திரைப்பட உலகை “ஆவி” ஆட்டத் தொடங்கியுள்ளது. அண்மையில் கனகா என்ற நடிகை, ஆவி அமுதா வழியாக இறந்து போன அவரது தாயார் நடிகை ‘தேவிகா’ ஆவியுடன் பேச வைத்தாராம். தேவிகாவின் ஆவி, கனகாவுக்கு ஒரு மாப்பிள்ளையை தேர்வு செய்ததாம். அந்த மாப்பிள்ளை கனகாவை ரகசிய திருமணம் செய்து, மறைந்து விட்டாராம்.

‘ஆவி நம்பிக்கை மனநோய் தொடர்பானது’ என்று ஒரு மனநல மருத்துவர் என்ற முறையில் தான் சந்தித்த மனநோயாளிகள் பற்றி டாக்டர் கோவூர் கட்டுரைகளை எழுதியிருக்கிறார். அதில் இது ஒரு‘ஆவி’யின் கதை

இறந்த மனைவியருடன் பேசியவர்கள்...!

“ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும்.”

“ஆவிகளுக்குப் பாலுணர்வு உண்டு.”

“ஆவி உலகில் உணவு, நீர், மது அனைத்தும் உண்டு.”

“மிருகங்களுக்கு ஆவியாக மாறும் சக்தி யில்லை.”

“ஆவிகள் ஆங்கிலத்தில்தான் பேசும்.”

திரு. கோவூர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் திருமதி தோமஸின் ஆவி இப்படித்தான் பதில் கூறியது. ஆனால், திருமதி தோமஸின் ஆவியை கோவூர் கண்களால் பார்க்கவில்லை. அவரது கணவர் திரு.தோமஸ் மூலமாகத்தான் இந்தப் பதில்கள் கோவூருக்குக் கிடைத்தன.

கால் நூற்றாண்டுக்கு முன்பு யாழ்ப்பாண மாவட்ட நீதிபதியாக இருந்த திரு. ராஜ்பக்ஸ் என்பவர் தனது மனைவியின் ஆவியுடன் பேசியதாகவும், பல கேள்விகளைக் கேட்டதாகவும் அந்த இளம் மனைவி வாழ்ந்தபோது கூறாத பல முக்கிய விஷயங்களை ஆவியின் உருவில் தன்னிடம் கூறியதாகவும்,  class="contentpane">கோவூரிடம் கூறியதை அடுத்தே கோவூர் தோமஸின் மனைவியின் ஆவியுடன் பேச வேண்டிய சூழ்நிலை உருவாகியது.

யாழ்ப்பாணம் கொன்வன்ட் வீதியில் திரு.ராஜபக்ஸ் வசித்து வந்தார். அதே வீதியில்தான் கோவூரும் வசித்து வந்தார். கோவூர் அப்போது யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றிக் கொண்டிருந்தார். கோவூரும், ராஜபக்ஸூவும் நெருங்கிய நண்பர்கள்.

ஒரு நாள், திரு. ராஜபக்ஸூவின் இளம் மனைவி திடீரெனக் காலமானார். கணவன், மனைவியென்றால் இப்படித்தான் இருக்க வேண்டுமென்று உலகுக்கு எடுத்துக் காட்டுவதுபோல் அந்நியோன்யமாக வாழ்ந் தவர்கள் ராஜபக்ஸ் தம்பதிகள். திரு. ராஜபக்ஸ் தன் மனைவி மீது அசைக்க முடியாத பாசத்தை வைத்திருந்தார். இவ்வளவு அன்புடன் வாழ்ந்த தன் மனைவி திடீரென இறந்தது திரு.ராஜபக்ஸூவை நிலை குலையச் செய்தது. மனைவியின் பிரிவு காரணமாக வாழ்க்கையில் எவ்விதப் பிடிப்புமின்றி வாழ முற்பட்டார். திடீரென தன் மனைவி உயிருடன் இருப்பது போன்றே அவருக்குத் தோன்றும். சில சமயங்களில் மனைவியின் ஆவியாவது தன்னை வந்து சந்திக்காதா என்ற ஆசை அவருக்கு உதிக்கும். இந்த நப்பாசை அவரிடம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இதனால் ஆவிகள் பற்றி அறிந்து கொள்ள அவர் பெரிதும் ஆர்வம் கொண்டார். இந்த ஆர்வம் நாட்கள் செல்ல செல்ல அதிகரித்தது. யாழ்ப்பாணம் பொது வாசக சாலையில் இருந்த ‘ஆவிகள்’ சம்பந்தமான சகல புத்தகங்களையும் வாசிக்க ஆரம்பித்தார். குறிப்பாக “லண்டன் ஆவிகள் ஆராய்ச்சிக் கழகம்” வெளியிட்ட புகத்தங்களை அவர் வாசிக்கத் தவறுவதில்லை.

திருவாளர்கள் மயர்ஸ், சோல், சிஜ்விங், பொட்மோர், ஒலிவர் லொட்ஜ்,அலெக்சாண்டர் கெனன், கொனன் டொயல், ஹரிபிறைஸ்போன்றவர்கள் ஆவிகள் உலவுகின்றன என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்தார்கள். இவர்களின் புத்தகங்களையெல்லாம் வாசித்த திரு. ராஜபக்ஸ், தனது நம்பிக்கையை மேலும் வலுப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி காலை திரு.ராஜபக்ஸ், மூச்சு வாங்க, கோவூரின் இல்லத்துக்கு ஓடி வந்தார். “ஏபிரஹாம்... ஏபிரஹாம்” என் கூவியபடி ஓடி வந்த அவரின் முகத்தில் குதூகலமும், அதே நேரத்தில் கலவரமும் குடி கொண்டிருந்தன.

“ஏபிரஹாம்... கடைசியில் என் மனைவியைச் சந்தித்து விட்டேன்”என்று கூவியபடி கோவூரின் வீட்டுக்குள் நுழைந்தார். பலமுறை அதையே சொல்லிக் கொண்டிருந்தார்.

திரு. ராஜபக்ஸூவின் பேச்சு, கோவூரைப் பெரும் ஆச்சரியத்துக்கும்,அதிர்ச்சிக்கும் ஆளாக்கியது. இச் சமயத்தில் திரு.ராஜபக்ஸ்பொறுப்புள்ள ஒரு நீதிபதிபோல் அல்லாமல், ஒரு சிறு குழந்தை போலவே தோன்றினார்.

“ஏபிஹாம்! என் மனைவி என்னிடம் ஒரு மணி நேரம் பேசினாள். தனது மரணத்துக்கு முன்பு சொல்லத் தவறிய பல விஷயங்களைச் சொன்னாள். இன்னொரு முறைகூட அவளைச் சந்திக்கப் போகிறேன். ‘அப்பாய்ன்ட்மென்ட்’ வைத்துவிட்டு வந்தேன்” இப்படி பரபரப்புடன் கூறினார் ராஜ்பக்ஸ்.

‘என்னையும் அப்போது அழைத்துச் செல்லு கிறீர்களா?’ என்று கோவூர் அவரிடம்கேட்டார்.

“இல்லை. இல்லை ஏபிரஹாம், அடுத்த முறை அவளிடம் நான் பல இரகசியங்களைக் கேட்கப் போகிறேன். என்னுடன் அப்போது யாரும் இருக்கக் கூடாது” என்று கெஞ்சுவதுபோல் பதிலளித்தார் திரு.ராஜபக்ஸ்.

இதைக் கூறி முடித்ததும் அவரின் கண்கள் கலங்கியிருந்தன. மிகவும் களைப்படைந்தும் காணப்பட்டார். இருவரும் காப்பியை அருந்தினர். இதன் பின் ராஜபக்ஸ் சிறிது தெளிவு பெற்றிருந்தார். சிறிது நேரம் மவுனம் நிலவியது. திரு. ராஜபக்ஸ் பேச்சை ஆரம்பித்தார்.

“ஏபிரஹாம்... எனது நண்பர் தோமஸின் உதவியால் தான் எனது மனைவியுடன் பேசினேன். திரு. தோமஸ்தான் ‘மீடியமாக’ இருந்து என்னுடன் என் அன்பு மனைவி பேச வழி செய்து கொடுத்தார்.”

இப்படிக் கூறிய திரு. ராஜபக்ஸ், தாம் தோமஸை சந்தித்த கதையையும், தன் மனைவியுடன் பேசியதையும் விவரமாக விளக்கினார்.

இதையெல்லாம் புன்சிரிப்பை உதிர்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்த கோவூர், திரு. ராஜ பக்ஸ்வுக்கு ‘மீடியமாக’ இருந்த திரு. தோமஸின் விலாசத்தைப் பெற்றுக் கொண்டார். திரு. ராஜபக்ஸ் விடைபெற்றுச் சென்ற சிறிது நேரத்தில் தம் கைப்படவே தோமஸூக்கு கடிதம் எழுதினார் கோவூர். ஒரு வாரம் கடந்தது, தோமஸிடமிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

ஒரு நாள் காலை திடீரெனக் கோவூரின் இல்லத்துக்குள் நுழைந்தார் தோமஸ். இச்சமயம் கோவூர், வரவேற்பறையில் அமர்ந்து புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தார். வீட்டுக்குள் நுழைந்து கோவூரைப் பார்த்ததுதான் தாமதம், “அதோ உங்கள் தலைக்குப் பின்னால் தெய்வீகமான ஒரு மஞ்சள் சக்கரம் சுழலுவதைக் காண்கிறேன்”என்றார் தோமஸ்.

தோமஸை வரவேற்ற கோவூர், அவரை அமரச் செய்தார். தெய்வீக சக்கரம் பற்றிக் கூறியபடியே அமர்ந்த தோமஸ், தொடர்ந்து தம்மைப் பற்றிய விவரங்களைச் சொல்ல முற்பட்டார். திரு. தோமஸ் தீவிர மதப்பற்றுள்ள ஒரு கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்தவர். தீவிரமான மத நம்பிக்கை யுடன் பெற்றோரால் வளர்க்கப்பட்டார். யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல கிறிஸ்தவ கல்லூரியில் கல்வி பயின்றார். கிறிஸ்தவ இயக்க மொன்றினால் சிறந்த மாணவனாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இளம் பிராயத்தை எட்டியதும் திரு. தோமஸ் மத குருவாகிவிட விரும்பினார். ஆனால், அவரின் மற்றொரு சகோதரர் மதகுருவாகிவிடவே, திரு. தோமஸ் குடும்ப வாழ்வில் ஈடுபட்டார்.

மனைவியோடு மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்தபோது தான்1926 ஆம் ஆண்டு அவரது மனைவி திடீரென இறந்தாள். மனைவி இறந்துவிட்டாலும், அவளின் நினைவு அகலவே இல்லை. காலப்போக்கில் இரண்டாவது திருமணமும் செய்தார். அப்பொழுதும் முதல் மனைவியின் நினைவுதான் ஆட்சி புரிந்து கொண் டிருந்தது.

தோமஸூம் ஆவிகள் பற்றி நம்பிக்கைக் கொண்டவர். ஆவிகள் பற்றிய நூற்றுக்கணக்கான நூல்களைப் படித்திருந்தார். தனது முதல் மனைவியின் ஆவியும் வாழ்வதாக நம்பினார்.

1934 ஆம் ஆண்டு தான், தனது மனைவியின் ஆவியுடன் முதல்முறையாகத் தொடர்பு கொண் டதாகத் தெரிவித்தார். அதன் பிறகு அடிக்கடி அந்த ஆவியுடன் தொடர்பு கொள்ளலானார்.

இச்சமயம் லண்டனில் ஆவிகளைப் பட மெடுக்கும் பல அற்புத நிபுணர்கள் இருந்தனர். அங்கு தன் மாமனாரினதும், மனைவியினதும் அடை யாளங்களை எழுதி, அவர்களுடைய ஆவிகளின் படங்களை வரவழைத்தார்.

மாமனாரின் படத்தில் தோமஸூக்கு சந்தேகம் இருந்தது. ஆனாலும் மனைவியினுடைய ஆவியின் படம் சரியாகவே இருந்ததாகவே நம்பினார். நினைத்த பொழுதெல்லாம் தன் மனைவியின் ஆவியைச் சந்தித்துப் பேசும் சக்தி அவருக்கு ஏற்பட்டது.

தனது மகளின் திருமணத்தைக்கூட ஆவியைச் சந்தித்துப் பேசிய பின்னரே ஏற்பாடு செய்தார்.

தனது மனைவியோடு மட்டுமன்றி வேறு சில ஆவிகளுடன் பேச‘மீடியமாக’ அவரே இருந்தார். இதில் ஒன்றுதான் திரு. ராஜபக்ஸ்,தனது மனைவி யின் ஆவியுடன் பேச ‘மீடியாமாக’ இருந்தது.

இப்படி தன் கதையைச் சொல்லி முடித்த தோமஸ், லண்டனிலிருந்து வரவழைத்த ஆவிகளின் படங்களையும் காட்டினார். படங்களில், மாமனாரின் ஆவி சூட்டுடன் தொப்பி அணிந்திருந்தது. மனைவியின் ஆவி வெள்ளைக் கவுன் அணிந்திருந்தது. தோமஸ் பேசி முடித்த பின்னர், அவர் காட்டிய ஆவியின் படங்களை ஆராய்ந்த கோவூர், “உங்கள் மனைவியின் ஆவியுடன் இப்பொழுது தொடர்பு கொள்ள முடியுமா?” என்று கேட்டார்

“முடியும்! ஒரு தனி அறைக்குள் அழைத்துச் செல்லுங்கள்” என்றார் தோமஸ்

உடனே தோமஸூடன் எழுந்த கோவூர், அவரைத் தனது வாசக சாலைக்குள்அழைத்துச் சென்றார். அங்குச் சென்றதும் ஒரு நாற்காலியில் அமர்ந்து “ஜன்னல்களை எல்லாம் மூடுங்கள்” என்றார் தோமஸ்.

ஜன்னல் அனைத்தும் மூடப்பட்டன. தனக்கு நேரெதிராக இருந்த சுவரை உற்று நோக்கினார் தோமஸ். சில வினாடிகள் கழிந்தன.

“அதோ! அதோ!! அவள் நிற்கிறாள். என்னைப் பார்க்கிறாள்” என்று கூறினார் தோமஸ்.

அவர் காண்பித்த திசையைக் கோவூர் நோக்கிய போது, அங்கே தனது தந்தையின் படம் தொங்குவதைக் கண்டு, அதனருகில் நெருங்கி அதைத் தொட்டுப் பார்க்க முயன்றார்.

“தொடாதீர்கள்... தொடாதீர்கள்” என்று குரல் எழுப்பிய தோமஸ், “ஆவிகளைப் புனிதமில்லாத மனிதர்கள் தொடக் கூடாது” என்று அதட்டி எச்சரித்தார்.

“அங்கே சுவருமில்லை; படமுமில்லை. நீல நிறமான ஆகாயம் தெரிகிறது. வெள்ளை உடை உடுத்தி என் அழகிய மனைவி நிற்கிறாள்” என்ற பதில் வந்தது. அடுத்த வினாடி, “என் மனைவியின் ஆவி, கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தயாராகிவிட்டது” என்று கூறினார்.

உடனே கோவூர் கேள்விகளைக் கேட்டார்.

கோவூர் கேட்ட சில கேள்விகளுக்குத்தான், “ஆவிகள் விஸ்கி, சோடா குடிக்கும், ஆவிகளுக்குப் பாலுணர்வு உண்டு” என்பன போன்ற பதில்களை தோமஸ் மூலமாக அவர் மனைவியின் ஆவி கூறியது.

இந்தச் சுவையான பதில்கள் அனைத்தும் தோமஸின் வாயிலாகத்தான் வந்தன.

கோவூர் மேலும் கேட்ட சில கேள்விகளுக்கு கிடைத்த பதில்கள்:

• கிறிஸ்தவ மதம்தான் உண்மையானது.

• மறுபிறவி என்பதே இல்லை.

• தோமஸ் இறந்தவுடன், நான் ஒரு ஆவியை மணந்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் ஈடுபடப் போகிறேன்.

• வேறு சில கிரகங்களிலும் மனிதர்கள் வாழ் கின்றனர்.

கோவூரின் கேள்விகள் முடிந்த சிறிது நேரத்தில் தோமஸ்சுயநினைவுக்கு வந்தார். இதனையடுத்து இருவருமே அந்த அறையவிட்டு வெளி அறைக்கு வந்தனர். ஆவியுடன் பேசுவதற்கு முன்னும் - பேசும் போதும், பேசிய பின்னும் தோமஸூக்கு ஏற்படும் அனுபவங்கள் பற்றிக் கேட்டார் கோவூர்.

“மனைவியுடன் தொடர்பு கொள்ள நினைத்து, சிந்தனையை அதில் மட்டும் செலுத்தி வெறித்துப் பார்க்க ஆரம்பிப்பேன். அப்பொழுது நான் நோக்குமிடத்தில் வர்ணஜாலம் மிக்க புதுமையான ஒரு ஒளி பிரகாசிக்கும், ஆவி அங்கே தோன்றும், அந்த ஆவியுடன் பேச, அதன் முழு உருவமும் தெரிய வேண்டிய அவசியமில்லை. ஆவியுடன் பேசி முடிந்ததும் மிகக் களைப்பாகவே இருக்கும். தண்ணீர்த் தாகமெடுக்கும். உடனே நித்திரை வரும்.” இப்படித் தனது அனுபவங்களைக் கூறிய தோமஸ், கண்களை மூடியவாறு ஓய்வெடுத்தார்.

தோமஸின் நடவடிக்கைகளையும், அவரது கதையையும்,அனுபவங்களையும் நன்கு கண்டு, கேட்டு அறிந்த பின்னர் திரு. ராஜபக்ஸ், திரு. தோமஸ் போன்றவர்கள் எவ்வாறு ஆவியுடன் பேசுகிறார்கள் என்பது கோவூருக்கு விளங்கியது.

“ராஜபக்ஸ், தோமஸ் இருவருமே தங்கள் மனைவிமார் மீது தீராத ஆசை வைத்திருந்தனர். ஆனால் இருவருமே இளம் வயதிலேயே மனைவியரைஇழந்துவிட்டனர். அவர்கள்மீது கொண்டிருந்த அளவுக்கு மீறிய அன்பாகப்பட்டது. தங்கள் மனைவியர் ஆவிகளாகவாவது வந்து தங்களுடன் பேச மாட்டார்களா என்ற நப்பாசை பிறந்தது.”

“இதற்கு உறுதுணையாக ஆவிகள் பற்றிய புத்தகங்கள் அவர்களுக்கு நம்பிக்கையூட்டின.”

“தோமஸ் தீவிரமான மதப்பற்றுள்ள குடும்பத்தில் பிறந்தவராதலால்,அவர் தெய்வீகமென்பது உண்மையெனத் தீவிரமாக நம்பினார்.”

“எந்தவொரு பொருளையுமே நீங்கள் உற்று நோக்கியபடி இருந்தால் அந்த இடத்தில் உங்கள் கண்களுக்கு அபூர்வமான ஒளி தென்படும்.”

“அதற்குமேல் எதையும் நீங்கள் கற்பனை செய்தால் நீங்கள் நினைப்பதே உங்கள் கண்முன் நிற்பது போன்று தெரியும்.”

“தோமஸூக்கு, தாடி வளர்த்த எனது தந்தையின் படம் அவர் மனைவியாகக் காட்சியளித்ததும் இப்படித்தான்.”

“மனிதரின் கண்களுக்கும், மூளை நரம்புகளுக்கும் எப்பொழுதுமே ஒரு தொடர்பு உண்டு. கண்கள் பார்ப்பதை மூளை சிந்திக்கும். அதுவும் அந்தக் கண்களுக்குத் தெரிய நீங்கள் பார்க்கும் பொருள்களின் மீது ஒளி விழ வேண்டும்.”

“இப்படித்தான் தோமஸ் தனது மனைவியைக் கற்பனையில் கண்டார்.”

“புளியைச் சாப்பிடுவதாக நினைத்துக் கொண் டால், உங்கள் வாயும்,முகமும் உங்களை அறியாமலே சுருங்கிப் பலவித முக பாவங்களையும் ஏற்படுத்தும்.”

“இதே போன்றுதான் தோமஸ் தனது இறந்த மனைவியை நினைத்துக் கொண்டு, எனது கேள்வி களுக்கு மனைவியின் ஆவி போன்று பதிலளித்தார். அந்த ஆவி, எனது கேள்விகளுக்கு அளித்த பதில் களை ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும்.”

“தோமஸ் ஒரு தீவிர கிறிஸ்தவ குடும்பத்தைச் சேர்ந்தவரென்பதால்தான், கிறிஸ்தவ மதம் உண்மையானதென்றும்,மிருகங்களுக்கு ஆவியாக உலவும் சக்தி இல்லையென்றும் சொன்னார்.”

“அவர் ஒரு இந்துவாக இருந்திருந்தால் இந்து மதம்தான் சிறந்ததென்றும், மிருகங்களுக்கும் ஆவி யாகும் சக்தி கிடைக்குமென்றும் கூறியிருப்பார்.”

“இதிலிருந்து இவை மதப்பற்றால் கூறப்பட்ட பதில்கள் என்பது தெளிவாகிறது.”

“ஆவிகளின் உலகில் உணவு, நீர், மது உண்டென்றார். உணவு உண்ண முடியுமானால், அது பூவுலகப் பிறவியாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஆவியாக இருக்க முடியாது.”

“ஆவிகளுக்குப் பாலுணர்வும், உடலமைப்பும் உண்டென்று கூறியதை அவதானிக்கும்போது, மனிதன் அடக்கம் அல்லது தகனம் செய்யப்பட்ட தும் அவனது உடல் அழிந்து விடுகிறது. பிறகு எப்படி உடலமைப்பும், பாலுணர்வும் இருக்க முடியும்?”

“அதிகமான கிறிஸ்தவர்கள் அக்காலத்தில் பேசியது ஆங்கிலம். அதனால்தான் ஆவிகளின் மொழி ஆங்கிலமென்றும், உடை, சூட்,கவுண் என்றும் பதில் கூறப்பட்டது.”

“இந்தப் பதில்களெல்லாம் கிறிஸ்தவ மதத்தின் நம்பிக்கையே.”

“ஆவியுலகில் விஸ்கியும், சோடாவும் உண் டென்றால், கசிப்பும் இருக்க வேண்டும்? தோமஸ் கிறிஸ்தவர்களின் அன்றைய முக்கிய மதுபானமான விஸ்கியைத்தான் ஞாபகமாகக் கொண்டு, அந்தப் பதிலைக் கூறியிருக்கிறார்.”

“தோமஸ் எனக்குக் காட்டிய அவரின் மாமனார் மனைவி ஆகியோரின் ஆவிகளின் புகைப்படங்கள் எப்படி எடுக்கப்பட்டன என்பது பெரும் கேள்வியாக எழலாம்!”

“லண்டனில் இப்படியொரு ஏமாற்றும் கோஷ்டியே பிழைப்பு நடத்தியது. சில காலத்திற்குப் பின்பு இக்கோஷ்டி போலீசாரால் பிடிக்கப்பட்டு பல உண்மைகள் வெளியாகின.”

“இக்கோஷ்டியின் தலைவர்கள் எனக் கருதப்பட்ட திரு.பிரட்பலோ,மேஜர் ரம்ளிங் ரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.”

“ஒரு வேடிக்கை என்னவென்றால், வேட்டி, சட்டை அணிந்து வாழ்ந்த தோமஸின் தந்தையின் ஆவி, சூட்டும் தொப்பியும் அணிந்திருந்ததுதான்.”

“தோமஸூக்கு ‘மோனா மேனியாக்’ என்ற ஒருவித மனோ வியாதியே பீடித்திருந்தது.”

“மதத்தின் மீது கொண்ட நம்பிக்கையால், அவர் ஆவிகள் பற்றிய மூட நம்பிக்கையில் ஈடுபட்டார். ஆவிகள் பற்றிய புத்தகங்களும் அவருக்கு நம்பிக்கையூட்டின.”

லண்டன் ‘ஆவிகள் ஆராய்ச்சிச் சங்கம்’ அன்று வெளியிட்ட புத்தகங்களும் அவரது நம்பிக்கையை வலுப்படுத்தின.

“இன்று இதே சங்கம் வெளியிட்டுள்ள திருவாளர்கள்; அந்தனி புளு,கட்னர், சைமன்ஸ், வட்வட்ரூஷ், ஹென்ஸல், ஸ்பென்ஸர் பிரவுண் ஆகியோரின் புத்தகங்களை இவர் படித்திருந்தால் இப்படியான மூடநம்பிக்கைகளுக்கு இடமே கொடுத்திருக்க மாட்டார்.”

“தோமஸின் மூடநம்பிக்கைகளுக்கு ஒரு பொறுப்புள்ள நீதிபதியும் அடிமைப்பட்டிருக்க மாட்டார்.”

“என்னைப் பார்த்தவுடன் எனது தலைக்குப் பின்னால் தெய்வீக சக்கரம் சுழல்கிறதென்று கூறியதிலிருந்து அவர் ஒரு ‘மோனோ மேனியாக்’ என்பதை நான் உணர்ந்து கொண்ட பின்பே, அவரை ஆராய்ந்து இந்த உண்மைகளை அறிந்தேன்.”

இப்படி விளக்கமளித்த கோவூர், பின்பு ஹிப்னாடிஸ் முறையில் தோமஸ், ராஜபக்ஸ் ஆகியோரின் உள்ளுணர்வுகளுக்கு இந்த மூட நம்பிக்கைகள் பற்றி எடுத்துக் கூறி, அவர்கள் இருவரும் இந்த மனோ வியாதியிலிருந்து விடுபட வழிசெய்தார்.

Pin It