கவிதை இலக்கியம் உலகில் பெரும்பாலோரால் விரும்பப்படும் இலக்கியமாகும். மரபுக் கவதை, வசனக் கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ கவிதைகளில் பிரிவுகள் நீளும். இவ்வகையில் கவிதைகளின் ஒரு வடிவமே புதுக்கவிதையாகும். மரபுக்கவிதை இலக்கண வரம்புக்கு கட்டுப்பட்டவை. புதுக்கவிதைகள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றன. நேசம், காதல், கோபம், மகிழ்ச்சி, அன்பு, பாசம், துக்கம், ஏக்கம், எதிர்ப்பார்ப்பு, காத்திருப்பு என எல்லாற்றையும் சுவைபட, சொல்வதில் புதுக்கவிதைகள் சிறந்து விளங்குகின்றன. அவ்வகையில் காதல் சுவையைச் சொல்வதில் இறையன்பு கவிதைகள் எவ்வாறெல்லாம் அமைந்துள்ளன என்பது பற்றிய கருத்துக்களைச் சொல்வதாக இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.

1910 ஆண்டில் ‘வால்ட் விட்மன்' எனும் ஆங்கிலக்கவிஞர் எழுதிய ‘புல்லின் இதழ்கள்' எனும் நூலே புதுக்கவிதையின் முதல் நூலாகும். இதைத் தொடர்ந்து அமெரிக்காவை விட்டு இங்கிலாந்தில் குடியேறிய ‘எஸ்ரா பவுண்ட்' ஒரு சிறந்த புதுமையான புதுக்கவிதையைத் தந்தார். இவரின் பாழ்நிலம் (Waste Land) கவிதைக்கு நோபல் பரிசு கிடைத்தது. கி.பி 20 ஆம் நூற்றாண்டு தொடங்கி புதுக்கவிதை தமிழிலக்கியத்தில் தோன்றி சிறக்கலானது. பாரதியால் எழுதப்பட்ட வசன கவிதைகளே தமிழில் காணும் புதுக்கிதைக்கு முன்னோடியாக அமைந்தது. புதுக்கவிதை வளர்ச்சியும் பெற்றது.

தொல்காப்பியர் புதிதாகப் பிறக்கும் இலக்கியத்தை ‘விருந்து' எனப் பெயரிட்டு சிறப்பித்தது வரவேற்றார். இதேபோல் நன்னூலார் “பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே” என்றார். புதுக்கவிதை மரபுக் கவிதைகள் போலல்ல. இவை இலக்கணச் செங்கோல். யாப்புச் சிம்மாசனம். எதுகை பல்லாக்கு, தனிமொழி சேனை, பண்டிதபவனி இவை எதுவும் இல்லாதது. தம்மைத் தாமே ஆளும் சிறப்பு பெற்ற கவிதையாக புதுக்கவிதைகள் அமைந்தன.

புதுக்கவிதையானது மூன்று காலக்கட்டங்களில் வளர்ச்சியடைந்தது. மணிக்கொடி காலத்தில் மணிக்கொடி இதழ் மட்டுமின்றி வேறு பல இதழ்களும் புதுக்கவிதைகளை வெளியிட்டுள்ளன. ஜெயபாரதி, சூறாவளி, மோகினி போன்ற இதழ்களைக் கூறலாம். எழுத்து காலத்தில் எழுத்து, சரஸ்வதி, இலக்கியவட்டம், தாமரை, கசடதபற போன்ற இதழ்கள் புதுக்கவிதைகளை வளர்த்தன. சிட்டி, வல்லிக்கண்ணன் ஆகியோர் இலக்கியத்திற்கு சிறப்பு சேர்த்தவர்களாவர். வானம்பாடி காலத்தில் வானம்பாடி, தீபம், கணையாழி, சதங்கை முதலிய இதழ்கள் புதுக்கவிதைகளைப் பிரசுரித்தன. சதங்கை, புவியரசு போன்றவர்களை இக்காலத்து புதுக்கவிஞர்களாக்கியது.

புதுக்கவிதையின் மொழி எளிய நடை­யிலுள்ளதால் அனைவராலும் விளங்கிக் கொள்ளக் கூடியதாகவிருக்கும். நவீன தமிழ் இலக்கியத்தின் சிறப்புக்குச் சான்றாக புதுக்கவிதைகள் விளங்குகின்றன. புதுக்கவிதை வழிப் பல கவிதை முன்னோடிகள் வளர்ச்சி அடைந்தனர் சுருக்கம் கொண்டதனால் எழுதுவது இலகுவாகும். பேச்சுவழக்குச் சொற்கள், ஒலிநயம் காணப்படுவது மற்றுமொரு சிறப்பம்சமாகும். வடமொழி, ஆங்கிலம், பேச்சுவழக்கு சொற்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு கருப்பொருளைக் காட்சியாகக் கொண்டு நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தக் கூடியதாய் புதுக்கவிதைகள் சிறப்பு பெறுகின்றன.

“உள்ளத்து உள்ளது கவிதை - இன்பம்

உருவெடுப்பது கவிதை

தெள்ளத்தெளிந்த தமிழில் உண்மை

தெரிந்து ரைப்பது கவிதை”1

என்ற கவிமணியின் வைர வரிகள் புதுக் கவிதையின் நோக்கத்தை தெளிவுபடுகின்றது.

“நமக்குத் தொழில்கவிதை நாட்டிற் குழைத்தல்

இமைப்பொழுதுஞ் சோரா திருத்தல்”2

என்ற பாரதியின் வாக்கினை அடியொற்றியவராய் விளங்கும் கவிஞர்களுள் முனைவர் வெ. இறையன்பு அவர்கள் குறிபிடத்தக்கவர். இவரின் கவிதைகளில் இடம் பெற்றுள்ள காதல் சுவை குறித்து ஆய்வோம்.

உலகில் காதல் இலக்கியங்கள் இல்லாத மொழிகளே இல்லை. எழுத்து இல்லாத மொழியில் கூடக் காதல் உண்டு. அதனால்தான் காதலைப் பற்றி கூறுகையில்,

“உயிரில் முளைத்த சிறகு காதல்

அது ஓசையில்லாத சலனம்

ஆனால் உயிரை இயக்கும் அசைவு”3

“கடிகாரம் / அவர்கள் அருகில் இருக்கும் போது

மணி முள் நிமிட முள்ளின் / வேகத்தில் நகர்கின்றது”4

காதலர்கள் அருகில் இருக்கும் போது நிமிடங்கள் கூட வருடங்களாய், வருடங்கள் நிமிடங்களாய் மாறுவது காதலின் இயல்பு. அதைச் சுட்டிக் காட்டும் விதமாகத்தான் மேற்காணும் கவிதை அமைகிறது.

காதலிக்காக காதலனும் காதலனுக்காக காதலியும் காத்திருப்பதே தனி சுகம்தான். அதை சொல்லும் விதமாகத்தான்.

“வாசலிலேயே

கால்கள் வேர்விடுமளவு காத்திருந்தாள்”5

என்கிறார் இறையன்பு. அவர்கள் இருவரின் அன்பும் ஆழமானது. காதல் உணர்வு அனைத்து உயிர்களிலும் உண்டு. பாரதி கூட,

“காதல் காதல் காதல் / காதல் போயிற் காதல் போயிற் / சாதல் சாதல் சாதல்”6

காதல் இன்றி உலகில் எதுவும் இயங்காது என்று பாடுகிறார்.

“கண்களை மூடும் போது / தோன்றும் அவள் முகம்

அவன் இதயத்தில் / காதல் விதை /

வேரூன்றி விட்டது / என்பதைத் தான் /

முரசறைந்து முழக்குகிறதே”7

எனும் கவிதையில் கண்களை மூடும்போது கூட அவளின் முகம் வட்டமிட்டது. இது காதலின் ஆரம்பம் என்கிறார் கவிஞர்.

“விரும்பிய / பெண்ணைச் சந்திக்கும் வரை /

அவள் / உலகத்தில் இருக்கிறாள் /

பழகிய பின்போ / அவளே /

உலகமாய் ஆகிப்போகிறாள்”8

எனும் கவிதையில் காதலுக்கு பின் காதலியே உலகமாக தோன்றுகிறாள் என்று கவிஞர் தம் கருத்தை பதிவிடுகிறார்.

“காதல் தன்னைத் தேடும் முயற்சி / தேடுவதற்காகவே / தொலைந்து போகும் பயிற்சி”9

எனும் கவிதையில் கவித்துவம் மிளிர்கிறது. தன்னைத் தேட வேண்டும் என்பதற்காகவே இருவரும் தனிந்தனியாக காதலில் தொலைகிறார்கள். எதேச்சையாகத் தொலையவில்லை, வேண்டுமென்றே திட்டமிட்டே தொலைகிறார்கள். இதில்தான் வெற்றியும் அடைகிறார்கள். காதலைப் பற்றிய இறையன்புவின் ரசனை வித்தியாசமானது.

“புதைகுழி என நினைத்த வாழ்வு

புதையல் குழியான மகிழ்வு.

------ / ---- / ----

அவள் முகமே / ‘வலம்’ வர / அவன் மனமே

‘கிரி’ யானது”10

எனும் கவிதையில் காதலைப் புதையலுக்கு இணையாக்குகிறார். காதலித்துப் பார் புதையல் கிடைக்கும் என்பதுப் போல் உள்ளது. பக்திக்காக மக்கள் கிரி வலம் வருவது வழக்கம். இங்கோ தலைவனின் மனம் மலையாக தலைவனின் முகம் சுற்றி வருகிறது.

காதலன் காதலைச் சொல்ல காதலி மறுத்துவிட்டால் காதல் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமா என்று பயந்து தேர்வு எழுதாமலே காதலை மறைத்துக்கொண்டு நிற்கிறான் காதலன் என்று கவிஞர் இவ்விடத்தில் நேர்த்தியாக இயம்புகிறார்.

“நிராகரிப்பால் நிகழும் / நிராசை

மிகப்பெரிய அவமானவல்லவா?

இதயத்தில் ஊடுருவிய அம்பாய்

அது வாழ்நாள் முழுதும் வலிக்குமே

அடைக்காக்கும் காதல்

நிறைவேறாத நேசத்திலும் வலிக்குமே

புனிதமானதாயிற்றே

மடியிலிருக்கும் பாலாய்

அவன் கனவுகள் காத்திருந்தன”11

‘செம்புலப் பெயல்நீர் போல் அன்புடை நெஞ்சம் தாமாகக் கலந்த’ காலமெல்லாம் இக்கவிதை மலையேறி­விட்டது! காதல் கடிதங்களைக் கணக்கின்றிப் பகிர்ந்து கொண்டவர்களே தன் கல்யாணப் பத்திரிக்கையும் பரிமாறிக் கொள்ளும் கலிகாலமே இன்று நடந்து வருகிறது! என்பதை சொல்வதாகக் கவிஞர்

“இன்றைய இளைஞர்கள் / நடைமுறை

வாழக்கையைப் / புரிந்துகொண்டவர்கள்

ஆதலால்தான் / காதல் கடிங்களைப்

பகிர்ந்துகொண்டவர்கள் / கல்யாணப்                                         பத்திகையையும் / பரிமாறிக் கொள்கிறார்கள்”12

இதில் இன்னொரு அம்சமும் உண்டு. இருவரும் ஒருவரையொருவர் அதிகம் நேசிப்பதால் சூழல் காரணமாக பிரிய நேரிடுகிற போது அதற்காக காதலைச் கூட துறக்கத் துணிகிறார்கள் என்று கூட எடுத்துக்கொள்ளலாம்.

‘காதலைப் பாடாத கவிஞன் இல்லை: காதலைப் பாடாதான் கவிஞன் இல்லை’ என்பார்கள். இக்கூற்று இறையன்புக்கும் பொருந்துவதாகவே உள்ளது. சமூக அவலங்களைச் சுட்டும் போது வல்லினமாக இயங்கும் இறையன்பு, காதலை பாடும்போது மெல்லினமாக மாறிவிடுகிறார்: கற்பனையும் முருகிலும் கைகோர்த்துச் செல்லும் வண்ணம் கவிதை படைக்கின்றார்.

“கண்ணே / உன்விழிகளோ / மீன்கள் / இதழ்களோ /

பவளங்கள் / பற்களோ / முத்துகள் / கழுத்தோ /சங்கு / கூந்தலோ / அலைகள் / எனக்கொரு / சந்தேகம் / உன்னை உன் / பெற்றோர்/ கடற்கரையோரம்

கண்டெடுத்தார்களா / என்ன?”13

‘மாசறு பொன்னே, வலம்புரி முததே’ என்று சிலப்பதிகாரத்தில் காதல் மொழி பேசிய கோவலனின் மறுபதிப்பாக விளங்குகிறான் இக்கவிதையில் வரும் காதலன்.

“உனது பெயரை / மீண்டும் மீண்டும் /

உச்சரித்த பொழுதுதான் / இனிப்புக்கு இன்னொரு அர்த்தம் / இருப்பதையே /

எனது நா உணர்ந்துகொண்டது.”14

எனும் கவிதையில் காதல் இனிமையானது. ஆதை உணர்வுபூர்வமாக உணர்ந்தால்தான் தெரியும் என்கிறார் கவிஞர். காதல் என்பது ஒரு மனிதனுக்கு ஆழமான இனிமையான ஆனந்தமான உணர்வாக இருக்கிறது. இந்த உணர்வை ஏதோ ஓர் காரணம் தூண்டிவிடுகிறது. அது கவிதையாக இருக்லாம். கல்வியாக இருக்கலாம். கனிந்து ததும்பிப் பொங்கும் அன்பாக இருக்கலாம். இறையன்புவின் கவிதைகள் காதலுக்கும் காமத்திற்கும் உள்ள வேறுபாட்டை எடுத்து இயம்புகிறது.கலலூரிக் கனவுகள் சிதைந்து போகாமல் மாணவச் செல்வங்களைக் காப்பாற்றி உண்மைக்காதல் எதுவென உரைக்கிறது.

மேற்கோள் விளக்கம்

 1. மலரும் மாலையும், கவிமணி ப.7
 2. பாரதியார், பாரதியின் கவிதைகள் , ப.126
 3. வைகை மீன்கள், இறையன்பு.வெ, அணிந்துரையில் சிற்பிபாலசுப்பிரமணியம்
 4. மேலது பக்கம் (அணிந்துரை)
 5. மேலது பக்கம் (அணிந்துரை)
 6. பாரதியார் ,பாரதியின் கவிதைகள் , ப.26
 7. வாய்க்கால் மீன்கள், இறையன்பு. வெ, ப.50
 8. வாய்க்கால் மீன்கள், இறையன்பு. வெ, ப.56
 9. வாய்க்கால் மீன்கள், இறையன்பு.வெ, ப. 141
 10. மேலது, ப. 113
 11. வைகை மீன்கள், இறையன்பு.வெ, ப. 49
 12. பூபாளத்திற்கொரு புல்லாங்குழல், இறையன்பு . வெ, ப.88
 13. மேலது, ப.1
 14. மேலது. ப.13

துணைநூற்பட்டியல்

 1. வைகை மீன்கள், இறையன்பு.வெ, விஜியா பதிப்பகம், 20, ராஜ வீதி, கோயம்புத்தூர் -641001 (முதற்பதிப்பு) செப்டம்பர்2020.
 2. வாய்க்கால் மீன்கள், இறையன்பு.வெ, நியூ சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098, ஒன்பதாம் பதிப்பு: ஆகஸ்ட், 2017
 3. பூபாளத்திற்கொரு புல்லாங்குழல், இறையன்பு.வெ, நியூ சென்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை – 600 098, ஏழாம் பதிப்பு: ஜனவரி,2016.
 4. பாரதியார் கவிதைகள், பாரதியார், சுதர்ஸன் பதிப்பகம், எண்:17,ஜே.கே.காம்ப்ளக்ஸ், எண்: 13 முதல் மாடி, ராமநாதன் தெரு, தி.நகர்.சென்னை -600 017, கைபேசி: 90031 22315. தொகுத்தவர்: விருகை பிச்சுமணி.

- ப்ரியா.சி