படைப்பின் நெடிய பயணம் குறித்து…

என்னுடைய படைப்பு பயணம் என்பது வாழ்வோடு கலந்தது. வறுமையும் போதாமையும் தான் என் வாழ்க்கை. இது என்னுடைய வாழ்வின் பிரச்னை மட்டுமல்ல. பொதுவாக மானுடப் பிரச்னையாக தான் நான் பார்ப்பது. அதை எப்படி படைப்புக்குள் கொண்டு வந்து எழுதுவது முதன்மையான வேலை. நாற்பது ஆண்டு காலமாக தனிமனித இயக்கமாக இதைச் செய்து வருகிறேன். சிறு வயதில், நான் பார்த்த கூத்துக் கலை, அறிஞர்களின் சொற்பொழிவுகள் எழுத்தாளர்கள், கவிஞர்களின் படைப்புகளை நிறைய வாசித்திருக்கிறேன். வாழ்வனுபவம், படைப்புகள் வாசிப்பனுபவம் இரண்டும் சேர்ந்து, படைப்புகள் எழுத தூண்டியது. இந்தப் படைப்புகள் கலை அம்சத்திற்கு மட்டுமே, என் இயக்கம் இல்லை. அதை போர்க்குணமாக தான் படைப்பை ஒரு கருவியாக பயன்படுத்தியிருக்கிறேன். சின்ன வயதில் கிராமத்தில் ஆடு மாடு மேய்ப்பது, களை எடுப்பது, நெல் அறுப்பது, நெற்கட்டு சுமப்பது, சித்தாள், என்று பல வேலைகள் செய்திருக்கிறேன் ஒரு தொழிலாளியாக வாழ்க்கை முழுவதும் உழைத்துக் கொண்டிக்கிறேன். உழைப்பு மட்டுமே போதுமானதாக இல்லை, படைப்புகள் எழுதுவதின் வழியே இந்த சமூகத்திற்கு என்னுடைய பங்களிப்பை செய்கிறேன். மானுடர்களின் வலியும் காயமும், படைப்புகளின் வலியாக பதிவுச் செய்கிறேன்.

writer aasuமண்ணின் மாந்தர்களை கவிதைகள் கதைகள் வழியே சொல்லும்போது, அவர்களின் புதைந்து கிடக்கும் வாழ்க்கையை மீள் உருவாக்கம் செய்கிறேன். மீள் உருவாக்கம் செய்வதின் மூலம், காலத்தோடு கைக்கோர்க்கும் நம்பிக்கை. இவ்வாறாக நம்பிக்கையை எம்மக்களுக்கு ஏற்படுத்துவது – மானுடர்க்கெல்லாம் ஓர் அன்பை நிறைத்துச் செல்லும் விழிப்பு. விழிப்பு வெளிச்சமாகுகையில் அந்த வெளிச்சம் என் படைப்புகளில் ஒளிர்வதை காண்கிறேன்.

இவ்வாறான உந்துதலில், இதுவரை எட்டு கவிதைத் தொகுப்புகள், நான்கு சிறுகதை தொகுப்புகள், 209 – கவிஞர்களின் கவிதைகள் குறித்து இரண்டு கவிச்சித்திர நூல்கள் ஒரு உரைச்சித்திர நூல்கள், ஒரு குறுங்கதை நூல், இரண்டு நாவல்கள் – இருபது படைப்புகள் எழுதியிருக்கிறேன். தொடர்ந்து எழுதுகிறேன்.

பொதுவாக இலக்கியப் படைப்பின் இலக்காக எதை முன் வைப்பீர்கள்?

வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று சொல்லும்போது, இன்னமும் அடித்தட்டு மக்களின் வாழ்வும் பாடும் அப்படியே தான் இருக்கிறது. உலக மயமாக்கலில், உழைக்கும் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அடக்குமுறைகள் நவீன வடிவத்தில் புகுந்துவிட்டன. தெருவுக்கு வந்து அவர்களின் பிரச்னைகளை முன் வைத்துப் போராடிய மக்கள் இன்று தன்னுடைய கருத்துகளையோ பிரச்னைகளையோ முன் வைத்துப் போராட முடியாமல், இன்றைய நவீன வாழ்வு கட்டுப்படுத்திவிட்டது. மதம் சாதி எல்லா நிலைகளிலும் தலைவிரித்தாடுகிறது. சோசியல் மீடியாக்கள், உணர்வுகளை மழுங்கடித்துவிட்டது. உணர்வுகளில் குரல் எழுப்பிய மனிதன் இறுகிவிட்டான். அவனுக்கு மனம் ஒன்று இருப்பதையே அறிய முடியாமல் இருக்கிறான். சித்தாந்தங்களும் இலக்கும் வாழ்விலிருந்து அந்நியமாகிவிட்டன. இவ்வாறான இழப்புகளையே மீண்டும் மீண்டும் படைப்புகளில் பதிவுச் செய்கிறேன்.

இவையே என் படைப்பின் இலக்கு நோக்கம்

இன்றைய படைப்பிலக்கிய சூழலை எப்படி உணர்கிறீர்கள்?

இன்றைய படைப்பிலக்கிய சூழல், சமூக வலைதளங்களில் சிக்கிக்கொண்டு தவிக்கிறது. படைப்பின் தன்மானம் சுயம் இழந்து நிற்பதையும் சொல்ல வேண்டும். கனவுகள் நோக்கங்கள் கொண்டிருப்பதற்கு பதில், ஏதோ பேன்சியாக இருப்பதை பார்க்க முடிகிறது. தீவிரமான காத்திரமான நம்பிக்கையான படைப்புகள் நான்காம் பேருக்குத் தெரியாமல் எழுதப்படுகின்றன. அதை இனம் கண்டு வாசகர்கள் தேடிப் போய் படிக்கும் நிலை வரவேண்டும். மேன்மையான படைப்புகள் வருகின்றன. அதை உணரும் நிலை இல்லை என்பதுதான் இன்றைய சூழல்

ஒரு படைப்பிலக்கியவாதியாக நிறைவாக உணர்கிறீர்களா?

நான் இதுவரை எழுதியது எனக்கு நிறைவு எனினும் இன்னும் நிறைவாக எழுத வேண்டும். சத்தான சாரம் மிக்க வாழ்பவனுபவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றை எழுதுவதே நிறைவாக எண்ண முடியும். ஒரு தொழிலாளியாக நான் தொழிலாளர்கள் வாழ்வை முழுமையாக எழுத வேண்டும். ஏமாற்றம், துரோகம், சின்னத் தனங்கள், போலிகள், பற்றி எழுத வேண்டும். தொழிலாளியின் உழைப்புச் சுரண்டலை எழுத வேண்டும். காலத்தின் முன் கைதியாக ஆன மானுடர் வாழ்வை முழுமைப் படுத்துவதின் மூலம், என்னுடைய படைப்புகள் நிறைவான இடத்திற்கு செல்லும் என்பது என் நம்பிக்கை.

நம்பிக்கையளிக்கும் இளம் படைப்பாளிகள் பற்றி சொல்லுங்கள்?

இன்றையச் சூழலில் இளம் படைப்பாளிகள் நிறையப்பேர் எழுதுகின்றனர். குறிப்பாக பெண் படைப்பாளிகள் எழுதுகின்றனர். சின்னச் சின்ன அனுபவங்களை நுட்பமாக எழுதுகின்றனர். அனுபவம் தரும் ஆனந்தமாகவே அவை இருக்கின்றன. நுட்பங்கள் கைவர அளவுக்கு, மானுடர் துயர் அறிந்து எழுதவில்லை என்பது வருத்தமான செய்தி. கண்ணீரும் வலியும் கார்ப்பரேட்டுகள் விழுங்கிவிட்டது என்பதைத்தான் அது காட்டுகிறது. இதிலிருந்து மீண்டு, மனிதர் நிலையை எழுத வேண்டும் அதுவே இன்றைய தேவை.

நவீன இலக்கியப் போக்குகள் குறித்து சொல்லுங்கள்?

அறுபது எழுபது எண்பதுகளில், எழுத்து, கசடதபற, வானம்பாடி, முற்போக்கு இயக்கங்கள், மீட்சி என்று நவீன இதழ்கள், அமைப்புகள் படைப்புகளை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றன. இப்போது இவற்றின் தாக்கம் இருந்தாலும், புதிய நவீன எழுச்சியுள்ள படைப்புகள் குறைந்து வருவதை காணமுடிகிறது. இன்றைய படைப்பாளர்களுக்கு, கடந்து வந்த வரலாறு தெரியவில்லை. இந்த வரலாறு அறிந்து, நவீனத்தை கைக்கொண்டு படைக்க வேண்டும் என்பதே என்னுடைய எண்ணம்.

நீங்கள் இதுவரை பெற்ற பரிசு விருதுகள் பற்றி சொல்லுங்கள்?

கவிஞர் தமிழன்பன் அகவை விருது, இலக்கிய வீதி இனியவன் ஐயாவின் அன்னம் விருது, எழுத்தாளர் செஞ்சி தமிழினியன் அவர்களின் விதைநெல் விருது, கொளத்தூர் கலை இலக்கிய மன்றத்தின் இலக்கிய ஆளுமை விருது.

ஒரு வாளித் தண்ணீர் சிறுகதைக்கு இனியவன் ஐயாவின் நினைவுப் பரிசு. செல்லி மற்றும் பிறகதைகள் சிறுகதை நூலுக்கு, மலேசியா. கோலாலாம்பூரில் 2023-ஆண்டு நடைபெற்ற 11-வது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் சிறந்த நூலுக்காக ஒரு லட்சம் ரூபாய் பரிசு. திருமதி சௌந்திரா கைலாசம், எழுத்து இலக்கிய அமைப்பு நடத்திய நாவல் போட்டியில், பஞ்சவர்ணம் நாவலுக்காக இரண்டு லட்சம் ரூபாய் பரிசு.

பொதுவாக எனக்குக் கிடைத்த பரிசும் விருதும், இந்த மண்ணின் மக்களின் துயரம் வலிகளை எழுதியதற்காகதான் என்று நம்புகிறேன். அவர்களுக்கே பரிசையும் விருதையும் அர்ப்பணிக்கிறேன்.

- எழுத்தாளர் ஆசு

நேர்காணல்: ஜி.சரவணன்