சகோதரிகளே! சகோதரர்களே!
நான் இன்று பேசத் துணிந்த விஷயமாகிய பார்ப்பனீயப் புரோகித பகிஷ்கார விஷயம் சாமானியமானதல்ல. ஆயிரக்கணக்கான வருஷங்களாய் அநேக தலைமுறையாய் நம்மவர்கள் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டு மதத்தின் பேரால் ஆத்மார்த்தம் என்றும், மோக்ஷம் என்றும், தர்மம் என்றும், புண்ணியம் என்றும், கடமை என்றும் கருதி சுயமரியாதை இழந்து நடந்து வந்திருக்கும் அர்த்தமற்ற ஒரு காரியத்தைப் பற்றி உங்கள் முன் பேசுவதென்பது சுலபமான காரியமென்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் இம்மூட நம்பிக்கையும் அர்த்தமற்ற நடவடிக்கைகளும் நமது மக்கள் ரத்தத்திலேயே கலந்து விட்டது. இதுகளைப் பற்றி யோசிப்பதுவே மிகப்பாவம் என்பதாக கருதப்படுகிறது.
கொஞ்ச காலத்திற்கு முன் இம்மாதிரி விஷயங்களுக்கு ஒரு கூட்டம் கூட்டுவது என்றால் கூட்டத்திற்கு வந்து என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதற்கு கூட மனிதர்களுக்கு பொறுமை இருக்காது. ஒரே அடியாய் “காலம் கெட்டுவிட்டது, கலியின் வக்கிரம் இம்மாதிரி நாஸ்திகம் வளருகிறது” என்று எவ்வளவோ வெறுப்பார்கள். ஆனால் இப்போது இதைப் பற்றி என்ன சொல்லுகிறான் என்று கேட்பதற்காவது இத்தனை பேர்கள் வந்திருப்பதே அதிலும் மதம், சமயம் முதலிய விஷயங்களிலும், சரித்திர ஆராய்ச்சி முதலிய விஷயங்களிலும் நிபுணர்கள் உள்பட அநேக மேதாவிகளும், அறிவாளிகளும் இவ்விடம் வந்திருப்பது எனக்கே ஒரு ஆச்சரியத்தையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. ஆனால் ஒரு விஷயத்தை முதலிலேயே சொல்லி விடுகிறேன். நான் படித்தவன் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தில் சேர்ந்தவன் அல்ல. என்னுடைய 10-வது வயதுக்கு மேல் நான் ஒரு பள்ளிக்கூடத்திற்கும் அனுப்பப்பட்டவனே அல்ல. ஏனெனில் எனது 10-வது வயதிலேயே எனக்கு படிப்பு வராதென்றும் பள்ளியில் ஒழுங்காய் போய் படிக்க மாட்டேன் என்றும், மிகவும் துஷ்டப்பிள்ளை என்றும் எனது பெற்றோர்களால் கண்டுபிடிக்கப்பட்டு என்னை என் தகப்பனார் பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி தனது வியாபாரத்திற்கு அனுகூலமாயிருக்கும்படி கடையிலேயே வைத்துக் கொண்டார்.
இப்போது எடுத்துக்கொண்ட விஷயமாய் எனக்கு உள்ள எண்ணம் ஏறக்குறைய அந்த வயது முதற்கொண்டே இருந்து வந்தாலும் பள்ளியில் படித்ததினாலேயோ ஆராய்ச்சியினாலேயோ அல்லாமல் பெரியோர்களிடம் பேசி பேசி அறிந்ததினாலும் உலக அனுபவத்தினாலும் ஆலோசனைகளுக்கும், பகுத்தறிவுகளுக்கும் மதிப்புக் கொடுத்ததாலுமே தோன்றி இம்மாதிரி காரியங்களில் வெறுப்பு காட்டுவதும் இகழ்ந்து பேசுவதும் உண்டு. இம்மாதிரி நான் பேசும் காலத்தில் எனது வீட்டார்கள் உள்பட அநேகர் என்னை அக்காலம் முதல்கொண்டே பலமாய் நாஸ்திகம் என்றும், மததுவேஷம் என்றும் வெறுப்பார்கள். என்ன வெறுத்தாலும் எனது எண்ணங்கள் இம்மாதிரி விஷயங்களில் ஆலோசிக்க ஆலோசிக்க ஒரு சிறிதும் மாறுபடாமல் இருந்து வந்ததோடு இப்போதுதான் அவற்றை இவ்வளவு தாராளமாய் வெளியில் எடுத்துச் சொல்லவும், பலர் கூடி கேட்கவும் சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது.
பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்காரம் என்னும் இவ்விஷயம் இதன் பெயரைப் பார்க்கும் போதே பார்ப்பன புரோகிதத்தை மாத்திரம் விளக்கிவிட்டு அந்த இடத்தில் பார்ப்பனரல்லாத புரோகிதரை வைத்து அச்சடங்குகளைச் செய்வது என்பதாக பலருக்குத் தோன்றலாம். இச்சங்கத்தின் கருத்து அதுவல்லவென்றே நினைத்தே நான் இதில் பேச ஒப்புக் கொண்டிருக்கிறேன். அப்படி இல்லையானால் இச்சங்கமே அவசியமில்லை. இவ் விஷயத்தின் கருத்தே மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும் என்பதும், மனிதன் தனக்குள்ளாகவே தான் மற்றவனை விட பிறவியில் தாழ்ந்தவன் என்கிற உயர்வு தாழ்வு உணர்ச்சி போய் தன்னம்பிக்கையும் சுயமரியாதையும் ஏற்பட வேண்டும் என்பதும்தானே அல்லாமல் வேறல்ல. ஆனால் பார்ப்பனீயப் புரோகித பகிஷ்காரம் என்பதில் அவ்வித அர்த்தம் காண்கிறதே என்று கேட்பார்களானால் அதற்கு நான் சொல்லும் பதில்.
புரோகிதம்
புரோகிதம் என்று சொல்லுகிற வார்த்தையும் அதில் பிறக்கும் அச்சடங்கு அதாவது திவசம், திதி, சிரார்த்தம், பிண்டம், புண்ணியாவர்ச்சனம், சாந்தி, கருமம், சங்கல்ப்பம், தானம், பிதுர் தேவதை, பிதுர்லோகம் முதலியதுகள் பார்ப்பனர்களாலேயே ஏற்பட்டதாலும், இதுகளும் இது போன்ற பல சடங்குகளும் பார்ப்பனீயத்திலிருந்தே தோன்றியதாலும் பார்ப்பனீயம்தான் இம்மாதிரி மூட நம்பிக்கைகளுக்கு தாயகமாகவும் மக்கள் உயர்வு தாழ்வு முதலிய கற்பனைகளுக்கும், ஆதாரமாகவும் இருப்பதால் பார்ப்பனீயமே முதலில் ஒழிய வேண்டும் என்கிற கருத்தைக் கொண்டு அப்பெயர் இடப்பட்டிருக்கிறதென்றே சொல்லுகிறேன். குருட்டு நம்பிக்கைகளும் மூடவழக்கங்களும் ஒழிய வேண்டுமானால் முதலாவது பார்ப்பனீயத்தை ஒழித்தாக வேண்டும்.
பார்ப்பனீயம் ஒழிய வேண்டுமானால் பார்ப்பனன் உயர்ந்தவன், நாம் அவனை விட தாழ்ந்தவன் என்கிற உணர்ச்சி ஒழிய வேண்டும். ஆதலால்தான் முதல்படியாக பார்ப்பனன் உயர்ந்தவன் என்று எண்ணுவதற்கும் ஆதாரமாயிருப்பதற்கும் அனுகூலமான பார்ப்பனனைக் கொண்டு தான் புரோகிதம் முதலிய சடங்குகள் செய்வது என்கிற வழக்கமும் உணர்ச்சியும் ஒழிந்து விட்டால், அடுத்தப்படியில் அப்புரோகிதம் என்கிற மூட வழக்கங்களின் தத்துவத்தை எடுத்துச் சொல்லி அதிலிருக்கும் அர்த்தமற்றத் தன்மையையும் எடுத்துக் காட்டி அவற்றை ஒழிப்பதற்கும் அனுகூலமாயிருக்கும். இல்லாதவரை பாமர ஜனங்களுக்குள் ஏதோ ஒரு பெரிய மாறுதலை ஏற்படுத்துவது போல் நினைத்து பயப்பட இடமுண்டாய்விடும். ஏனெனில் அம்மாதிரியான விஷயத்தை நான் முன் சொன்னது போல் பல ஆயிரக்கணக்கான வருஷங்களாகவே நமது மக்களுக்குள் புகுத்தப்பட்டிருக்கிறது. அவ்விஷயத்தைப் படிப்படியாகத்தான் இறக்க வேண்டும். அவசரப்படுவதும் விதண்டாவாதம் பேசுவதும் காரியத்திற்கு உபயோகப்படாததாய்ப் போய் விடும். எனவே உயர்ந்த ஜாதி என்று எண்ணுகிற உணர்ச்சி ஒழிந்தவுடன் அதனால் ஏற்பட்ட மற்ற அசம்பாவிதங்களை ஒழிப்பது வெகு சுலபமாகி விடும் என்கிற எண்ணந்தானேயல்லாமல் பார்ப்பனர் வரும்படியைக் கெடுத்து அதை மற்றொருவருக்குக் கொடுக்க வேண்டுமென்பதல்ல. தவிற மேற்சொன்ன புரோகிதம் என்கிற சடங்குகள் நமக்கு எதன் மூலமாய் புகுத்தப்பட்டது என்று பார்த்தால் மதம் என்பதை ஆதாரமாய் வைத்து புகுத்தப் பட்டிருக்கிறது.
இந்து மதம்
அம்மதம் இந்து மதம் என்று சொல்லப்படுவது. அவ்விந்து மதம் என்பது என்ன என்று பார்க்கப்போனாலோ அது “பிடிக்கப் பிடிக்க நமசிவாயா” என்பது போல் கொஞ்சங் கூடப் பொருள் இல்லாததும் முழுப் புரட்டானதும் என்றேதான் சொல்ல வேண்டும். இந்த இந்து மதம் என்கிற வார்த்தை எதில் இருக்கிறது? எப்போது ஏற்பட்டது? அதன் கொள்கைகள் என்ன? என்கிற விஷயங்களை விசாரிக்கப் போனால் ஒன்றுக்குமே சமாதானம் கிடைக்காது. உலகத்தில் இந்த இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இம்மாதிரி புரட்டுகளையும் மோசத்தையும் கொண்டிருக்கவில்லை. வேறு எந்த மதஸ்த்தர்களும் தங்கள் மதத்தைப் பற்றி இவ்வளவு காட்டு மிராண்டித்தனமான மூடர்களாயிருக்கவில்லை.
மற்ற மதங்கள்
முகமதிய மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இன்ன காலத்தில் இன்னாரால் ஏற்பட்டது, அதன் கொள்கை இன்னது, அதற்கு மூல ஆதாரம் “குரான்”, அதை யாரும் படிக்க வேண்டியது என்கிற குறிப்புகள் உண்டு. அது போலவே கிறிஸ்துவ மதத்தை எடுத்துக் கொள்ளுங்கள்; இது இன்ன காலத்தில் இன்னாரால் ஏற்படுத்தப்பட்டது, அதன் கொள்கை இன்னது, அதற்கு மூல ஆதாரம் “பைபிள்”, அதை யாரும் படிக்க வேண்டியது என்கிற குறிப்புகள் உண்டு. அது போலவே புத்தமதம், சமணமதம், சீக்கியர் மதம் என்பன முதலிய எத்தனையோ மதங்களுக்கு இது போன்ற காலமும் கர்த்தாக்களும், கொள்கைகளும், ஆதாரங்களும் அவற்றை எல்லா மக்களும் அறியவும் சுதந்திரங்களும் உண்டு.
நாம் சொல்லும் இந்து மதத்திற்கு இவைகளில் ஏதாவது எள்ளளவாவது இருக்கிறதாவென்று பார்த்தால் ஊற்றுக்கு நிற்கும்படியான ஒரு காரியத்தையும் காணோம். இந்து மதம் என்கிற பெயரே பூர்வ சரித்திரங்கள், சங்க இலக்கியங்கள், புராணங்கள், இதிகாசங்கள், ஆகமங்கள், தர்ம சாஸ்திரங்கள், ஸ்மிருதிகள், வேதங்கள் முதலான எந்த புஸ்தகங்களிலும் இருப்பதாகத் தெரியவில்லை. நான்தான் முன்னமேயே அதிகமாய் படிக்கவில்லை என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் படித்தவர்கள் என்று சொல்லக்கூடிய அனேகரையும் கேட்டதில் ஒருவராவது இந்துமதம் என்ற பெயர் இன்ன ஆதாரத்தில் இருக்கிறது என்பதாக சொல்லவே இல்லை. இங்கும் யாராவது சொன்னாலும் சரி என்றே சொல்லுகிறேன்.
பொதுவாக இந்துமதம் என்றால் மக்கள் பிறவியில் உயர்வு, தாழ்வு என்பதை கற்பிப்பது. நெற்றியில் ஏதாவது குறி வைத்துக் கொள்வதும், பல சாமிகள் இருப்பதாக வணங்குவதும், “என் சாமி பெரியது”, “உன் சாமி சிறியது” என்று சண்டை போடுவதும், சாமிக்கு பெண்டு பிள்ளைகள் கூத்தியா முதலியவைகள் கற்பிப்பதும் ஆகியவைகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இவைகளைப் பற்றி ஆராய்வோமென்றால், இவைகள், “வேதத்தில் உள்ளது” என்றும், “வேதம்தான் இந்துமதம்” என்று சிலர் சொல்லி விடுகிறார்கள். சரி அந்த வேதத்தையாவது பார்க்கலாம் என்றால் “அதை நீ கண்ணால் பார்த்தால் கண்ணை குத்த வேண்டும்,” “காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றிவிட வேண்டும்” என்றும் சொல்லி விடுகிறார்கள்.
வேதத்தில் என்ன சொல்லியிருக்கிறது என்று தெரிந்து கொள்ளுவதற்கு கூட நமக்கு இடமில்லையானால் நாம் அதை எப்படி ஒப்புக் கொள்ள முடியும்? எவனாவது நம்மிடம் வந்து “உனக்கு கொஞ்சம் ரூபாய் தருகிறேன். பெற்றுக் கொண்டதற்காக இந்த கடிதத்தில் கையெழுத்துப் போடு” என்று சொன்னால் அக்கடிதத்தில் என்ன எழுதி இருக்கிறது என்று பார்த்துதானே கையொப்பம் இடுவோம். “அதை நீ பார்க்கக் கூடாது; நான் காட்டுகிற இடத்தில் கையெழுத்துப் போட வேண்டியதுதான் பணம் பெற்றுக் கொள்பவன் கடமை” என்று யாராவது சொன்னால் பேசாமல் கையொப்பம் போட்டு விடுவோமா? அதில் என்ன எழுதி இருக்கிறது, எத்தனை ரூபாய்க்கு எழுதி இருக்கிறது என்பவைகளை தெரிந்து கொள்ளாமல் கையெழுத்துப் போடுவது முட்டாள்தனம் என்று உணரமாட்டோமா? நம்மை பார்த்து “நீ இந்து மதஸ்த்தன். இந்து மதம் என்பது வேதத்தை ஒப்புக் கொள்வது. அதில் உள்ள சடங்குகளை நீ ஒப்புக் கொள்ள வேண்டும். ஒப்புக் கொள்வது என்பது பார்ப்பனனுக்கு பணம் கொடுப்பதும் அவர்கள் காலில் விழுவதும்தான். ஆதலால் எனக்கு பணம் கொடு. என் காலில் விழுந்து கும்பிடு. என் காலை கழுவின தண்ணீரை குடிப்பது உனக்கு மோக்ஷம் கிடைக்கச் செய்யும்” என்று ஒரு பார்ப்பனன் சொல்லுவானானால் நாம் சரி அப்படியே செய்யலாம் ஆnக்ஷபணை இல்லை. ஆனால் அந்த வேதத்தைக் கொஞ்சம் காட்டுங்களே. அதில் அப்படி எழுதி இருக்கிறதா என்பதை கொஞ்சம் கண்ணினால் பார்ப்போம் என்றால் “நீ அதைப் பார்க்கக் கூடாது. பார்த்தால் பாவம்” என்று சொல்லும் போது நாம் எப்படி அம்மதத்தை ஒப்புக் கொள்ள முடியும். முன் சொன்னது போல் படித்துப் பார்க்காமல் கையெழுத்துப் போடக் கூடிய அவ்வளவு மூடர்களாய் நாம் இருந்தால்தானே படித்துப் பார்க்காமல் இந்து மதத்தை ஒப்புக் கொள்ளுவதோ அல்லது அதில் இருக்கிறதாக சொல்லுகிறபடி நடப்பதோ முடியும்.
இந்த இந்து மதம் என்கிற ஒரு மதம் தவிர வேறு மதக்காரர்கள் எல்லோரும் தங்கள் தங்கள் மதங்களையும் கொள்கைகளையும் தங்கள் மதக்காரர்கள் எல்லோரையும் படிக்கச் செய்வதுடன் வேறு மதக்காரர்களும் படிக்கும்படியாக அந்தந்த பாஷைகளில் தங்கள் சொந்த சிலவில் அச்சிட்டு இலவசமாக வழங்குகிறார்கள். பெண்களுக்கும், பெண்கள் மூலமாக வீட்டுக்கு கொண்டு வந்து கொடுக்கிறார்கள். சம்பளம் கொடுத்து பாதிரி மாரையும் உபதேசியாரையும் நியமித்து பிரசாரமும் செய்விக்கிறார்கள். இவர்கள் பெரும் கூட்டங்கள் நடைபெறும் இடங்களுக்குச் சென்று சாணி உருண்டை அடியும் கல்லடியும் பட்டுக்கொண்டு எல்லா ஜனங்களுக்கும் போதிக்கிறார்கள். ஆனால் நம்முடைய மதம் என்கிற இந்து மத சம்பந்தமான வேதம் என்பதையோ பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கண்ணில் கூட பார்க்கக் கூடாது, காதால் கூட கேட்கக் கூடாது, நெஞ்சினால் கூட நினைக்கக் கூடாது என்கிறார்கள். மற்ற மதக்காரர்களுக்கு அதாவது கிறிஸ்தவர், மகமதியர்களுக்கு கடவுளை வழிபடவும் தொழவும் நாள்களும் காலமும் முறைகளும் குறிக்கப்பட்டிருக்கின்றன. ஞாயிறு, வெள்ளி ஆகிய கிழமைகள் முறையே அவர்களுக்கு முக்கிய நாளாகும். நமக்கோ ஒருவர் சனி, ஒருவர் ஞாயிறு, ஒருவர் திங்கள், ஒருவர் செவ்வாய் முதலிய ஏழு நாள்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் சண்டையிடுவதல்லாமல் குறிப்புமில்லை. சர்க்காரிலும் நமது நாள்களுக்கு மரியாதை கொடுப்பதுமில்லை. அவர்கள் ஒப்புக்கொள்வதுமில்லை.
நமது இந்து மதம் என்பதையாவது சர்க்காரார் ஒப்புக் கொண்டு இருக்கிறார்களா அல்லது ஒப்புக் கொள்ளும்படி செய்திருக்கிறோமா என்று பார்த்தால் அதுவும் இல்லை. எப்படி என்றால், அரசியலில் சீர்திருத்தம் என்பதின் பேரால் பல மதங்களுக்கும் தனி பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதாவது சட்டசபை ஸ்தானங்களுக்கு கிறிஸ்தவ மதத்தின் பேரால் கிறிஸ்தவர்களுக்கு கிறிஸ்தவ தொகுதி என்று சில ஸ்தானங்களும் மகமதிய மதத்தின் பேரால் மகமதியர்களுக்கு மகமதிய தொகுதி என்று பல ஸ்தானங்களும் ஒதுக்கி வைத்து கொடுக்கப்பட்டிருக்கின்றது. அப்படி இருக்க இந்து மதம் என்கிற ஒரு மதம் இருக்குமானால் அதற்கும் ஏதாவது சில ஸ்தானங்களை இந்து தொகுதி என்பதாக ஒதுக்கி இருப்பார்களா இல்லையா? அப்படி ஏதாவது ஒதுக்கப்பட்டிருக்கிறதா? என்பதை யோசித்து பாருங்கள். அல்லாமலும் இந்துக்கள் என்கிற நாம் சட்டசபைக்கு நிற்க வேண்டுமானால் எந்த பேரால் நிற்கிறோம் என்பதை சற்று கவனித்துப் பாருங்கள். மகமதியர் அல்லாதார் தொகுதி என்கிற பெயரால் தானே நிற்கிறோம். மகமதியர் அல்லாதார் என்றால் என்ன அர்த்தம் என்று உங்களுக்குத் தெரியுமா? மகமதிய மக்கள் கோட்பாடுப்படி ‘காபா’ என்றும் அல்லது ‘மதம் இல்லாதவன்’ என்றும்தான் பொருள்படும். நாம் மதமற்றவர்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?. இந்த பெயரை வேறு ஒருவரும் நமக்கு சூட்டவில்லை. நாமேதான் சூட்டிக்கொண்டு “மகமதியரல்லாதார் தொகுதிக்கு நான் நிற்கிறேன்” என்கிறோம். நமது சட்டசபை மெம்பர்கள் எல்லாம் மகமதியரல்லாதாரே தவிர இந்துக்கள் அல்ல.
இந்துமத பரிபாலன சட்டம் ஏற்படுத்தியதை பார்த்து சத்தம் போட்ட பெரிய பெரிய “இந்துமத வர்ணாசிரம தருமிகளும், இந்துமத தலைவர்களும், இந்து மதத்தைக் காப்பாற்ற பிரசாரம் செய்த பத்திராதிபர்களும்” இன்றைய தினம் இந்திய சட்டசபையில் மகமதியரல்லாதாராகத்தான் அங்கம் பெற்றிருக்கிறார்கள். காரணம் என்ன? மகமதியரல்லாதார் ஆக வேண்டுமென்றா? அல்லவே அல்ல. பின் என்னவென்றால் இந்துமதம் என்று ஒரு மதம் இருக்கிறதையும் அதன் கொள்கைகள் என்ன என்பதையும் ருஜுபிக்க முடியாததாலேயே அல்லாமல் வேறல்ல. இப்படிப்பட்டவர்கள் இந்துமத பரிபாலன சட்டத்தைப் பார்த்து “மதம் போச்சுது” “மதம் போச்சுது” என்று சத்தம் போட்டார்கள் என்றால் நமது பணத்தை தின்று கொழுப்பதால் அவர்களுக்கு ஏற்படும் மதம் போய்விடுமே என்கிற பயத்தினாலே தானேயல்லாமல் வேறல்ல. மற்றபடி அந்த சட்டத்தினால் இப்பொழுது இருப்பதாய் பாசாங்கு பண்ணும் மதத்திற்கு என்ன குறைவு எந்த பிரிவினால் ஏற்பட்டு விட்டது?
தவிரவும் மதத்தில் “சர்க்கார் புகுந்து விட்டார்கள். சர்க்கார் புக நம்ம மந்திரிகள் இடம் கொடுத்துவிட்டார்கள்” என்று சத்தம் போட்டார்களே. சர்க்கார் எதில் புகுந்து விட்டார்கள்? எப்பொழுது புகுந்து விட்டார்கள்? இதற்கு முன்பு புகவில்லையா? என்பதற்கு இவர்கள் பதில் சொல்ல முடியுமா? இந்துமத சாமியின் நெற்றியில் வைக்கும் நாமம் (குறி) வடகலையா, தென்கலையா என்பதை கண்டுபிடிக்க நமது மத ஆதாரங்களான வேத சாஸ்திர நூல்களில் நமக்கு முடிவதில்லை. வெள்ளைக்கார ஜட்ஜ் சொன்னால் தான் நாமும் ஒப்புக் கொள்கிறோம். நமது கோவிலில் தேவார பாராயணம் செய்யலாமா வேண்டாமா? என்பதற்கு வெள்ளைக்கார கோர்ட்டில் தான் முடிவு பெற வேண்டி இருக்கிறது. இப்படி இருக்கும் போது நமது மதத்திற்கு ஏதாவது பொது கொள்கை உண்டா? சுயமரியாதை உண்டா? ஆகவே நமது மத அஸ்திவாரமே, அதன் தத்துவமே நமக்கு இன்னது என்று சொல்ல முடியாமலிருக்கும்போது அதிலிருந்து ஏற்பட்ட ஆபாச கட்டுப்பாடுகளைப் பற்றியும் அர்த்தமற்ற சடங்குகளைப் பற்றியும் கவலை செலுத்துவது எவ்வளவு முட்டாள்தனமான காரியம் என்பதை நீங்களே சிந்தித்துப் பாருங்கள். மதச் சடங்குகளின் யோக்கியதையே இப்படி இருக்கும் போது சடங்குகளை பார்ப்பனரைக் கொண்டு செய்வதா? பார்ப்பனரல்லாதாரைக் கொண்டு செய்வதா? என்கிற கேள்விக்கு ஏதாவது அர்த்தமிருக்கிறதா? ஒருவனை “பந்தியிலேயே உட்கார வேண்டாமென்றால் இலை கிழிந்திருக்கிறது என்று சொல்லுவதில் பிரயோஜனமென்ன” என்கிற பழமொழி போல் இருக்கிறது யாரைக்கொண்டு புரோகிதம் செய்விக்கிறது என்கிற விஷயம்.
மதச் சடங்கு
இம்மாதிரி முழுதும் மோசமான மதத்தின் பேரால் நமக்கு ஏற்பட்டிருக்கும் சடங்குகளும் அதனால் நமக்கு ஏற்படும் வரி (செலவு)களும் அதனால் நமது சுயமரியாதை எவ்வளவு தூரம் பாதிக்கப்படுகிறது என்பதும் சற்று யோசித்துப் பாருங்கள். நாம் ஒரு இந்து என்று சொல்லிக் கொள்வதனால் பார்ப்பனர்களுக்கு எவ்வளவு வரி கொடுக்க வேண்டியிருக்கிறது என்பதை சற்று கவனியுங்கள். சர்க்கார் நம்மிடம் வாங்கும் வரியைப் பற்றி நமது அரசியல் பிழைப்புக்காரரான இதே பார்ப்பனர்கள் அதுவும் அந்த வரி பணங்களை எல்லாம் இவர்களே அனுபவித்துக் கொண்டு எவ்வளவு சத்தம் போடுகிறார்கள். சர்க்காராராவது வாங்கும் வரிக்கு ஒரு திட்டம் கணக்கு வரவு செலவு முதலியவைகளை காட்டுகிறார்கள். வீடு, பூமி, கடை, தொழில், வியாபாரம், விவகாரம் முதலியவைகள் உள்ளவர்களிடம்தான் வரி வசூலிக்கிறார்கள். அதை சரியாகவோ, தப்பாகவோ எல்லோருக்கும் உபயோகப்படுத்துவதாக சொல்லுகிறார்கள். மதத்தின் பேரால் இப்பார்ப்பனர்கள் நம்மிடமிருந்து வாங்கும் வரிப்பணத்துக்கு ஏதாவது ஒழுங்குண்டா? முறையுண்டா? வரவு செலவு கணக்கு சொல்லுவதுண்டா? ஒன்றுமில்லாமல் ஒவ்வொரு மனிதனையும் விடாமல் அதுவும் அவன் கர்ப்பத்தில் தரிக்கும் முன்பே கர்ப்பதான முகூர்த்தம் என்பதாகவும், கர்ப்பம் தரித்தால் சீமந்த முகூர்த்தம் என்பதாகவும் பிறந்துவிட்டால் ஜாதகரணம், நாமகரணம், தொட்டிலில் போடுதல், பாலூட்டுதல், ஆயிசு ஓமம், முடி வாங்குதல், காது குத்துதல், பள்ளியில் வைத்தல், காயலா முதலியதுகளுக்கு சாந்தி பிறகு அவனுக்கு கல்யாணம் என்றால் பெண் பார்த்தல், ஜாதகம் பார்த்தல், பொருத்தம் பார்த்தல், நாள் பார்த்தல், விவாகம் ஆன பின் சடங்கு, அவன் பிள்ளைக்குட்டி பெற்றால் அதற்கும் அவன் காயலாவுக்கு கிரக தோஷம், சாந்தி, கோவில், குளம், யாத்திரை ஆகியதுகள், இவ்வளவும் தவிர கடைசி காலத்தில் சாவதாயிருந்தால் சாக அதாவது உயிர்விட பத்து நிமிஷமிருக்கும்போதே சுங்கக்காரனுக்கு சுங்கம் கொடுத்துவிட்டுதான் ஒரு ஊருக்குள் நுழைய வேண்டும் என்பது போல பார்ப்பானுக்கு மாடு வாங்கி கொடுத்தால்தான் (கோ தானம்) இந்த ஜீவன் அந்த மாட்டின் வாலைப் பிடித்துக் கொண்டு மோட்சத்திற்குப் போக முடியும். இல்லாவிட்டால் மேலோகத்திலுள்ள நெருப்பாறு மயிர்ப் பாலம் தாண்ட முடியாது என்று சொல்லி மாடு கொடுக்க வேண்டி இருக்கிறது.
மாடு கொடுத்து செத்து விட்டாலாவது விடுகிறானா? அப்போதும் வீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு இழவுக்கு வந்தவர்களைக் கூட விசாரிக்க நேரமில்லாமல் உபத்திரவித்து வரிசையாக முழுவதும் பிச்சி புடுங்கி தின்கிறார்கள். இவ்வளவுடன் தீர்ந்து விடுகிறதா? இல்லவே இல்லை. ஒரு வருஷம் ஆனதும் “உன் தகப்பனார் இன்ன வருடம், இன்ன மாதம், இன்ன தினம், இன்ன திதியில் செத்துப்போனார். வை பணம், அரிசி, பருப்பு, உப்பு, புளி வகையறா சாமான்கள்” என்று கேட்பதோடு சாப்பிட்டு அஜீரணம் ஏற்பட்டால் அதற்கும் இஞ்சியும், சுக்கும் வை என்றும் கேட்டு வாங்கி இவ்வளவும் கொடுத்தும் “நீயும் உன் பெண்ஜாதியும் என் காலில் விழுந்து கும்பிட்டு கால் கழுவின தண்ணீரைக் குடியுங்கள்” என்றும் சொல்லி மூட்டைக் கட்டிக்கொண்டு போய் விடுகிறான். அம்மூட்டைகள் அநேகமாக தாசிகள் வீட்டிற்கே போய்ச் சேருகிறது.
மடாதிபதிகள்
மதச் சடங்குகள் யோக்கியதைதான் இப்படி இருக்கிறதென்றால் மதாச்சாரியார்கள் யோக்கியதையை கொஞ்சம் பாருங்கள். மதத்தை காப்பதற்காக என்றோ மதப் பிரசாரம் செய்வதற்காக என்றோ அல்லது சமயத்தை பரப்ப என்றோ நமது முன்னோர்கள் விட்ட சொத்துக்கள் இன்றைய தினமும் 100, 200, 500, 1000க்கணக்கான வேலி பூமிகளும் 10000, 20000, 50000க்கணக்கான விராகன் பொன்களும், ராஜ்யம், ஜமீன், மிட்டா என்ற ஆட்சிகளும் தானமாகவும் மானியமாகவும் விட்டிருக்கிறார்கள். இவற்றை நிர்வகிக்கும் மடாதிபதிகளின் யோக்கியதை எப்படி இருக்கிறது? அவர்களின் ஒழுக்க வழக்கங்கள் எப்படி இருக்கிறது? இவ்வளவு சொத்துக்களின் வரும்படிகள் மதத்திற்கோ சமயத்திற்கோ என்ன பிரயோஜனப்படுகிறது?
மத ஆச்சாரியர்கள்
இது போலவே ஆச்சாரியர்களும், லோக குருக்களும் என்ன செய்கிறார்கள் என்று பாருங்கள். யானை, குதிரை, வண்டி, மாடு, தங்கம், வெள்ளி, தந்தம் ஆகிய பல்லாக்குகள் முதலிய 500 உருப்படிகளுடன் ஊர் ஊராய் திரிவதும் அங்குள்ள பார்ப்பன அதிகாரிகள் செல்வாக்கால் மக்களை மிரட்டியும், ஏமாற்றியும் 100, 200, 1000, 2000, 5000 என்பதாகத் தெண்டத் தீர்வை போல் வசூலிப்பதும் பொங்கிப் பொங்கி தங்கள் இனத்தாரிலேயே பொறுக்கி, சோம்பேறிகளுக்கும், தடியர்களுக்கும் படைப்பதும் மீதியை மூட்டைக் கட்டிக் கொண்டு பகல் கொள்ளைக்காரன் போல் மற்றொரு ஊருக்கு போய் டேரா அடிப்பதுந் தவிர என்ன மத உபதேசமோ ஆத்மார்த்த உபதேசமோ செய்கிறார்கள்? ஆச்சாரியர்கள் நம்மிடம் பேசினாலே பாவம். சூத்திர சம்பாஷணை என்று அதற்காக பிராயச்சித்தம் செய்து கொள்ளுவதுதான் நம்மை அவர்கள் உபதேசம் செய்வதும் மரியாதை செய்வதுமான விதமாயிருக்கிறது.
கடவுள்
மத ஆச்சாரியார்கள் யோக்கியதைத்தான் இப்படி என்றால் இம்மதத்தில் ஏற்பட்ட கடவுள்களின் யோக்கியதைகளோ சொல்லவே வெட்கக் கேடாய் இருக்கிறது.
ஆளுக்கு ஒரு கடவுளும் “என் கடவுள் பெரிது; உன் கடவுள் சிறிது” என்கிற சண்டையும், ஊருக்கு ஒருவிதமான கடவுளும், ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொருவிதமான கடவுளும், தத்துவமும் அதாவது ஒருவன் கடவுள் கிட்டப் போனால் சாமி செத்துப் போவதும், ஒருவன் கடவுள் இருக்கும் கோவி லுக்குள் போனால் சாமி செத்துப்போவதும், ஒருவன் கோவில் மதிலுக்குப் பக்கத்தில் போனால் சாமி செத்துப்போவதும், ஒருவன் சாமியைப் பார்த்து விட்டால் சாமி செத்துப்போவதும், இப்படி செத்துப்போன சாமிகளுக்கு பார்ப்பானுக்கு பணம் கொடுத்தால் உயிர் வந்துவிடுவதும், ஜகநாதத்திலும், பண்டரிபுரத்திலும், காசியிலுமிருக்கும் சாமி யார் தொட்டாலும், யார் தொட்டு கும்பிட்டாலும் சாகாமலிருப்பதும் நம்ம நாட்டிலுள்ள சாமி நாம் கட்டினதா யிருந்தாலும் நாம் சிலவு கொடுத்து பூஜை செய்விப்பதாயிருந்தாலும் நாம் கிட்டத்தில் போன உடனே செத்துப் போவதும், ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சி, சிதம்பரம் முதலிய ஊர் சாமிகள் நாடார் கனவான்கள் கோயிலுக்குள் போய் நம்மைப்போல் கும்பிட்டால் சாகாமலிருப்பதும், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி முதலிய ஜில்லா சாமிகள் நாடார்கள் கோயிலுக்குள் வந்து கும்பிட்டால் செத்துப் போவதும், நாடார்கள் வீட்டிற்கு சாமி போய் வந்தால் சாகாமலிருப்பதுமாக எத்தனையோ வித்தியாசமான சாமிகளும் எவ்வளவோ பலக் குறைவான சாமிகளும் நமது மதத்தில் கும்பிடப்படுகிறது.
மோக்ஷம்
சாமியின் யோக்கியதைத்தான் இப்படி என்றால் மோக்ஷம், புண்ணியம் என்பதோ இதைவிட ஆபாசமானதென்றே சொல்ல வேண்டி இருக்கிறது. அதாவது மனிதனுடைய யோக்கியமான எண்ணத்தினாலும் வார்த்தையினா லும் நடவடிக்கையினாலும் இல்லாமல் பார்ப்பானுக்கு கொடுப்பதினாலேயே புண்ணியமும் மோக்ஷமும் ஏற்பட்டு விடுகிறது. எவ்வளவு அயோக்கியத் தனமும் கொலை பாதகமும் கொடுமையும் நம்பிக்கை துரோகமும் செய்து விட்டாலும் பார்ப்பானுக்கு பணம் கொடுத்தால் எல்லாப் பாவமும் ஓடிப்போய் மோக்ஷம் கிடைத்து விடுகிறதாம். பார்ப்பானுக்கு கொடுப்பதாலேயே நமது இஷ்டம் சித்தியாவதும் நமது பிள்ளை குட்டிகள் சந்ததி விளங்குவதும் ஆகக்கூடியதாயிருக்கிறது. நமது நாட்டுப் பழய காலத்து அரசர்கள் இந்த பார்ப்பனர்களுக்கு அழுதது கொஞ்ச நஞ்சமல்ல. எத்தனை மானியம்? எத்தனை அக்கிரமம்? எத்தனை அன்ன சத்திரம்? எத்தனை கன்னிகாதானம்? முதலிய 32 தர்மங்கள் செய்திருக்கிறார்கள். இப்போது அந்த அரசாங்க மெல்லாம் எங்கே? கடைசியான தஞ்சாவூர் அரசாங்கம் பார்ப்பனருக்கு கொடுத்து அழுததுபோல ஒரு அரசாங்கமும் கொடுத்ததை நாம் பார்த்த தில்லை. இப்பொழுதும் அதை அநுபவிக்கிற பார்ப்பனர்கள் கணக்கு வழக் கில்லை. அப்பேர்பட்ட தஞ்சை அரசாங்கம் இன்றைய தினம் பேர் சொல்லக் கூட சந்ததி இல்லாமலும் ராஜா க்ஷத்திரியன் அல்ல, சூத்திரன் என்று அவரிடம் வாங்கித் தின்கிறவர்கள் சாக்ஷி சொல்லவுமாய் இருக்கிறார்கள்.
பார்ப்பனருக்கு கொடுப்பவர்களின் குடும்பம் நாசமாய் போய் விட்டது, விடுகிறது, விடும் என்பதற்கு இதை விட வேறு உதாரணம் வேண்டியதில்லை. ஆகவே வேதம், சடங்கு, ஆச்சாரியர்கள், சாமி, மோக்ஷம், புண்ணியம் என்கிற விஷயங்களில் நமது மதம் என்பதின் யோக்கியதை எப்படி இருக்கிறது என்பதையும் இதை பிரதானமான நினைத்துக் கொண்டு நமது ஜனங்கள் ஏழைகள் முதல் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை எப்படி நாசம் செய்து நம்மை போன்ற மனிதனுக்கு நம்மிலும் ஒழுக்கத்திலும் யோக்கியதையிலும் இழிந்தவனுக்கு முட்டாள்தனமாய் கொடுத்து சுயமரியாதையில்லாமல் அவன் காலில் விழுந்து கால் கழுவின தண்ணீரைக் குடிக்கிறோம் என்பதையும் நீங்களே நன்றாய் யோசித்துப் பாருங்கள். நான் பேசுவதைப் பார்த்து கைத்தட்டினீர்கள், சிரித்தீர்கள், ஆச்சரியப்பட்டீர்கள், இப்பொழுது தான் இந்த விஷயங்களைக் கேட்டு உங்கள் பைத்தியக் காரத்தனத்திற்கு விசனப் படுகிறவர்கள் போல் ஜாடை காட்டினீர்கள். இதில் என்ன பிரயோசனம். நீங்கள் எழுந்து வீட்டுக்குப் போகும் போது நாடகம் பார்த்தவர்கள் போல் நன்றாய் பேசினார் நன்றாய் பேசவில்லை என்பதாக எனக்கு நற்சாக்ஷி பத்திரம் கொடுப்பதில் உங்கள் புத்தியை சிலவிடாமல் நான் பேசியவைகளில் எது சரி எது தப்பு என்பதாக நன்றாய்த் திருப்பி திருப்பி யோசித்துப் பார்த்து உங்கள் மனதுக்கு சரியென்று பட்டதை உடனே அமுலுக்கு கொண்டு வருவதனால்தான் நீங்கள் இது கேட்டதற்கு யோக்கியமாய் நடந்து கொண்டவர்களாவீர்கள்.
நமக்கு யாரிடமும் சண்டை இல்லை, துவேஷமில்லை. நமது சுயமரியாதையைக் காப்பாற்ற நாம் நமது மூடநம்பிக்கைகளுடன் போர் செய்து ஜெயம் பெற்று சுயமரியாதை அடையவேண்டும் என்றுதான் சொல்லுகிறோம். இப்பொழுது எல்லாம் சரி என்று ஒப்புக்கொண்டு வீட்டிற்கு போய் படுத்து தூங்கி எழுந்தவுடன் “அய்யரை கூட்டிக்கொண்டு வா, தர்ப்பணம் பண்ண வேண்டும்” என்று சொல்லுவதும் பக்கத்தில் யாராவது இருந்து “என்னையா நேற்று எவ்வளவோ கேட்டுவிட்டு இன்றைக்கு மறுபடியும் அந்த முட்டாள்தனத்திலேயே முழுகியிருக்கிறீர்களே” என்று கேட்டால் “என்னால் ஒன்றுமில்லை, வீட்டில் பெண்டுகள் உபத்திரவம். அதனால் இப்படி செய்ய வேண்டி இருக்கிறது” என்று சொல்லி நமது சகோதரிகள் மீது பழியைப் போட்டு அவர்களை முட்டாள்களாக்கு வதுமாயில்லாமல் உறுதியுடன் நின்று உங்கள் பெண்டுகளுக்கும் சமாதானம் சொல்லி உங்கள் மனத்திற்கு சரியென்று பட்டதை தைரியமாய் செய்யுங்கள். மற்ற வழிகளில் உங்கள் பெண்டுகளுக்கு விரோதமாய் எத்தனை காரியங்கள் செய்கிறீர்கள் என்பதையும் ஞாபகப் படுத்திப் பாருங்கள். எனக்கு ரயிலுக்குப் போக நேரமாகி விட்டதால் மற்றொரு சமயம் மீதி விஷயங்களைப் பற்றி பேச இருக்கிறேன்.
(குறிப்பு: சென்னை சௌந்திரிய மஹாலில் ஸ்ரீமான் சிங்காரவேலு செட்டியார் தலைமையில் பேசியது.
குடி அரசு - சொற்பொழிவு - 03. 04. 1927)