நூலிஸ்டுகள் தமது பிழைப்பில் பௌத்தர்களால் மண் விழுமோ என்ற பயத்தில் என்னவெல்லாம் செய்ய வேண்டியிருந்தது? காவி நிறம், தாமரை, புலால் மறுத்தல் என அவர்களுக்குரிய அனைத்தையும் தமக்குரியனவாகக் காட்டி தம்மை மேன்மையானவர்களாக நிறுவ வேண்டிய கட்டாயம். பாவம்! வால்மீகி ராமாயணத்தின் ஆரண்ய காண்டத்தில் ராமன் சீதைக்கு நெய்யில் வாட்டிய மாட்டு இறைச்சியை ஊட்டி விடுவதாக வரும் காட்சியையெல்லாம் எங்ஙனம் இருட்டடிப்பு செய்வது?

varahaஏறி வரும் போது உடன் கொண்டு வந்த கடவுள்கள் சார்ந்த புராணக் கதைகளில் ஒன்றாவது சகிக்கும்படி இருக்கிறதா? எல்லாவற்றிலும் ஒரு வக்கிரம்(perversion) பொதிந்திருக்கிறது. பிரம்மன்-சரஸ்வதியின் கதை, மஹாபாரதத்தில் பாண்டவர்கள், கௌரவர்கள் பிறந்த கதை, ராமன் பிறந்த கதை என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஓர் அசுரனைக் கொல்ல வராக அவதாரம் எடுக்க வேண்டியது; (இந்த இடத்தில் ‘பூமியை எப்படி பாயாக சுருட்ட முடியும்? அதை எப்படி பூமியில் உள்ள கடலுக்கு அடியில் ஒளித்து வைக்க இயலும்? எங்கு நின்று பூமியைச் சுருட்டினான்?’ என அஷட்டுத்தனமாகக்(!) கேள்விகள் கேட்கப்பிடாதாம்!) வராக அவதாரத்தில் பூமாதேவியுடன் பெற்றுக் கொண்ட அசுரனை வதம் செய்ய கிருஷ்ணனாக அடுத்த அவதாரம்… வேற பொழப்பே கிடையாது போல! கங்கையில் மூழ்கி எழுந்து எளிதில் சாபவிமோசனம் பெற்றுக்கொள்வானாம் இந்திரன்; அகலிகைக்கு மட்டும், உத்த்த்தமனும் யோக்க்க்கியசீலனும் ஆன ராமன் வரும் வரை கல்லாகச் சமைந்திருக்கும் சாபம். சம்புகன் வதம், சீதையின் அக்கினிப் பிரவேசம் என அறிந்த பின்னரும் இவரை எல்லாம் எப்படி கடவுளாக வழிபடத் தோன்றுகிறது?

இந்த இடத்தில் கம்பன் மீது கோபம் வருகிறது. வால்மீகி ராமனை அவதார புருஷனாகவோ கதாநாயகனாகவோ சித்தரிக்கவில்லை. அது உண்மைக் கதை என்னும் பட்சத்தில் வால்மீகி உள்ளதை உள்ளவாறே கூறி நின்றார். கம்பன்தான் ராமனை அளவிற்கு அதிகமாகப் புகழ்ந்து தள்ளி ராம வழிபாட்டிற்கு வித்திட்டார். சர்ச்சைக்குரிய நிறைய இடங்கள் கம்பனால் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. கம்பராமாயணம் தமிழுக்கு ஒரு மாபெரும் அணிகலன் எனினும் அது ரீமேக் காவியம் ஆதலால் உலக அரங்கில் நம்மால் அதைப் பெருமையாகக் காட்டக் கூட இயலாமல் போய்விட்டது. சொந்தமாக ஒரு கதையை அல்லது நம் மண்ணுக்குரிய கதையைப் பாடல்களாகச் சமைத்திருக்கலாம். இவ்வளவு புலமை பெற்ற புலவன் தமிழுக்கு செய்த அநியாயமாகவே இதைப் பார்க்கிறேன்.

மதமும் அரசியலும் என்ன செய்து விடும்? ஓர் எடுத்துக்காட்டு…

இந்தியாவின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமான கதை வடிவம் பெற்று கிட்டதட்ட 300 வகையான ராமாயணம் இருக்கின்றன. உதாரணமாக இமாச்சல பிரேசத்தில் சொல்லப்படும் ராமாயணத்தில் சீதை ராவணனின் மகள். எல்லாவற்றிற்கும் உச்சமாக ராமாயணத்தில் வரும் லங்கா ‘சிறீ லங்கா’ என்று விட்டாங்க பாருங்க ஒரு ரீலு. கம்ப ராமாயணத்திற்குப் பிறகு தான் இத்தவறு நிகழ்ந்திருக்க வேண்டும். ‘லங்கா’ என்றாலே தீவு என்றுதான் பொருள். திருவாளர் தீவிற்கு(!) ‘சிறீ லங்கா’ என்ற பெயரே 1972ல் தான் சூட்டப்பட்டது. வரலாற்று ஆய்வாளர்களும் அகழ்வாராய்ச்சியாளர்களும் ராவணனின் லங்கா மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரின் அருகில் இருக்கும் லங்காவாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் நிறைந்திருப்பதாகக் கருதுகின்றனர். வட இந்தியாவில் ஆங்காங்கு காணப்படும் ராவண வழிபாடு இதை மேலும் உறுதிப்படுத்துகின்றது. சுக்ரீவன் கூறும் புவியியல் குறிப்புகளில் விந்திய மலைத் தொடர் வருகிறது. நர்மதை மேற்கு நோக்கியும் மகாநதி மற்றும் கோதாவரி கிழக்கு நோக்கியும் பாய்வதாக உள்ளது குறிப்பு. எனில் லங்கா வட இந்தியாவில்தான் இருக்க வேண்டும் என நிறுவுகின்றனர். ராமனுக்கும் ராவணனுக்கும் நடந்த போரில் சுக்ரீவனும் ஜாம்பவானும் சால் மரங்களை வேரோடு அகழ்ந்தெடுத்து ராவணனின் படைகளுக்கு எதிரான ஆயுதங்களாகப் பயன்டுத்தியிருக்கிறார்கள். சால் மரங்கள் சிறீ லங்காவில் கிடையாது. இந்தியாவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில்தான் மிகுந்திருக்கும்.

சூர்ப்பனகை சிறீ லங்காவில் இருந்து பொடி நடையாக அலைந்து திரிந்து ராமனைக் கண்டடைந்து பின் மீண்டும் சிறீ லங்கா நடந்தே சென்றாளா? ராமன் எப்படி தண்டகாரண்யத்தில் இருந்து அவ்வளவு தூரம் நடந்து வந்து, ராமேசுவரத்தில் பூஜை செய்து, உலகின் தலைசிறந்த கட்டுமானப் பொறியாளராகி கடலில் ‘பாலம்’ கட்டி…. ஸ்ஸ்ஸ்ஸப்பா…! எரிமலையின் பிழம்புகள் நாளடைவில் வாயுத் துளைகள் நிறைந்த கற்களாகி(பியூமிஸ் கற்கள்) நீரில் மிதக்கும் தன்மையோடு இருக்கும். அவ்வாறு எப்போதோ இயற்கையாக உருவான பாம்பன் பாலத்தை ராமரின் பெயர் எழுதி சூமந்திரக்காளி போட்ட கற்கள் என உளறிக் கொட்டினாலும் நம்பத் தயாராக ஒரு கூட்டம் இருக்கும் வரை…. ஹூம்! யாரும் அவாளை அசைச்சுக்க முடியாது. வட இந்தியாவில் இருந்த ராவணனின் மாளிகை என ஊகிக்கப்படும் இடம் மழைக்காலத்தில் ஏரி போலக் காட்சி அளிக்குமாம். படகு செலுத்த இயலாத அளவிற்கு ஆழமற்றதாகவும் நடந்து செல்ல இயலாத அளவிற்கு சேறும் சகதியும் நிறைந்து இருந்ததால் கற்கள் கொண்டு அங்கு பாலம் அமைத்திருக்கலாம் என்றும் கருதுகிறார்கள். சஞ்சீவி மலையைத் தூக்கிப் பறந்து சென்ற அனுமனால் அம்மலையில் ராமன், இலட்சுமணன், வானரப் படை என எல்லோரையும் அமர்த்தி அனைவரையும் சிறீ லங்காவில் கொண்டு போய்ச் சேர்க்க இயலாதா?

அனுமன், சுக்ரீவன், அவர்களது படைகள் குரங்காகவும் ஜாம்பவான் மற்றும் அவனது சேனையைக் கரடியாகவும் சித்தரித்திருக்கிறார்கள். ஆனால் இரு கூட்டமும் மனித இயல்புகள் பெற்று மனிதர்களைப் போலவே பேசுகின்றனர். அவர்கள் அனைவரும் மனிதர்களாகவும் குரங்கும் கரடியும் அவரவர் குலச் சின்னமாக இருந்திருக்கலாம். இருவரும் பூர்வ குடிகளாக ஆரியரின் கலாச்சாரத்திலிருந்து வேறுபட்டு இருந்ததால் அவர்கள் வேண்டுமென்றே அவ்வாறு சித்தரித்திருக்கப்பட்டிருக்கலாம். இவ்வாறான ஒரு வாதமும் ஆராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்படுகிறது.

ஆராய்ச்சியாளார்களின் இக்கண்டுபிடிப்புகளைப் பெரிய அளவில் வெளியே கொண்டு வர விடாமல் இருப்பதன் பின்னணியில் மதமும் அரசியலும் போட்டி போடும் உன்னத பணியை மேற்கொள்கின்றன.

கட்டுக் கதைகளைக் கேட்கும் போது இத்தினியூண்டு பகுத்தறிவைப் பயன்படுத்தினாலே ஆயிரமாயிரம் கேள்விகள் மனதில் எழும்.

உதாரணமாக சில…

  • ‘கடவுள் எந்த ஒரு காரணமும் இன்றி எதையும் படைக்க மாட்டார்’ – எனில், ஆதாமுக்கும் ஏவாளுக்கும் ஏன் எப்படி தொப்புள் வந்தது? தம்மைப் போன்று படைத்தார் எனில் கடவுளுக்கும் தொப்புள் இருக்கிறது; அப்படியென்றால் அவர் தான்தோன்றி இல்லை தானே? கொஞ்சம் கொழப்புதுல்ல!
  • ‘நாம் அனைவரும் ஆதாம் ஏவாளின் வழித்தோன்றல்கள்’ – எனில் ஆதாம் ஏவாளின் பிள்ளைகள் யாரை மணம் செய்தார்கள்? அண்ணன் தங்கைகளுக்குள் கல்யாணம் செய்து கொண்டார்களா?
  • ‘ஊழிக் காலத்தின் போது ஆண்டவரின் கட்டளைப்படி நோவா தாம் செய்த மிகப் பெரிய கப்பலில் எல்லா உயிரினங்களிலும் ஆண் ஒன்றும் பெண் ஒன்றுமாக அழைத்துச் சென்றார்’ – அப்போ அந்த கரையான் ஜோடி கப்பலை அரித்து ஓட்டை போட்டிருக்குமே? சிறிய மீன்கள், பெரிய பெரிய திமிங்கலங்கள் எல்லாம் உள்ளே எப்படி அடைபட்டன? அவைகளுக்கென்று தனிப்பேழையினுள் நீர் நிரப்பப்பட்டு அவற்றை அதில் இட்டிருந்தாரா நோவா? ஊன் தின்னிகள் கப்பலினுள் இருந்த தாவரத் தின்னிகளை ஒன்றும் செய்யவில்லையா? எல்லா உயிரினங்களுக்கும் நாற்பது நாட்களுக்குத் தேவையான உணவு தண்ணீர் எப்படி சேகரிக்கப்பட்டது?
  • நோவாவின் நாவாய் அளவீடுகள் பைபிளில் இருந்து : 81 அடி உயரம், 85 அடி அகலம், 510 அடி நீளம். டைட்டானிக் கப்பலின் அளவீடுகள் : 175 அடி உயரம்; 92 அடி அகலம்; 882 அடி நீளம். ஆனால் நோவாவின் கட்டுமானம் அத்தனை உயிரினங்களையும் அவ்வளவு உணவுப் பொருட்களையும் உள்ளடக்கினவாம்! சரி விடுங்க! எவ்வளவோ நம்பிட்டோம்… இத நம்ப மாட்டோமா?
  • ‘ஏவாள்தான் ஆப்பிளைச் சுவைத்துப் பார்க்கத் தூண்டியவள். அதாவது கடவுளைக் கீழ்ப்படிய (ஸ்ஸ்ஸ்ஸப்பா.. இந்த வார்த்தை புளிச்சுப் போற வரை கேட்டுருக்கேன் பள்ளிக்கூடத்தில்!) மறுத்தவள்’ – குருட்டு அதிகாரத்திற்கு அடிபணிய மறுத்த உலகின் முதல் உயிர் ஒரு பெண். தோழர் ஏவாளை நாம் நியாயப்படி கொண்டாட வேண்டும்.
  • சாத்தான் கெட்டவர்களை நரகத்தில் போட்டு எண்ணெய்யில் பொரிக்கிறான். கடவுள் உண்டியலில் லஞ்சம் வாங்கிக் கொண்டு மன்னிப்பு வழங்குகிறார். இதில் பிரத்யேகமாக பாவ மன்னிப்பு வேறு. எனில் சாத்தான்தானே நியாயமானவன். அவன் அல்லவோ நாம் பின்பற்றும் வழிகாட்டியாக இருக்க வேண்டும்!

சிறு வயதில் சிண்டரெல்லா, ராப்பன்ஸில், ஸ்னோ வொயிட் போன்ற புனைவுக் கதைகளைக் கேட்டு ரசித்த வரை சரி. வளர்ந்த பிறகும் இக்கதைகளை உண்மை என நம்பிக் கொண்டிருந்தால் எவ்வளவு அபத்தமாக இருக்கும். மதங்கள் கூறும் (கட்டுக்) கதைகள் மட்டும் இப்புனைவுகளிலிருந்து எங்ஙனம் வேறுபடுகிறது? இலக்கியச் சுவை கூட்ட உயர்வு நவிற்சி, இல்பொருள் உவமை ஏந்திய புனைவுப் பாத்திரங்களை வைத்துக் கொண்டு இவ்வளவு விமர்சிக்க வேண்டுமா என்று தோன்றலாம். இவற்றை புனைவுகளாக விட்டுவிடாமல் உண்மைகளாகப் புனிதம் ஏற்றி இழுத்து வருவதால்தானே காலங்காலமாய் மீண்டும் மீண்டும் விமர்சிக்கும் தேவை எழுகிறது!

‘புனித நூல்’களின் வாசங்களைப் பார்க்கும் போதுதான் மத குருக்களின் பணி எவ்வளவு கடினமானது என்று புரிந்தது. ஒவ்வொரு பிரார்த்தனைக் கூட்டத்திற்கும் நற்கருத்துக்களைத் தமது ‘புனித’ நூல்களில் இருந்து சல்லடை போட்டுத் தேடி எடுக்க எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கும்? ப்ச்… பாவம்! இதெல்லாம் புரியாமல் இவ்வளவு நாள் மத போதகர்களை எப்படியெல்லாம் பழித்துரைத்திருக்கிறேன்? பொய், புரட்டு, ஏமாற்றுதல், கெடுதல் புத்தி ஆகிய ஆயுதங்கள் இல்லையெனில் தமது இருப்பே கேள்விக்குள்ளாகி விடும் அபாயத்தை உணர்ந்து வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டும் (இதை மூத்தகுடி தமிழின் பெருமையைக் காண்பதால் எழுந்த ‘வயிற்றெரிச்சல்’ என்றும் கூறலாம்) உடலில் கங்கணம் (காவலுக்காகக் கட்டப்படும் நூலின் ஆகுபெயர்! எப்படித்தான் எனக்குன்னு பொருத்தமா வார்த்தைகள் வந்து விழுகின்றனவோ?) கட்டிக் கொண்டும் இயங்கும் நா(ம)தாரிகளை எப்படித்தான் மனதார வெறுக்க முடிகிறதோ?

அது எப்படி அன்பை அடிப்படையாகக் கொண்டிருப்பதாகக் கூறும் மதங்கள் சிறார்களின் கைகளில் கூட துப்பாக்கிகளையும் அரிவாளையும் கொடுக்கின்றன? இந்த கண்மூடித்தனமான நம்பிக்கை என்ற பெயர் கொண்ட வெறிதானே சார்லி ஹெப்டோ போன்ற சம்பவங்களுக்குக் காரணியாகிறது?

நில நடுக்கம், சுனாமி, புயல், (புனிதப்) போர்கள், வன்முறை, துள்ளிக் குதிக்க வேண்டிய வயதில் தீரா நோயுடன் போராடும் குழந்தைகள், பஞ்சம், வறுமை, பசி, ஓர் உயிரைத் துடிதுடிக்கக் கொன்று பசியைப் போக்கிக் கொள்ளும் இன்னொரு உயிர்….. – அன்பின் வடிவமும் கருணையின் உருவமுமாக சர்வ வல்லமையும் பெற்று திகழும் கடவுளுக்கும் இப்பட்டியலுக்கும் சற்றும் சம்பந்தமில்லை. அப்படித்தானே? ‘விதி’ என்று பதில் கூறுவீர்களானால் அதை மாற்ற இயலாத கடவுள்தான் என்னத்துக்கு? இவற்றையெல்லாம் தடுக்க வக்கற்றவனுக்குத் தான் எத்தனை எத்தனை வாடிக்கையாளர்கள்? நட்ட கல்லைத் தெய்வமென்று சிற்பிக்கு நரகத்தைத் தரும் கேடுகெட்ட சமூகம். இவ்வளவு கொடுமைகளையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பவனின் (இருக்கிறான் எனில்) கையாலாகாத்தனம் தெரிந்தும் தேடிச் சோறு நிதம் தின்று ‘எனக்கு அதைக் கொடு; இதைக் கொடு; ‘நான்’ நன்றாக இருக்க வேண்டும்’ என்றிருப்பவர்களை ‘சுயநலவாதிகள்’ அல்லாமல் வேறென்ன பெயர் கொண்டு விளிப்பது?

- சோம.அழகு

Pin It