அறிவுள்ளவர்க்கு அறிவின் செயல்

அறிவல்லாதவனுக்கு ஆண்டவன் செயல்

தந்தை பெரியார் அவர்கள் சொன்னது. இதைப் படித்த உடனே கோபம் உச்சந்தலைக்கு ஏறுவது இயல்பு தான், ஆனால் பொறுமையாக சிந்தித்துப் பார்த்தோமேயானால் உண்மை விளங்கும்.

உலகமே ஆண்டவனால் படைக்கப்பட்டது, அனைத்து உயிர்களையும் படைத்தவன் அவனே, அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்கிறது மதம். அது எப்படி என்ற கேள்வி எழுந்து அதற்குரிய பதிலை ஆய்வு செய்து பார்ப்போமேயானால், மனிதர்களை ஆண்டவன் தான் படைத்தான் என்றால், பெண்கள் கரு உருவாகிறார்கள், குழந்தை பெறுகிறார்கள் அந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு மார்பகங்கள் தேவை, ஆனால் ஆண்களுக்கு எதற்கு பெண்களுக்கு இருப்பது போலவே மார்பகங்கள், தேவையில்லாமல் எதற்காக அந்த உறுப்பை ஆண்டவன் படைக்க வேண்டும்? மனிதன் உருவாக்கும் இயந்திரத்தில், பயன்பாடு இல்லாமல் ஒரு சிறிய பாகத்தை கூட இணைப்பதில்லை. மனிதனுக்குள்ள அறிவுக்கூட ஆண்டவனுக்கு இல்லையா? என்ற கேள்வி எழும்பொழுது, அதற்கு அறிவியல் தான் - மனநல மருத்துவர் ஷாலினி அவர்களின் மூலம் பதில் சொல்கிறது.

பெண்கள் கருத்தரிக்கும் பொழுது முதலில் பெண் உருவத்தில் தான் கரு உருவாகிறது, Y குரோமோசோம் இருப்பதால் டெஸ்டிஸ் விரைப்பை உருவாகி, அது டெஸ்டோசிரான் ஹார்மோனை உற்பத்தி செய்து அந்த வலிமையான டெஸ்டோசிரான் உடல் முழுவதும் பரவி கருவிலேயே பெண் உருவத்தில் உருவான குழந்தையை ஆண்மைபடுத்தி பெண் உருவத்தில் உள்ள கருவை ஆண் உருவத்திற்கு மாற்றுவதால் தான், பெண்களுக்கு இருப்பது போலவே ஆண்களுக்கும் மார்பகங்கள் உள்ளன. அந்த ஹார்மோனின் உற்பததி சரியான முறையில் இயங்கவில்லையென்றால் உடல் ஆணின் தோற்றத்தில் இருந்தாலும் பெண்ணாகவே இருக்க விரும்பி, பெண்ணாக மாறுவதற்குரிய முயற்சிகளைச் செய்து கொள்கிறார்கள். இதுவும் அறிவியலின் செயலே என்பதை உணர்ந்து இந்த சமூகத்தால் ‘திருநங்கை’ என்று அழைக்கப்படுபவர்களுடைய வலியையும் வேதனையையும் புரிந்து கொண்டு அவர்களின் மேல் இரக்கமோ பரிதாபமோ கொள்ளாமல், அவர்களுக்குரிய உரிமைகளை இந்த சமூதாயம் வழங்கினாலே போதுமானது.

ஆண்டவன் படைப்பு என்பது அறிவியலின் பார்வையின்படி பொய்யான கூற்று. குரங்கில் இருந்து தான் மனிதன் பிறந்தான் என்ற உண்மையை 24-11-1859 அன்று ஜீவராசிகளின் மூலம் என்ற புத்தகத்தை டார்வின் வெளியிட்டார். இது மதத்திற்கு எதிரானது என மதவாதிகள் கொதித்தெழுந்தனர். அதே போல் பூமி தட்டையாக அசைவற்று உள்ளது என்ற மதவாதிகளின் கருத்தை உடைத்து உலகம் ஓர் உருண்டை, அது ஒரு கோள், பூமி ஒரு சிறிய கோள், சூரியன் ஒரு நட்சத்திரம், சூரியனைச் சுற்றிதான் பூமியும் மற்ற கோள்களும் சுற்றி வருகின்றன, பூமி தன்னைத் தானே தனது அச்சில் 24 மணி நேரத்திற்கு ஒரு முறை சுற்றிக் கொண்டு, வருடத்திற்கு ஒரு முறை சூரியனையும் சேர்த்து சுற்றி வருகிறது என்ற உண்மையை முதன்முதலில் கண்டுபிடித்தவர் நிக்கோலஸ் கோப்பர்நிக்கஸ்.

இது மதக்கோட்பாட்டிற்கு எதிரான கருத்து என்பதால் எதிர்ப்பு வரும் என்று பயந்து 39 ஆண்டுகாலம் ஆய்வு செய்து கண்டுபித்த அறிவியல் உண்மைகளை வெளியிடாமல் இருந்துவிட்டு, பிறகு வயதான கடைசி காலகட்டத்தில் 1542 ஆம் ஆண்டு புத்தகத்தின் கையெழுத்துப் பிரதியை ரெடிகஸிற்கு அனுப்பினார். அந்த கோப்பர் நிக்கசின் பூமி சுற்றுகிறது என்ற கொள்கைகளையும் தம்முடைய பிரபஞ்சம் பற்றிய கொள்கைகளையும் 1599 ஆம் ஆண்டு ரோம் நகர நீதிமன்றத்தில் ஜியார்டனோ புரூனோ கூறியதால் மத கொள்கைக்கு எதிரானது, இவர் ஒரு மத விரோதி என்று குற்றம்சாட்டி, 08-02-1600 அன்று சூரியன் உதிக்கும் முன்பே ரோம் நகர வீதியின் நடு பகுதியில் கட்டைகளை அடுக்கி உயிருடன் தீயிட்டுக் கொளுத்திக் கொன்றனர். அதன் பிறகு 17-ஆம் நூற்றாண்டில் இவருடைய கொள்கையையும் தத்துவத்தையும் அறிவியலையும் மதித்தனர். 18-ஆம் நூற்றாண்டில் தோன்றிய புதிய தத்துவ அறிஞர்கள் பலர் இவருடைய தத்துவங்களை ஏற்றுக் கொண்டனர். புரூனோவை உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டு 200 ஆண்டுகள் கழித்து 1880-ஆம் ஆண்டு புரூனோவை உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட அந்த இடத்திலேயே நினைவு சின்னம் அமைக்கப்பட்டு முப்பது ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் புரூனோ வாழ்க என கோஷமிட்டனர்.

கி.பி. 150-ஆம் ஆண்டு காலகட்டத்தில் வாழ்ந்த மருத்துவ அறிஞர் காலன் என்பவர், கல்லீரலை மையமாக கொண்டு தான் இரத்தம் ஓடுகிறது என்றார். இவருடைய கருத்து 1200 ஆண்டுகளுக்கும் மேலாக நம்பபட்டு வந்தது. இரத்தத்தின் தொடக்கப்பகுதி கல்லீரல் அல்ல, இதயமே என்பதை முதன்முதலில் வெளியிட்டவர் வில்லியம் ஹார்வி. இவர் கருவியல் பற்றியும் ஆய்வு செய்து, 1651 ஆம் ஆண்டு விலங்குகளின் தலைமுறை என்ற புத்தகத்தை வெளியிட்டார். அரிஸ்டாட்டிலின் கருவளர்ச்சிக் கொள்கையை இவர் மறுத்துக் கருவின் வளர்ச்சி படிப்படியாக நடைபெறுகிறது என்பதை தெளிவுபடுத்தினார். இது மதத்திற்கு எதிரான கருத்து என்று, இவருடைய 40 ஆண்டுகள் சேகரித்து வைத்திருந்த ஆராய்ச்சிக் குறிப்புகளை மதவாதிகள் அழித்தனர். ஆனால், தற்பொழுது ஒப்பொரு ஆண்டும் மருத்துவத்தில் சிறந்து விளங்கும் மருத்துவருக்கு இராயல் மருத்துவக் கல்லூரிச் சார்பாக ஹார்வியின் நினைவு பரிசு வழங்கப்படுகிறது.

இதயம் இயங்குவதற்குரிய சத்து இல்லை என்றால் உடலில் இரத்த ஓட்டத்திற்குரிய சத்தும் இல்லாமல் போய்விடும். உடல் இயங்குவதற்குரிய சத்து போய்விட்டால், உடல் சத்து போய்விட்டது என்று சொல்லப்பட்டு நாளடைவில் சத்து போய்விட்டது என்ற வார்த்தைசெத்து போய்விட்டது என்று மாறி உள்ளது. மனிதன் செத்து போய்விட்டால் அவ்வளவுதான் அதன் பிறகு ஒன்றுமே இல்லை, ஆன்மா, சொர்க்கம், நரகம், பேய், பிசாசு, மறுபிறவி என்பதெல்லாம் மதவாதிகளின் பித்தலாட்டம் என்பது அறிவியலின் கூற்று.

இது போன்ற விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை இருட்டடிப்பு செய்து, மதத்தின் மூலம் மக்களை மடையர்களாக்கவும் மதவாதிகளின் மதக்கோட்பாட்டை நிலை நிறுத்துவதற்காகவும் அவர்களை அச்சுறுத்துவது, சிைறயில் அடைப்பது, உயிரோடு எரித்துக் கொலை செய்வது, கில்லட்டின் எனும் தலைவெட்டிக் கருவியைப் பயன்படுத்தி ஈவு, இரக்கமின்றி தலையை வெட்டிக் கொல்வது, பல ஆண்டுகள் இருட்டறையில் சிறை வைத்து சித்தரவதை செய்து, இனி எதையும் கண்டுபிடிக்க மாட்டேன் என்று சொல்லி மன்னிப்பு கேட்கும் விஞ்ஞானிகளை மட்டும் விடுதலை செய்வது போன்ற மனித நேயமற்ற செயல்களை மதவாதிகள் கடைப்பிடித்தனர்.

எங்கள் முன்னோர்கள் செய்த தவறுக்காக நாங்கள் வருந்துகிறோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று தற்பொழுதுள்ள மதவாதிகள் சொல்லி எளிதில் கடந்து சென்று விட்டு, அதுபோன்ற தவறுகளை இந்த காலகட்டத்திற்கு ஏற்றார்போல் நவீனமாக செயல்படுத்துகின்றார்கள். மன்னர்கள் ஆட்சியானாலும் மக்களாட்சியானாலும் மதவெறியர்களின் கையில் தான் நாடு சிக்கிக் கொண்டு இருக்கிறது, இது வரலாற்று உண்மையாக இருந்தாலும் மக்களின் அறியாமையை இந்த உலகம் தொடர்ந்து சுட்டிகாட்டி கொண்டே இருக்கிறது.

உலகத்தை படைத்தது ஆண்டவன் இல்லை என்ற உண்மையை அறிவியல் வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. உலகத்தையே ஆண்டவன் படைக்காத பொழுது நாலுவர்ணங்களையும் ஆண்டவன் உருவாக்கினார் என்று சொல்வதும் பொய்யே. அப்படியென்றால் உருவாக்கியது யார்? உலகில் காணுகின்ற இயற்கையை தவிர்த்து அனைத்தையும் உருவாக்கியவன் மனிதன். எப்பொழுது மனிதனை மனிதன் அடிமைப்படுத்த நினைத்தானோ அன்று உருவாக்கப்பட்ட கொடிய விஷம் தான் இந்த மதங்கள், வர்ணாசிரமம், மனுதர்மம் போன்றவைகள்.

இதில் இருந்து நாம் விடுபடாமல் நம்முடைய நாடு சுதந்திர நாடு என்று சொல்லிக்கொள்வதில் அர்த்தமில்லை. 400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களின் வாழ்க்கை மூடநம்பிக்கை நிறைந்த மதவெறி, ஜாதிவெறி பிடித்த வாழ்க்கை என்று நாம் இன்று கடுமையாக விமர்சனம் செய்வது போல் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்ற அதே மூடநம்பிக்கை நிறைந்த மதவெறி, ஜாதிவெறிபிடித்த வாழ்க்கையை 400 ஆண்டுகள் கழித்து மிகமிகக் கடுமையாக விமர்சனம் செய்ய வருங்காலம் காத்து கொண்டிருக்கிறது என்பதை நாம் மறந்து விடக்கூடாது. இன்னும் எத்தனை ஆண்டுகள் இந்த இழிநிலை தொடரும்? இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டாமா? இது நாம் வாழ்கின்ற காலகட்டமாக ஏன் இருக்கக் கூடாது?

அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்வது மூடநம்பிக்கையின் உச்சம். அறிவியலின் ஓர் அணுவும் அசையாது என்று சொல்வது பகுத்தறிவின் உச்சம்.

Pin It