புதுமலர் (ஏப்ரல் - சூன் 2024) சார்பாக வெளியிடப்பட்ட பாவேந்தர் பாரதிதாசன் ஆவணச் சிறப்பிதழ் மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. பாவேந்தர் குறித்து முக்கியமான பத்துக் கட்டுரைகள் அதில் இடம் பெற்றிருந்தன. இருப்பினும் பக்கநெருக்கடியால் சில கட்டுரைகைளை வெளியிட முடியாமல் போனது. எனவே இந்த இதழில் பாவேந்தர் குறித்த நான்கு கட்டுரைகள் கூடுதலாக இணைக்கப் பட்டுள்ளன. இருப்பினும், பாவேந்தர் குறித்துப் பதிவிட இன்னும் பற்பல ஆய்வுகள் உள்ளன. புதுமலரில் அவை அவ்வப்பொழுது வெளியிடப்படும்.
இந்த இதழ் அச்சிடும் பொழுது வெளியான இரண்டு செய்திகள் நம்மைக் கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளன. 2010 -ஆம் ஆண்டு தில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் காஷ்மீர் குறித்துப் பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் அவர்கள் மீதும், காஷ்மீர் மத்தியப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர் ஷேக் உசைன் ஆகிய இருவர் மீதும் கொடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டம் (Unlawful Activities Prevention Act -- UAPA) பிரிவு 13, இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153A, 153B, மற்றும் 505 - ன் கீழ் வழக்குத் தொடரத் தில்லி துணை நிலை ஆளுநர் அனுமதி அளித்திருப்பது குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 468 CrPC-- படி ஏற்புடையதல்ல. ஏனெனில் இது போன்ற குற்றத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குள் இறுதி அறிக்கை தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் 14 ஆண்டுகள் கழித்துப் பழைய வழக்கைத் தூசு தட்டி எடுத்து வழக்கு விசாரணைக்கு அனுமதி வழங்கியது நியாயமற்றது.
2010-ஆம் ஆண்டு காஷ்மீர் கருத்தரங்கில் பேசிய பேச்சு நாட்டுநலனுக்கோ, பொது அமைதிக்கோ எதிரானதல்ல என மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் சுட்டிக் காட்டியுள்ளன. ஆனால் கருத்துரிமையைக் காலில் போட்டு மிதித்து நசுக்குவது பாரதீய ஜனதாக் கட்சி அரசுக்கு இயல்பான ஒன்றாகும்.
2019 - ஆம் ஆண்டில் ஊபாச் சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் மூலம், தனிநபர்களையும் அவர்கள் எந்தச் சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாமலிருந்தாலும் “பயங்கரவாதிகள் (terrorist) என்று அரசு குற்றஞ்சாட்ட முடியும், வழக்குத் தொடுக்க முடியும். தனக்கு எதிராகக் கருத்துத் தெரிவிப்பவர்களைப் பழிவாங்க இப்படிப்பட்ட திருத்தத்தை முன்பே மோடி அரசு கொண்டு வந்து விட்டது.
2014 முதல் மோடி ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து 36 ஊடகவியலாளர்கள் மீது பொய் வழக்குகள் புனையப்பட்டுச் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். இதில் 16 பேர் கொடூரமான ஊபாச் சட்டத்தின் கீழ் வழக்குகள் பதியப்பட்டுச் சிறைக் கொட்டடியில் வாடுகின்றனர். தவிரவும் 28 ஊடகவியலாளர்கள் கடந்த 10 ஆண்டுகளில் கொடூரமாகக் கொலை செய்யப் பட்டுள்ளனர் என்பதை எண்ணும் போது சனநாயக இந்தியாவில் ஊடக சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் எவ்வளவு கீழ்நிலையில் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.
பத்தாண்டு மோடி அரசின் ஆட்சியில் பேச்சுரிமை, கருத்துரிமை தொடர்ந்து ஒருக்கப்பட்டு வருவதால், உலக அளவில் பத்திரிகைச் சுதந்திரக் குறியீட்டு அளவில் (Press Freedom Index) உலகிலுள்ள 180 நாடுகளில் 161 - ஆம் இடத்தில்தான் இந்தியா உள்ளது என்பதை (Reporters without Frontiers - 2023) பன்னாட்டு மனித உரிமை அமைப்புகள் அம்பலப் படுத்தி உள்ளன.
மேலும் நியூஸ் கிளிக் மின்னிதழ், பிபிசி ஆவணப்படம், பன்னாட்டு மன்னிப்பு அவை (Amnesty International) ஆகியவை மோடி அரசை விமர்சனம் செய்ததால் கடும் தாக்குதலுக்கு உள்ளாயின.
இத்தகைய பின்னணியில், புக்கர் பரிசு பெற்ற சர்வேதேச அளவில் புகழ் பெற்ற எழுத்தாளராகிய அருந்ததி ராய் அவர்கள் மீது ஏவப்பட்ட ஊபாச் சட்டத்தை உடனடியாகப் பாரதீய ஜனதாக் கட்சி அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துவோம்.
மோடி அரசின் அடுத்த தாக்குதல் நீட் தேர்வை விடாப்பிடியாகத் திணிக்கும் பாசிசப் போக்காகும். கடந்த காலத்தில் "தீட்டு" மூலம் ஒதுக்கப்பட்ட நாம், இப்பொழுது "நீட்"மூலம் பழிவாங்கப் படுகிறோம். அனிதா போன்ற திறமை மிக்க ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் மூலம் முற்றிலும் நாசமாக்கப்படுகிறது. பெரும்பாலான அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்காத பாடப்பகுதியில் தேர்வு வைத்து அதுதான் திறமையின் அடையாளம் எனும் பொய்யைத் தங்களது அதிகார பலத்தால் நிலை நிறுத்தப் பார்க்கிறது மோடி அரசு.
பணம் படைத்தவர்களுக்கு மட்டுந்தான் இனி மருத்துவராகக் கூடிய வாய்ப்பு என்பது நடைமுறையாகி விட்டது. நீட் பயிற்சி மைய மாபியாக்கள் இலட்சத்தில் அல்ல, கோடிகளில் புரண்டு கொண்டிருக்கின்றனர். பயிற்சி மையங்களில் மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கக் கூடிய அளவில்லாத இலாபத்தைக் கணக்கிட்டு கார்ப்பரேட்டுகள் இந்த வணிகச் சந்தையில் குதித்து விட்டன.
கல்வி என்பது சேவை என்ற நிலைமாறி, அது ஒரு பண்டமாக மாற்றப்பட்டு விட்டது. பண்டத்தை நல்ல விலைக்கு விற்று கொள்ளை இலாபம் அடிப்பதுதான் வியாபார தர்மமாகி விட்டது.
இந்த ஆண்டு நடைபெற்ற "நீட்" தேர்வே இதற்குச் சரியான எடுத்துக் காட்டாகும். இந்தாண்டு நீட் தேர்வில் இலட்சக் கணக்கான ரூபாய்கள் விளையாடி உள்ளது. பீகாரில் 34 இலட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக் கொண்டு நீட் தேர்வு வினாக்கள் முன்பே விலைக்கு விற்கப்பட்டுள்ளன. நீட் பயிற்சி மையங்களின் மோசடி, ஆள் மாறாட்டம், சிறிதும் நியாயமற்ற கருணை மதிப்பெண் முறை என அதிகார அத்துமீறல் தடையின்றி அரங்கேறியுள்ளது. இத்தகைய கேவலமான ஊழல் பாரதீய ஜனதாக் கட்சி ஆளும் பீகார், குஜராத், அரியானா ஆகிய மாநிலங்களில்தான் வகைதொகை இல்லாமல் நடந்துள்ளது
தேசியத் தேர்வு முகமையும், மோடி அரசும் இத்தகைய கயமையை மூடி மறைக்க முற்படுவது மிகவும் இழிவானது. 24 இலட்சம் மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் ஆபத்தான போக்கு கடும் கண்டனத்திற்குரியது.
"நீட்" தேர்வால் மிகவும் பாதிக்கப்படுபவர்கள் தமிழக மாணவர்கள்தான். அதனால்தான் தமிழகத்திலுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள் நீட் தேர்வைக் கடுமையாக எதிர்க்கின்றன. தமிழக அரசு தொடக்கத்திலிருந்தே நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்குக் கேட்டுப் பல முயற்சிகளை மேற்கொண்டு வருவது பாராட்டத் தக்கதாகும்.
நீட் தேர்வின் மோசடியைப் புரிந்து கொண்டு இன்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்கள் போராட்டத்தில் குதித்துள்ளன. எனவே நீட் தேர்வை விரும்பாத மாநிலங்களுக்கு அதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும்.
அதேபோல், மருத்துவக் கல்லூரி இடங்களில் ஒன்றிய அரசுக்கான ஒதுக்கீட்டை இரத்து செய்ய வேண்டும்.
இதைப் போன்ற பல்வேறு கல்விசார் சிக்கல்களுக்குக் கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்பக் கொண்டு வருவது சிறந்த 'தீர்வாக அமையும். கலை இலக்கியம் மற்றும் அறிவுத்துறை சார்ந்தவர்கள் இத்தகைய போராட்டங்களிலிருந்து ஒதுங்கி நின்றால் வருங்காலம் நம்மை மன்னிக்காது.
சீர் வாசகர் வட்ட முதல் விருதாளர் பொதியவெற்பன்
2019 முதல் சீர் வாசகர் வட்டம் தமிழ் பதிப்புத்துறையில் பெரும் அதிர்வுகளை உண்டாக்கி வருகிறது.
வாசிப்பை ஓர் இயக்கமாக மாற்றியது இதன் தனிச்சிறப்பு. புதுமைப்பித்தன் கதைகள் (2021) தாய் - மாக்சிம் கார்க்கி, (2022) கந்தர்வன் கதைகள் (2023)
இருபதாம் நூற்றாண்டுச் சிறுகதைகள் நூறு (2023) ஆகிய நூல்களை மக்கள் பதிப்பாகக் கொண்டுவந்து பலரது பாராட்டுக்களைப் பெற்றது.
சீர் வாசக வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் தம்பி அவர்கள் ஏற்கெனவே தனது நன்செய் பிரசுரம் வழியாக 2018 முதல் "பெண் ஏன் அடிமையானாள்?" எனும் தந்தை பெரியாரின் குறுநூலை நாலரை இலட்சம் படிகள் விற்பனை செய்து மாபெரும் சாதனை படைத்ததை அனைவரும் அறிவர்.
இப்பொழுது சீர் வாசகர் வட்டத்தின் பல நூற்றுக் கணக்கான வாசகர்கள் தங்களின் பரவலான பங்களிப்போடு ஒரு விருதினை உருவாக்கி அதன் சார்பாக முதல் விருதினை ஆய்வறிஞர் பொதியவெற்பன் அவர்களுக்குச் சூன் 30 ஆம் நாள் கோவையில் வழங்குகின்றனர். இவ்விருது ஒரு இலட்சம் ரூபாய் கொண்டதாக இருக்கும்.
விருது பெறும் பொதியவெற்பன் அவர்களைத் தமிழ் கூர் நல்லுலகம் நன்கறியும். இலக்கிய விமர்சகர், பதிப்பாளர், கவிஞர், நிகழ்த்து கலைஞர் எனப் பன்முக ஆளுமை மிக்க அவரைப் "புதுமலர்" இதழ் சார்பாக வாழ்த்துகிறோம்.
- புதுமலர் ஆசிரியர் குழு