இந்தியாவின் குடிமகன் ஒருவர், சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்திற்குப் புறப்பட்டுப் போயிருக்கிறார். 2025, ஜூன் 25-ஆம் தேதி அவர் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து பறக்கத் தொடங்கி, சர்வதேச விண்வெளி வீரர்களுடன் இணைந்திருக்கிறார். அவருடன் நமது இந்தியப் பிரதமர் மோடி 29.06.2025 அன்று செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு வசதி மூலம் 18 நிமிடங்கள் உரையாடிய செய்தி, மிகுந்த பெருமிதம் பொங்க ஊடகங்களில் வெளியாகியுள்ளது. பூமியிலிருந்து கேரட் அல்வா, பாசிப்பருப்பு அல்வா, மாம்பழச் சோறு ஆகியவற்றைக் கொண்டு போய் அங்கிருந்த வீரர்களுக்குக் கொடுத்திருக்கிறார் ஷூபன்ஷூ சுக்லா. நமது பிரதமரும், குறிப்பாக "அல்வா கொடுத்தீர்களா?" என்று மறக்காமல் விசாரித்து மகிழ்ந்திருக்கிறார். நல்லது; நமது விண்வெளி ஆய்வுலக வரலாற்றில் அடுத்தடுத்துப் புதிய பல சாதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்திய வம்சாவளியினர் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லியம்ஸ் போன்று ஒவ்வொருவராக விண்வெளியில் பயணித்துத் திரும்புகின்றனர். இப்போது, நமது குடிமகன், விண்வெளி வீரரும் கூட, அங்கு சென்றிருக்கிறார். இது நாம் பெருமை கொள்ளத்தக்கதே. அங்கிருந்து பூமியை, நமது இந்தியாவைக் கண்டது பற்றி சுக்லா கூறிய கருத்து நமது கவனத்தை ஈர்க்கிறது:
"விண்வெளி நிலையத்திலிருந்து பூமியைப் பார்த்த போது, பூமிக்கு எந்த எல்லைக்கோடும் இல்லை. வேற்றுமையில் ஒற்றுமை என்ற தாரக மந்திரத்தைப் பூமி பிரதிபலிக்கிறது. நாம் அனைவரும் ஒன்று என்று உணர்கிறேன்.."
கேட்டுக் கொண்டிருந்த பிரதமர், இந்த 'வேற்றுமையில் ஒற்றுமை', 'நாம் அனைவரும் ஒன்று' என்று சுக்லா சொன்னது பற்றி என்ன நினைத்துக் கொண்டிருந்தார் என்பதை நாம் அறிய முடிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்! இன்றைய இந்தியாவை ஆளும் ஒருவர் என்ற முறையில், பிரதமரும், அவர் சார்ந்த அரசியல் இயக்கத்தினரும் உண்மையிலேயே இந்த கருத்துகளில் நம்பிக்கை கொண்டிருப்பவர்கள் தாமா? இதைப் படித்துக் கொண்டிருக்கும் வாசகப் பெருமக்கள், கட்டுரையின் தலைப்புக்கும் மேற்கண்ட பத்திக்கும் என்ன தொடர்பு என்று சற்றே யோசிக்கத் தொடங்கியிருக்கக் கூடும்; நிறையத் தொடர்பு இருக்கிறது. தொடர்ந்து படிக்க வேண்டுகிறேன்...
இந்தியா, அறிவியல் துறையில் உலக அளவில் நீண்ட காலமாகவே பெரும் சாதனைகளின் மையங்களில் ஒன்றுதான்; அதில் நமக்கு எந்த ஐயமும் இல்லை. நோபல் விருது வென்ற அறிவியல் நிபுணர்களின் எண்ணிக்கை குறைவுதான் எனினும், அதற்குத் தகுதி படைத்த பலர் இருந்திருக்கின்றனர்; இன்னும் இருக்கிறார்கள், இருப்பார்கள். நாம் இப்போது பார்க்கப் போகும் மேக்நாட் சாகாவும் அவர்களுள் ஒருவர்தான்.
சி.வி. ராமனுக்கு இணையாக, சொல்லப் போனால் ஒரு படி மேலானவர் சாகா. நான்கு முறை நோபல் விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டிருந்தவர் கூடத்தான்! அவர் வெறும் அறிவியல் ஆய்வாளர் மட்டுமல்லர்; மாறாக, ஒரு சாதிய எதிர்ப்புப் போராளி. இந்தியச் சூழலில் இது எத்தனை முக்கியமான தகுதி! ஏகாதிபத்திய எதிர்ப்பாளர், பகுத்தறிவாளர். ஏதிலிகளின் காவலர். ஏழைகளின் உரிமைகளுக்குக் குரல் கொடுத்தவர். மக்கள் உரிமைகளுக்காகச் செயல்பட்ட மனிதர்! நமது அறிவியல் வானில் ஒளிவீசாமல், ஒளி வீச முடியாமல் சாகா மறைந்தும், மறைக்கப்பட்டும் போவதற்கு இவை போதாவா?
"மேக்நாட் சாகா - ஒரு புரட்சிகர அறிவியலாளரின் கதை" என்ற ஒரு நூலைத் தேவிகாபுரம் சிவா எழுதியிருக்கிறார். அதை பாரதி புத்தகாலயம் 2015-ஆம் ஆண்டிலேயே வெளியிட்டிருக்கிறது. பத்தாண்டுகள் கடந்து விட்டன. ஆனால், அந்த நூல் நியாயமாகப் பெற்றிருக்க வேண்டிய கவனத்தை, புகழை, பெருமையை இன்றளவும் அது பெறவில்லை என்கிற ஆதங்கம் எனக்கு இருந்து கொண்டே இருக்கிறது. இப்போது இந்திய அறிவியல், குறிப்பாக விண்வெளி ஆய்வுகளில் இஸ்ரோவும், அதில் பங்களித்துக் கொண்டிருக்கும் அத்தனை அறிவியல் ஆய்வாளர்களும் அடைந்து வரும் புகழ் வெளிச்சமும், ஊடக கவனமும் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டு போகிறது. அது பற்றிய மகிழ்வில் பங்கேற்கும் அதே சமயம், நமது விண்வெளி ஆய்வுகளில் இன்று ஒரு முக்கிய உந்துவிசையாகத் தொழிற்படும் வான் இயற்பியல் (Astrophysics) துறையில், உலகமே அன்றைக்கு அங்கீகரித்த ஓர் அறிவியல் ஆய்வாளரான மேக்நாட் சாகா ஆற்றிய அரும்பணிகள் பற்றி, எந்த ஊடகமும் ஒரு சிறிய குறிப்பைக் கூடக் காட்டுவதில்லையே என்ற வருத்தத்தையும் தவிர்க்க முடியவில்லை.
"மனித உழைப்பும், சகல உற்பத்திப் பொருள்களும் மக்களுக்கே, கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கே என்று நாம் இடையறாமல் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அறிவியலும் மக்களுக்கே என்ற உண்மையை சாகாவின் வரலாறு நமக்குச் சொல்கிறது" என்கிறார் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதியுள்ள அழகிய பெரியவன். "இக்கூற்றுக்கு ஆதாரமாக, அணுக் கொள்கையை பொதுவெளியில் வெளிப்படையாக்க வேண்டும் என்று அவர் இடையறாமல் போராடிய வரலாற்றுப் பதிவு நம்மெதிரில் நிற்கிறது... இந்த நூலை வாசிப்பதும், பிறருக்கு வாசிக்கத் தருவதும் அவரவர் அளவில் எல்லா ஆதிக்கக் கருத்தியல்களுக்கும் எதிர் செயல்பாடாக அமையும். இந்நூலின் ஆற்றல் மேலும் இவரைப்போன்ற மறைக்கப்பட்ட ஆளுமைகளை வெளிக்கொணரும்" என்று அவர் குறிப்பிடும் கருத்துகள் நூலின் பின்னட்டையில் இடம்பெற்று சிந்தனையைத் தூண்டுகின்றன.
தேவிகாபுரம் சிவாவின் முன்னுரையைப் படித்தாலே, மேக்நாட் சாகா என்னும் மகத்தான ஆளுமையின் பரிமாணங்களை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும்: "மனிதம் ததும்பும் மகத்தான வரலாறு சாகாவினுடையது. உண்மையில், இந்தியா உலக அறிவியலுக்கு, குறிப்பாக இயற்பியலுக்கு அளித்த முதல் நேரடிப் பங்களிப்பு சாகாவின் வெப்ப அயனியாக்கக் கோட்பாடும், அது குறித்த, அவர் பெயரிலேயே அழைக்கப்படும் அயனியாக்கச் சமன்பாடுமே. 'இந்தக் கோட்பாடும், சமன்பாடும் இந்தப் பேரண்டம் தோன்றிய சில வினாடிகளில் என்ன நிகழ்ந்தது, அது எப்படி இருந்தது? என்ற ஆராய்ச்சியில் அடிப்படையான பங்காற்றுகின்றன' என்று ஜே.வி. நார்லிகர் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் முதல் ஏவுகணை முயற்சியில் ஏற்பட்ட இடர்ப்பாடுகளைச் சாகா கோட்பாடே தீர்த்து வைத்ததாக அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். சாகாவின் 'தெரிவு செய் கதிர்வீச்சு அழுத்த'க் கோட்பாடு ஒரு கோட்பாட்டு அறிவியலாளரின் 'மாத்தி யோசி'க்கும் அற்புத ஆற்றலுக்கான சான்று. விண்மீன்களின் இயற்பியல் பண்புகளைப் புரிந்து கொள்வதில் இதுவும் முக்கியப் பங்காற்றுகிறது. ஹோமி பாபாவுக்கு முன்னரே அணு ஆராய்ச்சி செய்தவர் சாகா. நவீன வான் இயற்பியலின் தந்தை..." என்று விரிகிறது முன்னுரை.
தீண்டாமைக்கு உட்பட்ட சாகா சாதியில் பிறந்தவர் மேக்நாட். அவர் பிறந்த இரவில், வங்காளத்தை பெரும் புயல் ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இடியும் மின்னலும் அடைமழையும் இயல்பு வாழ்வை வெள்ளத்தில் மிதக்க விட்டிருந்தன. வேயப்பட்ட கூரை வீடு வீசும் புயலில் நாசம் அடையுமோ என்ற அச்சம் சூழ்ந்த அந்த இரவில் ஓர் ஆண் குழந்தை பிறந்தது. எனவே, 'மேகங்களின் தலைவன்' என்று பொருள்படும் மேக்நாத் என்னும் பெயரை அக்குழந்தைக்கு அதன் பாட்டி சூட்டி மகிழ்ந்தார். அன்று மழை வெள்ளமும், மகிழ்ச்சி வெள்ளமும் அந்த வீட்டை ஒருங்கே சூழ்ந்துகொண்டன..." என்று இந்த நூல் தொடங்கும் விதமே அதற்குள் ஒரு வெள்ளத்தில் இழுபடும் மரக்கிளையைப் போல நம்மை இழுத்துக் கொள்கிறது!
தந்தைக்கு எட்டுப் பிள்ளைகள்! அம்மா ஒரு நோயாளி. சியரத்தாலி என்ற அந்த ஊரின் அருகில் ஓடும் பானசி ஆற்றில் ஆண்டுதோறும் வெள்ளம் கரை புரண்டு ஓடும். மக்கள் அடுத்திருக்கும் வீடுகளுக்குப் போவதென்றால் கூட, ஒரு படகோ, தோணியோ கொண்டுதான் போக முடியும். இந்த நிலையில் அங்கு வாழும் அனைவருக்கும் நீச்சல் ஒரு தேவையான திறன். சாகாவும் சிறுவயதிலேயே சிறப்பாக நீந்தவும், தோணியை ஓட்டவும் கற்றுக் கொண்டார். ஏழாவது வயதில் உள்ளூரில் இருந்த ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். கல்வியின் மீது இருந்த அளவற்ற ஆர்வம் காரணமாக எந்த நேரமும் புத்தகத்தை விரித்து வைத்துக் கொண்டு வாய் விட்டுப் படிப்பாராம் சாகா. மூத்த சகோதரர்கள் இருவருமே படிப்பை இடைநிறுத்திவிட்டுச் சணல் நார் நூற்பாலை வேலைகளுக்குப் போய் விட்டனர். தந்தைக்கோ தனது பையனின் கல்வித் தாகம் கடும் எரிச்சலை மூட்டுவதாக இருந்தது. அவருடைய கடை வேலைகளில் உதவுமாறு சாகாவை அடிக்கடி அழைத்துக் கொண்டு போய் விடுவார். சலிக்காமல் அந்த வேலைகளை முடித்துக் கொடுத்துவிட்டு வீடு வந்ததுமே படிப்பதில் மூழ்கி விடுவார் சாகா.
ஆரம்பக் கல்வியுடன் பள்ளியை விட்டு சாகாவை நிறுத்தி விடுவது என்று தந்தை திட்டமிட்டிருந்தார். ஆனால், சாகாவின் அறிவுக்கூர்மையும், கல்வித் தாகமும் ஆசிரியர்களைக் கவர்ந்தன. அதை விட முக்கியம், மூத்த சகோதரர் ஜெய்நாத் தன் தம்பியின் படிப்புக்கு உதவுவது என்று முடிவு செய்ததுதான். அவரின் உதவிகளால் சாகா கல்வியைத் தொடர்ந்தார்.
இப்படித் தொடங்கிய அவரின் கல்விப் பயணம், அண்ணனின், பல ஆசிரியர்களின் உதவிகளோடு தொடர்ந்தது. சிகரங்களை எட்டினார் சாகா. இடைநிலைக் கல்வியில் மாவட்டத்திலேயே முதல் மாணவனாகத் தேறியதால் மேற்கொண்டு படிப்பதற்கு மாதம் நான்கு ரூபாய் உதவித்தொகை கிடைத்தது. அதைக்கொண்டு டாக்கா கல்லூரிப் பள்ளியில் 1905-ஆம் ஆண்டு சேர்ந்தார் சாகா. அந்த எளிய கிராமத்துச் சிறுவனுக்கு, அந்தத் தொகை நகரத்து வாசல்களைத் திறந்துவிட்டது. பள்ளிப் பருவத்திலேயே வங்காள ஆளுநர் வருகையை எதிர்த்து நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சாகா உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதன் விளைவு, அவரின் வாழ்நாள் முழுவதிலும் தொடர்ந்தது. அன்றைய ஐ.சி.எஸ். தேர்வுகளை எழுத அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பிற்பாடு இலண்டன் ராயல் கழகத்தில் உறுப்பினர் தகுதி அங்கீகரிக்கப்படுவது இரண்டு ஆண்டுகள் தள்ளிப்போனது!
இடைநிலை அறிவியல் கல்வியை டாக்காவில் முடித்து விட்டு, கல்கத்தாவில் மாநிலக் கல்லூரியில் பி.எஸ்சி. ஹானர்ஸ் பட்டப் படிப்பில் சேர்ந்தார். பல்கலைக்கழக அளவில் சாகா இரண்டாவது இடம் பெற்றார். எம்.எஸ்சி. பட்டப்படிப்பின் போது, தனது தம்பியை ஊரிலிருந்து அழைத்து வந்து படிக்க வைத்தார். செலவுகளைச் சமாளிப்பதற்காகத் தினந்தோறும் காலையும், மாலையும் கல்கத்தாவின் ஒரு முனையிலிருந்து மறுமுனை வரை சைக்கிள் மிதித்துக் கொண்டு போய் மாணவர்கள் சிலருக்கு டியூஷன் சொல்லித் தந்தார். அன்றைய விடுதலைப் போராட்ட நடவடிக்கைகளில் கல்கத்தா அனுசீலன் சமிதி போன்ற சில புரட்சிகர இயக்கங்களுடனும் சாகா தொடர்பு வைத்துக் கொண்டிருந்திருக்கிறார்!
1921 இல் சாகாவின் முதல் ஐரோப்பியப் பயணத்தின் போது ஜெர்மனியிலிருந்த இந்தியப் புரட்சியாளர்களோடு சாகா சந்திப்பு நிகழ்த்தியதுடன், அவர்களின் இரகசியக் குறிப்புக் காப்பாளராகவும் கூடச் செயல்பட்டிருக்கிறார். சுபாஷ் சந்திர போஸ் சாகாவைவிட நான்கு வயது இளையவர். அப்போதே சுபாஷ் போஸ் மிகச்சிறந்த மாணவர் தலைவர். அவரின் ஆளுமை சாகாவையும் ஆட்கொண்டது.
கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கீழ் தொடங்கப்பட்ட அறிவியல் கல்லூரியில் சாகா விரிவுரையாளர் பணியில் சேர்ந்தார். ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளை எழுதி, அன்றைய புகழ்பெற்ற சர்வதேச ஆய்விதழ்களில் வெளியிட்டார். 'கதிர்வீச்சு அழுத்தம் மற்றும் மின்காந்தக் கோட்பாடு' குறித்த ஆய்வுக்காக கல்கத்தா பல்கலைக்கழகம் சாகாவுக்கு முனைவர் பட்டத்தை வழங்கியது. உலக அளவில் ஐன்ஸ்டீன் முன்வைத்த சார்பியல் கோட்பாட்டின் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பை சாகா தான் தன் நண்பரான இயற்பியல் பேராசிரியர் சத்தியன் போசின் துணையோடு விளக்க உரையுடன் கல்கத்தா பல்கலைக்கழக வெளியீடாக நூல் வடிவில் வெளியிட்டார்.
சாகாவின் சிறப்புகளில் முக்கியமானது, தனது எல்லாப் பணிகளுக்கு இடையிலும் பொது மக்களின் அன்றாட வாழ்க்கைப் போராட்டங்களில் பெரும் துன்பங்கள் நேரிடும் போது களத்தில் இறங்கி நிவாரணப் பணிகளில் நேரடியாக ஈடுபடுவது ஆகும். இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு, 1923 ஜூலையில் வடக்கு வங்காளத்தில் பெரும் வெள்ளம் அழிவை ஏற்படுத்திய போது, நிவாரணக்குழுவின் தலைவராகப் பேராசிரியர் பி.சி. ராய் செயல்பட, சுபாஷ் சந்திர போஸ், சாகா ஆகியோர் உள்படப் பலர் நிவாரணப் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டனர். துணிமணிகள், உணவுப்பொருள்கள், பணம் எல்லாமாகச் சாகா சேகரித்துத் தந்தவற்றின் மதிப்பு ரூபாய் 23 இலட்சம்! இந்த வகையில், தன் சமகால அறிவுஜீவிகளிடமிருந்து மட்டுமல்ல, இன்று வரையிலும் வெறும் வாய்ப்பேச்சு வீரர்களாக மட்டுமே அவர்கள் பெரும்பாலும் இருந்து வரும் சூழலில், சாகா முற்றிலும் வேறுவிதமாக, களப்போராளியாக விளங்கியிருந்திருக்கிறார்.
சாகாவின் இளம்பருவத்தில் கடும் வெள்ளப்பெருக்கை எதிர்த்துத் தோணி ஓட்டியிருக்கிறார். கால்களில் செருப்பு கூட இல்லாமல் பத்து கி.மீ. தூரம் அன்றாடம் பள்ளியிலிருந்து நடந்து வீட்டிற்குப் போயிருக்கிறார். இதே போன்று தனது வாழ்நாள் முழுவதிலும் ஆய்வுகளை மேற்கொள்ளவும், தனது துறையில் பணிகளை மேம்படுத்தவும், பொதுமக்களின் பிரச்சினைகளில் தலையிடுவதற்கும், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும் போராடிக்கொண்டேதான் இருந்திருக்கிறார்! எல்லாவற்றுக்கும் மேலாக, சக ஆய்வாளராகவும், நோபல் பரிசுக்கு சாகா பரிந்துரைக்கப்பட்ட போது அதே ஆண்டு அதே விருதுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட இன்னோர் இந்திய ஆய்வாளரான சி.வி. ராமனின் பல சதி வேலைகளை எதிர்த்துப் போராடியதுதான் அவருக்கு மிகப்பெரும் சோதனையாக இருந்திருக்கக்கூடும். சாகாவின் வெப்ப அயனியாக்கக் கோட்பாட்டிற்காக நான்கு முறை நோபல் பரிசுக்குப் பரிந்துரைக்கப்பட்டவர் சாகா! அவருக்கு அப்பரிசு கிடைக்காமலே போனதற்கு, இளம் வயதில் பிரிட்டிஷ் எதிர்ப்புப் புரட்சிக்காரர்களுடன் தொடர்பு, வங்கப் பிரிவினையை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றமைக்காகப் பள்ளியை விட்டு நீக்கப்பட்டது போன்ற அறியப்பட்ட காரணங்களோடு இன்று வரை விளங்கிக்கொள்ள முடியாத காரணங்களும் இருக்கின்றன.
ராக்ஃபெல்லர் அறக்கட்டளையின் மூலம் 2000 பவுண்டு நிதி உதவி பெறுவதற்கு சாகா முயன்று வந்த வேளையில், அமெரிக்காவுக்குப் போயிருந்த சி.வி. ராமனிடம் சாகாவின் கோரிக்கை பற்றிக் கருத்துக் கேட்டிருக்கிறார் அந்த அமைப்பின் நிதி உதவிப் பிரிவின் தலைவர் மில்லிகன். கொஞ்சமும் தயங்காமல், "சாகா ஒரு 'நல்ல' கோட்பாட்டு அறிவியலாளரே ஒழிய, அவர் ஆராய்ச்சியாளர் அல்லர். அவரது ஆய்வுகளுக்கு நிதி உதவி செய்வது அறிவார்ந்த செயலாக இருக்காது" என்று சொன்னவர் சி.வி. ராமன். இந்த உண்மையை, சாகா நூற்றாண்டு விழாவின்போது உலகிற்குச் சொன்னவர், அமெரிக்க அறிவியல் வரலாற்றாய்வாளர் டிவோர்கின். சாகாவின் சாதிப் பின்னணி, பொருளாதாரப் பின்னணி, கிராமிய, கலாச்சாரப் பின்னணி மற்றும் அவர் சிறு வயதிலிருந்து வளர்த்துக் கொண்ட பிரிட்டிஷ் எதிர்ப்பு, அதன் பின் விளைவுகள் போன்றவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்கிறார் டிவோர்கின்.
அனைத்திந்திய அறிவியல் கழகம் என்ற அமைப்பை உருவாக்கும் முயற்சியில், சி.வி. ராமனுக்கு முன்பே சாகா வெற்றி பெற்றார். முதலில் அந்த அமைப்புப் பணிகளில் பங்கேற்று, தான் ஆசிரியராக இருந்த 'கரண்ட் சயின்ஸ்' இதழில் ஆலோசனைகள் கோரி அறிக்கை வெளியிட்டுப் பங்கேற்றிருந்தார் சி.வி. ராமன். ஆனால், சாகாவுடன் பனிப்போரில் இறங்கி, தனியே இந்திய அறிவியல் கழகம் என்ற அமைப்பை உருவாக்கினார் ராமன். அது மட்டுமன்றி, அகில இந்திய அறிவியல் கழகத்தின் 'கரண்ட் சயின்ஸ்' இதழையும் தனது புதிய கழகத்தின் இதழாக மாற்றிக்கொண்டார்.
சாகா இதனால் எல்லாம் சோர்ந்து விடவில்லை. அவர் தனது வழியில் முன்னேறிப் போய்க் கொண்டே இருந்தார். அவரும், நண்பர்களும் சேர்ந்து 'சயின்ஸ் அண்ட் கல்சர்' என்ற ஆய்விதழைத் தொடங்கி, வெற்றிகரமாக 1935 முதல் தொடர்ந்து நடத்தினர். 1956-ஆம் ஆண்டு சாகா மறையும் வரையில், அந்த இதழில் 2110 கட்டுரைகளும், 4600 அறிவியல் ஆய்வுக் குறிப்புகளும் வெளிவந்திருக்கின்றன. இவற்றுள், சாகா எழுதிய கட்டுரைகள் 137. இயற்பியல் சார்ந்த ஒரு விஷயத்தை எப்படி ஆய்வு செய்து எழுதுவாரோ அதே அணுகுமுறையைக் கையாண்டுதான் எல்லாப் பொருண்மைகள் குறித்தும் சாகா எழுதி வந்திருக்கிறார். அந்த வகையில், அவர் எழுதியுள்ள சில முக்கியமான கட்டுரைகளின் தலைப்புகளைப் பார்த்தாலே அவரின் பன்முகப் பார்வை புலப்படும்: 'எண்ணெய்யும் கண்ணுக்குத் தெரியாத ஏகாதிபத்தியமும்', 'தொல்லியலும் வரலாறும்', 'மானிடவியலும் அறிவியலும்', 'தேசியமும் சிறுபான்மையினரும்', 'இந்திய மொழிகள்', 'போரும் பஞ்சமும்', 'அகதிகள் மறுவாழ்வு', 'இந்திய மாகாணங்களின் மொழிக்கட்டமைப்பு' போன்ற பல்வேறுபட்ட தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகளை சாகா தந்திருக்கிறார்.
பேராசிரியர் ஜகதீஸ் சந்திர போஸ் உடன் மேக்நாட் சாகா (1930).

நிற்பவர்கள் இடமிருந்து வலமாக: ஸ்நேகமாயி தத்தா, சத்தியேந்திரநாத் போஸ், தேபேந்திரமோகன் போஸ், நிகில்ரஞ்சன் சென், ஜே.என். முகர்ஜி, என்.சி. நாக். அமர்ந்திருப்பவர்கள் இடமிருந்து வலமாக: மேக்நாட் சாகா, ஜகதீஸ் சந்திர போஸ், ஜனன் சந்திர கோஷ்.
அறிவியல் அறிஞர்கள் மக்களிடமிருந்து முற்றிலும் தனிமைப்பட்டு, தங்களின் ஆய்வுக்கூடங்களே கதி என இருப்பவர்கள் என நாம் பொதுவாகக் கருதிக் கொண்டிருக்கிறோம். அது உண்மையும்கூட. சாகா அதிலும் வேறுபட்டு நின்றவர். 1952 ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் பதவிக்குச் சுயேச்சையாகப் போட்டியிட்டுக் காங்கிரஸ் வேட்பாளரைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வென்றவர் சாகா. நாடாளுமன்ற அவையில் இருந்த ஐந்தாண்டுகளில், அணுசக்தி அறிவியல், நதிகளில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தும் திட்டங்கள், கிராமங்களை மின்சாரமயமாக்குவது, இந்தியா முற்றிலும் தொழில் மயமாக்கப்பட வேண்டும், இந்தியத் தொழில்துறை சோசலிச சமூகத்தை உருவாக்கும் விதத்தில் பொதுத்துறைத் தன்மையுடன் கட்டமைக்கப்பட வேண்டும், அது அந்நிய நாடுகளைச் சார்ந்து நிற்காமல் சுயசார்புடன் இயங்க வேண்டும், அணு ஆற்றலைப் பயன்படுத்தும் ஆய்வுகளில் இரகசியத் தன்மையைக் கைவிட்டுவிட்டு வெளிப்படையாக முடிவுகள் எடுக்கப்படவும், செயல்படுத்தப்படவும் வேண்டும், அறிவியல் தொழில்நுட்பத்தைக் கொண்டு சமூகப் பொருளாதாரச் சுரண்டல்களுக்கு ஆளாகிக் கிடக்கும் கோடானுகோடி இந்திய மக்களின் கல்லாமை - ஏழ்மை - நோய்மை ஆகிய மூன்றையும் ஒழிக்க வேண்டும் என்பன போன்ற எண்ணற்ற முற்போக்கான செயல் திட்டங்களை வலியுறுத்தி அன்றைய பிரதமர் நேரு உள்பட முக்கியமான காங்கிரஸ் தலைவர்களுடன் தொடர்ந்து நேருக்கு நேர் மோதிக் கொண்டே இருந்திருக்கிறார். அதன் விளைவுதான் ஹோமி பாபாவுக்கு முன்னரே அணு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு, அதற்காக 'சைக்ளோட்ரான்' என்ற கருவியையும் சொந்த முயற்சியில் நிறுவியவரான சாகா, அணு ஆய்வுக்கழகம் உள்பட அனைத்து அணு ஆற்றல் சார்ந்த துறைகளில் இருந்தும் முற்றிலும் விலக்கி வெளியே வைக்கப்பட்டு விட்டார்!
கல்வியைத் தாய்மொழி மூலமே வழங்க வேண்டும் என்று இடையறாமல் வலியுறுத்தி வந்தவர் சாகா. சாகாவின் விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ள முடியாத நேரு, நாடாளுமன்ற அவையிலேயே தனிப்பட்ட முறையில் சாகாவைத் தாக்கிக் கீழ்க்காணும் வார்த்தைகளைப் பிரயோகித்திருக்கிறார்: "இவர் பெரிய அறிவியலாளராக அறியப்படுகிறவர். இவர் ஒரு பெரிய அறிவியலாளர். ஆனால், அறிவியலை விட்டு விலகி வந்து விட்ட இவர் இதுவரை வேறு எங்கும் கால் ஊன்ற இடம் கிடைக்காததால் அதிர்ஷ்டவசமாக இந்த அவைக்கு வந்துவிட்டார்!" என்கிறார் நேரு. எவ்வளவு வன்மம்!
நூலின் நிறைவுப்பகுதியில், தேவிகாபுரம் சிவா, ஏன், எப்படியெல்லாம் இந்திய ஆளும் வர்க்கங்களாலும், ராமன் - பாபா போன்ற சக ஆய்வாளர்களாலும் சாகா புறக்கணிக்கப்பட்டார் என்பதைத் தொகுத்துத் தந்திருக்கிறார். அவரின் வார்த்தைகளிலேயே பின்வரும் கருத்துகளோடு இந்தக் கட்டுரையை நிறைவு செய்வது சரியாக இருக்கும்: "ஒரு வர்க்க வேறுபாடற்ற சமூகத்திற்கான ஏக்கத்தோடு சாகாவின் வாழ்க்கை வடிந்து போனது. அவர் இன்று வரை புறக்கணிப்புக்கு உரியவராக உள்ளார். காரணம், அவர் ஒடுக்கப்பட்டவராகப் பிறந்ததால் மட்டுமல்ல. அவர் இறுதிவரை ஒடுக்கப்பட்டவர்களின் பக்கமே நின்றார் என்பதால்தான். இந்தியாவின் அரசியல் வரலாற்றில் இருந்து சாகாவை வசதியாகவும், வெற்றிகரமாகவும் மறைத்து விட்டது ஆளும் வர்க்கம். ஆனால், அறிவியல் வரலாற்றில் சாகாவின் இடத்தை யாரால் மறைக்க முடியும்? அவர் அறிவியல் வானில் தன் ஒளி வீசும் தாரகையாக, நவீன வானியற்பியலின் தந்தையாக என்றும் ஒளிவீசிக் கொண்டிருப்பார்." தாரகை என்று அல்ல, முழு நிலவாக ஒளி வீச வேண்டும் என்றும் நாம் விரும்புவோம்!
- கமலாலயன்