மேட்டூர் கொளத்தூரிலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள கிராமம் தார்க்காடு சுந்தராபுரம். 1975 ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி இந்த ஊரில் கிறிஸ்தவர் பிரச்சார முகாம் நடந்தது. மதப்பிரச்சாரம் மட்டுமின்றி, ‘பேயோட்டுதல்’ போன்ற மூடநம்பிக்கைகளையும் மக்களிடையே பரப்பி வந்தார்கள். செய்தியறிந்து அவ்வூர் பொது மக்கள் கொளத்தூர் திராவிடர் கழகத் தோழர்களுக்கு தகவல் தெரிவித்தனர். கொளத்தூர் திராவிடர் கழகத் தலைவர் தா.செ. மணி (கழகத் தலைவர் கொளத்தூர் மணி), பகுத்தறிவாளர் கழகத் தலைவர் டி.ஆர்.கிருஷ்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் சுபாஷ் சந்திர போஸ், ஆசிரியர் எம்.இராமலிங்கம், டி.கே. நாச்சிமுத்து, வி.கே. முத்துசாமி ஆகியோரடங்கிய குழு தார்க்காடு விரைந்தது. 8 மணிக்கு மதப் பிரச்சாரகர் நிகழ்ச்சியைத் தொடங்கியுடன், கிறிஸ்தவ மதம் குறித்து தங்களின் சந்தேகங்களுக்கு பதில் தர வேண்டும் என்று ஊர்ப் பெரியவர்கள் வழியாக பிரச்சாரகருக்கு எழுதியனுப்பினர். சந்தேகங்களுக்கு விளக்கமளித்தால் தாங்களும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறத்தயாராக இருப்பதாக தெரிவித்தனர்.

மதப் பிரச்சாரகர்கள் நிகழ்ச்சி முடிந்ததும், அறைக்கு வந்தால் விளக்கம் அளிப்பதாகக் கூறி தப்பிக்க முயன்றனர். “உங்களுக்கு உண்மையிலேயே மதத்தின் மீதும் ஏசுவின் மீதும் நம்பிக்கை இருக்குமானால், பொது மக்கள் முன்பு விளக்கம் அளிக்க ஏன் மறுக்கிறீர்கள்? விளக்கத்தை மக்கள் மன்றத்தின் முன் அளிக்காவிட்டால், பிரச்சாரத்தை முடித்துக் கொண்டு மேடையை விட்டு இறங்குங்கள்” என்று தோழர்கள் மற்றொரு துண்டுசீட்டை அளித்தனர். மதப் பிரச்சாரக் குழுவினர் இருவர் மேடையை விட்டு கீழே இறங்கிவந்து, தோழர்களை சமாதானப்படுத்த முயன்றனர். நிகழ்ச்சி முடியும் வரை பொறுமை காக்கக் கூறினர். இரவு 10.40 மணி வரை தோழர்கள் காத்திருந்தும், விளக்கம் அளிக்க முன்வராத நிலையில் கொளத்தூர் திராவிடர் கழகத் தலைவர் தா.செ.மணி, மேடையில் ஏறினார்.

“வேண்டுமென்றே விளக்கமளிக்காமல் தாமதப்படுத்துகிறீர்கள்; எப்போது எங்கள் சந்தேகங்களை தீர்க்கப் போகிறீர்கள்?” என்று நேருக்கு நேர் கிடுக்கிப்பிடி போட்டார். மீண்டும் நிகழ்ச்சி முடிந்து அறைக்கு வாருங்கள் என்ற பதிலையே கூறினர். தோழர் தா.செ.மணி, மேடையை விட்டு இறங்க மறுத்தார். ஒரு மதப் பிரச்சாரகர், “அய்யா, உங்கள் காலை வேண்டுமானாலும் பிடித்துக் கொள்கிறேன்; எங்களை நிகழ்ச்சி நடத்த அனுமதியுங்க;” என்று மன்றாடினார்.

உடனே தோழர் தா.செ.மணி, முக்கிய மதப்பிரச்சாரகர்கள் இருவரின் கால்களையும் பிடித்துக் கொண்டு, “உங்கள் கால்களைப்பிடித்து கும்பிடுகிறேன், எங்கள் சந்தேகங்களைக் கேட்க வாய்ப்பு தர வேண்டும்” என்று பொது மக்கள் முன்னிலையிலே கேட்டவுடன், கூட்டம் பரபரப்பாகிவிட்டது. ‘கேள்விகளுக்கு பதில் சொல்’ என்று கூட்டத்தினரும் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். உடனே மதவாதிகள் ஒலி பெருக்கியை அப்புறப்படுத்தத் தொடங்கினர். தோழர்கள், “ஒலி பெருக்கிக்கான கட்டணத்தில் பாதியை நாங்கள் ஏற்கிறோம், அகற்றாதீர்கள்; சந்தேகங்களுக்கு விளக்கமளியுங்கள்” என்று கூறியும், அவசர அவசரமாக ஒலிபெருக்கியை அகற்றி விட்டனர்.

உடனே மேடையை விட்டு தோழர் தா.செ. மணி கீழே இறங்கி, மக்களிடம் பேசத் தொடங்கினார். “பொது மக்களே! ஒலி பெருக்கி இல்லாவிட்டாலும் எங்களுக்கு சொந்தக் குரல் இருக்கிறது. இதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என்று பேசத் தொடங்கினார். மக்கள் கலையாமல் அப்படியே அமர்ந்து விட்டனர். மதப் பிரச்சாரகர்கள் ஊர்ப் பெரியவர்களை தங்கள் பாதுகாப்புக்கு அழைத்தனர். ஊர்ப் பெரியவர்களும், “சந்தேகம் தானே கேட்கிறார்கள்; விளக்க வேண்டியது தானே?” என்று கூறியும், மத பிரச்சாரகர்கள் மேடையை விட்டு ஓடி விட்டனர். பிறகு, அந்த மேடை பகுத்தறிவாளர்கள் மேடையாக மாறியது.

ஊர்ப் பிரமுகர்கள், “நீங்கள் பேசுங்கள்; ஒலி பெருக்கியைப் போடச் சொல்கிறோம்” என்று கூறியவுடன், கிறிஸ்துவ மேடையில் பகுத்தறிவுப் பிரச்சாரம் தொடங்கியது. தா.செ.மணி, ‘பேயாடுதல்’ என்கிற மோசடியை அறிவியல் காரணங்களோடு விளக்கினார். ‘பேய்-பிசாசு’ என்ற அச்ச உணர்வு மனநிலையுள்ளவர்கள் உரத்த சத்தமான இசை கேட்டவுடன், ‘பேய்’ பிடித்ததுபோல் ஆடுவது உளவியல் காரணத்தால்தான் என்பதை விளக்கினார். ‘பேய்’ பிடித்ததாக ஆடும் இதே பெண்களிடம் நாங்கள் தாரை தப்பட்டை அடித்து இதேபோல் ஆடவைத்துக் காட்ட முடியும் என்று விளக்கியதோடு, ‘பைபிளை’ கையில் எடுத்து வைத்துக்கொண்டு அதில் அறிவியலுக்கு எதிரான கருத்துகள் இருப்பதை விளக்கினார். ‘ஒருகன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு’ என்று கூறிய ஏசு, ‘பழம் இல்லை என்பதற்காக அத்தி மரத்தையே பட்டுப் போகச் சொன்னது, எந்த வகை கருணை?’ என்ற கேள்விகளை முன் வைத்தார்.

பகுத்தறிவாளர் கழகத் தோழர் ஏ. சுபாஷ்சந்திரபோஸ், “கடவுள்தான் நோயைக் கொடுத்தார் என்று கூறி அதைத் தீர்க்க ஜபமும் செய்வது - ஒரு தகப்பன் தன் மகனின் கரத்தை தானே ஒடித்து, பிறகு மருத்துவரை அழைத்து மருத்துவம் செய்த கதை போன்றதுதான்” என்று விளக்கினார். கூட்டத்தினர் கைதட்டி ஆரவாரம் செய்து கருத்துகளைவரவேற்றனர். விரைவில் கொளத்தூரில் டாக்டர் கே.ஆர். குமார் என்ற பகுத்தறிவாளர், “அறிவியல் நிகழ்ச்சிகள் வழியாக இந்த மதவாதிகள் மோசடிகளை அம்பலமாக்கும் நிகழ்ச்சியை நடத்தவிருக்கிறார். அதற்கு அனைவரும் வாருங்கள்; ‘பேய் ஓட்டுகிறோம்; பிசாசுஓட்டுகிறோம்’ என்று மோசடிக்காரர்கள் வந்தால், மக்களே எதிர்த்து கேள்விகளை கேட்க வேண்டும்” என்ற வேண்டுகோளுடன் தா.செ. மணி விடை பெற்றார். அப்பகுதி முழுதும் மக்களிடையே மிகவும் பரபரப்பை உருவாக்கிய இந்த நிகழ்வு, மூடநம்பிக்கைப் பரப்பும் மோசடிக்காரர்களின் முகத்திரையைக் கிழித்தது.

Pin It