இதழின் குரல்

2021-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி அவர்களின் 47-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு எழுத்தாளர்களுக்கான கலைஞர் கனவு இல்லம் திட்டம் தமிழகத்தின் மாண்புமிகு 'முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப் பட்டது. சாகித்திய அகாதமி விருது, ஞானபீட விருது, தொல்காப்பியர் விருது, கலைஞர் மு கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது போன்ற முக்கிய இலக்கிய விருதுகளைப் பெற்று, தற்போது வாழும் தமிழ் எழுத்தாளர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

 தவிரவும் தகைசால் தமிழர் விருது, கலைஞர் பொற்கிழி விருது, தமிழ்ப்பேராய விருது போன்ற விருதுகள் பெறும் ஆளுமைகளும் இத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். சாகித்ய அகாதமி விருது பெற்ற மொழி பெயர்ப்பாளர்களுக்கும் 2024-ஆம் ஆண்டு முதல் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

 ஆண்டுதோறும் இத்திட்டத்தின் கீழ் 10 பேருக்குத் தமிழ்நாடு அரசின் வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான ஒரு வீடு, சாகித்திய அகாதமி விருது பெறும் எழுத்தாளர்களுக்கு அவர்கள் விரும்பும் பகுதியில் வழங்கப்பட்டு வருகிறது. ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த இல்லத்தின் பத்திரச்செலவு உள்ளிட்ட அனைத்தும் தமிழக அரசால் ஏற்கப்படும் எனும் இம்முயற்சி, இந்தியத் துணைக் கண்டத்தில் எங்குமில்லாத அரிய முன்னெடுப்பாகும். இதுவரை இத்திட்டத்தின் மூலம் தமிழறிஞர்கள் 15 பேரும், சாகித்திய அகாதமி விருதுபெற்ற 10 பேரும் பயன்பெற்றுள்ளனர்.

எழுத்தாளர்களுக்கு இவ்வளவு பெரிய பெருமை சேர்க்கும் தமிழக அரசைப் பாராட்டும் கடமை அனைவருக்கும் உண்டு.

இத்தருணத்தில் சாகித்திய அகாதமி விருதின் முக்கியத்துவத்தைக் குறிப்பிட வேண்டும்: இந்திய அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணை மூலம் அங்கீகரிக்கப் பட்டுள்ள 22 இந்திய மொழிகள் மற்றும் ராஜஸ்தானி / ஆங்கிலம் என 24 மொழிகளிலுமுள்ள சிறந்த எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 1954 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டு வருகிறது. 1957/ 1959/ 1960/ 1964/ 1976 ஆகிய ஆண்டுகளில் எதிர்பார்த்த தகுதிகள் இல்லாத காரணத்தால் தமிழில் சாகித்ய அகாதமி விருது வழங்கப்படவில்லை.

சாகித்திய அகாதமி விருது என்பது ஒரு நினைவுப் பட்டயமும், ஒரு இலட்சம் ரூபாய் (2009-ஆம் ஆண்டு முதல்) விருதுத் தொகையும் கொண்டதாகும்.

சிறுகதை, புதினம், கவிதை, நாடகம், பயண இலக்கியம் மற்றும் இலக்கிய வகைகளிலுள்ள பிற படைப்புகளுக்காக இவ்விருது ஆண்டுதோறும் அளிக்கப்படுகிறது.

1989 ஆம் ஆண்டு முதல் சிறந்த மொழியாக்க நூலுக்கும் சாகித்திய அகாதமி விருது வழங்கப்படுகிறது

நீண்ட பரிசீலனைக்குப் பின் சிறந்த இலக்கியப் படைப்புகள் தெரிவு செய்யப்பட்டு, பிறகு சாகித்திய அகாதமி விருதுகள் அறிவிக்கப் படுகின்றன. இருப்பினும், அகாதமி விருது அறிவிக்கப்படும் பொழுதெல்லாம் அது குறித்து விமர்சனங்கள் எழுவது வாடிக்கையாகி விட்டது. தகுதியற்ற எழுத்தாளர்களுக்கு விருது அளிக்கப் படுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுகின்றன. இருப்பினும், தேசிய அளவில் வழங்கப்படும் சாகித்திய அகாதமி விருதுகள் தொடரட்டும். ஆனால், அதே சமயத்தில் தமிழக அரசும் தனக்கென ஒரு சாகித்திய, அகாதமியை நிறுவி, ஆண்டுதோறும் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆளுமைகளுக்கும், எழுத்தாளர்களுக்கும் விருது வழங்கலாம் அல்லவா?

இந்தியாவில் இது ஒன்றும் புதிதல்ல!

கேரளாவில் கேரள சாகித்திய அகாதமி நிறுவப்பட்டு1958 முதல் விருதுகள் வழங்கப்படுகின்றன. கவிதை, புதினம் சிறுகதை, நாடகம், இலக்கிய விமர்சனம், வரலாறு, வாழ்க்கை வரலாறு, பயண நூல், மொழிபெயர்ப்பு, குழந்தை இலக்கியம், செவ்வியல் இலக்கியம் போன்ற பல துறை வல்லுநர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன தவிரவும் வாழ்நாள் சாதனையாளர் விருதும் வழங்கப்படுகிறது.

அதே போல் கர்நாடகாவில், கர்நாடக சாகித்ய அகாதமி நிறுவப்பட்டு, அதன் சார்பாக 1983ஆம் ஆண்டிலிருந்து விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

புதினம், சிறுகதை, கவிதை, விமர்சனம், பயணநூல், குழந்தை இலக்கியம் போன்ற பல துறைகளில் எழுத்தாளர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுகின்றன. அதேபோல் இலக்கியத்தில் காத்திரமான பங்களிப்பை வழங்கியவர்களுக்கு சாகித்தியஸ்ரீ விருதும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாட்டிலும் அதுபோல தமிழ்நாடு சாகித்திய அகாதமி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதன் சார்பாகக் கட்சி சார்பின்றி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்பட வேண்டும். இது குறித்துத் தொடர்புடைய அனைவரிடமும் கலந்தாய்ந்து உரிய விதிமுறைகளை வகுத்து, தமிழக அரசு இறுதி முடிவு எடுக்கலாம்.

- புதுமலர் ஆசிரியர் குழு

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.