அவளைப் பற்றி
நான் பேச வேண்டுமாம்.
பாரதிதாசக் குன்றிலிருந்து
புறப்பட்ட அருவி
தமிழ்க் குளியல் போட்டுப்
பறந்து வந்த அந்தக் குயில் பற்றி
நான் பேசவேண்டுமாம்.

பாட்டியல் இனத்தில் அவன்
வெண்பாவும் இல்லை மென்பாவும் இல்லை
அவன் வலிப்பா மடியில் கிடந்தவன்
வாதைப்பா தோளில் தவித்தவன்

பாட்டியல் தளைகள்
அவனை அச்சுறுத்தவில்லை.
பட்டியல் இனத்தான் என்பது
அச்சுறுத்தாமல்
இருந்ததே இல்லை
அவமானப்படுத்தாமல்
இருந்ததே இல்லை.
வஞ்சிப்பாவுக்குள்
ஒரு கனிச்சீர் வந்து சேர்வதுபோல்
பாரதிதாசன் கையைப்
பிடித்துக் கொண்டே
கரந்தையில் தமிழ் கற்கப் போய்ச் சேர்ந்தவன்
ஆனால்
எந்த வஞ்சியையும்
கைப்பற்றி வாழாமலே போய்ச் சேர்ந்தவன்
எந்த வஞ்சிப்பாவோ
அவனை வஞ்சித்திருக்கலாம்
யாழிசைப்போல் பெருக்கெடுக்க வேண்டியவன்
ஒரு தாழிசைப்போல்
இரண்டடி வைத்தான்
மூன்றாம் அடியிலேயே
வாழ்வை முடித்துவிட்டான்.
அதிகாரம் செய்யத் தெரிந்த
எந்த அரசியல் கட்சிக்கும்
தமிழ்ஒளி
அடிபணிந்துப் போக
அடிமைச்சீட்டு எழுதித் தரவில்லை
தமிழ்ஒளி வலக்கண்ணில்
பெரியார் இருந்தார்
இடக்கண்ணில்
மார்க்சு இருந்தார்
இதயத்தில் எப்போதும்
தமிழே இருந்தது.

ஒட்டிய வயிற்றோடு
ஓயாமல் கவிதை யாத்தவனுக்கு
தோழர் செ.து.சஞ்சீவீதான்
கஞ்சி வார்த்தார்
கருணை வார்த்தார்.

மகா கவிஞன் பாரதி பாதையில்
உருவக உலா நடத்திய தமிழ்ஒளி
கண்ணப்பன் கிளிகளிடம்
குயில்பாட்டை
உருவாக்கி எடுத்தான்
ஆண்கிளி குணம் என்றும்
பெண்கிளி குற்றம் என்றும்
குறியீடு செய்தான்.
ஆயின்
குணமும் குற்றமும் இல்லாமல்
வாழ்க்கை இல்லை என்றான்.
குற்றத்துக்கு ஏன் பெண் குறியீடு?
அவன் மூடுண்ட வாழ்க்கைக்
கதவை திறந்து பார்த்தால்
ஏதேனும் தென்படலாம்.
எதுவுமே இல்லாமல்
எதுவுமே நடக்காதே!
கவிதை
எதுவுமே இல்லாமல்
எதுவுமே பேசாதே!
கவிதை நாயகி
அவனைக் கட்டி அணைத்தாள்
காதல் நாயகி
அவனை விட்டு விலகினாள்.
பாட்டாளி வர்க்கப்
போராட்ட வெற்றி
தமிழ்ப் பாட்டுத் தேவி
காதில் விழுந்ததும்
அவள் தமிழ்ஒளி வீட்டு அறையின்
கதவைத் தட்டினாள்.....
முதல், மேதினப் பாட்டால்
தமிழக வனங்கள் காடுகள்
வயல்வெளிகள் மலைச்சரிவுகள்
நதிக்கரைகள் நெசவுப்பட்டறைகள்
கொல்லுலைக் கூடங்கள்
எங்கெங்கும்
சிவப்புச் சிலிர்ப்புகள்
உழைப்புத் தோள் உற்சவங்கள்

முள்குத்திய கால்களோடு
ஓடினான் தமிழ்ஒளி
ஒலிம்பிக் தங்கப்பதக்கம்
கிடைக்காமல் போயிருக்கலாம்.
ஒப்பற்ற தமிழ்தாயின்
முத்தத்தில் குளிர்ந்தான்
வரலாற்றின்
அரைக்கண்பார்வை
அவன் மேல் விழுந்தது
மிகக் குறைவாக எழுதியவர்
தமிழ்ஒளி என்று
விமர்சகர் தி.க.சி தன் ஆய்வை
வெளியிட்டார் ஆயின்
நாற்பதாண்டுகள்
தடுமாறு வாழ்விலும்
தடுக்கி விழுந்துவிடாமல்
தொடுவதும் விடுவதுமான
வாழ்வாதாரங்களுக்கிடையே
உருப்படியாய்க்
கவிதைகள் காவியங்கள்
நாடகங்கள் என்று
அந்த எழுத்துத் தச்சன்
இயங்கினான் என்பதைத்
தமிழன் மறந்தாலும்
தமிழ் மறக்காது.

- ஈரோடு தமிழன்பன்