

தேசியம் என்னும் மொத்தத்துவத்திற்கெதிராய், பாபாசாகேப் அம்பேத்கர், தனியரு மனிதனாய் தலித்துகளின் தனித்தப் பிரச்சினைகளுக்காய்த் தொடர்ந்து போராடி வந்தார். இன்றைய சூழலில், தலித் என்னும் தனித்துவத்தை ‘தமிழ்’ என்னும் பொதுத்துவத்தில் கரைப்பதென்பது, தலித்துகளின் அரசியல் மற்றும் பொருளியல் விடுதலைக்கான புதைகுழி என்பதில் அய்யமில்லை.

- சுகுணா திவாகர்

Pin It