அண்மையில் மிகப்பெரும் பேசுபொருளாக அமைந்தது கீழடி அகழாய்வு அறிக்கை. சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்றியத் தொல்லியல் துறையால் முதலில் அகழாய்வுகள் நடத்தப்பட்டன. 2014 முதல் 2016 வரை தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களால் 292 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டு அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. மிகவும் அக்கறையுடனும், தீவிரமாகவும் வினையாற்றி மிகச்சிறப்பாக அமர்நாத் அவர்கள் அப்பணியை மேற்கொண்டார்.
தான் மேற்கொண்ட இரு அகழாய்வுகள் குறித்த அறிக்கைகளையும் அவர் ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தார். ஆனால் அவ்விரண்டு அறிக்கைகளும் இதுவரை வெளியிடப்படவில்லை. நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கேள்வி எழுப்பிய பொழுது அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று மட்டும் குறிப்பிடப்பட்டது.
இதற்கிடையில் மூன்றாவது அகழாய்வு தொடங்கப்பட்ட பொழுது அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்கள் திடுமென அசாம் மாநிலத்திற்கு மாற்றப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து இராஜஸ்தானத்திலிருந்து ஸீராம் என்பவர் கீழடி .அகழாய்வுக் கண்காணிப்பாளராக ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டார். அவர் 2017 ஆம் ஆண்டு அகழாய்வைச் சனவரியில் தொடங்கி செப்டம்பரில் அவர் முடித்துக் கொண்டார். 400 சதுர மீட்டரில் 16 குழிகள் மட்டுமே தோண்டி, கீழடியில் உருப்படியாக ஏதுமில்லை என அறிவித்து ஆய்வை (?) முடித்துக் கொண்டார். (ஜெய் ஸீராம்) எனவே கீழடி
அகழாய்வில் உருப்படியாக ஒன்றுமில்லை எனக்கூறி ஒன்றிய அரசும் அம்முயற்சியைக் கைவிட்டு விட்டது. நிதி ஒதுக்கீட்டையும் நிறுத்தி விட்டது.
அதன்பிறகு, தமிழக அரசு தொல்லியல் துறை சார்பில் மீண்டும் கீழடியில் அகழாய்வு தொடங்கப்பட்டது. புதிய புதிய பொருள்கள் அடுக்கடுக்காகக் கண்டறியப் பட்டன.
ஏறக்குறைய 13,000 கலைப் பொருள்கள் கண்டறியப் பட்டன. (The Times of India dated 24/05/2025) கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருள்கள் அமெரிக்காவில் உள்ள பீட்டா பகுப்பாய்வுச் சோதனைச் சாலைக்கு அனுப்பப்பட்டு அறிவியல் வழியான விவரங்கள் வெளியாயின.
அந்தக் கண்டுபிடிப்புகள், இந்திய வரலாற்றையே புரட்டிப் போட்டன. இந்திய வரலாற்றைத் தமிழகத்திலிருந்துதான் தொடங்க வேண்டும் எனும் பல்வேறு அறிஞர்களின் கூற்றை அக்கண்டு பிடிப்புகள் மெய்ப்பித்தன.
மூன்றோடு முடிந்திருக்க வேண்டிய கீழடி அகழாய்வு, இன்று பத்தாவது முறையாகத் தமிழக அரசின் விடாமுயற்சியால் மறுபடியும் தொடர்கிறது.
முதலிரு அகழாய்வு அறிக்கைகளை 982 பக்கங்களில் அமர்நாத் அவர்கள் முழுமையாகச் சமர்ப்பித்து விட்டார். ஆனால் முழு அறிக்கை பெறப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியத் தொல்பொருள் ஆய்வு இயக்குநர் ஹேமசாகர் ஏ. நாயக் என்பவர், அமர்நாத் அவர்களின் அறிக்கை பற்றிச் சில ஐயங்களைக் கிளப்பியுள்ளார்.
அமர்நாத் அவர்களின் அறிக்கை குறித்து இரண்டு "நிபுணர்களிடம்" கருத்துக் கேட்டதாகவும், அவரது அறிக்கை, "கூடுதல் நம்பகத்தன்மை" யுடன் இல்லை என அறிய வந்ததாகவும், எனவே அதில் "திருத்தங்கள்" மேற்கொண்டு திருப்பி அனுப்புமாறும். இப்பொழுது அமர்நாத் அவர்களுக்கு நாயக் தெரிவித்துள்ளார்...
ஆனால், அமர்நாத் அவர்கள் இதற்கு உடனடியாகப் பதிலளித்து விட்டார் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தனது அறிக்கை ஆவண வழியிலான சான்றாதாரங்களைக் கொண்டிருப்பதாகவும், கால வரிசைப்படி உள்ளதாகவும், இதற்கான ஆவணங்கள் ஏற்கெனவே சமர்ப்பிக்கப் பட்டுள்ளதாகவும், வரைபடங்கள், தட்டுகள், படங்கள் ஆகியவை தெளிவுடன் உள்ளதாகவும், எனவே கீழடியின் காலம் கி.மு.800 என உறுதி செய்யலாம் எனத் தெரிவித்ததோடு, முன்பே சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையைத் "திருத்தம்" செய்ய வேண்டிய அவசியம் ஏதுமில்லை எனவும் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழகம் வந்த ஒன்றியப் பண்பாட்டுத்துறை அமைச்சர் கஜேந்தர் சிங் ஷெகாவத், "அமர்நாத் அவர்கள் சமர்ப்பித்த அறிக்கையில் அறிவியல் வழியிலான தரவுகள் போதுமான அளவில் இல்லை. தொழில்நுட்ப விவரங்கள் இன்னும் தேவைப்படுகின்றன" என அருளுரை வழங்கினார்.
தொல்லியல் ஆய்வாளர். அமர்நாத் அவர்களின் அறிக்கை குறித்துக் கேள்வி எழுப்பிய அந்த இரு "ஆய்வாளர்கள்" யார் என்பது பொது வெளியில் பகிரப்படவில்லை. மேலும் அமர்நாத் அறிக்கையை ஏன் முழுமையாகப் பொது வெளியில் வெளியிடவில்லை என்ற கேள்விக்குப் பதிலும் இல்லை. அமர்நாத் அவர்களின் அறிக்கையைப் பொது வெளியில் பகிர்ந்தால் அது அறிவியல் ரீதியாக உள்ளதா இல்லையா என்பது தெரிந்து விடப் போகிறது அதை ஏன் ஒன்றிய அரசு மறைக்க வேண்டும்? நியாயமான இப்படிப்பட்டப் பலவகை ஐயங்கள் எழுகின்றன.
தொடக்கத்திலிருந்தே தமிழ் - தமிழர் - தமிழ்நாடு ஆகியவற்றின் தொன்மை குறித்துச் சங்பரிவாரத்திற்கு மிகப்பெரும் ஒவ்வாமை இருந்து வருவதை அனைவரும் அறிவர். சிந்து வெளி நாகரிகம், தமிழ் நாகரிகத்தோடு பற்பல தரவுகளின் மூலம் இசைந்து வருவதைச் சங்கிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. சிந்து வெளி நாகரிகம், சரஸ்வதி நாகரிகம் என அவர்கள் புதுக்கதையைக் கட்டமைத்து வருகின்றனர். சமஸ்கிருதம் மற்றும் வேதகாலம்தான். "பாரதத்திலேயே" மிகவும் தொன்மை வாய்ந்தவை எனப் பிடிவாதமாகச் சாதித்து வருகின்றனர். ஆனால் அவர்களது புழுகுக்கெல்லாம் எவ்விதத் தரவுகளும் இல்லை. வெறும் புனைவுகளையும் புராணங்களையும் வரலாறாக மாற்றும் கபட முயற்சிதான் உள்ளது. தமிழின் / தமிழகத்தின் தொன்மை, அவர்களின் தொண்டையில் முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது இது அவர்கள் கட்டியமைக்க விரும்பும் ராஷ்ட்ரா பாஷா சமஸ்கிருதத்திற்கு வேட்டு வைக்கிறது. அதனால், சங்கிகள் பொறாமையால் வெந்து சாகின்றனர். அதன் வெளிப்பாடுதான் கீழடி அகழாய்வு அறிக்கையை முடக்கும் முயற்சி.
அது மட்டுமல்ல, 1904 ஆண்டு வாக்கில் தொடங்கப்பட்ட ஆதிச்சநல்லூர் அகழாய்வு அறிக்கையைக்கூட இன்று வரை முழுமையாக வெளியிடாமல் நீண்ட காலமாகக் கமுக்கமாக அழுத்தி வைத்துள்ளனர்.
ஆனால், உண்மையின் ஒளி, வலிமை மிக்கது. அது காவி இருளைக் கிழிக்கும் என்பதை அவர்கள் அறியாமல் இருக்கின்றனர். எனவே "காலிச்சாக்கு நிமிர்த்து நிற்க முடியாது" எனும் சீனப் பழமொழியைத் தற்பொழுது அவர்களுக்கு நினைவூட்ட வேண்டியுள்ளது.
இந்திய வரலாற்றில் நூற்றாண்டுகள் கடந்தும் நெடிதோங்கி ஒரு செய்தி நிலைத்து நிற்கிறது. எத்தனை குட்டிக்கரணம் போட்டாலும், சமஸ்கிருதத்தால் தமிழை ஒருக்காலும் வெல்ல முடியாது என்பதுதான் அந்த அழிக்க முடியாத செய்தி.
- புதுமலர் ஆசிரியர் குழு