கழகம் கடும் விலை தந்த ஆண்டு 2009
 
இந்திய பார்ப்பன ஆட்சியின் துரோகத்தால் ஈழத் தமிழர் விடுதலைப் போராட்டம் ஒடுக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட குருதி படிந்த வரலாற்றுக் கொடூரம் அரங்கேறிய ஆண்டு 2009. நெருக்கடிக் காலகட்டத்தில் துணிவுடன் முகம் கொடுத்து, ஈழத் தமிழர் விடுதலைக்கு ஆதரவாக களமிறங்கிய பெரியார் திராவிடர் கழகம், கடும் அடக்கு முறைகளை எதிர்கொண்டது. 2008 டிசம்பர் மாதத்தில் ஈரோடு பொதுக் கூட்டத்தில் ஈழ விடுதலையை ஆதரித்துப் பேசிய கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மணியரசன், இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டு, 31 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, பிணையில் விடுவிக்கப்பட்டதும், மீண்டும் திண்டுக்கல் கூட்டத்தில் பேசியதற்காக கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்ச் மாதத்தில் கைது செய்யப்பட்டு, மதுரை சிறையில் அடைக்கப்பட்டு, 56 நாட்கள் சிறைவாசத்துக்குப் பிறகு, நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.
 
கோவையில் ராணுவ வண்டியை பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் தலைமையில், கடந்த ஆண்டு மே மாதம் இரண்டாம் தேதி, கழகத் தோழர்களும், இன உணர்வாளர்களும் மறியல் செய்த போராட்டம் நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கோவை இராமகிருட்டிணன், பெரம்பலூர் இலக்குமணன், சூலூர் வீரமணி உள்ளிட்ட தோழர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும், ஏனைய தோழர்கள் மீது பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு, 3 மாத சிறைவாசத்துக்குப் பிறகு தோழர்கள், விடுதலையானார்கள். தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை சட்டங்களை மத்திய உள்துறை அமைச்சகமே ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. கழகத் தலைவர், பொதுச்செயலாளர் கைதைக் கண்டித்து, பல்வேறு ஊர்களில் ஆர்ப்பாட்டங்களையும், தடைமீறி போராட்டங்களையும் நடத்திய கழகத்தினர் கைதானார்கள்.
 
காங்கிரஸ் கட்சியின் தலைமையகமான சென்னை சத்தியமூர்த்தி பவன் முன் மறியலுக்குச் சென்ற தோழர்கள் கைது செய்யப்பட்டு, சிறையிலடைக்கப்பட்டதோடு, பிணையில் விடுதலையான 65 தோழர்களும், 15 நாட்கள் அண்ணாசாலை காவல்நிலையத்தில் தொடர்ந்து கையெழுத்திட நீதிமன்றம் ஆணை யிட்டது. ஈழத் தமிழர்களுக்காக முத்துக்குமார் என்ற மாவீரன் தீக்குளித்து மாண்டான். முத்துக்குமார் ஊட்டிய உணர்ச்சி பரவி, எரிமலையாக குமுறியது. தொடர்ந்து - காங்கிரஸ் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், தே.மு.தி.க.வைச் சார்ந்த உணர்ச்சி யுள்ள இளைஞர்கள், தங்கள் உடலுக்கு தீ வைத்துக் கொண்டு வீரமரணமடைந்தனர்.
 
ஈழத்தில் - கிளிநொச்சி ராணுவத்திடம் வீழ்ந்தது. தமிழினப் படுகொலை கொடூரமாக அரங்கேறியது. இலங்கைத் தமிழர் பாதுகாப்புக் கழகம் விடுத்த முழு அடைப்பை, மக்களே ஏற்று, நாடு முழுதும் 90 சதவீத கடைகள், நிறுவனங்கள் மூடப்பட்டன. அரசு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்தது. முழு அடைப்பையொட்டி, எந்தக் காரணமும் இன்றி கோவையில் கைதுசெய்யப்பட்ட கழகத்தினர், ஒரு மாதம் வரை சிறையிலடைக்கப்பட்டனர். ஈழத் தமிழர் படுகொலைக்கு துணை நின்ற காங்கிரசை தேர்தலில் தோற்கடிக்க, கழகம் களமிறங்கியது. கழக சார்பில் வெளியிட்ட ஈழத் தமிழர் படுகொலைகளை சித்தரித்த குறும்படம் - காங்கிரசாரை அதிர்ச்சிக் குள்ளாக்கியது. குறுந்தகட்டையும், பெரியார் திராவிடர் கழகத்தையும் தடை செய்யக் கோரி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித்தலைவர், தேர்தல் ஆணையத்திடம் புகார் தந்தார். ஆனால், பல்லாயிரக் கணக்கில் குறுந்தகடுகளை மக்களே பிரதி எடுத்து பரப்பினர். கழகத் தோழர்களின் வீடுகளை காவல்துறை சோதனையிட்டு தோழர்களை கைது செய்தது.

மத்திய சென்னை தொகுதியில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் தி.மு.க.வின் துரோகத்தை விளக்கி பரப்புரை செய்ததால், இராயப்பேட்டை கழக அலுவலகத்தை தயாநிதி மாறன் ஆதரவாளர்கள் சூறையாடி, பெரியார் சிலையையும் சேதப்படுத்தினர். கழக மகளிர் இருவர் உட்பட தோழர்கள் பிணையில் வரவியலாத கடுமையான குற்றப் பிரிவுகளில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர். காங்கிரஸ் கொடியை எரித்ததாக, பழனி கழகத் தோழர்கள் கைது செய்யப்பட்டனர். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் சாகும் வரை உண்ணா விரதத்தை அறிவித்தார். கழகத்தினர் பாராட்டி தந்திகள் அனுப்பினர். நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர். ‘பெரியார் முழக்கம்’ திருமாவளவனை பாராட்டி, தலையங்கம் தீட்டியது. 50க்கும் மேற்பட்ட பெண்கள் போர் நிறுத்தம் கோரி, 13 நாட்கள் பட்டினிப் போராட்டம் நடத்தினர். கழகத்தினர் பல்வேறு வகையில் அவர்களுக்கு உதவியாக நின்றனர். ஈழத் தமிழர்களைப் பாதுகாக்க களத்தில் அடக்குமுறைகளையும், சிறைச்சாலைகளையும் கழகத் தோழர்கள் சந்தித்த ஆண்டாகவே 2009 ஆம் ஆண்டு கடந்துள்ளது.
 
பெரியார் திராவிடர் கழகத்தின் செயல்பாடுகளை - தனது நாத்திகம் ஏட்டில் பாராட்டி, உற்சாகப்படுத்தி வந்த சுயமரியாதை வீரர் நாத்திகம் இராமசாமி முடிவெய்தினார். இராகுல் காந்தி தமிழகம் வருகை; நடிகர் விஜய் காங்கிரசில் சேர்வதற்கு நடந்த முயற்சி; பார்ப்பனர் எம்.எஸ்.சாமிநாதன் சிங்கள அரசுக்கு ஆதரவாக, ஈழத்தில் அரங்கேற்றவிருந்த திட்டங்கள் போன்றவற்றை சுவரொட்டிகள் வழியாக அம்பலப் படுத்தியது பெரியார் திராவிடர் கழகம். எம்.எஸ். சாமி நாதன், தனது திட்டத்தை கைவிட்டார். நடிகர் விஜய், காங்கிரசில் சேரும் திட்டத்தையும் கைவிட்டார்.
 
‘குடிஅரசு’ பத்திரிகையில் வெளிவந்த பெரியார் எழுத்து பேச்சுகளை காலவரிசைப்படி தொகுத்து, 27 தொகுதிகளாக பெரியார் திராவிடர் கழகம் வெளியிடும் முயற்சியை எதிர்த்து, வீரமணி நீதிமன்றம் ஓடியதும், வீரமணியின் மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதும் இதே ஆண்டில்தான். கழகத்தின் சார்பில் புதிய வெளியீடுகளும், பகுத்தறிவு பரப்புரை கூட்டங்களும் - மந்திரமா தந்திரமா நிகழ்ச்சிகளும் இடைவிடாது நடந்தன. தொய்வில்லா களப்பணிகளுடன் கழகம் அடக்குமுறைகளை எதிர்கொண்ட ஆண்டாகவே 2009 கடந்து சென்றுள்ளது.

Pin It