அந்தோனியோ கிராம்சி (1891–1937) இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான மார்க்சியச் சிந்தனையாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். இத்தாலியின் சார்டீனியா தீவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த அவர், சிறுவயதிலிருந்தே சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பிராந்திய ஒடுக்குமுறைகளையும் நேரடியாக அனுபவித்தார். இத்தாலியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான கிராம்சி, முசோலினியின் பாசிச ஆட்சியால் 1926ஆம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார். அரசுதரப்பு வழக்குரைஞர், நீதியரசரிடம் “இந்த மனிதரின் மூளை குறைந்தது இருபது ஆண்டுகளுக்கு இயங்காத அளவிற்கு இவருக்குத் தண்டனை தர வேண்டும்” என வேண்டினாராம். ஆனால், அதற்கு மாறாகச் சிறையில் கழித்த ஆண்டுகளிலேயே அவர் எழுதிய ‘சிறைக் குறிப்பேடுகள்’ (Prison Notebooks) அரசியல் மற்றும் சமூகக் கோட்பாட்டின் வரலாற்றில் ஒரு மைல்கல்லாக அமைந்தது. சிறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் கொண்டுவரப்பட்ட நோட்டுப் புத்தகங்களில் அவர் எழுதிய 33 நோட்டுப் புத்தகங்கள் அவரது அண்ணியால் இரகசியமாக வெளியே கொண்டுவரப்பட்டன. சிறையில் மிகவும் நோய்வாய்ப்பட்டார் கிராம்சி. பின்னர் விடுதலை என்று அறிவித்தனர்; ஆனாலும் சிறை மருத்துவமனையிலேயே 46ஆவது வயதில் மரணமடைந்தார்.

gramsciமேலாதிக்கத்தின் மறைந்த இயங்கியல்

அந்தோனியோ கிராம்சி பொருளாதாரக் கட்டமைப்பை மட்டும் வைத்து சமூகத்தைப் புரிந்துகொள்வதை மறுத்து, பண்பாடு, கருத்தியல், கல்வி, மதம், மொழி போன்ற தளங்களில் அதிகாரம் எவ்வாறு இயங்குகிறது என்பதை முன்னிறுத்தினார். சமூக மாற்றம், பண்பாட்டுப் போராட்டம் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அரசியல் தன்னுணர்வு ஆகியவற்றை விவாதிக்கும்போது இன்று கிராம்சி தவிர்க்க முடியாத பெயராகிறார்.

அந்தோனியோ கிராம்சியின் மிக முக்கியமான கோட்பாட்டுப் பங்களிப்புகளில் ஒன்று பண்பாட்டு மேலாதிக்கம் (Cultural Hegemony) என்பதாகும். வெறும் பொருளாதாரச் சுரண்டலோ, இராணுவ வன்முறையோ மட்டும் ஓர் ஆளும் வர்க்கத்தை நிலைநிறுத்தப் போதுமானதாக இருப்பதில்லை என்று கிராம்சி வாதிட்டார். மாறாக, மக்களின் அன்றாட வாழ்வு, எண்ணங்கள், மதிப்பீடுகள், கனவுகள் மற்றும் உலகைப் பார்க்கும் பார்வை ஆகியவற்றை ஆக்கிரமித்து, அதன் மூலம் ஒடுக்குமுறைக்கு 'ஒப்புதல்' பெறும் மென்மையான அதிகாரம் தேவைப்படும்; அதுவே பண்பாட்டு மேலாதிக்கம் என்றார். ஆளும் வர்க்க நலன்களுக்கான சமூக ஒப்புதலை மதம் எப்படிப் பெற்றுத் தந்தது என்பதையும் அவர் ஆராய்ந்தார். இத்தாலியில் கிறித்தவ சமய நிறுவனம் மறைமுகமாக மக்களிடம் இயங்கி, அவர்களின் சமூக ஒப்புதலை பாசிச வளர்ச்சிக்கு எப்படிப் பெற்றுத் தந்தது என்பதை விளக்கினார்.

இக்கட்டுரை, கிராம்சியின் பண்பாட்டு மேலாதிக்கக் கருத்தை விரிவாக விளக்குவதோடு, இந்தியப் பண்பாட்டு அரசியலில், குறிப்பாக சாதிய, மத, மொழி மற்றும் கல்வி ஆகிய களங்களில் அது எவ்வாறு இயங்குகிறது என்பதையும் ஆராய்கின்றது.

கிராம்சி விளக்கிய பண்பாட்டு மேலாதிக்கம்

கிராம்சி தனது 'சிறைக் குறிப்பேடுகளில்' (Prison Notebooks, 1929–1935) அரசியல் சமூகம் (Political Society) என்பதை அரசு, நீதிமன்றங்கள், காவல், இராணுவம் ஆகியவற்றைக் கொண்டதாகவும், குடிமைச் சமூகம் (Civil Society) என்பதைப் பள்ளிகள், மத நிறுவனங்கள், ஊடகங்கள், குடும்பம், தொழிற்சங்கங்கள், கலை இலக்கிய அமைப்புகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவும் பிரித்தார்.

ஹெகல், மார்க்ஸ் ஆகியோரைப் போலவே கிராம்சியும் குடிமைச் சமுதாயம், அரசியல் சமுதாயம் (அரசு) என்று பாகுபாட்டைச் செய்தார். ஆனால் இந்தப் பாகுபாடு, விசயங்களைப் பகுத்தாய்ந்து புரிந்துகொள்வதற்காக மட்டுமே கிராம்சியால் பயன்படுத்தப்பட்டது. அரசியல் சமுதாயம், குடிமைச் சமுதாயம் இரண்டும் ஒன்றிணைந்த முழுமையே அரசு என்பது கிராம்சியின் கருத்தாகும். ‘அரசு என்பது மட்டுமே அரசாங்க இயந்திரமாக ஆகிவிடாது. மேலாதிக்கத்தை நிலைநிறுத்துகின்ற அரசுக் கட்டுப்பாட்டில் இல்லாத அனைத்து இயந்திரங்களையும் கூட அரசு என்றே அழைக்க முடியும்” என்றார் அவர்.

அதாவது, சமூகத்தில் ஓர் அதிகார வர்க்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அரசியல் சமூகத்தின் வழியாக அழுத்தத்தைக் (Coercion) கொடுக்கும். மறுபுறம் குடிமைச் சமூகத்தின் வழியாக ஒப்புதலைப் (Consent) பெற முயலும். இவை இரண்டும் தேவை. ஆனால் நீண்டகால மேலாதிக்கத்திற்குச் சமூக ஒப்புதல்தான் மிக முக்கியமானது. கிராம்சியின் பார்வையில் அரசு என்பதை அதன் முழு அர்த்தத்தில் பார்த்தால், அரசின் கட்டுப்பாட்டில் அல்லாது தனித்தியங்கும் மத நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள், தொழிற்சங்கங்கள், செய்தி நிறுவனங்கள் ஆகியவையும் கூட அரசு என்பதில் இயங்குபவையே எனலாம்.

மேலாதிக்கம் (Hegemony)

மேலாதிக்கம் என்பதைக் குறிக்கும் ‘Hegemony’ என்ற கிரேக்கச் சொல்லை கிராம்சி சமூக, கலாச்சார மற்றும் கருத்தியல் தளங்களுக்குப் பயன்படுத்தினார். ஒரு சமூகத்தில் ஆளும் வர்க்கம், தனது சொந்த நலன்களை ‘அனைவரின் பொதுநலன்’ போலவும், தனது மதிப்பீடுகளை ‘இயற்கையான’, ‘உலகளாவிய’, ‘சர்வ சாதாரண’ மதிப்பீடுகளாகவும் முன்னிறுத்தும்போது, அது மேலாதிக்கம் அடைகிறது என்றார் கிராம்சி.

எடுத்துக்காட்டு:

  • முதலாளித்துவச் சமூகத்தில் ‘கடின உழைப்பு’, ‘தனிமுயற்சி’, ‘சொத்து நிர்வாகம்’ போன்ற மதிப்பீடுகள் அனைவருக்கும் நல்லவை என்று கற்பிக்கப்படுகின்றன.
  • மார்க்கெட்டிங், விளம்பரம், திரைப்படங்கள், பாடநூல்கள், செய்திகள் – அனைத்தும் இந்தக் கருத்தியலைப் பிரதிபலிக்கின்றன.

“ஒரு சமூகத்தின் மேலாதிக்கம் பெற, குழுக்கள் தம் மேலாதிக்கத்தை நியாயப்படுத்தவும் தம் நலன்களைப் பேணுவதற்கும் கருத்துக்களையும் நம்பிக்கைகளையும் உருவாக்கிக் கொள்கின்றன. இதனையே கருத்தியல் என்கிறோம்” என்றார் அவர்.

‘அரசு என்பதன் முழு அர்த்தமே என்னால் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டியதாக ஆயிற்று. இதுவரை அரசு என்பதை ஒரு சர்வாதிகாரக் கருவியாகவே நான் எண்ணியிருந்தேன். ஆனால், உண்மையில் அரசு என்பது சமுதாயத்தின் ஒரு பகுதியினர் முழுச் சமுதாயத்தின் மீதும் செலுத்திவரும் மேலாதிக்கம் என்றே அர்த்தப்படுத்தப்பட வேண்டும். இந்த மேலாதிக்கமானது மத நிறுவனங்கள், கல்விக் கூடங்கள், தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகள் ஆகியவை மூலம் செயல்படுத்தப்படுகிறது’

சிறைக் குறிப்பேடுகளில் பல இடங்களில் கிராம்சி குடிமைச் சமுதாயம் என்பது அறவியல், ஒழுக்கவியல் சமுதாயம் என்று கூறுகிறார். ஏனெனில், குடிமைச் சமுதாயத்தில்தான் ஆதிக்க வர்க்கம் அறவியல், கருத்துநிலைப் போராட்டங்களின் மூலம் தனது மேலாண்மையைக் கட்டியெழுப்புகின்றது. “படைகளின் மூலம் ஒரு நாட்டை வெல்லுதலை விட, பண்பாட்டு வழியாக ஒரு நாட்டை வெல்வது வலுவான வெற்றி” என்கின்றார் அவர். இந்த நிலையில் மேலாதிக்கத்தை உடைக்கத் தேவை அந்தந்த மண்ணின் அறங்களைத் தம்முள் வரித்துக்கொண்ட அறிவுஜீவிகளின் செயல்பாடு என்று விளக்கினார்.

மண்ணின் இயைபுடைய அறிவுஜீவிகள் (Organic Intellectuals)

கிராம்சியின் "மண்ணின் இயைபுடைய அறிவுஜீவிகள்" (Organic Intellectuals) என்ற கருத்தாக்கம், ஒவ்வொரு சமூக வர்க்கமும் தனது சொந்த நலன்களுக்காகவும் வளர்ச்சிக்காகவும் இயல்பாகவே உருவாக்கிக்கொள்ளும் சிந்தனையாளர்களைக் குறிக்கும். இவர்கள் மேல்தட்டு வர்க்கத்தால் உருவாக்கப்பட்ட "மேல்தட்டு புத்திஜீவிகள்" (Traditional Intellectuals) போல் அல்லாமல், தொழிலாளர்கள், விவசாயிகள், கிராம மக்கள் போன்ற சாதாரண மக்களிடமிருந்தே எழுபவர்கள் ஆவார்கள். இவர்கள் மக்களின் வாழ்க்கை அனுபவங்கள், போராட்டங்கள், தேவைகளை மொழியாக்கம் செய்து, அந்த வர்க்கத்தின் அரசியல், கலாசார, பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிகாட்டுகிறார்கள். எனவே, உழைக்கும் வர்க்கம், ஒடுக்கப்பட்ட இனம் தங்களுக்கான அறிவுஜீவிகளை உருவாக்குவது அவசியமாகின்றது.

ஒரு தொழிற்சங்கத் தலைவர், நிலமின்றி உழைக்கும் விவசாயிகளின் குரலாகச் செயல்படும் ஆர்வலர், அல்லது மக்கள் இயக்கங்களை முன்னெடுக்கும் உள்ளூர் அறிவுஜீவிகள், கல்வியாளர்கள் என இவர்கள் அனைவருமே "மண்ணின் இயைபுடைய அறிவுஜீவிகள்" ஆவார்கள். கிராம்சியின் கருத்தின்படி, ஓர் எதிர்நிலைப் பண்பாட்டு மேலாதிக்கத்தை (Counter-Hegemony) உருவாக்க இத்தகைய புத்திஜீவிகள் இன்றியமையாதவர்கள். இவர்களின் பணி, பொதுத் தத்துவத்தை (Philosophy) நடைமுறைத் தத்துவமாக (Philosophy of Praxis) மாற்றுவது, அதாவது விடுதலைச் சிந்தனைகளை மக்களின் அன்றாடப் போராட்டத்தின் கருவியாக மாற்றுவதாகும்.

ஓர் ஒடுக்கப்பட்ட வர்க்கம் தன் மீதான மேலாதிக்கத்தை உடைக்க, முதலில் கருத்தியல் தளத்தில் போராட வேண்டும். புதிய மதிப்பீடுகள், புதிய உலகக் கண்ணோட்டம், புதிய கலை, புதிய இலக்கியம், புதிய கல்வி முறை – இவற்றை உருவாக்கி, மக்களிடம் மேலாதிக்கம் பற்றிய புரிதலையும் ஓர் எதிர்ப்புணர்வையும் உருவாக்க வேண்டும் என்பதே கிராம்சியின் நிலைப்பாடு. அதைச் செய்வதற்குத் தேவை அந்த மண்ணின் அறிவுஜீவிகள். இவர்கள் வெறும் கருத்தாளர்களாக இருப்பதில்லை; களத்திலும் போரிடுபவர்களாவார்கள்.

கிராம்சி அறிவுஜீவிகளை இரண்டாகப் பிரித்தார்:

மரபு அறிவுஜீவிகள் (Traditional Intellectuals) மண்ணின் இயைபுடைய அறிவுஜீவிகள் (Organic Intellectuals)
ஆளும் வர்க்கத்துடன் இணைந்து, தற்போதைய அதிகார அமைப்பை நியாயப்படுத்துபவர்கள் (எ.கா: பூசாரிகள், மதகுருமார்கள், பாரம்பரிய கலைஞர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்). தங்கள் சொந்த சமூகக்குழுவிலிருந்து எழுந்து, அந்தக் குழுவின் உண்மையான நலன்களுக்காகப் போராடுபவர்கள் (எ.கா: தொழிலாளர் வர்க்கத்திலிருந்து வந்த அறிவுஜீவி, தலித் படைப்பாளி).

அந்தோனியோ கிராம்சியும் இந்தியச் சூழலும்

அந்தோனியோ கிராம்சியின் கருத்தாக்கங்களை இந்தியச் சூழலில் பொருத்திக் காண்பது அவசியமானது மட்டுமல்லாமல் வரலாற்றுத் தேவையுமாகவும் உள்ளது. இந்திய வரலாறும் இத்தாலிய வரலாறும் பரஸ்பரம் ஒத்திருப்பது ஏதேச்சையான உண்மையென மார்க்ஸ் கருத்துரைத்துள்ளார். இத்தாலியச் சிந்தனையாளரும் மாபெரும் புரட்சியாளருமான அந்தோனிய

“இந்தியப் பார்ப்பனியத்துடன் ஒப்பிடக்கூடிய இத்தாலியத் தத்துவங்களைப் பற்றிய அவரது விமர்சனம், புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின் கருத்துநிலை மேலாண்மை, பாட்டாளி வர்க்கம் நடத்த வேண்டிய பண்பாட்டுப் புரட்சி ஆகியன குறித்த அவரது விளக்கங்கள் முதலியன, இந்தியாவில் புரட்சிகர மாற்றத்திற்காகப் போராடுகிறவர்கள் கற்றுக்கொள்ள வேண்டியனவாகும்.”

கிராம்சியின் சமூகவியல் பார்வை புரட்சிகரச் சமூகமாற்றத்தை எதிர்நோக்கும் இயங்கியல் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் அமைந்திருந்தது. சமூகத்திலுள்ள பிறப்புரிமைகளும் வேறுபாடுகளும் இயற்கையால் உருவாக்கப்பட்டவையல்ல; மாறாக, சமூகத்தால் உருவாக்கப்பட்டவை, அதன் காரணமாகவே அவற்றைக் கடந்து வரவும் முடியும் எனக் கிராம்சி கூறினார். இது அவருடைய நுட்பமான வரலாற்று இயங்கியல் பொருள்முதல்வாதப் பார்வைக் காட்டுவதாக உள்ளது.

இந்தியப் பண்பாட்டு அரசியலில் பண்பாட்டு மேலாதிக்கம்

இந்தியச் சூழலில், கிராம்சியின் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு மிகத் துல்லியமான உதாரணம் பார்ப்பனிய (Brahmanical) மேலாதிக்கம் ஆகும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பார்ப்பனியம் வெறும் படை பலத்தால் அல்ல; மாறாக:

  • வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் (இராமாயணம், மகாபாரதம்)
  • ‘வர்ணாசிரம தர்மம்’ – சாதி ஒரு தெய்வீக ஏற்பாடு, இயற்கையான வேறுபாடு என்ற கருத்தியல்
  • ‘மனுஸ்மிருதி’ போன்ற சட்ட நூல்கள்
  • பூசாரிகளின் படிநிலைக் கட்டுப்பாடு
  • தீண்டாமை, அசுத்தம், புனிதம் என்ற இரட்டைக் கருத்துகள் போன்றவற்று்கிய ஊடாகச் சமூகத்தில் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தியது.

அதன் கருத்தியல்கள், வரலாற்றுக்குப் புறம்பான புராணிக தொன்ம எடுத்துரைப்புகள் மூலமாகவும், மத ஐதீகக் கதைகள் மூலமாகவும் கட்டமைக்கப்பட்டன எனலாம். கிராம்சியின் குடிமைச் சமூகக் கட்டமைப்புகள் இந்தியாவில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கீழே காணலாம்:

  • கல்வி நிறுவனங்கள்: சமஸ்கிருத மொழி, வேதாந்தம், ‘பெருமைமிகு இந்தியப் பாரம்பரியம்’ என்ற பாடத்திட்டங்கள்; இதிகாசங்களை இலக்கியமாகக் கற்பித்தல்; சாதி வரலாற்றை மறைத்தல்; தலித், பௌத்த, சமண, ஆதிவாசி அறிவு மரபுகளை ஒதுக்குதல்.
  • மத நிறுவனங்கள்: கோயில் நிர்வாகத்தில் பார்ப்பன ஆதிக்கம்; சாதிப் படிநிலைகளை மதத்தின் மூலம் புனிதப்படுத்துதல்; ‘அவரது அடிமை’ எனும் வழிபாட்டு மொழி; தலித் பூசாரிகள் மறுப்பு; சமயச் சடங்குகள் வழியாகச் சாதிப் பாகுபாட்டை மறுஉற்பத்தி செய்தல்.
  • ஊடகங்கள்: பல செய்தி ஊடகங்களில் உயர் சாதியினரின் குரல்கள் மட்டுமே முதன்மை; தலித், முஸ்லிம், ஆதிவாசி மக்களின் பிரச்சினைகள் விளிம்புநிலைப்படுத்தப்படுதல்; ‘தேசிய கலாச்சாரம்’ எனச் சொல்லப்படுவதில் பெரும்பாலும் உயர்சாதிக் கூறுகளே முன்னிறுத்தப்படுதல்.
  • கலை, இலக்கியம், திரைப்படம்: ‘பாரதீயம்’, ‘ஆரியம்’, ‘இந்தியத் தன்மை’ எனப் பேசப்படுவதில் சமஸ்கிருதம், வட இந்தியக் கலைகள், பெரும்பாலான செவ்வியல் கலை & இலக்கியத் தளங்களில் உயர் சாதியின் கட்டுப்பாடு; தலித் மற்றும் பிற ஒடுக்கப்பட்டோரின் கலைவடிவங்கள் (வில்லுப்பாட்டு, குரவை, கூத்து) ‘சிறுகலை’ அல்லது ‘நாட்டுப்புறத்தார் கலை’ என வகைப்படுத்தி மதிப்புக் குறைத்தல்.
  • குடும்பம், சமூக உறவுகள்: உணவுப் பழக்கவழக்கங்கள், திருமண முறைகள், தெய்வ வழிபாடு, பேச்சு வழக்கில் கூட சாதிக் குறியீடுகள் உட்பொதிந்து கிடக்கின்றன. சிறுவயதிலேயே ‘நீ எந்தச் சாதி?’ என்ற கேள்வி மூலம் வர்ண அடையாளம் உள்வாங்கப்படுகிறது.

பொய் உணர்வு (False Consciousness) மற்றும் ‘நல்லுணர்வு’ (Good Sense)

கிராம்சியின் கூற்றுப்படி, ஆளும் வர்க்கத்தின் மேலாதிக்கம் இவ்வளவு ஆழமாகச் செயல்படும்போது, ஒடுக்கப்பட்டோர்கூட தங்கள் ஒடுக்குமுறையை இயற்கையானதாக, தவிர்க்க முடியாததாக அல்லது விதியின் பயனாக ஏற்றுக்கொள்ளத் தொடங்குகிறார்கள். இதற்கு இந்தியச் சூழலில் ‘கரும வினை’, ‘பிறவிக் கடன்’, ‘அவனவன் பாடு அவனவனுக்கு’ போன்ற நம்பிக்கைகள் எடுத்துக்காட்டுகளாகும். ஒரு தலித் நபர் ‘நான் இந்தச் சாதியில் பிறந்தது விதியால்’, ‘இந்தப் பிறவியில் துன்பப்பட்டால் அடுத்த பிறவியில் நன்றாக இருக்கும்’ என்று நம்பும்போது, அந்த நம்பிக்கை அவர் ஒடுக்கப்படுவதற்கு சம்மதிப்பதாக ஆகிறது.

இதைத்தான் கிராம்சி ‘முரண்பாடுகள் நிறைந்த பொதுப்புத்தி’ (Contradictory Common Sense) என்கிறார். ஒருபுறம் மக்கள் தங்கள் ஒடுக்குமுறையை உணர்கிறார்கள்; மறுபுறம் அதற்கான ஒரு பண்பாட்டு விளக்கம் (மதம், விதி, மரபு) அவர்களை ஆற்றுப்படுத்துகிறது.

இந்திய மார்க்சியமும் சாதிப் பிரச்சினை

கிராம்சியை இந்திய இடதுசாரிகள் பலரும் படித்திருந்தாலும், சாதிப் பிரச்சினைக்குப் பண்பாட்டு மேலாதிக்கக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்துவதில் பெரும்பாலும் தோல்வியடைந்தனர். இந்திய மார்க்சிஸ்டுகள் பெரும்பாலும் வர்க்கத்தையே முதன்மை முரண்பாடாகக் கண்டனர். ஆனால், அம்பேத்கர் சுட்டிக்காட்டியது போல்:

"இந்தியக் கம்யூனிஸ்ட்கள் சாதியத்தை, அதன் மேலாதிக்கத்தை ஒரு பொருட்டாக எடுக்கவில்லை."

சாதி என்பது பொருளாதாரச் சுரண்டல் மட்டுமல்ல; அது ஒரு முழுமையான பண்பாட்டு & கருத்தியல் அமைப்பு ஆகும். ஒரு தலித் நபர் நகரத்தில் பணக்காரர் ஆனாலும், அவர் தனது சாதி அடையாளத்தை முழுவதுமாகக் களைந்துவிடுவதில்லை; ஏனெனில் பெயர், ஊர், வீடு, திருமணம், கோயில், கல்லறை, உணவகம், வாடகை வீடு எல்லாவற்றிலும் சாதிக் குறியீடுகள் வேலை செய்கின்றன.

இதைத்தான் கிராம்சி ‘கருத்துநிலைப் பின்னணி’ (Ideological Background) என்று அழைக்கிறார். இந்தப் பின்னணியில் வெற்றிபெறாமல், வெறும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுதல் மூலம் நிரந்தர மாற்றம் வருவதற்கு வாய்ப்பில்லை.

அம்பேத்கரும் எதிர்-மேலாதிக்கப் போராட்டமும்

கிராம்சி மற்றும் அம்பேத்கர் ஆகிய இருவரையும் இணைத்துப் படிப்பது என்பது சமகால இந்திய அரசியலைப் புரிந்துகொள்ள மிகவும் இன்றியமையாத அறிவியல் முயற்சியாகும். இது வெறும் ஒப்பீட்டு ஆர்வத்தின் விளைவு அல்ல; இந்தியச் சமூகத்தின் ஆழ்மன அமைப்பை ஆராய வேண்டிய வரலாற்று அவசியம்.

இந்தியாவில் அரசியல், மதம், சாதி, மொழி, கலாச்சாரம், கல்வி, ஜனநாயகம் ஆகியவை ஒன்றுக்கொன்று வெளியில் இருக்கும் தனித்துறைகள் அல்ல. அவை ஒன்றையொன்று கட்டமைத்து, ஒன்றையொன்று பலப்படுத்தி, அதிகாரத்தின் நிலைத்தன்மையை உருவாக்குகின்றன. இந்த அதிகார அமைப்பு வெறும் அரசின் வன்முறையால் மட்டும் இயங்குவதில்லை; மக்களின் மன உலகத்துக்குள்ளே புகுந்து அவர்களின் ஒப்புதலையே பெற்றுக்கொண்டு இயங்குகிறது.

இதை மிகத் தெளிவாக விளக்கியவர் கிராம்சி. இந்தியச் சூழலில் அதற்கான உயிருள்ள எடுத்துக்காட்டை வெளிப்படுத்தியவர் அம்பேத்கர். அம்பேத்கர் கிராம்சிய சிந்தனையின் இந்திய வடிவமாகத் தோன்றினாலும் அவர் வெறும் கிராம்சியின் பிரதிபலிப்பு அல்ல; இந்தியச் சமூகத்தின் தனித்துவமான சிக்கல்களை உலக அரசியல் சிந்தனையின் மொழிக்குள் கொண்டுவந்த சுயாதீன தத்துவவாதி.

இந்தியாவில் வர்க்கத்தை விட சாதி அடிப்படையான அதிகாரம் முக்கிய வடிவம் என்பதை மிகத் தெளிவாக உணர்ந்தவர். அதனால்தான் அவர், "சாதி என்பது வெறுமனே உழைப்பின் பிரிவினை அல்ல; அது உழைப்பாளர்களின் பிரிவினையாகும்" (Caste is not merely a division of labour; it is a division of labourers) என்று கூறினார். இது ஒரு பொருளாதார விமர்சனம் மட்டுமல்ல; மனிதத் தன்மையின் அரசியல் குறித்த கூர்மையான விளக்கம்.

கிராம்சியின் மண்ணின் இயைபுடைய அறிவுஜீவிகளின் பண்புகளை அம்பேத்கர் கீழ்க்கண்ட வகைகளில் கொண்டுள்ளார் எனலாம்:

  1. சாதிய ஒடுக்கப்பட்ட பின்னணியில் இருந்து வந்தவர்.
  2. தனது சமூகத்தின் (தலித்துகள்) உண்மையான நலன்களைப் புரிந்து, அதற்காக வாழ்நாள் முழுவதும் போராடினார்.
  3. மரபான அறிவுக் கட்டமைப்புகளை (வேதாகமம், மனுதர்மம், சாதி தர்மம்) முற்றாக விமர்சித்தார்.
  4. புதிய பண்பாட்டு அடித்தளத்தை – பௌத்த நவயானத்தை – முன்வைத்தார்.

அல்தூசர் கூறும் கருத்தியல் கருவிகள் (Ideological State Apparatuses) என்ற கருத்து இங்கு நினைவுகூரத்தக்கது. பள்ளி, மதம், குடும்பம், ஊடகம் போன்றவை ஆட்சியின் கருத்தியல் கருவிகள் என்று அல்தூசர் கூறுகிறார். ஆனால், கிராம்சி இதை இன்னும் உயிருள்ள சமூக இயக்கமாகப் புரிந்துகொண்டார். இந்தியாவில் இந்தக் கருத்தியல் அமைப்புகள் சாதியை இயல்பானதாக மாற்றுகின்றன. இதனால் தான் சாதி வெறும் சட்டமாற்றத்தால் உடையவில்லை.

அம்பேத்கர் இதை ஆழமாகப் புரிந்திருந்தார். அதனால்தான் அவர் அரசியல் சுதந்திரத்தை விட சமூக ஜனநாயகத்தை முன்னிலைப்படுத்தினார். "அரசியல் ஜனநாயகத்தின் அடித்தளத்தில் சமூக ஜனநாயகம் இல்லாவிட்டால், அரசியல் ஜனநாயகம் நீடித்து நிலைக்க முடியாது." (Political democracy cannot last unless there lies at the base of it social democracy) என்ற அவரது கூற்று இந்திய அரசியலின் மிக முக்கியமான எச்சரிக்கை.

வாக்குரிமை இருந்தாலும் மனித மரியாதை இல்லாத சமூகம் உண்மையான ஜனநாயகமல்ல என்றார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கியபோதும் அவர் எச்சரித்தார்: “ஒரு மனிதன் ஒரு வாக்கு” என்ற அரசியல் சமத்துவம், “ஒரு மனிதன் ஒரு மதிப்பு” என்ற சமூக சமத்துவமாக மாறாவிட்டால் ஜனநாயகம் உடைந்துபோகும்.

இன்றைய இந்திய அரசியல் சூழலில் இக்கருத்துகள் மிகுந்த பொருத்தமுடையவை. தேர்தல் ஜனநாயகம் இருப்பினும் சமூக ஜனநாயகம் பல இடங்களில் இல்லை. சாதி வன்முறைகள், மத வெறுப்பு, மொழி ஆதிக்கம், பெண்கள் மீதான கட்டுப்பாடு, சிறுபான்மையினரின் அச்சம் ஆகியவை தொடர்ந்து நிலவுகின்றன. இது கிராம்சி கூறிய “passive revolution” (மேலிருந்து நிகழ்த்தப்படும் புரட்சி) என்ற கருத்தை நினைவூட்டுகிறது. அதாவது மாற்றம் நிகழ்வது போலத் தோன்றினாலும், ஆதிக்க அமைப்பு தனது மையத்தை இழக்காமல் புதிய வடிவங்களில் தன்னைத் தக்கவைத்துக்கொள்கிறது.

இந்திய முதலாளித்துவமும் சாதிய அமைப்பும் இணைந்து இயங்குகின்றன என்பதை அம்பேத்கர் முன்னரே உணர்ந்திருந்தார். நவீன தொழில்மயமாக்கல் சாதியை உடைத்துவிடும் என்ற நம்பிக்கையை அவர் ஏற்கவில்லை. இன்று தகவல் தொழில்நுட்பம், நகர்ப்புறம், கல்வி வளர்ச்சி ஆகியவை இருந்தபோதும் சாதி வலுவாகத் தொடர்கிறது.

இதை கேபால் குரு போன்ற சிந்தனையாளர்கள் “அனுபவமும் கோட்பாடும்” (Experience and Theory) என்ற விவாதங்களில் சுட்டிக்காட்டுகின்றனர். தலித் அனுபவம் வெறும் தரவாக மாற்றப்பட்டு மேல்தட்டுக் கல்வியியல் மொழிக்குள் உட்கொள்ளப்படுகிறது; ஆனால் அதன் வாழ்வியல் வேதனை அரசியல் மாற்றமாக மாறவில்லை என்ற விமர்சனம் முக்கியமானது.

மதம் குறித்த அம்பேத்கரின் பார்வையும் கிராம்சிய வாசிப்புக்கு உரியது. மதம் என்பது வெறும் ஆன்மீக அமைப்பு அல்ல; அது சமூக ஒழுங்கை நியாயப்படுத்தும் கருத்தியல் கருவி. அதனால்தான் அவர் இந்து மதத்தைக் கடுமையாக விமர்சித்தார். ஆனால், மதத்தை முழுமையாக நிராகரிக்கவில்லை; மாறாக, மாற்று ஒழுக்கவியல் அமைப்பாகப் பௌத்தத்தை முன்வைத்தார்.

இது மிகவும் முக்கியமான அரசியல் நகர்வு. ஏனெனில், கிராம்சியின் பார்வையில் பழைய மேலாண்மையை உடைக்க புதிய ஒழுக்கவியல் மற்றும் புதிய பண்பாடு அவசியம். அம்பேத்கரின் நவயான பௌத்தம் இதையே செய்கிறது. இந்திய சமூக மாற்றம் மேற்கத்திய கோட்பாடுகளை இறக்குமதி செய்வதாலேயே மட்டும் சாத்தியமில்லை; இந்திய வரலாற்றுக்குள்ளேயே உள்ள எதிர் மரபுகளை மீட்டெடுக்க வேண்டும் என்ற வழியை அம்பேத்கர் தேர்ந்தெடுத்திருந்தார்.

அம்பேத்கர் இந்து மதத்திற்கு மாற்றாக முழுப் பௌத்தத்தை முன்வைத்தார். ஆனால் அது ஒரு ‘மற்றொரு மதம்’ மட்டுமல்ல; அது ஒரு புதிய பண்பாட்டு உலகக் கண்ணோட்டம் ஆகும். சாதி மறுப்பு, அகிம்சை, கருணை, பகுத்தறிவு, வன்முறையற்ற கம்யூனிசம் ஆகியவற்றை அவற்றின் அடிப்படைக் கூறுகளாக முன்வைத்தார்.

இவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்திய மரபு ரீதியான பௌத்தர்கள் அம்பேத்கரின் பௌத்தத்தை ‘அரசியல்படுத்தப்பட்டது’ என்று ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், கிராம்சியின் பார்வையில், ஒவ்வொரு நடைமுறைத் தத்துவமும் (Philosophy of Praxis) அரசியல்தான். ஒரு தத்துவம் மக்களின் விடுதலைக்குப் பயன்படும்போது, அது ‘மாசுபடவில்லை’; மாறாக, அது ‘நடைமுறைச் சாத்தியம்’ பெறுகிறது.

மேலாதிக்கத்தை உடைக்க முழுமையான பண்பாட்டுப் புரட்சி வேண்டுமென்றார். ஒரு சிறு சீர்திருத்தம் போதாது; அடித்தளத்தையே மாற்ற வேண்டும் என்பதே அவர் நிலைப்பாடு. இந்த வகையில், அம்பேத்கர் இந்தியாவின் மிகப் பெரும் கிராம்சியக் கோட்பாட்டாளர் எனலாம். ஏனெனில், வெறும் அரசியல் அதிகாரத்தை இலக்காகக் கொள்ளாமல், பண்பாடு, மதம், கல்வி, மொழி, கலை, நியாயம் – அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு புதிய மானுட மைய அமைப்பை உருவாக்க விரும்பினார்.

கல்வி பற்றிய கிராம்சி மற்றும் அம்பேத்கரின் பார்வைகள் மிகவும் முக்கியமானவை. கிராம்சி பள்ளிகளை வெறும் அறிவு வழங்கும் இடங்களாகப் பார்க்கவில்லை; அவை ஒழுக்கம் மற்றும் சமூக ஒப்புதலை உருவாக்கும் இடங்களாகக் கண்டார். அதேவேளை அவை மாற்று சிந்தனைகளுக்கான தளமாகவும் மாறலாம். அம்பேத்கரின் “கற்பி, ஒருங்கிணை, போராடு” (Educate, Agitate, Organise) என்ற முழக்கம் வெறும் கல்விக்கான கோரிக்கை அல்ல; அறிவின் ஜனநாயகமயமாக்கலுக்கான அழைப்பு. கல்வி என்பது வேலைக்கான தகுதி அல்ல; மனித மரியாதைக்கான ஆயுதம் என்ற புரிதல் அதற்குள் உள்ளது.

இந்தியச் சூழலில் பண்பாட்டு மேலாதிக்கம், ‘இந்தியா – பாரதம்’ என்ற இரட்டைக் கட்டுமானம், தேசியக் கல்விக் கொள்கை, திரைப்படங்கள், ஊடகங்கள் மற்றும் மொழிக் கொள்கைகள் வழியாகத் தொடர்ந்து மறுஉற்பத்தி செய்யப்படுகிறது. நவீன, பன்முக இந்தியாவிற்கு எதிராகப் பாரம்பரிய இந்துப் பண்பாட்டை ‘உண்மையான தேசிய அடையாளம்’ என முன்வைப்பதும், கல்வியில் வேதாந்தம், யோகா, சமஸ்கிருதம் போன்றவற்றை முன்னிலைப்படுத்தி தலித், ஆதிவாசி, பௌத்த, சமண அறிவு மரபுகளை விளிம்புநிலைப்படுத்துவதும், திரைப்படங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்களில் இந்துத்துவா மையப்படுத்தப்பட்ட கதையாடல்களை உருவாக்குவதும், மொழிக் கொள்கைகளின் மூலம் சில மொழிகளுக்கு உயர்ந்த அந்தஸ்தையும் மற்றவற்றுக்குத் தாழ்ந்த மதிப்பையும் வழங்குவதும் கிராம்சி கூறிய மேலாதிக்கத்தின் சமகால வடிவங்களாகும்.

இதற்கு எதிராகத் தலித் இலக்கியம், கிராமிய மற்றும் ஆதிவாசிக் கலைகளின் மறுஉருவாக்கம், சமூக ஊடகங்களில் உருவாகும் மாற்றுக் கதையாடல்கள், தலித், பழங்குடி, பெண்ணிய, அம்பேத்கரிய, மார்க்சிய சிந்தனைகளைக் கல்வி மற்றும் பாடத்திட்டங்களில் இணைக்கும் முயற்சிகள் போன்றவை எதிர் மேலாதிக்கப் போராட்டங்களாக உருவெடுத்து, குடிமைச் சமூகத்தின் பண்பாட்டு மற்றும் அறிவார்ந்த தளங்களில் புதிய ஜனநாயக இடங்களை உருவாக்க முயல்கின்றன.

எதிர் மேலாதிக்க இயக்கங்கள் & இன்றைய தேவை

எதிர் மேலாதிக்க அரசியலின் இன்றைய வடிவங்கள் தலித் இலக்கியம், கிராமிய மற்றும் பழங்குடிக் கலைகளின் மறுஉருவாக்கம், சமூக ஊடக எதிர்-சொற்பொழிவுகள் மற்றும் கல்விப் பாடத்திட்ட மாற்றங்கள் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுகின்றன. மொழி, இலக்கியம், கவிதை, தன்னிலை வரலாறு போன்றவற்றின் மூலம் சாதிய மேலாதிக்கத்தைச் சவாலுக்கு உட்படுத்தும் தலித் எழுத்தாளர்களும், முன்பு விளிம்புநிலைப்படுத்தப்பட்ட கூத்து, வில்லுப்பாட்டு, தப்பாட்டம், சிலம்பாட்டம் போன்ற கலைவடிவங்களை எதிர்ப்பின் கருவிகளாக மாற்றும் கலைஞர்களும் கிராம்சி குறிப்பிட்ட இயைபுடைய அறிவுஜீவிகளின் (Organic Intellectuals) பணியை முன்னெடுக்கின்றனர்.

அதேபோல், சமூக ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட குரல்களைப் பொதுவெளிக்குக் கொண்டு வந்தாலும், அவை பெருநிறுவனக் கட்டுப்பாட்டில் இருப்பதால் அதன் விடுதலைச் சாத்தியங்கள் வரம்புக்குட்பட்டவையாக உள்ளன. மேலும், தலித், பழங்குடி, பெண்ணிய, பௌத்த, மார்க்சிய, அம்பேத்கரிய மற்றும் கிராம்சிய சிந்தனைகளைக் கல்வியில் இணைக்கும் முயற்சிகள் பண்பாட்டு மேலாதிக்கத்திற்கு எதிரான முக்கியமான அறிவார்ந்த போராட்டங்களாக இருந்தாலும், அவை இன்னும் நிறுவன ரீதியான எதிர்ப்புகளையும் தணிக்கைகளையும் எதிர்கொள்கின்றன.

முடிவுரை

இந்தியச் சூழலில் கிராம்சியைப் புரிந்துகொள்வது அம்பேத்கரின் சாதி, மதம் மற்றும் சமூகநீதி குறித்த சிந்தனைகளின் வழியாகவே முழுமையடைகிறது. இன்றைய இந்தியாவில் சமூகநீதி, சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தை ஆழப்படுத்த வேண்டுமெனில், கிராம்சியின் பண்பாட்டு மேலாதிக்கப் பகுப்பாய்வையும் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு மற்றும் மனித விடுதலைத் திட்டத்தையும் இணைத்துப் படிப்பதும் நடைமுறைப்படுத்துவதும் தவிர்க்க முடியாத அறிவார்ந்த மற்றும் அரசியல் தேவையாகும்.

இது வெறும் ஆட்சி மாற்றத்திற்கான அழைப்பு அல்ல; மாறாக மனித மரியாதை, சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகப் பொது அறிவை உருவாக்குவதற்கான அழைப்பாகும்.

உதவிய நூல்கள்:

  1. Gramsci, A. (1971). Selections from the Prison Notebooks. International Publishers. (தமிழில்: கிராம்சி புரட்சியின் இலக்கணம், எஸ்.வி. ராஜதுரை, வ. கீதா)
  2. Ambedkar, B.R. (1936). Annihilation of Caste.
  3. The Oxford Handbook of Antonio Gramsci. Oxford: Oxford University Press, 2018.
  4. Ambedkar: Towards an Enlightened India. New Delhi: Penguin Random House India, 2004.
  5. ராஜதுரை, S.V., & வ. கீதா. அந்தோனியோ கிராம்சி: வாழ்வும் சிந்தனையும். கோவை: விடியல் பதிப்பகம், 1992.
  6. கீதா, வ. சுயமரியாதையும் சமதர்மமும்: அந்தோனியோ கிராம்சியின் வாழ்வும் சிந்தனையும். கோவை: விடியல் பதிப்பகம், 1994.

- இரா.முரளி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.