பிணக்கூராய்வுத் தொழிலாளர்களின் வாழ்வை விவரிக்கிறது ஆண்டாள் பிரியதர்ஷினியின் கிடங்கு நாவல். பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டுப் பிணக்கூராய்வுக் கூடத்தில் எட்டு வயதுசிறுமி கிடப்பதில் இருந்து நாவல் தொடங்குகிறது. பொதுவெளியில் பெண் ஒருத்தி தன்னை நிலைநிறுத்திக் கொள்வதாக நாவல் முடிகிறது.
ஆணாதிக்கம் நிறைந்த பொதுவெளியில் பெண் நுழைவதற்கான திறப்பை நாவல் ஏற்படுத்தியிருக்கிறது. சாதியவெளி, திருநங்கைகளுக்கான தனிவெளி, குடும்பவெளி, பெண்ணியவெளி போன்றவை நாவலில் நிறுவப்பட்டுள்ளன.
தொழிற்சங்கத் தலைவரான மாயாண்டி முப்பது வயதில் மனைவியை இழந்தவர். குழந்தைகளுக்காகத் திருமணம் செய்துகொள்ளாமல் வாழ்கிறார். உதயா, இதயா ஆகிய இருவரும் மாயாண்டியின் குழந்தைகள். முதல் தலைமுறை பட்டதாரிகள். உதயா வேலைதேடி அலைகிறான். அவன் தலித் என்பதாலும் அவனின் அப்பா பிணவறைக்கூடத்தில் வேலை செய்கிறார் என்பதாலும் அவனுக்கு வேலை கிடைக்காமல் துன்பப்படுகிறான்.
மாயாண்டிதான் பிணவறைக் கூடத்தில் சீனியர். அவருக்கு உதவியாளர்கள். பழனி, ரவுசு என்ற திருநங்கை, ஐம்பத்தைந்து வயதுடைய சங்கரத்தம்மாவும் இருக்கின்றனர். ரவுசு குடும்பத்தினரால் கைவிடப்பட்டவள். பிணவறையில் வைத்து ரவுசுவின் ஆணுறுப்பை அறுத்துப் பழனிதான் பெண்ணாக மாற்றினான். ஓடிப்போன ஒரே மகனை எண்ணியே வாழ்வைக் கழிக்கிறாள் சங்கரத்தம்மா. பிணவறைக்கூடமும் மாயாண்டியின் குடும்பமுமாக நாவல் நகர்கிறது.
பிணவறைக்கூடம் கொரானா கால நெருக்கடியில் ஏசி வசதி இன்றி பிணத்திலிருந்து புழுக்கள் ஊர்கின்றன. பிணவாடை வீசுகிறது. ஈக்களின் கூட்டமும் ரத்தக் கறையும் அறையில் நிறைந்திருக்கின்றன. மின்விசிறியும் பழுதானதால் புழுக்கத்தில் பிணங்களோடு பிணங்களாக இவர்களும் அதிகாரிகளை எதிர்த்துப் பேசமுடியாமல் வாய்மூடி நிற்கின்றனர்.
கொரானா காலத்தைக் காரணம் காட்டி பல்வேறு மோசடிகள் அரங்கேறுகின்றன. பிணவறையில் உள்ளும் வெளியும் நிலவும் துன்பக் காட்சிகள் நாவலில் காட்டப்படுகின்றன. பிணத்தை அறுப்பதிலும் தைப்பதிலும் நடக்கும் தேர்ந்த செயல் காட்டப்படுகிறது. தொழில் செய்வதில் உள்ள துன்பம் நாவலில் இழைந்தோடுகிறது. மற்றொருபுறம் மாயாண்டியின் குடும்பம் வாழ்வு காட்டப்படுகிறது.
மாயாண்டியின் மகன் இறக்க அவனின் உடலையும் போஸ்ட் மார்ட்டம் செய்ய வேண்டிய நிலை வருகிறது. பழனிதான் எல்லாவற்றையும் செய்கிறான். தன் மகன் இறந்த துக்கத்தால் மாயாண்டியால் வேலை செய்ய முடியவில்லை. ஒரு கட்டத்தில் தன் வேலையை ராஜினாமா செய்ய முடிவு செய்கிறான். ஆனால் அந்தச் சமயத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட சாலைவிபத்தில் மாயாண்டி இறக்கிறான். அதனால் மனமுடைந்தவளாக இதயாவும் அவளுக்குத் துணையாக ரவுசுவும் இருக்கிறாள். மாயாண்டியின் இறப்பிற்காக ஒரு இரங்கல் கூட்டம் நடத்தப்படுகிறது. அதில் இதயாவிற்குக் கருணை அடிப்படையில் வேலை வழங்க முடிவு செய்யப்படுகிறது. ஆனால் அதை இதயா மறுத்து, ஆதரவற்ற பெண்களைக் கொண்டு உணவகம் ஆரம்பிப்பதாகக் கூறுகிறாள்.
பொதுவெளியில் ஒரு தனிவெளி
மருத்துவமனையில் தனிவெளியாகப் பிணக்கூராய்விற்கான இடம் அமைகிறது. அரசு மருத்துவமனை வளாகத்தில் இறுதியாக உள்ள இடம் அதுதான். இத்தனிவெளி பிணக்கூராய்வு செய்யும் தொழிலாளர்களுக்கு மட்டுமே உரியதாக இருக்கிறது. மருத்துவர்கள் வந்து செல்பவர்களாக இருக்கிறார்கள். இத்தொழிலாளர்கள் தலித்துக்களாக இருக்கின்றனர். பிணக்கூராய்விற்கான அடிப்படை வசதிகள் அங்கு இருப்பதில்லை. அவர்கள் வாழும் பகுதியும் அதைப்போலவே இருப்பதை நாவல் காட்டுகிறது.
சாதிய வெளி
பிணக்கூராய்வு செய்யும் மாயாண்டி, பழனி, ரவுசு, சங்கரம்மா போன்றோரை மனிதராகக்கூட இச்சமூகம் மதிப்பதில்லை. இதை நாவலில் பல இடங்களில் ஆண்டாள் பிரியதர்ஷினி காட்சிப்படுத்துகிறார். மாயாண்டி என்ற பெயரில் வீசும் சாதியம் அவரின் குழந்தைகளான உதயா, இதயா என்ற பெயர்களில் இல்லை. உதயா என்பது உதயசூரியன் என்ற பெயரின் சுருக்கம்.
உதயா இன்ஜினியரிங் படித்தவன். அவன் திறமையானவான இருந்தபோதிலும் அவனுக்கு வேலைக்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன. “அப்பனை மாதிரி நானும் கருப்புத் தோலு, அழுக்கு மூஞ்சி, எவனுக்குமே ஆகல....” (ப.24) என்கிறான். முகத்தோற்றத்தையும் உடலின் நிறத்தையும் கொண்டு சாதியத்தைக் காணும் சமூகத்தைக் கண்டு மனம் வெதும்புகிறான். பொதுவெளியில் டீக்கடை, பக்கோடா கடைகூட போட்டுப் பிழைத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறான். ஆனால் பொதுவெளியில் தலித்தான உதயா பக்கோடா கடைகூட வைத்து வாழ முடியாது என்கிறது நாவல்.
ஊரின் விளிம்பில் தலித்துகளுக்கான வெளி அமைந்திருக்கிறது. “ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் சொந்தமாகக் கால் ஊன்றி நிற்கக் கொஞ்சம் நிலமும், கூரையாக வீடும் என்கிற கனவை 50 வயசுக்கு மேல்தான் நிறைவேற்ற முடிந்திருக்கிறது” (ப.20) தலித் மக்களால். வங்கியில் கடன் வாங்குவதிலிருந்து வீட்டைக் கட்டி முடிப்பதுவரை முட்டுக்கட்டைகளால் வாழ்வு முறிபடுவதையும் நாவல் சொல்கிறது.
ஊரின் மையத்தில் அம்பேத்கர் பெயரினை வைக்க முடியுமா? என்ற கேள்வியினை நாவல் எழுப்புகிறது. உயர் சாதியைச் சார்ந்த பெரிய மனிதர்கள் இருக்கும் இடத்துக்கு அம்பேத்கர் பெயரினை வைக்கமுடியாத நிலையினை எண்ணி வருந்துகிறது; உலகத் தலைவர் அம்பேத்கர் உள்ளூரில் எல்லையிலே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் அவலத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
நூல்காரங்க ஏற்படுத்திய ஏற்பாடுதான் நல்லநேரம் என்றும் மூச்சுவிடும் எல்லா நேரமும் நல்ல நேரம்தான் என்ற பகுத்தறிவை ரவுசுவின் வழி பேசுகிறார் ஆண்டாள் பிரிதர்ஷினி. பறை அடித்துக் கொண்டாடும் திராவிடத்தைச் சொல்கிறது. பறை இசைக்குப் பயந்தவர்களாகப் பார்ப்பனர்களைக் காட்டுகிறது.
அம்பேத்கர்னா அலர்ஜி, பறை அலர்ஜி, கவுச்சின்னா அலர்ஜி, புதுமைன்னா அலர்ஜி, சமத்துவம்னாக்கூட அலர்ஜிதான். ப.22
என்று புதுமையினையும் சமத்துவத்தையும் ஏற்றுக்கொள்ளாத வைதீகத்தின் உண்மை முகத்தை நாவல் காட்டுகிறது.
திருநங்கை வெளி
திருநங்கைகள் குறித்துப் பொதுப்புத்தி சார்ந்து பேசப்படும் பொட்டை என்ற சொல் நாவலில் வருகிறது. ரவுசு திருநங்கை என்றறிந்ததும் அவர் குடும்பம் அவரைக் கைவிட்டு விட்டது. ரவுசு அண்ணன், அக்கா என்று இருந்தும் யாரும் இல்லாத அனாதையாக வாழ்வை நடத்துகிறாள். ரவுசுவிற்கு திருநங்கைக்கான அறுவை சிகிச்சையைப் பழனிதான் செய்கிறான். பழனியின் மீது அன்பினை ரவுசு வெளிப்படுத்துகிறாள். நாவலின் இறுதியில் இதயாவிற்குத் துணையாக இருப்பதோடு ஆறுதல் மொழி பேசும் நம்பிக்கைப் பாத்திரமாக ரவுசு காட்டப்படுகிறாள்.
குடும்ப வெளி
குடும்பம் என்ற நிறுவனம் சிதைந்துவிடக் கூடாது என்ற எண்ணம் நாவலில் பல இடங்களில் வருகிறது. பெண்ணைப் பொதுவெளியில் இயங்க வைக்கும் ஆண்டாள் பிரியதர்ஷினி குடும்பம் என்ற நிறுவனம் சிதைந்துவிடுவதைக் கண்டு வருந்துகிறார். அனாதைப் பிணங்களாக இருப்பவர்களுக்கும் குடும்பம் இருந்திருக்கும். அவர்கள் யாருமற்றவர்களாக அடக்கம் செய்யப்படுவோம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். அடக்கம் செய்யப்படும்பொழுதுகூட அழுவதற்கு ஆளில்லையே என்று வருந்துகிறது. ஆசையாக வளர்க்கும் பெற்றோரை இறுதிக் காலத்தில் கவனிக்காமல் விடுபவரைக்கண்டு மனம் வருந்துகிறது.
பழனி தன் குடும்பத்தோடு நேரத்தைச் செலவு செய்ய முடியவில்லை என்று கவலைகொள்கிறான். குடும்பம் தன்னை அனாதையாக விட்டுவிட்டதே என்று ரவுசு வருந்துகிறாள். தன் குடும்பத்தில் தந்தையும் அண்ணனும் இறக்கத் தான் அனாதை ஆகிவிட்டோமோ என்று இதயா வருந்துகிறாள். தொலைந்துபோன மகனை எண்ணி வருந்தியவளாக சங்கரம்மா வாழ்வைக் கழிக்கிறாள் என்று தொடர்ச்சியாகக் குடும்பவெளி கட்டமைக்கப்பட்டுள்ளது. குடும்பம் என்ற வெளிக்குள்ளே பாத்திரங்கள் உலவுகின்றன, ஊசலாடுகின்றன, வருந்துகின்றன. குடும்பவெளி சிதையாமல் இருக்க வேண்டும் என்பதையும் சிதைவதைக்கண்டு மனம் வருந்தும் நிலையினையும் நாவல் காட்சிப்படுத்துகிறது.
பெண்ணிய வெளி
நாவலின் தொடக்கத்தில் அடிமைப் பட்டுக் கிடக்கும் பெண் இறுதியில் தன்னிச்சையாகச் செயல்படுகிறாள். சமூகத்தில் பெண்வெளி பற்றிய எண்ணங்கள் பலவற்றைத் தவிடுபொடியாக்குகிறார் ஆசிரியர். பெண்கள் ஒரு வெளியிலிருந்து மற்றொரு வெளிக்குச் செல்ல நாவலில் அனுமதிக்கப்படுகிறார்கள். சுடுகாட்டு வெளிக்குள் செல்லும் கல்லூரிப் பெண்கள் அனாதைப் பிணத்தை அடக்கம் செய்கின்றனர். ஆண்தான் தகனம் செய்ய வேண்டும் என்ற கருத்து உடைபடுகிறது. கன்னிப் பெண்கள் சுடுகாடு செல்லக்கூடாது என்ற பழமை மாற்றப்படுகிறது. “ஒரு காலத்துல வீதிவரை மனைவின்னாங்க, இப்ப மயானம் வரை பெண்கள் வர்றாங்கன்னா சும்மாவா?”(ப.49) என்று பெண் முன்னேற்றத்தை நாவல் எடுத்துக் காட்டுகிறது. ஓரிடத்தில் பொதுப்புத்தி சார்ந்து ‘தேவடியாப் பசங்க’ என்று பெண்ணை மையமிட்ட கெட்ட வார்த்தையை நாவல் கூறுகிறது.
தந்தையின் இறப்பினால் கிடைக்கும் கருணை அடிப்படையிலான வேலையினை “நவீன கொத்தடிமை மாதிரி நானும் இருக்கணுமா?” என்று கூறி இதயா உதறுகிறாள். கருணை அடிப்படையிலான வேலை தனக்குத் தேவையில்லை என்றும் எல்லாரையும் போலத் திருமணம், குழந்தை என்றும் செக்குமாட்டு வாழ்க்கை வாழ விரும்பவில்லை என்றும் கூறுகிறாள்.
இதயா ஒடுக்கப்பட்ட பெண்களைக் கொண்டு உணவகம் ஆரம்பிப்பது, பெண் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கான வாய்ப்பாக அமைகிறது. யாருக்கும் அடிமைப்படாமல் தன் வாழ்வைத் தானே தீர்மானிக்கும் சக்தியாகப் பொதுவெளியில் பெண் இருக்க வேண்டும் என்ற ஆசிரியரின் எண்ணம் வெளிப்படுகிறது. மாயாண்டியின் திடீர் இறப்பு, உதயாவின் இறப்பு குறித்த தகவல் இல்லாமை, இதயா எடுக்கும் முடிவு பற்றிய அழுத்தம் போன்றவை நாவலில் இயல்பாக இல்லையோ என்ற எண்ணம் வாசிக்கும் வாசகருக்கு வருதல் தவிர்க்க இயலாது. ஆனாலும் நாவல் பெண்ணை ஒருவெளியிலிருந்து மற்றொரு வெளிக்குச் சுதந்திரமாகச் செல்ல அனுமதிப்பதும் பெண் தனக்கான வாழ்வைத் தானே தீர்மானிக்க முயல்வதுமான முயற்சிகள் நாவலைத் தொடர்ந்து வாசிக்கச் செய்கின்றன.
கிடங்கு | ஆண்டாள் பிரியதர்ஷினி
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
விலை ரூ.120/-
- து.கலைச்செல்வன், முனைவர் பட்ட ஆய்வாளர், தந்தை பெரியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, திருச்சி-23