காவிரிப் பிரச்சினைக்காக இறுதி வரை குரல் கொடுத்த கரூர் வழக்கறிஞர் பி.ஆர். குப்புசாமி, பிப்.15 ஆம் தேதி விடியற்காலை 5மணிக்கு முடி வெய்தினார். கடந்த சில காலமாகவே அவர் உடல்நலம் பாதிக்கப்பட் டிருந்தார். பொதுவுடைமைவாதியாக அவரது பொது வாழ்க்கைத் தொடங்கியது. ஜீவாவுடன் இணைந்து, கலை இலக்கியப் பெருமன்றத்தை நிறுவியதில் அவருக்கு பெரும் பங்கு உண்டு. தேசிய இனப் பிரச்சினையில் பொதுவுடைமை கட்சியிடம் கருத்து மாறுபாடு கொண்டு, பெரியாரியத்தில் ஈடுபாடு கொண்டார். கரூரில் சமூக அறிவியல் மய்யம், பகுத்தறிவாளர் கழகத்தை உருவாக்கி, பெரியார் கருத்துகளைப் பரப்பினார். நொய்யல் ஆற்று நீர் உரிமைகளுக்கும், நதி நீர் சுற்றுச் சூழலால் மாசுபடுவதற்கும் எதிராக பல போராட்டங்களை நடத்தியவர்.

இடையில் சில ஆண்டுகள் தி.மு.க.வில் சேர்ந்து, கரூர் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்தாலும், கட்சி அரசியலை அவரால் ஜீரணிக்க முடியாத நிலையில் வெளியேறி, காவரி உரிமைப் பிரச்சினையில் தமது முழு கவனத்தையும் குவித்து, தொய்வின்றி,அதற்காக போராட்டம், பரப்புரை, எழுத்து, கருத்துருவாக்கம் என்ற பல்வேறு தளங்களில் அர்ப்பணித்துக் கொண்டு செயல்பட்டார்.‘மண்ணுக்கேற்ற மார்க்சியம்’, ‘மன்னர்களும் மனுதர்மமும்’ ஆகிய நூல்களை அவர் எழுதினார்.

கரூரில் மூத்த வழக்கறிஞராகப் பணியாற்றிய அவர், மார்க்சியத் தத்துவத்தில் தேர்ச்சிப் பெற்றவராவார். சிந்தனை படைப்பு செயல் என்ற திறமைகளோடு பொதுத் தொண்டாற்றிய பி.ஆர். குப்புசாமி அவர்களின் மறைவு தமிழினத்துக்கு பேரிழப்பாகும். பெரியார் திராவிடர் கழகம் ஆழ்ந்த இரங்கலைப் பதிவு செய்கிறது.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன் - கடந்த வாரம் உடல் நலிவுற்றிருந்த அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

 

Pin It