தமிழில் ஒரு புதுவகை இலக்கியம் பிறந்திருக்கிறது. அதற்குப் பெயர் தாத்தா-பாட்டி இலக்கியம்.

எல்லா தாத்தா பாட்டிகளுக்குமே பேரன், பேத்திகளின் குறும்பு, கரும்பு மழலைப் பேச்சு தேன்.

மீசை முறுக்கும் அதிகாரியாக இருந்தாலும் பேத்தியிடம் ஆட்டுக்குட்டிதான். பேத்தியிடம் கொட்டு வாங்குவது பிடிக்கும். பேரனிடம் அடி வாங்குவது பிடிக்கும். அவர்களின் கிறுக்கல்கள் கூட நட்சத்திரங்களாகத் தெரியும்.

அந்தி வேளையில் சூரியன் வானத்தில் வர்ணங்களை வரைவது போல் தாத்தா பாட்டிகளின் வாழ்விலும் பேரன், பேத்திகள் வண்ணங்களைச் சேர்க்கிறார்கள்.

இந்த வண்ணங்களைப் போல் தன்னுடைய பேத்திகளுடன் நடத்திய சின்னச் சின்ன உரையாடல்களை, கதையாடல்களை ‘அம்மாடி... அப்பாடி’ என்ற நூலில் பதிவு செய்து, சிறார் இலக்கியம் போல் இதை ‘தாத்தா பாட்டி இலக்கியம்’ என்று ஏன் சொல்லக்கூடாது என்று கல்வியாளர் ச.மாடசாமி கேட்டிருக்கிறார், சரி தான்.grandma with kidsஇதற்கு முன்பும், ‘தாத்தா-பாட்டி இலக்கியம்’ வந்திருக்கிறது.

2012-ல் கவிஞர் ஈரோடு தமிழன்பன் பேரன் கவினுக்கு ‘கவின் குறு நூறு’ என்றும் 2013-ல் பேரன் யோரனுக்கு ‘மழை மொக்குகள்’ என்றும் 2017-ல் பேத்தி வள்ளிக்கு ‘வள்ளி சந்தம்’ என்றும் தாத்தா பாட்டி இலக்கியம் படைத்து விட்டார்.

குழந்தை எழுத்தாளர் சுகுமாரனும் 2018-ல் ‘தங்கச்சிப் பாப்பா’ என்று பேரன், பேத்திகளைப் பற்றிய பாடல்களை எழுதியிருக்கிறார்.

இந்த ‘தாத்தா பாட்டி இலக்கியம்’ என்பது சுயபுராணம் அல்ல. இவை ஒட்டு மொத்தமாக பேரன், பேத்தி உலகிற்குப் படைக்கப்பட்டவை.

‘ஊருக்குப் பாட வேண்டும் நான் உனைப் பாடின்

யாரோ தவறா உரை’

என்று பேரனிடமே கேட்கும் கவிஞர்,

‘உன்னுள் உலகக் குழந்தைகள் உல்லாசம்

என்னுள்ளே இல்லையடா நான்’

என்று பதிலும் சொல்லி விடுகிறார்.

ஈரோடு தமிழன்பனின் ‘வள்ளி சந்தம்’ பேத்தி வள்ளியைப் பற்றிய பாடல்களாகும். உண்மையில் அப்பாடல்கள் எத்தனையோ வள்ளிகளுக்கானவை.

‘பிடித்த காய்’ என்ற பாடலில்

‘கத்தரிக்கா வெண்டைக்கா

என்னக்கா வள்ளிக்கா’

உனக்கு

எது பிடிக்கும் சொல்லக்கா?

என்று வரும் கேள்வி ஒரு வள்ளிக்கானதல்ல!

பேரன், பேத்திகளின் கூட்டுறவில் பிறந்தவைதான் சுகுமாரனின் தங்கச்சிப் பாப்பா.

பேரனுக்கும், பேத்திக்கும் இடையே நடைபெறும் குறும்பும், கேலியும் தான் இப்பாடல்.

‘தத்தக்கா... புத்தக்கா... நாலு காலு!

நாலு காலில் நடப்பவள் கயலு!

வலது கால் ‘ஷூ’ வை

இடது காலில் மாட்டுவாள்!

இடது கால் ‘ஷூ’ வை

வலது காலில் மாட்டுவாள்!

‘தத்தக்கா... புத்தக்கா... நாலு காலு!

தங்கை கயலு ஒரு முயலு!’

இப்படித்தான் ‘மூக்குப் போச்சு’ பாடலும்,

‘கெய்ட்டி பொண்ணு எழுந்து நின்னா

நிக்கும் போது கவிழ்ந்து விழுந்தாள்.

அய்யோ! மூக்குப் போச்சு!

அய்யோ! மூக்குப் போச்சு!’

இப்போது பேரன் பேத்திகள் யஷ், கிறிஷ்யா, கயல் தங்கள் பெயரைப் பொருத்தி வெவ்வேறு விதமாகப் பாடுகிறார்கள்.

‘தாத்தா பாட்டி இலக்கியம்’ சிறார் இலக்கியத்தின் ஒரு வகையாக மாறி விட்டது.

அது வளரட்டும்!

Pin It