கீழடி அகழாய்வு மூலம் இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்ட இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை இயக்குனர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அவர்களது பேட்டி.
* தங்களது பெற்றோர் மற்றும் குடும்பப் பின்னணி பற்றிக் குறிப்பிட வேண்டுகிறோம்.
* நான் பிறந்து வளர்ந்த ஊர் பழனி. என்னுடைய தந்தையார் பெயர் இரா. கிருஷ்ணமூர்த்தி.. எனது தாயார் பெயர் கு.ச. தினமணி.இருவரும் பேராசிரியர்களாகப் பணிபுரிந்தனர்.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் என் தந்தை விலங்கியல் துறைப் பேராசிரியராக அரசு கல்லூரிகளில் பணிபுரிந்து, இறுதியாக சென்னையிலுள்ள மாநிலக் கல்லூரியிலிருந்து ஓய்வு பெற்றார். என்னுடைய தாயார்.தமிழ்த் துறைப் பேராசிரியராகப் பழனியிலுள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் பணிபுரிந்தார். எங்கள் குடும்பத்தில் நான்தான் மூத்த மகன்.. எனக்கு இரண்டு இளைய தம்பிகள் இருந்தனர். என்னுடைய தந்தையார் அவர்களின் பூர்வீக இடம் நாகர்கோவிலிலுள்ள கோட்டார் என்ற பகுதி ஆகும். எனது தாயார் அவர்களின் பூர்வீக இடம் மதுரை. இருந்த போதிலும் என்னுடைய பெற்றோர்கள் இருவரும் மதுரையிலே பிறந்து வளர்ந்தவர்கள் ஆவர். என்னுடைய தந்தை மதுரையில் உள்ள அமெரிக்கன் கல்லூரியில் விலங்கியல் துறையில் படித்தவர். என்னுடைய தாயார் மதுரையில் உள்ள ஃபாத்திமாக் கல்லூரியில் தமிழ்த் துறையில் படித்தவர். என்னுடைய பெற்றோர்கள் எங்கள் மூவரையும் தமிழ்வழிக் கல்வியிலேயே கல்வி பயிற்றுவித்தனர்.
நான் பழனியில் உள்ள சிறுமலர் நடுநிலைப் பள்ளியில் ஒன்று முதல் ஏழு வரையும், பிறகு பழனி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 8 முதல் 10 வரையும், அதன் பிறகு ஆயக்குடியில் உள்ள ஐடிஓ மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12 வரையும் பள்ளிப்படிப்பை முடித்தேன். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் நான் 11 மற்றும் 12வது வகுப்பில் வணிகவியல் துறையில், வரலாறு மற்றும் சிறப்புத் தமிழ் ஆகிய பாடத்திட்டங்களைக் கொண்ட பாடத்திட்டத்தில் படித்தேன். என்னுடைய கல்லூரிப் படிப்பு சென்னையில் தொடங்கியது என்று சொல்ல வேண்டும். என்னுடைய தாயார் 1991 ஆம் ஆண்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொழுது என்னுடைய தந்தையார் அவரைப் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் சென்னையில் பட்டப்படிப்பு படித்தால் சிறப்பாக இருக்கும் எனக் கூறி என்னை சென்னைக்கு மாற்றினார்.
சென்னையில் விவேகானந்தா கல்லூரியில் வரலாற்றுத் துறையில் நான் மூன்றாண்டு இளங்கலை வரலாற்று பட்டப் படிப்பைப் பயின்றேன் அவ்வாறு வரலாற்றுப் படிப்பை படித்துக் கொண்டிருக்கும் பொழுது, என்னுடைய பேராசிரியராக திரு கருணானந்தம் அவர்கள் இருந்தார். அவருடன் பணிபுரிந்தவரான கே. வி. கோபாலகிருஷ்ணன் என்பவர் என்னுடைய தொல்லியல் துறைப் பேராசிரியரான கே வி ராமன் அவர்களின் தம்பி ஆவார். அவர்தான் என்னைத் தொல்லியல் துறையில் சென்று படிக்கவும், அந்தத் துறை ஓர் ஆராய்ச்சித் துறை, வரலாற்றுத் துறையை விட வரலாற்றைப் பற்றி ஆய்வு செய்வதற்கான ஒரு சிறந்த துறை எனவும், அதில் என்னுடைய அண்ணன்தான் தலைமைப் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அவரை அணுகினால் அந்தத் துறையில் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைக்கும் எனவும் எனக்கு அறிவுரை கூறி என்னை அதில் படிக்க வைத்தார். இதன்மூலம் நான் என்னுடைய பட்டப் படிப்பை முடித்த பிறகு சென்னையில் உள்ள சென்னைப் பல்கலைக்கழகத்தில்
பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் எம் ஏ முதுகலைப் பட்டப் படிப்பில் சேர்ந்தேன். அப்பொழுது எனக்குத் தொல்லியல் துறைப் பேராசிரியராக இருந்தவர் பேராசிரியர் கே வி ராமன் அவர்கள் ஆவார் அவர் ஒரு தலைசிறந்த தொல்லியல் பேராசிரியர். அவர் சென்னைப் பல்கலைக்கழகத்திற்குப் பணிக்கு வருமுன் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையில் தொல்லியல் கண்காணிப்பாளராகப் பணிபுரிந்து, காவிரிப்பூம்பட்டினம் போன்ற இடங்களை அகழாய்வு செய்த பெரும் அறிஞர் ஆவார். அவரிடம் படிப்பதற்கான வாய்ப்புக் கிடைத்ததன் மூலம் தொல்லியல் பற்றிய அறிவு எனக்கு மிகசேரியாக வருவதற்கு முக்கியக் காரணமாக இருந்தது. அவரின் ஊக்கம் காரணமாகத்தான் தொல்லியல் படிப்பில் ஓர் ஆர்வம் எனக்கு ஏற்பட்டது. அவர்தான் எனக்கு இந்தத் தொல்லியல் படிப்பிற்கு வழிகாட்டியாக விளங்கியவர் என்று கூறுவதில் பெருமை அடைகிறேன்.
எம் ஏ தொல்லியல் மேற்படிப்பு படிக்கும் பொழுது பேராசிரியர் கே வி ராமன் அவர்கள் எனக்கு இந்தியத் தொல்பொருள் ஆய்வு துறையின் மூலம் நடத்தப்படும் முதுகலை பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதற்கு முக்கியக் காரணம் அந்தப் பட்டயப் படிப்பு என்பது இந்தியாவில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையின் மூலமாக 1944 ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்ற ஒரு முதுகலைப் பட்டயப் படிப்பாகும். இந்தப் பட்டயப் படிப்பு குறித்துச் சொல்ல வேண்டுமானால், அது ஒரு முறையான தொழில்நுட்ப ரீதியான பயிற்சி மற்றும் செயல் விளக்கங்களைக் கற்றுக் கொடுத்துகின்ற ஒரு கல்வித் திட்டமாகும். இந்தக் கல்வி பயில்வதற்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய அளவில் 15 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள் அதில் சேர்ந்து படித்தோமேயானால் இந்தியா முழுவதுமுள்ள பல தொல்லியல் அனுபவங்களைக் கற்றறிந்து கொள்ள முடியும் என்ற ஒரு கருத்தை எடுத்துரைத்தார்: அதன் அடிப்படையில் நான் எம். ஏ. பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் முதுகலை பட்டப் படிப்பை முடித்த பிறகு எம். பில். எனப்படும் ஆய்வுப் படிப்பையும் சென்னை பல்கலைக்கழகத்திலேயே நான் தொடர்ந்தேன் அந்த ஆய்வுப் பட்டத்தை முடித்த பிறகுதான் நான் புதுடெல்லியிலுள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறையின் கீழ் நடத்தப்படும் இந்த பி.ஜி.டி.ஏ. என்ற பட்டயப் படிப்பில் சேர்ந்து 1999 முதல் 2001 வரை படித்து முடித்து, அதில் தேர்ச்சி பெற்றேன். இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறை நடத்தும் பட்டயப் படிப்புப் படித்த காரணத்தினால்தான் நான் மத்தியப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசில் உள்ள இந்தியத் தொல்பொருளாய்வுத் துறையில் பணி செய்வதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அதன் மூலம் 2004 ஆம் ஆண்டு முதல் நான் இந்திய த தொல்பொருள் ஆய்வுத் துறையில் பணி புரிந்து வருகிறேன்.
* தமிழகத்திற்கு வருவதற்கு முன்பே வட இந்தியாவில் முக்கிய அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளீர்கள். அவை குறித்த விவரங்களைப் பதிவிடவும்.
* தமிழகத்திற்கு வருவதற்குமுன் என்று சொல்வதை விட, நான் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறையில் எம் ஏ முதுகலைப்பட்டப் படிப்புப் படித்து வரும்பொழுதே, எங்களுக்கு முதல் முறையாகத் தொல்லியல் ஆய்வுகள் குறித்துப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. அவ்வாறு நடத்தப்பட்ட பயிற்சியில் முதன்முறையாகக் களஆய்வு எவ்வாறு செய்வது என்பதைக் கற்றுக் கொண்டோம். அத்தோடு அல்லாமல் முதன்முதலில் அகழாய்வு செய்கின்ற முறையை எனக்குத் "திருவேற்காடு" என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வு மூலம் அகழாய்வு செய்கின்ற நெறிமுறைகளை மிகவும் துல்லியமாகக் கற்றுக் கொடுத்தார்கள். அதுவே என்னுடைய முதல் அகழாய்வுப் பணியின் தொடக்கம் என்று சொல்ல வேண்டும். அதற்குப் பிறகு நான் டெல்லியில் உள்ள இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையில் முதுகலை பட்டயப் படிப்புப் படிக்கும் பொழுது இரண்டு இடங்களில் அகழாய்வு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. அதிலும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் இந்த பட்டயப் படிப்புப் படிக்கும் பொழுது, இந்தியா முழுவதும் செல்வதற்கான ஒரு வாய்ப்புக் கிடைக்கும். அதன் மூலம் பல வகையான பண்டைய நினைவுச் சின்னங்களைப் பார்க்கின்ற வாய்ப்பை நான் பெற்றிருந்தேன்.
அத்தோடு அல்லாமல் முதலாம் ஆண்டு பயிற்சியின் போது ஹரியானா மாநிலத்திலுள்ள "ராக்கிகடி" என்ற இடத்தில் அகழாய்வு செய்வதற்கான வாய்ப்புக் கிடைத்தது. இந்த இடம் ஹரியானா மாநிலத்திலுள்ள ஒரு மிகச் சிறந்த சிந்து சமவெளி நாகரிகத்தைச் சார்ந்த இடமாகும். அந்த இடத்தில் மூன்று மாதங்கள் தங்கி அங்கு அகழாய்வு செய்கின்ற பொறுப்பை எங்களுக்குக் கொடுத்திருந்தார்கள். அதன் மூலம் சிந்து சமவெளி நாகரிகத்தின் களஆய்வை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை முறையாக நாங்கள் கற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு எங்களுக்கு ஏற்பட்டது அதேபோல் இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பின் பொழுது உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள "சிராவஸ்தி" என்ற இடத்தில் அகழாய்வு செய்கின்ற வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்த இடம் புத்தர் காலத்தைச் சார்ந்த ஒரு புகழ்மிக்க இடமாகும். அந்த இடத்தில் புத்தர் தன்னுடைய அதிசயங்கள் நிகழ்த்தியதாகக் கருதப்படுகின்றது அந்த இடம் இரண்டாம் நகரமயமாக்கல் தத்துவத்தின்படி ஏற்பட்ட ஒரு நகரமாகும் அந்த நகரத்தில் பணி செய்வதற்கான வாய்ப்பு எனக்கு இந்த அகழாய்வின் மூலம் கிடைத்தது. டெல்லியில் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் பட்டயப் படிப்பு முடித்த பின், சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி உதவியாளனாகப் பணிபுரிவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது அந்தப் பல்கலைக்கழகம் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள "பாலூர்" என்ற இடத்தில் அகழாய்வை மேற்கொண்டது. அந்த அகழாய்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது இந்த அகழாய்வு இடம் சங்க கால நாகரிகத்தைச் சார்ந்த ஒரு வாழ்விடமாகும். இது போன்ற மேலே குறிப்பிட்ட இடங்களில் பணி செய்த காரணத்தினால்தான் நான் பின்னாளில் கீழடி போன்ற அகழாய்வினைச் செய்வதற்கு மிக முக்கிய அடித்தளமாக அமைந்தது.
மேலும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் புதுடெல்லியில் இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறையில் பட்டயப் படிப்புப் படிக்கும் பொழுது மேற்கொண்ட "ராக்கிகடி" ஆய்வுதான் முழு அனுபவத்தை எனக்குக் கொடுத்தது எனச் சொல்ல வேண்டும் அங்கு அச்சமயம் அகழாய்வு செய்யும் பொழுது சிந்து சமவெளி நாகரிகத்தின் புதைபிடப் பகுதியைக் கண்டறிவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஏனென்றால் இந்த இடத்தில் இதற்கு முன் செய்திருந்த ஆய்வில் மக்களின் புதைப்பிடம் சரியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த ராக்கிகடியில் நான் பணி செய்யும் பொழுது அது மூன்றாம் ஆண்டு செய்கின்ற பணியாக இருந்தது. அப்பொழுது அங்கு முதல் முறையாகக் கோதுமை வயல்களில் அந்தப் புதைப்பிடத்தைக் கண்டுபிடித்தோம். 2014 ஆம் ஆண்டு டெக்கான் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் வசந் ஷிண்டே என்பவர், அந்தப் புதைப்பிட ஆய்வில் கிடைத்த மரபணுவை வைத்துத்தான், "சிந்துவெளியில் வாழ்ந்த மக்கள் திராவிடப் பழங்குடிகளே " என்று ஆணித்தரமாக ஆய்வு மூலம் கண்டறிந்து அறிவித்தார்.
கீழடி பேட்டி - இரண்டாம் பகுதி
* ஆய்வுப் பணிக்கு ஏற்றதாகக் கீழடியை எவ்வாறு கண்டறிந்தீர்கள் என்பதை விரிவாகக் குறிப்பிடவும்.
* மேலே குறிப்பட்டது போல் பல இடங்களில் அகழாய்வு செய்த அனுபவங்கள்தான் என்னைக் கீழடியில் அகழாய்வு செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. நான் பெங்களூரில் உள்ள அகழாய்வுப் பிரிவிற்கு 2013 ஆம் ஆண்டு மாறுதல் செய்யப்பட்ட பொழுது இந்த முயற்சி எனக்குக் கைகூடியது என்று சொல்லுவேன்.
இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் துறையில் அகழாய்வுப் பிரிவு என்று சொல்லப்படுகின்ற பிரிவு மிகவும் இன்றியமையாத ஒரு முக்கியமான பிரிவாகும். இது போன்ற அகழாய்வுப் பிரிவின் மூலமாகத்தான் இந்தியாவில் உள்ள பெரும்பாலான தொல்லியல் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அகழ்ந்தெடுக்கப் பட்டுள்ளன. அவ்வகையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், இந்தியத் தொல்பொருள் ஆய்வுத்துறையால் பல இடங்களில் அகழாய்வுப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. மிகவும் குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், தென்னிந்தியாவைத் தவிர வட இந்தியாவின் பல பகுதிகளில் இந்த வகையான அகழாய்வுப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டன. முறையே நாக்பூர், புதுடில்லி, பாட்னா, புவனேஸ்வரம், மற்றும் பரோடா ஆகிய இடங்களில் இவை முதன்முதலில் உருவாக்கப் பட்டன. அச்சமயம் தென்னிந்தியாவிற்கு என ஓர் அகழாய்வுப் பிரிவு ஏற்படுத்தப் படவில்லை. அது அண்மையில்தான் அதாவது 2001 ஆம் ஆண்டுதான் மைசூரைத் தலைமை இடமாகக் கொண்டு ஓர் அகழாய்வுப் பிரிவு தென்னிந்தியாவிற்கு என்று உருவாக்கப்பட்டது.
அந்தப் பிரிவில் 2010 ஆம் ஆண்டு முதல்தான் அகழாய்வுகள் நடைபெறத் தொடங்கின. அதைத் தொடர்ந்து எங்களுடைய ஆய்வுதான் இரண்டாவது ஆய்வாக இந்த அகழாய்வுப் பிரிவில் அமைந்திருந்தது எனக் குறிப்பிடுவதில் பெருமை கொள்கிறேன்.
2013 ஆம் ஆண்டு இந்த அகழாய்வுப் பிரிவுக்கு நான் மாறுதலாகிய பிறகு என்னுடைய சிறிய குழுவிற்கு ஓர் எண்ணம் தோன்றியது. அதாவது ஏன் நாம் தமிழகப் பகுதியில் கள ஆய்வுகள் மேற்கொள்ளக்கூடாது, அவ்வாறு கள ஆய்வுகள் மேற்கொண்டு அதில் கிடைக்கின்ற ஓர் இடத்தைத் தேர்வு செய்து ஏன் அகழாய்வு செய்யக்கூடாது என்ற எண்ணம்தான் எங்கள் குழுவிற்கு இருந்தது. அந்த வகையில் எங்களுடைய குழு 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலகட்டத்தில் வைகை நதிக்கரையை முழுமையாகக் கள ஆய்வு செய்யலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்தோம். அதன் அடிப்படையில் இந்தக் கள ஆய்வை நாங்கள் 2013ஆம் ஆண்டு தொடங்கி, ஓராண்டில் இதைச் செய்து முடித்தோம். அந்தச் சமயம்தான் வைகையின் இரு புறம் உள்ள பகுதிகள் முழுமையாகக் கள ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. கிட்டத்தட்ட வைகை ஆற்றங்கரையின் வலது கரை மற்றும் இடது கரையில் உள்ள சுமார் 10 சதுர கிலோமீட்டர் கொண்ட பரப்பளவுப் பகுதிகளை ஆய்வுக் களமாக எடுத்துக்கொண்டு முழுமையான களஆய்வை மேற்கொண்டோம்.
அந்த சமயத்தில் ஒவ்வொரு ஊராகச் சென்று அந்த ஊரிலுள்ள வயதான நபர்களைச் சந்தித்துத் தகவல்களைத் திரட்டுவது என்பது ஒரு பொதுவான செயலானது. . ஏனெனில் எங்களிடம் வரலாற்றுத் தகவல் குறிப்புகள், வரைபடங்கள், கல்வெட்டுச் செய்திகள் எல்லாம் இருந்தாலும், ஓர் ஊரில் இறங்கியவுடன் அந்த ஊரைப் பற்றிய தகவல்களை அந்த ஊர் மக்களிடம் கேட்கும் பொழுது பல சுவாரசியமான தகவல்களை எங்களுக்கு அவர்கள் கொடுத்தார்கள். அதன் மூலம் கள ஆய்வுச் செய்திகளை முழுமையாகப் பெறமுடிந்தது. மேலும் ஆய்வுத் தளங்களைச் சரியாக அடையாளம் காண முடிந்தது.
அதன் அடிப்படையில் நாங்கள் மதுரையைத் தாண்டி சிலைமான் பக்கம் வரும் பொழுது, திரு. பாலசுப்ரமணியன் என்ற பள்ளி ஆசிரியரைச் சந்திக்கின்ற வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. அவர் எங்களுக்கு முனைவர். வேதாசேலம் அவர்களின் மூலமாகத்தான் அறிமுகமானார். முனைவர் வேதாசேலம் அவர்கள் தமிழகத் தொல்லியல் துறையில் கல்வெட்டு ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்ற அறிஞர் ஆவார். அவர் மதுரையைச் சுற்றிப் பல இடங்களில் கள ஆய்வு பல மேற்கொண்டு தொல்லியல் ஆதாரங்களைச் சேகரித்து வைத்துள்ளவர். நாங்கள் மேற்கொண்ட 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுக் கள ஆய்வில் எங்களுடைய குழுவில் அவர் இடம் பெற்றிருந்ததோடு, எங்கள் குழுவிற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
எங்களுடைய கள ஆய்வுக்குழு என்பது மிகச்சிறிய ஒரு குழுவாகும். அதற்கு நான் தலைமை தாங்கினேன். இரண்டு தொல்லியல் உதவியாளர்களும், ஆறு ஆராய்ச்சி மாணவர்களும் எங்கள் குழுவில் இருந்தனர். இந்தப் பயணத்தில் முனைவர் வேதாசேலம் அவர்களும் இடம் பெற்று இருந்தார் என்று சொல்லுகின்ற செய்தி ஒரு சிறப்புமிக்க செய்தி ஆகும்.
நாங்கள் இந்தக் களஆய்வுப் பயணத்தைத் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாட்டுப் பகுதியிலிருந்து தொடங்கினோம். அது வைகை நதி தோன்றும் இடமாகத் திகழ்கிறது அவ்வாறு பயணித்து வந்தவர்கள் மதுரையைத் தாண்டி நாங்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது சிலைமான் என்ற இடத்தில் திரு பாலசுப்பிரமணியன் என்ற ஆசிரியரை சந்திக்கின்ற வாய்ப்பு ஏற்பட்டது. அவர் கீழடிப் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகவும், தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். மேலும் அவர் முனைவர் வேதாசேலம் அவர்களின் நெருங்கிய நண்பரும் ஆவார். அப்பொழுது அவர் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த செய்தியை எங்களுக்குப் பகிர்ந்து கொண்டார். அதாவது 1976 ஆம் ஆண்டு கீழடி அரசு உயர்நிலைப் பள்ளியில் அவர் பணிபுரிந்த பொழுது அவருடைய மாணவர்கள் தங்களுடைய தோட்டத்தில் கிணறு தோண்டும் பொழுது சில தொல்பொருட்கள் கிடைத்ததாக அவரிடம் கொண்டுவந்து கொடுத்திருந்தனர். அவர் அந்தப் பள்ளியிலே வரலாற்று முனையம் (History Corner) என்ற ஒரு சிறிய அமைப்பை ஏற்படுத்தி அந்தத் தொல்பொருட்களை வைத்திருந்தார். அதோடு அல்லாமல் அங்கு கிடைத்த தொல்பொருட்களைப் பற்றிய தகவல்களை அன்றைய தமிழகத் தொல்லியல் துறைக்கும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும் தெரிவித்திருந்தார் ஆனால் அந்த சமயத்தில் எந்த ஒரு மேல் ஆய்வுகளும் அப்பொழுது எடுக்கப்படவில்லை.
மேலும் தொல்லியல் துறை இயக்குனரான திரு நாகசாமி அவர்களிடமும் இது பற்றி அவர் தகவல் தெரிவித்திருந்தார் அவர் கூறிய தகவலின் அடிப்படையில் அன்றைய தினம் உள்ள மாநிலத் தொல்லியல் அலுவலர்கள் அந்தப் பொருட்களை ஆய்வு செய்துள்ளனர். அவை சங்க காலப் பொருட்கள் என்று உறுதிப்படவும் கூறியுள்ளனர் ஆனால் அதை தவிற வேறு எந்த மேல் ஆய்வுகளும் நடைபெறவில்லை.
அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆசிரியர் அவர்களை எங்களுடைய கள ஆய்வின் பொழுது சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. அவரைச் சந்தித்த பிறகுதான் அவருடைய மனைவியின் தங்கை திருமதி. முத்துலெட்சுமி அவர்களும், என்னுடைய தாயாரும் அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் ஒன்றாகப் பணியாற்றியவர்கள் என்ற செய்தி எனக்குத் தெரிய வந்தது. அது மனதிற்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அதன் மூலம் எங்களுடைய நட்பு மிகவும் சுவையான நட்பாக மாறியது. திரு பாலசுப்ரமணியம் அவர்கள் பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். அவர் தன்னுடைய வரலாற்று ஆர்வத்தை எங்களுடன் முழுமையாகப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், கீழடி அகழாய்வு இடத்தை அவர் 1976 ஆம் ஆண்டுவாக்கில் பார்த்தவர் அப்பொழுது அது வெறும் புஞ்சை காடாக மட்டும்தான் இருந்துள்ளது. ஆனால் நாங்கள் கள ஆய்வு செய்யும் காலகட்டமான 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டு காலவாக்கில் அந்த இடம் பெரும் மாறுதலுக்கு உட்பட்டிருந்தது. எனவே அந்த இடத்தை முழுமையாகக் கண்டறிவதற்கு அவருக்கும் இயலாததாக இருந்தது. நாங்கள் இதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் பொழுது எங்களுக்கு அருகில் இருந்த ஒரு லாரி டிரைவர் திரு மகாராஜன் என்பவர் தான் எங்களுக்கு அந்த இடத்திற்கான வழியைக் காண்பித்தார். இந்த லாரி டிரைவர் அங்கிருக்கும் தென்னந்தோப்பில் இருந்து தேங்காய் எடுத்து வருவது அவரின் முக்கிய பணி ஆகும் நாங்கள் பேசிக் கொண்டிருந்த சொற்களைக் கேட்டு, "நீங்கள் தேடுகின்ற பானை ஓடுகள் திரு. திலீப்கான் என்பவருடைய தோட்டத்தில் காணக் கிடைக்கும். நீங்கள் அங்கு சென்று பார்க்கவும்" என்று எங்களுக்கு வழி காட்டினார் அதன் பின்னர்தான் அந்த இடம் இன்று தென்னந்தோப்பாக மாறி உள்ளது என்பதை நாங்கள் உணர்ந்தோம்.
ஆசிரியர் பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு 1976 ஆம் ஆண்டு அவருடைய மாணவர்கள் கிணறு வெட்டும் பொழுது கிடைத்த தொல்பொருட்களை கொண்டு வந்து தந்த பொழுது அந்த இடம் ஒரு புஞ்சை மேடாகவும், புஞ்சைக் காடாகவும் மட்டுமே இருந்துள்ளது ஆனால் இன்று அந்த இடம் தென்னந்தோப்பாக மாறி உள்ளது. இந்தத் தென்னை மரங்கள் தான் அந்தத் தொல்லியல் மேட்டைக் காத்து வந்தன என்பது மிகவும் சிறப்புக்குரிய செய்தியாகும். இல்லை என்றால் அந்த இடம் எங்களுக்குக் கிடைத்திருக்க வாய்ப்பே இருந்திருக்காது. எங்களுக்கு இந்தக் கீழடி இடத்தைக் கண்டுபிடிக்க உதவி புரிந்த, எங்கள் குழுவில் பங்கு பெற்றிருந்த முனைவர். வேதாசேலம் அவர்களுக்கும், பள்ளி ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்களுக்கும், எங்களுக்கு வழிகாட்டியாக அமைந்த லாரி டிரைவர் மகாராஜன் அவர்களுக்கும் நாங்கள் என்றென்றும் நன்றிக்கடன் பட்டுள்ளோம் இவர்களின் உதவியின் மூலமாகத்தான் இந்தக் கீழடி அகழாய்வு இடம் கண்டுபிடிக்கப்பட்டது. அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் முதன்முதலாக 2014 மற்றும் 2015 ஆம் ஆண்டில் அகழாய்வு செய்வதற்கான வாய்ப்பினை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது என்பதைச் சொல்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
* தொல்லியல் ஆய்வாளர் என்ற முறையில் தமிழின் தொன்மை குறித்த உங்கள் கருத்தைப் பதிவு செய்யவும்.
* குரங்கிலிருந்து மனிதனாக மாற 45 இலட்சம் ஆண்டுகள் ஆயின. அதிலும் குறிப்பாக நிமிர்ந்த மனிதனாக (Homoerectus) வடிவெடுக்கப் பற்பல ஆண்டுகள் ஆகியுள்ளது.. தமிழகத்தைப் பொருத்தவரை 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே இங்கு மக்கள் வாழ்ந்து வந்துள்ளனர். அத்திரப்பாக்கம், குடியம் மற்றும் பல்லாவரம் போன்ற பகுதிகளில் இதற்கான ஆதாரங்கள் உள்ளன. பெருங்கற்காலக் காலத்திலேயே திணைக் கோட்பாட்டுப்படி ஊர் அமைப்பு மற்றும் அரசு அமைப்பு தமிழகத்தில் சிறப்பாக அமைந்திருக்கிறது. 70,000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரிடம் காணப்படும் வி -130 எனும் மரபணு, மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சார்ந்த ஜோதி மாணிக்கம் எனும் ஊரிலுள்ள விருமாண்டி என்பவரிடம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.
மனிதன் முதன்முதல் ஆப்பிரிக்காவில் தோன்றி அங்கிருந்து வெளியேறிய மனிதரிடம்தான் இத்தகைய மரபணு காணப்பட்டுள்ளது. இது மரபணு சோதனை (DNA) மூலம் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும். மத்திய ஆசியா மைனர் பகுதி அனடோலியாவில்தான் முதன் முதலில் இரும்பு கண்டுபிடிக்கப் பட்டதாக இதுவரை அனைவரும் நம்பினர். ஆனால் தமிழகத்தில் மயிலாடும்பாறை பகுதியில் கி.மு.2142-ல் இரும்பு முதன் முதலில் கண்டு பிடிக்கப்பட்டது இப்பொழுது இது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்தோடு அல்லாமல் அண்மையில் சிவகளை ஆய்வு, இரும்புக் காலத்தை மேலும் பின்னுக்கு நகர்த்தி சுமார் கி.மு. 3300 ஆண்டுவாக்கில் தமிழகத்தில் இரும்பு பயன்படுத்தப் பட்டது என்ற செய்தியை எடுத்துச் சொல்கிறது.
மேலும் தமிழியிலிருந்து உருவாக்கப்பட்டதுதான் பிராமி என்னும் எழுத்து வடிவம். ஏனெனில் முதன்முதலில் எழுத்துக்கள் உருவாக்கிய பகுதி தமிழகம். அசோகரது காலத்திற்கு முன்பே தமிழி உருவாகி இருந்தது. பொதுவாக அசோகரது பிராமி எழுத்துக்களுக்குப் பிறகுதான் தமிழ் பிராமி உருவாகியிருக்கும் எனும் கருத்து தவறானது என்பது அண்மைக்கால ஆய்வுகள் எடுத்துக் கூறக்கூடிய செய்தியாகும்.
மேலும் அசோகரது கல்வெட்டுகள் அரசு ஆணைகளைத் தெரிவிப்பனவாக இருந்தன. அந்த சாசனக் கல்வெட்டுகள் வளர்ச்சி அடைந்த எழுத்துக்களாக உள்ளன. அதில் தவறுகள் இருக்காது. ஆனால் கீழடியின் அடிப்பகுதியில் இருப்பது கீறல் எழுத்துக்களாக உள்ளன. சாதாரணக் குடிமக்களும் தங்களது பெயர்களைக் குறிப்பிடுவதால், அதில் சில பிழைகள் உள்ளன.
மேலும் எழுத்துப் பயிற்சி நடைபெற்றுள்ள கீழடியின் மேல் பகுதியில் தெளிவான எழுத்துக்கள் உள்ளன. 1,600 எழுத்துப் பொறிப்புகள் தமிழகத்தில் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. மேலும் சமசுகிருதத்தை விடத் தமிழ் தொன்மை மிக்கது.
கி.பி. ஒன்றாம் நூற்றாண்டில்தான் முதல் சமஸ்கிருதக் கல்வெட்டு கிடைத்துள்ளது. . இராஜஸ்தானிலுள்ள அத்திபாரா என்ற இடத்தில் கிடைத்த கல்வெட்டே சமஸ்கிருதத்தின் முதல் கல்வெட்டாகும். தவிரவும், சமஸ்கிருதத்தை ஆண்கள் மட்டுமே பேச முடியும். எனவே அது தந்தை -- மகன் மொழி என அழைக்கப்படுகிறது. ஆனால், தமிழ் அப்படிப்பட்டதல்ல!
அதே போல், இந்தியாவில் தங்கக் கட்டியின் மீது தமிழி அல்லது தமிழ்பிராமி எழுத்துக்கள் எழுதப்பட்ட பொறிப்புகள் மகரைக்கு அருகிலுள்ள தேனூரில் கிடைத்துள்ளன. கோதை எனும் தமிழ் பிராமி எழுத்துப் பொறிக்கப்பட்ட ஏழு தங்கக் கட்டிகள் தமிழகத்தில்தான் கிடைத்துள்ளன.
* புதைப்பிடம் மற்றும் வாழ்விடம் குறித்த தொல்லியல் அணுகுமுறை பற்றித் தெளிவு படுத்துக!
* புதைப்பிடம் என்பது இடுகாட்டைக் குறிக்கும் பகுதியாகும். தமிழகத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் தோண்டப்பட்டு பட்டுள்ளன. பொதுவாக எதற்கும் பயன்படாத இடங்களில் புதைப்பிடம் காணப்படுகிறது. மாறாக, மக்கள் வாழ்ந்த இடங்களான பொதுவாக சமவெளிப்பகுதிகளில் அமைந்திருந்த வாழ்விடங்கள் மூலம் அப்பகுதியில் வாழ்ந்த மக்கள் குறித்த பல்வேறு செய்திகளை அறிய முடியும். அவ்வகையில் கீழடி அகழாய்வு மிக முக்கியமானதோர் வாழ்விடம் ஆகும். வாழ்விடப் பகுதி இல்லாமல் புதைப்பிடப் பகுதி மட்டும் உருவாவதில்லை. புதைப்பிடம் மற்றும் வாழ்விடம் ஆகிய இரண்டையும் இணைத்துக் காண்பது முழுமையான புரிதலை அளிக்கும்.
* கீழடி அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட செய்திகள் யாவை?.
* தமிழின் தொன்மை குறித்துச சங்க இலக்கியங்களில் பல குறிப்புக்கள் இருந்தாலும், வரலாற்று அறிஞர்கள் அவை புனைவுகள் என்பதாக மட்டுமே கருதி, தமிழின் தொன்மையை ஏற்க மறுத்தனர். ஆனால் கீழடி அகழாய்வு அறிவியல் வழியில் தமிழின் தொன்மைக்கு அழிக்க முடியாத சாட்சியாக இருப்பதால், ரோமிலா தாப்பர் போன்ற அறிஞர்கள் இப்பொழுது தமிழின் தொன்மையையும் சிறப்பையும் ஏற்க முன்வந்துள்ளனர்.
அந்த நிகழ்வு நடந்த இடம் கேரள மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இந்திய வரலாற்று பேராயம் நடத்திய கருத்தரங்காகும். அதில் ஆய்வாளர் செரியன் அவர்கள் கேரளப் பகுதியிலுள்ள பட்டணம் என்று அழைக்கப்படும் முசிறி என்னும் சங்ககாலத் துறைமுக நகரத்தைக் கண்டுபிடித்தார்.
பட்டணம் குறித்த ஆய்வை அவரும், கீழடி குறித்த ஆய்வை நானும் வரலாற்றறிஞர் ரோமிலா தாப்பர் அவர்களின் முன்னிலையில் விளக்கிப் பேசினோம். ரோமிலா தாப்பர் அதுவரை சங்கப்பாடல்கள் மூலம் வெளிப்பட்டு வந்த தமிழர்களின் தொன்மையை இந்தத் தொல்லியல் ஆய்வுகள் அறிவியல் பூர்வமாக உறுதிசெய்கின்றன என்பதை ஏற்றுக் கொண்டார். இப்படி இலக்கியச் சான்றுகளையும் அகழாய்வு முடிவுகளையும் இணைத்தது கீழடியின் தனிச்சிறப்பாகும்.
அடுத்து, தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் புதைப்பிடங்கள்தான் அதிகம் இருந்தன. வைகை ஆற்றங்கரை பகுதியில்தான். முதன்முதலாக நூற்றுக்கும் மேற்பட்ட வாழ்விடங்கள் இருப்பதை கண்டறிந்தோம். அதில் ஓரிடம்தான் கீழடி. அதுவே கீழடியின் முக்கியச் சிறப்பாகும்.
கீழடியில் ஏழு இலட்சம் பானை ஓடுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதில் 1,03000 பானை ஓடுகள் அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டு, அதில் 13,000 பானை ஓடுகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 1,842 பானைகள் ஆய்வுக்குட்படுத்தப் பட்டன. அவற்றில் 108 தமிழி அல்லது தமிழ் பிராமி எழுத்துப் பொறிப்புகள் கொண்ட பானை ஓட்டைக் கண்டோம். அவற்றை முறைப்படி அட்டவணைப் படுத்தினோம்.
அதன் மூலம் கீழடியின் காலத்தைத் தீர்மானித்தோம். கி..மு. 800 முதல் கி.மு.500 வரையுள்ள காலகட்டம் தொடக்கக் காலகட்டம் எனவும், கி.மு. 500 முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரை வளர்ச்சி பெற்ற காலகட்டம் எனவும், கி.மு. முதல் நூற்றாண்டிலிருந்து கி.பி. மூன்றாம் நூற்றாண்டு வரை நகரம் நலிவடையத் தொடங்கிய காலகட்டம் எனவும் உறுதி செய்தோம்.
தமிழ் பிராமி எழுத்துகள் தமிழ்நாட்டில்தான் உருவாகியுள்ளது. இதிலிருந்து பிராகிருத மொழிக்கான பிராமி எழுத்துக்கள் பிறந்தன. அது பிறகு தெற்காசியா முழுவதும் பரவியது. தமிழ் பிராமி மொழியில் எளிய மக்கள் தங்களது பெயர்களை எழுதி வைத்துள்ளனர். தமிழகத்தில் மேற்கொண்ட அகழாய்வுகள் அதை மெய்ப்பித்துள்ளன.
கீழடியில் செங்கற்களால் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. இங்குள்ள மக்கள் கல்வி அறிவு பெற்றவர்களாகவும், தமக்குத் தேவையான பொருட்களை குஜராத் மற்றும் ஆப்கானிஸ்தானம் பகுதிகளிலிருந்து வாங்கிப் பயன்படுத்தியுள்ளனர்.
தென்னிந்தியாவிலேயே குதிரையின் எலும்பு கீழடியில்தான் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குதிரைகள் மத்தியதரைக் கடல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
குதிரைகள் கப்பலிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதைப் பட்டினப்பாலை போன்ற நூல்கள் தெரிவிக்கின்றன.
இப் பகுதியில் நூல் நூற்க உதவும் தக்களி கண்டறியப்பட்டுள்ளதால், இங்கு வாழ்ந்த மக்கள் பருத்தி ஆடை அணிந்திருக்கக் கூடும் எனத் தோன்றுகிறது. சீனத் திலிருந்து பட்டாடைகளும் பெறப்பட்டுள்ளன. இங்கு நெற்பயிர் அதிக அளவு பயிரிடப்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை வளர்ப்புப் பிராணிகளாக வளர்க்கத் தொடங்கி உள்ளனர். பிறகு மக்கள் விவசாயத்தின் மூலம் உணவு உற்பத்தி அதிகரித்ததின் காரணமாக, நகரநாகரிகம் வளர்ச்சி அடைந்தது. அகழாய்வின் பொழுது முதலில் கூரை வீடுகள் தென்பட்டன. தொடர்ந்து தோண்டிய பொழுது, கட்டடங்கள் கண்டறியப்பட்டன.
கீழடி உணர்த்தும் மற்றோர் செய்தி முக்கியமானது. மதம் சார்ந்த எந்த விவரமும் கீழடி அகழாய்வில் கிடைக்கவில்லை. அன்றைய தமிழர்கள் இயற்கையை வழிபடுபவர்களாக இருந்தனர். தவிரவும், மூதாதையர் வழிபாடும் அப்பொழுது இருந்துள்ளது.. தமிழகம் எங்கும். பல இடங்களில் காணப்படும் முதுமக்கள் தாழி அதைப் பறை சாற்றுகிறது. அந்த முதுமக்கள் தாழிகளில் நிறைய உணவுப் பொருள்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் பெருமதங்கள் நுழைந்தது பிற்காலத்தில்தான் என்பதையும் இதன் மூலம் அறிய முடிகிறது.
* கரிம ஆய்வு என்றால் என்ன? கீழடியின் பொருள்கள், கரிமஆய்வு செய்யப் பட்டது குறித்துத் தெளிவு படுத்தவும்.
* தொல்லியல் துறையில் கரிம ஆய்வு (Carbon Dating) என்பது மிகவும் முக்கியமானதாகக் கருதப் படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் அறிவியல் வழியில் இருப்பதால், இவை மறுக்க முடியாத சான்றுகளாக உள்ளன. அகழாய்வின் பொழுது மண் அடுக்குகளில் ஆங்காங்கு கார்பன் பதிவுகள் இருக்கும். அதைக் கண்டறிந்து உடனடியாக அறிவியல் சோதனைகளுக்கு அனுப்ப வேண்டும்.
தாமதமாகச் சோதனைக்கு அனுப்பப்பட்டால், கண்டறிந்த பொருள்கள் மாசடைந்து விடும் (Contaminate). இதனால் காலத்தைத் துல்லியமாக அளவிட முடியாது. நான்கு ஐந்து நாட்களுக்குள் மண்ணிலுள்ள கார்பனை சோதனைக்கு அனுப்பினால் அப்பொருளின் காலத்தைத் துல்லியமாகக் கணித்து அனுப்புவார்கள்.
கீழடியிலிருந்து அப்படி அனுப்பப்பட்ட பொருள்களை அமெரிக்காவிலுள்ள BETA நிறுவனம் எனும் அறிவியல் ஆய்வகத்திற்குச் சோதனைக்காக அனுப்பப்பட்டன. முதலில் 88 கார்பன் மாதிரிகள் எடுக்கப்பட்டு, அதில் 23 மாதிரிகள் சோதனைக்கு அனுப்பப்பட்டன. அப்படி அனுப்பப்பட்ட பொழுது, 0.5 மீட்டர் முதல் 4 மீட்டர் அளவில் தோண்டப்பட்ட குழியில் கிடைத்த கார்பனின் வயது கி.மு. 300 எனக் கணிக்கப்பட்டது. ஆனால் கீழடியில் கிடைக்கும் மண் அடுக்குகளின் அளவு சுமார் 6 மீட்டர் வரை உள்ளது. அதன் காரணமாக கி.மு. 800 முதல் கி.மு. 500 வரை நகரம் உருவாவதற்கான காலமாகக் கணிக்கப்பட்டது. மேலும் கி.மு. 500லிருந்து கி.பி. 300 வரை கீழடி, நகரமாக இருந்துள்ளது.
தவிரவும், கீழடி ஆய்வுகள் அறிவியல் முறையில் இருக்க வேண்டும் என்பதற்காகக் கீழ்காணும் சோதனைகள் நடத்தப்பட்டன.
(1) Stratigraphy (ஸ்ட்ரட்டிக்ராபி ) எனப்படுவது, தாலலியல் அகழாய்வுகளில் காணப்படுகின்ற மண்ணடுக்குகளைப் பற்றி எடுத்துச் சொல்லுகின்ற ஒரு சொல்லாடல் முறையாகும். தொல்லியல் அகழாய்வுகள் அனைத்தும் இந்த மண்ணடுக்குகளின் வாயிலாகவே காலக் கணிப்புகள் செய்யப்படுகின்றன. கீழே உள்ள மண்ணெடுத்து மிகவும் பழமையான மண்ணடுக்காகவும் மேலே இருக்கின்ற மண்ணடுக்கு காலத்தால் பிந்திய மண்ணடுக்காகவும் கருதப்படுகின்றது.
(2) Relative and Absolute dating (ரிலேட்டிவ் மற்றும் அப்சல்யூட் டேட்டிங்) எனப்படுவது தொல்லியல் அகழாய்வில் இரண்டு வகையான காலக்கணிப்பு முறை கடைப்பிடிக்கப்படுகிறது. ஒன்று ரிலேட்டிவ் டேட்டிங் என்று குறிப்பிடுவர். அதாவது மண் அடுக்கில் கிடைக்கின்ற தொல் எச்சங்களை அடிப்படையாகக் கொண்டு கணிக்கப்படுகின்ற காலம் ரிலேட்டிவ் டேட்டிங் என்று அழைக்கப்படும். அப்சல்யூட் டேட்டிங் என்றால் எழுத்துக்கள் கொண்ட நாணயங்களோ அல்லது சில கல்வெட்டுகளோ காலத்தேதியைச் சுமந்து கொண்டிருந்தால், அவை சரியான காலம் அல்லது அப்சல்யூட் டேட்டிங் எனக் குறிப்பிடுவோம்.
அது பெரும்பாலும் அகழாய்வில் கிடைக்காது. இருந்தாலும் அறிவியல் ரீதியாக அண்மைக்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் அறிவியல் காலக்கணிப்புக்கள் இதில் அடங்கும்.
(3) AMS (ஏ.எம்.எஸ்டேட்) எனப்படுவது (Accelerated Mass Spectrometry) ஆக்சிலிரேட்டட் மாஸ் ஸ்பெட்ரோமெட்ரி என்று அழைக்கப்படும் சி 14 (சி14) கதிரியக்கக் கரிமக்காலக் கணிப்பாகும். இந்த முறையிலான காலக்கணிப்பு சமீப காலமாகத்தான் அனைத்து அகழாய்வுகளிலும் படுத்தப்படுகின்றன. இந்தக் காலக் கணிப்பில் ஆர்கானிக் என்று சொல்லப்படுகின்ற உயிருள்ள பொருள்களிடம் மட்டும் காலக்கணிப்புச் செய்ய முடியும். இந்த முறையில் உயிருள்ள பொருட்கள் இறந்த பிறகோ அல்லது மக்கிய பிறகோ சி14 என்ற கதிரியக்கக் கனிமம் வெளிப்படத் தொடங்கும். அந்த மக்கிய அல்லது இறந்த காலத்தை அளக்க உதவுவதே இந்த ஏ.எம்.எஸ்டேட் என்பதாகும்.
(4) Cultural Deposit (கல்ச்சுரல் டெபாசிட்) தொல்லியல் அகழாய்வில் கண்டுபிடிக்கப்படும் மண்ணடுக்குகளிலிருந்து கிடைக்கின்ற தொல்எச்சங்களை வகைப்படுத்துவதே தொல்லியல் பண்பாட்டுக் கூறுகள் எனக் குறிப்பிடப்படும். இதையே கல்ச்சுரல் டெபாசிட் என்று சொல்கிறோம். ஏனென்றால் ஓர் அகழாய்வுக் குழியில் பல காலக்கட்டத் தொல்லியல் எச்சங்கள் மண்ணடுக்குகளின் வழியாகக் கிடைக்கின்றன அந்த வகையில் கிடைக்கின்ற தொல் எச்சங்களை வகைப்படுத்தித் தொல்லியல் கலாசோரப் பண்பாடு என அழைக்கிறோம்.. இந்த முறையிலான காலக்கணிப்பு பெரும்பாலும் மக்கள் வாழ்விடப் பகுதியில் செய்யப்படும். கீழடியிலும் இது போன்ற முறையில் அறிவியலை மையப்படுத்தி தொல்லியல் பண்பாட்டின் வழியில் காலக்கணிப்புச் செய்யப்பட்டது.
இப்படிப் பல்வேறு அறிவியல் தொழில்நுட்பச் சோதனைகள் மூலம் தான் கீழடியின் தொன்மை உறுதி செய்யப்பட்டது. வட நாட்டில் அகழாய்வில் பெறப்படும் பொருள்கள் குறித்து என்னென்ன சோதனைகள் நடத்தப்படுமோ அவை அனைத்தும் கீழடியிலும் மேற்கொள்ளப்பட்டன. எனவேதான் கீழடி அறிக்கையை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை எனக் குறிப்பிடுகிறோம்.
* ஆதிச்சநல்லூர், அரிக்கமேடு, கொடுமணல், காவிரிப் பூம்பட்டினம், சிவகளை மற்றும் மதுரை ஆகிய அகழாய்வுகள் குறித்துப் பதிவிடுக!
தென்னிந்தியாவில் ஆதிச்சநல்லூரில்தான் 1876 ஆம் ஆண்டில் முதல் அகழாய்வு பெடரர் ஜோக்கர் அவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அதற்கு முன்பு 1784 -ல் வில்லியம் ஜோன்ஸ், வங்காள ஆசிய சமூகவியல் கழகம் (Asiatic Society of Bengal) என்ற அமைப்பின் மூலம் வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவிட்டிருந்தார். ஆனால் அவை யாவும் அப்பொழுதிருந்த பார்ப்பன அதிகாரிகள் கொடுத்த தகவல்களின் படி அவை கட்டமைக்கப் பட்டிருந்தன. வேதம், ஸ்மிருதி போன்ற சமய நூல்களின் அடிப்படையில் அவை அமைந்திருந்தன. எனவே அவை அறிவியல் அடிப்படையிலானவை அல்ல எனலாம். ஆதிச்சநல்லூர் 150 ஏக்கர் கொண்ட ஒரு புதைப்பிடப் பகுதியாகும். அந்த அகழாய்வு கூடத் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டதுதான். ஆனால், அங்கு வாழ்விடப் பகுதி கண்டுபிடிக்கப்படவில்லை. 1876 -ல் பெடரர் ஜோக்கர் எனும் ஜெர்மானியர் இங்கு அகழாய்வை முதலில் தொடங்கினார். 1889 - 1904 காலகட்டத்தில் அலெக்சாண்டர் ரியோ என்பாரும், 2004-ஆம் ஆண்டில் சத்திய மூர்த்தி என்பாரும், 2020- -ல் அருன்ராஜ் என்பாரும் அகழாய்வு செய்தனர். அங்கு கண்டறியப் பட்டவை கரிம ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்ட பொழுது, அங்கிருந்த பொருள்கள் கி.மு.1150-ஐச் சார்ந்தது எனத் தெரியவந்தது. ஆதிச்ச நல்லூரியில் நான்கு முறை அகழாய்வுகள் நடத்தப்பட்டிருப்பினும் அங்கு பெறப்பட்ட பொருள்கள் முறைப்படி பட்டியலிடப்படவில்லை. அங்கு இருந்த பொருட்கள் ஜெர்மனியில் உள்ளன. அவை குறித்த இறுதி அறிக்கையும் வெளியிடப் படவில்லை.
புதுச்சேரி பகுதியிலுள்ள அரிக்கமேடு, 1947-ஆம் ஆண்டில் மார்டிமர் வீலர் என்பவரால் முறைப்படி அகழாய்வு நடைபெற்றுள்ளது. இதே வீலர் அவர்கள்தான் அரப்பாவையும் தோண்டியவர் ஆவார். அறிவியல் வழியில் முதன்முதலாக வீலர் அவர்கள் அரிக்கமேடு பூமிப்பகுதியை ஆய்வு செய்து இது ஒரு புகழ்வாய்ந்த வணிகத் துறைமுகமாக இருந்ததை வெளிப்படுத்தினார். அகழாய்வில் உறை கிணறு ஒன்றும் கண்டறியப் பட்டது. நிறையமண்பாண்டங்கள், வண்ணக்கற்களும் கண்டு பிடிக்கப் பட்டன. இருப்பினும் இங்கிருந்த பொருள்கள் கரிம ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை.
மேட்டூர் அருகில் அமைந்துள்ள தெலுங்கானூர் பகுதியில் இரும்பை உருக்கி எஃகினை உருவாக்கிப் பயன்படுத்திய செய்தி தமிழ்நாட்டில்தான் கிடைக்கிறது.
கொடுமணல் பற்றிய குறிப்பு பதிற்றுப் பத்து எனும் சங்க இலக்கிய நூலில் காணப்படுகிறது. அக்காலத்தில் இது "கொடுமணம்" என அழைக்கப்பட்டது: இங்கு வாழ்விடப் பகுதிகள் இருந்தமைக்கான தடயங்கள் உள்ளன. பல்வேறு அணிமணிகள், விலையேர்ந்த கற்கள் இங்கு உற்பத்தி செய்யப்பட்டு அவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
காவிரி கடலில் புகும் இடத்தில் அமைந்துள்ளது காவிரிப்பூம் பட்டினம். இது பூம்புகார் எனவும் அழைக்கப் படுகிறது. இது ஒரு வணிகத்துறைமுக நகரமாகும்.. இப்பகுதியை அகழாய்வு செய்த பொழுது இது ஒரு வாழிடப் பகுதியாக இருந்தது கண்டறியப்பட்டது.
சிவகளை எனும் இடம் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாணிக்கம் எனும் வரலாற்று ஆசிரியரால் இந்த இடம் முதலில் கண்டு பிடிக்கப் பட்டது. தமிழகத் தொல்லியல்துறை நடத்திய ஆய்வில் இங்கு நிறைய முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. மேலும் இங்கு மண்பாண்டப் பொருள்களும். நெல்மணிகளும் இருப்பது தெரிய வந்துள்ளது. தமிழகத்தில் இரும்பு கி.மு. 3300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் இரும்பைப் பயன்படுத்தி வந்தது சிவகளை அகழாய்வு மூலம் தெரிய வருகிறது.
வைகை நதிப்பகுதியில் 293 இடங்களில் 100-க்கும் மேற்பட்ட வாழ்விடங்கள் உள்ளன. ஐந்து மாவட்டங்கள் வழியாக 250 கிலோமீட்டர் தூரத்திற்குப் பாயும் வைகை நதி மிகவும் தொன்மையானது. பரிபாடல் இலக்கியத்தில் 29 பாடல்கள் வைகை நதி பற்றிக் குறிப்பிடுகின்றன. மதுரைப் பகுதியில் 27 பாறைக் கல்வெட்டுகள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் உள்ள கல்வெட்டு கி.பி.9 - ஆம் நூற்றாண்டைச் சார்ந்தது. மதுரையில் சமண / பௌத்த எச்சங்கள் கிடைக்கின்றன. இருப்பினும் மதுரைப் பகுதியை ஆய்வு செய்ய இயலவில்லை. எனவே மதுரையிலிருந்து 12 கி.மீ. தூரத்திலுள்ள கீழடி தொல்லியல் மேட்டை ஆய்வு செய்தோம். சித்தர் நத்தம் மற்றும் மாறநாடு பகுதியை ஆய்வுக்குத் தேர்ந்தெடுத்தோம். அதில் மாற நாட்டில் புத்தரின் சிலைகள் இருந்தன. இப்பொழுது இச்சிலைகள் முனியண்டி சிலைகள் என அழைக்கப்படுகின்றன.
மதுரை நகரின் தொன்மையை அறிய அகழாய்வு செய்ய முயன்றோம். ஆனால் அப்பொழுது ஆட்சியலிருந் த அதிமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. அந்த இடம் வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிவிட்டது பெரும் வேதனை.
* சிந்துவெளி நாகரிகத்திற்கும், கீழடிக்கும் உள்ள உறவு குறித்து விளக்கவும்.
1919 - ஆம் ஆண்டில் இரயில் பாதை அமைக்கத் தோண்டிய பொழுது தற்செயலாகக் கண்டறியப்பட்டதுதான் சிந்து வெளி நாகரிகம் : இதை மொகன்சதாரோ மற்றும் அரப்பா பகுதியோடு மட்டும் சுருக்கிப் பார்க்கக் கூடாது. இது 13 இலட்சம் சதுர கிலோ மீட்டர் அளவுக்குப் பரந்து விரிந்தது.1924- ஆம் ஆண்டு இப்பகுதியை ஆய்வு செய்த சர் ஜான் மார்சல் சிந்து வெளியில் இருந்தவர்கள் திராவிடர்கள் எனக் குறிப்பிட்டார். 1500 ஆண்டு காலம் சிந்து வெளி நாகரிகம் நீண்டிருந்தது.
இந்நாகரிகம் குறித்து சர் ஜான் மார்ஷல் மட்டுமல்லாமல் பலரும் ஆய்வு செய்துள்ளனர். எடுத்துக் காட்டாக கிரிகோரி போக்செல் (Gregory Pocsehl) போன்ற வெளிநாட்டவரும் ஆய்வு செய்துள்ளனர். அவர் 1500 பக்கங்களில் இது குறித்து நூல் ஒன்றையும் விரிவாக எழுதியுள்ளார்.
சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி கீழடி எனக் குறிப்பிடலாம். பல வகைகளில் இரண்டிற்கும் ஒப்புமை காணப்படுகிறது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சிந்து சமவெளி நாகரிகம் பல காரணங்களால் வீழ்ச்சி அடைந்தவுடன் அங்கிருந்த மக்கள் தெற்கு நோக்கியும், கிழக்கு நோக்கியும், பயணித்துள்ளனர். அதனால்தான் ஆர். பாலகிருஷ்ணன் (IAS) போன்ற அறிஞர்கள், சங்கஇலக்கியச் செய்திகள் சிந்து வெளிப் பண்பாட்டில் கிடைக்கின்ற தொல்எச்சங்களின் மீள் நினைவுப் பதிவுகளாக உள்ளன எனக் குறிப்பிடுகின்றனர்.
மேலும் மன்னார் வளைகுடா சங்கு வளையல்களைச் சிந்துவெளி மகளிர் அணிந்திருந்தனர் என்பதும், சிந்துவெளி மக்கள் பேசிய மொழி திராவிட மொழியின் மூல மொழி (Proto Dravidian language) எனக் கருதப்படுகிறது என்பதும் முக்கியமான விவரங்களாகும்.
இவை போலச் சிந்துவெளி நாகரிகத்திற்கும் கீழடி நாகரிகத்திற்கும் பல்வேறு ஒற்றுமைகளைக் காண முடிகிறது.
* இராமர் பாலம், சரசுவதி நாகரிகம், மகாபாரத காலம் ஆகியன குறித்த உங்களது பார்வையைப் பதிவிடவும்.
* இந்திய வரலாற்றை ஆரியம் / திராவிடம் என்ற நோக்கில் அணுகக் கூடாது என அண்மைக் காலத்தில் அறிவுரை கூறப்படுகிறது. ஆனால் இந்திய வரலாறு என்பது பன்முகத் தன்மை கொண்டது. அந்தப் பன்முகத் தன்மையை நாம் அங்கீகரிக்க வேண்டும். எனவே தொன்மை வரலாற்றை இந்திய நோக்கு என ஒற்றைமயப்படுத்தி அணுகுவது என்பது ஏற்கத் தக்கதல்ல!
நமக்கு வரலாற்றை முதன்முதல் கற்றுக் கொடுத்தவர்கள் முஸ்லீம் அரசர்கள்தான். அந்த அரசர்களின் சுயசரிதைகள்தான் இந்தியாவில் முதல் வரலாற்றுப் பதிவாக உள்ளது.
அதேபோல் கல் இராஜதரங்கினி என்ற நூல் ஒரு காஷ்மீரத்து வரலாற்று நூலகக் கருதப்படுகிறது. அதற்கு முன்னர் நம்மிடம் வேதங்கள், புராணங்கள், உபநிடதங்கள் ஆகியவைதான் இருந்தன. பிறகு ஆங்கிலேயர்கள் நமக்கு வரலாற்று உணர்வைக் கற்பித்தனர்.
மகாபாரதம் என்பது கதைதான். அதை மெய்ப்பிப்பதற்கான தொல்லியல் எச்சங்கள் ஏதும் நம்மிடம் இல்லை. அதேபோல் 300 வகையான இராமாயணங்கள் நம்மிடம் உள்ளன. ஆனால் அதற்கான தொல்லியல் சான்றுகள் ஏதும் நம்மிடம் இல்லை. எனவே அறிவியல் கண்ணோட்ட அடிப்படையில் மகாபாரதத்தையும், இராமாயணத்தையும் ஆய்வு செய்தால், நமக்கு. ஏமாற்றம்தான் எஞ்சும்.
அதே போல் இராமர் பாலம் என்ற ஒன்று இல்லை. முன்பு இந்தியாவும் இலங்கையும் புவியியல் அடிப்படையில் ஒன்றாக இணைந்திருந்தன. பிறகு அவற்றுக்கு இடையில் தண்ணீர் புகுந்ததால், அவை இரண்டு பகுதிகளாகப் பிரிந்தன. எனவே இராமர் பாலம் எனக் குறிப்பிடும் பகுதியில் இப்பொழுது ஒரு மணல்திட்டு மட்டுந்தான் உள்ளது.
அயோத்தியிலும் அதே நிலைதான். அங்கே கி.பி. ஒன்பது / பத்தாம் நூற்றாண்டில் ஒரு கோயில் இருந்ததாக ஆய்வாளர் கே.கே. முகமது அவர்கள் குறிப்பிட்டார். ஆனால் அது இராமர் கோயில்தான் எனக் கூற முடியாது என்றே அவர் எடுத்துரைத்தார். மேலும் அதுதான் இராமனின் பிறப்பிடம் என்றும் சொல்ல முடியாது. இராமனின் பிறப்பு என்பது ஒரு நம்பிக்கை. நம்பிக்கை எல்லாம் வரலாறு ஆகாது.
குப்தர் காலத்திற்கு முன்பு இந்தியாவில் இருந்தவை சமணம் மற்றும் பௌத்த மதங்கள் மட்டுமே. அப்பொழுது இந்து மதம் என ஒன்று இல்லை. அது வைதீக மதம் என்று அழைக்கப்பட்டது. குப்தர் காலத்தில்தான் வைதீக மதம் மீண்டும் தழைக்கத் தொடங்கியது.
குறிப்பாக உத்தரப் பிரதேசம் மற்றும் பீகாரில் பரந்த அளவில் சமண பௌத்த மதங்கள்தான நிலை பெற்றிருந்தன. அவற்றின் எச்சங்களை நாம் அங்கு காண முடியும்.
சிந்து சமவெளி நாகரிகத்தின் பிற்பகுதியில் சனோலி எனும் இடத்தில் ஒரு தேர் இருந்தது கண்டறியப் பட்டது. அதை மகாபாரதத்துடன் இணைக்கும் முயற்சிகள் நடந்தன. ஆனால் அதற்கான தரவுகள் கிடைக்கவில்லை. மேலும். வீடுகளிலிருந்த அடுப்புகளை யாக குண்டங்கள் எனக் கட்டமைக்கும் முயற்சிகளும் மேற்கொள்ளப் பட்டன: ஆனால், அறிவியல் வழியிலான ஆதாரங்கள் அவற்றை மறுத்தன.
சிந்துவெளிப் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. அங்கு புதைப்பிடங்கள் அதிகம் இருந்தன. ஆனால் ஆரிய நாகரிகத்தில் புதைக்கும் வழக்கம் இருக்கவில்லை. சிந்து வெளி குறித்து ஆய்வு செய்த சர்.ஜான் மார்சல் அவர்கள், அது ஒரு திராவிட நாகரிகம் என 1924-ல் அறிவித்தார். ஆதித்தென் இந்தியப் பழங்குடி மக்களும் (Ancient Ancestral South Indian) மற்றும் ஈரானிய விவசாயக் குடிமக்களும் (Iranian Farmers) இணைந்து உருவாக்கியதுதான் சிந்து வெளி நாகரிகம் எனவும் அறிவிக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்குப் பிறகு அரப்பாவைப் போன்ற நாகரிகம் கீழடியில் இருப்பதாக 2016 மே 26- ஆம் நாளன்று The Times of India நாளிதழில் முதன்முதலாக அறிவிப்பு வெளியானது. அதுதான் கீழடியை வட இந்தியாவிற்கு அறிமுகப்படுத்திய செய்தியாகும். இந்தக் கட்டுரையின் மூலம்தான் கீழடியைப் பற்றிய செய்திகள் உலக மக்கள் அனைவருக்கும் பரவியது. வட இந்தியாவில் சிந்துவெளிப் பண்பாட்டின் இடம் கிடைத்து விட்டது என்று நினைத்துக் கொண்டார்கள். ஆனால் உண்மையில் கீழடி என்பது சிந்துவெளி நாகரிகத்தின் தொடர்ச்சி என்பதை அண்மைக்கால ஆய்வுகள் உறுதிப்படுத்தி வருகின்றன. இதற்கு எதிர்வாதம் செய்வதற்குத்தான் வட இந்தியாவில் சரசுவதி நாகரிகம் என்ற ஒரு கட்டுக் கதையை அவிழ்த்து விட்டுள்ளனர். இராஜஸ்தானில் கக்ரா (Ghaggara) மற்றும் ஹக்ரா (Hakra) என்ற ஆற்றுப் படுகைகளை சரசுவதி நதி நாகரிகம் என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக இந்த நதிப் படுகைகளில் சிந்துவெளி நாகரிகத்தின் தொல் இடங்கள்தான் கிடைக்கின்றன. எவ்வாறு சிந்துவெளி நாகரிகத்தில் குதிரை இருந்தது என்று கதை கட்டினரோ, அதேபோல் இருக்கின்ற சிந்துவெளி நாகரிக இடங்களை சரசுவதி நாகரிகம் என்று பெயர் மாற்றம் செய்கின்றனர். ஆனால் ஆய்வுகள் அதற்கு மாறாக ஆதாரங்களை எடுத்துச் சொல்கின்றன. அவர்கள் அண்மையில் கண்டுபிடித்ததாகச் சொல்கின்ற இடம் பழுப்பு நிறப் பானைப் பண்பாட்டை (PGW - Painted Grey Ware) சார்ந்த இடமாகும்.
* கீழடி அகழாய்வு அறிக்கையைத் திருத்தி அமைக்க இந்தியத் தொல்லியல் துறை உங்களிடம் கோரியுள்ளது குறித்து உங்களது கருத்து யாது?
* கீழடி ஆய்வில் திருத்தம் செய்ய வேண்டும் என என்னிடம் அறிக்கை ஏதும் வழங்கப்படவில்லை. அது குறித்து ஒரு கடிதம் மட்டுமே எனக்கு வந்தது. எந்த ஒரு அகழாய்வு முடிவு குறித்தும் அதைத் தோண்டி ஆய்வு செய்தவர்தான் முழுமையாகச் சொல்ல முடியும். கீழடியைத் தோண்டியவன் நான். எனவே அதன் உண்மை நிலை என்ன / அதன் காலம் என்ன என்பதை நான் நன்கு அறிவேன். கீழடியின் காலம் கி.மு. 800 வரை நீள்கிறது என்பது எனது ஆய்வு முடிவு. ஆனால் இந்தியத் தொல்லியல் ஆய்வுத்துறை அதன் காலம் கி.மு.300 வரைதான் எனக் குறிப்பிடுமாறு தெரிவித்தனர். நான் அதை ஏற்க முடியாது எனத் தீர்மானமாகத் தெரிவித்து விட்டேன்.
ஏனெனில் கி.மு.800 எனும் தொன்மை ஏற்கப்பட்டால் வட இந்திய கங்கை சமவெளி நாகரிகங்களுக்கு முந்திய நாகரிகம் தமிழ் நாகரிகம் என்பதாக ஆகிவிடும் எனவேதான் கீழடியை ஆய்வு செய்யாத, கீழடியைக் கண்ணால் கூடப் பார்க்காத அறிஞர்கள் அறிவியலுக்குப் புறம்பாக எனது அறிக்கையைத் திருத்துமாறு கூறுகின்றனர். எனது கருத்துக்களை விமர்சனம் செய்வதை நான் என்றும் ஏற்றுக் கொள்ளக் கூடியவன். ஆனால் தகுந்த தரவுகள் இல்லாமல் கூறும் கருத்துக்களை ஏற்க முடியாது. எனது கருத்தை மறுக்க நினைத்தால், தாராளமாக அவர்கள் கீழடிக்கு வந்து மீண்டும் அகழாய்வு செய்து அதன் அடிப்படையில் அவர்கள் தங்களது கருத்தை நிரூபிக்குமாறு நான் வேண்டுகிறேன்.
* கீழடி குறித்துத் தமிழ்நாட்டு அரசுக்கும், அரசியல் இயக்கங்களுக்கும் நீங்கள் கூற விரும்புவது என்ன?
* இந்தியத் தொல்லியல் துறை 2017 - ஆம் ஆண்டில் கீழடி ஆய்வைக் கைவிட்ட பின் தமிழக அரசின் தொல்லியல் துறை தனது பொறுப்பில் அகழாய்வைச் சிறப்புறத் தொடர்ந்து வருவது பாராட்டிற்குரியது. ஆனால் தொடர் ஆய்வுகளின் அறிக்கைகளை வெளியிடத் தமிழக அரசு தொய்வுறாமல் முன்முயற்சி எடுக்க வேண்டும். அறிஞர்களும், அரசியல் இயக்கங்களும் கீழடியைப் பற்றிய செய்திகளை மக்களிடம் கொண்டு சென்று, மக்களிடையே பேசு பொருளாக்கி, அதை வலிமையான மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அதன் மூலம்தான் தமிழரின் தொன்மையை நிலைநிறுத்த முடியும்.
- அமர்நாத் ராமகிருஷ்ணன்
நேர்காணல்: கண. குறிஞ்சி