நடுவண் அரசின் சாகித்திய அகாதெமி நிறுவனம் வழங்கும் இவ்வாண்டிற்கான பால புரஸ்கார் விருது கவிஞர் யூமா வாசுகிக்கு அவர் எழுதிய சிறார் கதைகளின் தொகுப்பான 'தன்வியின் பிறந்தநாள்' என்கிற நூலுக்கும், யுவ புரஸ்கார் விருது லோகேஷ் ரகுராமன் எழுதிய' விஷ்ணு வந்தார்' என்கிற சிறுகதைத் தொகுப்பிற்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த எழுத்தாளரும் விருதுகளைக் கருத்தில் கொண்டு எழுதுவதில்லை. அதேசமயம் தகுதியானவர்களை அடையாளம் கண்டு தக்க தருணத்தில் வழங்கப்படும் விருதானது சரியானதொரு சமூக அங்கீகாரமாக அமைவதோடு அவர்கள் தொடர்ந்து தம் பணியில் தீவிரம் குன்றாமல் செயல்பட உத்வேகம் தருவதாகவும் இருக்கும். அவ்வகையில் இவ்வாண்டு இவ்விருதுகளைப் பெற்றிருக்கும் இருவரும் தமது தனித்துவமான எழுத்துக்களின் வழியே வாசகர்கள் விமர்சகர்கள் எனப் பலரது கவனத்தையும் தம்பால் ஈர்த்தவர்களே.

பால சாகித்திய புரஸ்கார் விருதானது 50,000 ரூபாய் விருதுத் தொகையும் ஒரு செம்புப் பட்டயமும் அடங்கியது. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட தமிழ் உள்ளிட்ட 24 மொழிகளுக்கும் குழந்தை இலக்கியத்திற்குப் பங்களிப்புச் செய்த ஒருவருக்கு ஒவ்வொரு ஆண்டும் இவ்விருது வழங்கப்படுகிறது. இவ்விருதிற்குப் பட்டியலில் இடம் பெறும் எழுத்தாளர்களின் கடந்து ஐந்து ஆண்டுகளில் எழுதிய படைப்புகளில் ஒன்று மூவரடங்கிய தேர்வுக் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு இறுதியாக ஒரு நூல் தெரிவு செய்யப்படும்.

இவ்வாண்டு இவ்விருதினைப் பெறும் யூமாவாசுகி பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவர். கும்பகோணம் கவின் கலைக் கல்லூரியில் இளங்கலை ஓவியம் பயின்றவர். ஒவியராகத் தன் பணியினை பத்திரிகைகளில் தொடங்கியவர் பிறகு கவிஞராகவும் எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் தொடர்ந்தார். (1) தோழமை இருள் (2) இரவுகளின் நிழற்படம் (3) அமுத பருவம் வலம்புரியாய் வணைந்ததொரு சங்கு (தமிழினி பதிப்பகம்) (4) என் தந்தையின் வீட்டை சந்தையிடமாக்காதீர்! - (NCBH) முதலிய கவிதைத் தொகுப்புகள் (1) ரத்த உறவு (தமிழினிப் பதிப்பகம்) (2) மஞ்சள் வெய்யில் ( அகல் வெளியீடு) ஆகிய நாவல்கள் (1) உயிர்த்திருத்தல் (தமிழினிப் பதிப்பகம்) என்ற சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவருடைய இலக்கியப் பங்களிப்பு. இவற்றோடு குழந்தைகளுக்காக இவர் எண்ணற்ற புனைவுகளைச் சொந்தமாக எழுதியிருப்பதோடு வேற்று மொழிப் படைப்புகள் பலவற்றை மொழிபெயர்த்தும் தந்திருக்கிறார். இவரது சிறார் நூல்களில் பெரும்பாலானவற்றை பாரதிப் புத்தகாலயமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் வெளியிட்டுள்ளன.

இவர் மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்த ஓ.வி.விஜயனின் காசக்கின் இதிகாசம் (காலச்சுவடு பதிப்பகம்) நாவலுக்காக மொழிபெயர்ப்பு விருது 2017 ல் இவருக்கு கிடைத்திருக்கிறது. குதிரை வீரன் பயணம், மழை முதலிய சிற்றிதழ்களின் ஆசிரியராகவும் சிறிதுகாலம் இவர் செயல்பட்டிருக்கிறார். தற்போது மனைவி மகனுடன் பட்டுக்கோட்டையில் வசித்து வரும் இவர் அரசுப் பள்ளி ஒன்றில் ஓவிய ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

யுவபுராஸ்கார் விருதும் பாலபுரஸ்கார் விருது போலவே செம்புப்படயமும் ஐம்பதினாயிரம் விருதுத்தொகையும் அடங்கியது. இந்தியாவிலுள்ள 24 மொழிகளிலும் 35 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர் ஒருவருக்கு அவருடைய இலக்கியப் பங்களிப்பிற்காகச் சாகித்திய அகாதெமி நிறுவனத்தால் வழங்கப்படுவது.

தமிழில் இவ்விருதினை இந்த ஆண்டு பெறுபவர் லோகேஷ் ரகுராமன். தஞ்சாவூர் மாவட்டத்தில் நன்னிலம் அருகில் நாடாகுடி என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர் தற்சமயம் பெங்களூரில் மென்பொருள் துறையில் பணிபுரிந்து வருகிறார். தமிழினி, சொல்வனம், கணலி போன்ற மின்னிதழ்களில் தொடர்ந்து எழுதிவருகிறார். இவருடைய சிறுகதைகள் தொகுக்கப்பட்டு சால்ட் பதிப்பகத்தின் மூலம் (1) விஷ்ணு வந்தார் (2) அரோமா என இரண்டு தொகுதிகள் வெளியாகியுள்ளன. இன்னும் நூலாக்கம் பெறாத சிறுகதைகளும் உண்டு. அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த புதிய அறிதல்களோடு நம் பண்பாட்டு மரபின் பழைய தொன்மங்களையும் உள்ளடக்கி, மாறுபட்ட களங்களில் தமது கதைகளை எழுதிப் பார்க்கும் லோகேஷ், ஆகிவந்த வடிவத்தை ஒதுக்கி வைத்துவிட்டு புதிய சொல்முறைகளை முயன்று பார்க்கும் முனைப்புள்ளவராகத் தன் கதைகளில் வெளிப்படுகிறார். வெற்றி தோல்வி பற்றிக் கவலைப்படாத இந்த மனோபாவம் அவருடைய எழுத்தில் அவருக்கு ஒரு விதமான சுதந்திரத்தையும் அதேசமயத்தில் அதிக பொறுப்புணர்ச்சியையும் தருகிறது. அந்த சவாலைப் பல கதைகளிலும் அவர் முதிர்ச்சியுடன் கையாள்கிறார். இவ்விருது அவருக்கு இன்னும் பரவலான வாசகப்பரப்பை பெற்றுத் தரும் என எதிர்பார்க்கிறேன்.

யூமா வாசுகி, லோகேஷ் ரகுராமன் இருவருக்கும் புதுமலர் இதழோடு இணைந்து என் வாழ்த்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

- க.மோகனரங்கன்