புரட்சிக்கவிஞர் பேராளுமைக்கு அவருடைய கவிதைகளே அல்லாமல் அவரைப் பின்பற்றிக் கவிதைகள் புனையும் பெரும்பட்டாளம் தமிழகத்தில் தலைதூக்கியதும் ஒரு சான்றாக இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. கவிஞர்களை உருவாக்குவதில், வளர்த்தெடுப்பதில் அவர் காட்டிய ஆசையை அக்கறையை நானும் என் வாழ்வில் பெற்றிருக்கிறேன்.பெருமிதம் ததும்பப் பாரதிதாசனே தன்வாழ்வு குறித்த நெடிய அகவலில்

என்நடை தம்நடை என்யாப்பத் தம்யாப்பென்று

இந்நாள் எழுந்துள பாவலர் தம்மை

எண்ணினால் இருப்பவர் தம்மில் நூற்றுக்குத்

தொண்ணூற் றொன்பது பேர்எனச் சொல்லுவர்.

என்று குறிப்பிட்டுள்ளார். பொன்னி என்ற இலக்கிய ஏட்டின் வாயிலாகப் பாரதிதாசன் பரம்பரை இலக்கிய உலகிற்கு அறிமுகமாகியது. கவிஞர்கள் முடியரசன், வாணிதாசன், சுரதா என்று தொடரும் வரிசையில் இடம் பெற்றிருக்க வேண்டிய பெருங்கவிஞர் தமிழ்ஒளி. பாரதிதாசன் அழுத்தமாய்த் தம் கவிதைகளில் பதிவு செய்த பொதுவுடைமைக் கோட்பாட்டை அப்படியே பின்பற்றியவர் தமிழ்ஒளி. ஆயின் கூடுதலான திராவிட இயக்கப் பார்வையோடு,பொதுவுடைமைக் கோட்பாடு தழுவி எழுதிய கவிஞர்கள் வரிசையில் இடம்பெறாமல் போனாரோ தமிழ்ஒளி?

இப்படிப்பட்ட நிலை பாரதிதாசனுக்கும் உண்டு. பொதுவுடைமை இயக்கம் பெற்ற இடத்தினும் அதிகமான இடத்தை அவரிடம் திராவிட இயக்கம் பெற்று விட்டதாகக் கருதி அவரை அவ்வளவாகப் பொதுவுடைமை இயக்கம்,ஒப்புக்கொள்ளவில்லை. ஆயின் பொதுவுடைமை முரசு கொட்டிய பட்டுக்கோட்டைக் கலியாணசுந்தரத்துக்கும் தமிழ்ஒளிக்கும் ஆசானாக இருந்து அவர்களை வளர்த்தெடுத்தவரே பாரதிதாசன்தான். சென்னை மத்திய நூலகக் கட்டடத்தில் தோழர் வி.பி.சிந்தன் தலைமையில் நடந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டத்தில் இதை எடுத்துப் பேசுகையில் பாரதிதாசனைப் பொதுவுடைமை இயக்கம் ஒதுக்குவது எவ்வகையில் ஏற்புடையது என்று கேட்டேன். சிந்தன் என்று அவர் பெயரை மாற்றியவரே பாரதிதாசன்தான். பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் புதுச்சேரியில் போராட்டம் நடந்தபோது அவர் பாரதிதாசனோடு பழகியிருக்கிறார். அப்பொழுதுதான் சிண்டன் என்ற பெயரைப் பாரதிதாசன் சொற்படி சிந்தன் என்று மாற்றிக் கொண்டார். பாரதிதாசன், “நானா பொதுவுடைமைக்கு விரோதி?”என்ற தலைப்பில் கவிதை எழுதியிருப்பதையும் எடுத்துச்சொன்னேன். ஒப்பற்ற கவிஞன் தமிழ்ஒளியை நினைக்கும் போது அலைஅலையாக எண்ணங்கள் என் இதயத்துள் எழுகின்றன.

அவர் தமிழ் படித்தால் மேலும் வளர்வார் என்று நம்பிக்கை கொண்டு அவரைத் தஞ்சைக் கரந்தைப் புலவர் கல்லூரிக்கு ஒரு பரிந்துரைக் கடிதம் கொடுத்து அனுப்பியவரே பாரதிதாசன்தான். கரந்தைப் புலவர் கல்லூரியில் நான் படித்தபோது பேராசிரியராக அங்கு விளங்கியவர் பாவலரேறு ச. பாலசுந்தரனார். அவர் கரந்தையில் புலமைக் கல்வி பெற்று வந்தபோது அவருடன் படித்து வந்தவர்தான் தமிழ்ஒளி. அப்போது அவர் பெயர் விஜயரங்கம். தன்வரலாறாகப் பாவலர் எழுதியுள்ள “நினைவலைகள்” என்னும் நூலில் தமக்கும் தமிழ்ஒளிக்கும் இடையேயான தொடர்பு பற்றி எழுதியிருப்பதை இங்கு எடுத்துக் காட்டுவதுபொருத்தமாக இருக்கும்.

“எப்பொழுதும் ஏதாவது எழுதிக் கொண்டிருப்பார்.ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதில் அவ்வளவு ஈடுபாடு இருக்காது. புதுமைப்பித்தன் ரகுநாதன் போன்றோர் கவிதைகளை விமரிசிப்பார்.

என்னிடத்தில் ஈடுபாடும் கொண்டார். ஒரு நாள் கேட்டேன் “உங்களுக்கு இவ்வளவு தமிழ் உணர்வும் கவிதைத் திறனும் எப்படி வந்தன? அவர்உடனே “பாரதிதாசனால்தான். நான்அவரிடம் அவர் எழுதும் கவிதை கட்டுரைகளைப் படி எடுக்கும் உதவியாளராக இருந்தேன். அவற்றைப் படிக்கும்போது அதைப்போல் கற்பனை செய்து எழுதிப் பார்ப்பேன். அதே மெட்டில் அதே பாவில் எழுதிப்பார்ப்பேன். அவர் என்பால் ஒரு மகனைப்போல் அன்பு செலுத்தினார்.” இப்படித் தம்முடைய கல்லூரி நாள்களைப் பற்றிப் பாலசுந்தரனார் எழுதுகையில் அவருக்கும் தமக்குமான நட்புப் பெருக்கைப் பதிவு செய்துள்ளார்.

ஆனால் தமிழ்ஒளிக்கு முறையான பாடத்திட்டத்தில் நம்பிக்கையோ ஈடுபாடோ இல்லை. இப்படிப்பட்ட கல்வி மூலம் கற்கிற கல்வி ஆசிரியர் பணிக்குப் போகப் பயன்படுமே தவிர மேன்மையான படைப்பாளியாக உதவாது என்பது தமிழ்ஒளியின் கருத்து. இந்நிலையில் கரந்தை வாழ்வு கசப்பதற்கான பிறிதொரு சூழலும் அவருக்கு நர்ந்தது. ஒடுக்கப்பட்ட விளிம்புநிலை மாணவராகிய அவர் அதுகாரணமாக அவமானங்களை எதிர்கொள்ள நேரிட்டது. வெறுத்துப்போய்ப் புதுவைக்கே திரும்பிப் போய் விட்டார். படிப்பைத் தொடராமல் திரும்பி வந்துவிட்ட தமிழ்ஒளியைக் கூப்பிட்டுக் காரணம் கேட்டார் பாரதிதாசன். உன்னை எவன் மட்டமாகப் பேசியவன்? வா! என்னோடு புறப்படு! நான் சேலம் போக வேண்டியிருக்கிறது. உன்னைக் கரந்தையில் புலவர் கல்லூரியில் விட்டுவிட்டுப் போகிறேன் என்று தமிழ் ஒளியோடு பறப்பட்டார். அப்போது கரந்தைப் புலவர் கல்லூரி முதல்வராக இருந்தவர் பேராசிரியர் மீனாட்சிசுந்தரனார் என்று நினைக்கிறேன். அங்குப் பணியில்சேரும் முன்போ பின்போ சோவியத்து ஒன்றிய மாசுக்கோவில் தமிழ்ப்பணி. ஆற்றியவர். அவரிடம் தமிழ்ஒளியை ஒப்படைத்து “இவன் என் புள்ளாண்டான். மரியாதைக் குறைவா எவனும் நடத்தாதபடிப் பார்த்துக் கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு “என்று சொல்லியபின் சேலத்திற்குப் போனார்.

இவ்வாறு பாரதிதாசப் பாதுகாப்பு அரண் கிடைத்தும் அவர்மனம் தனக்கு வேண்டியது எதுவோ அது கிடைக்கவில்லையே. என்று தவித்துக் கொண்டிருந்தார். படைப்பிலக்கிய ஆர்வத்தை அடக்க முடியவில்லை. சக்தி நாடக சபாவுக்கென ஒரு நாடகம் எழுதி அனுப்பிவைத்தார். அதை அந்நாடக சபா ஏற்றுக் கொண்டது. அரங்கேற்றம் உறுதியானது. பறவை கல்லூரிக் கூண்டைவிட்டுப் பறந்து விட்டது. இது குறித்து, பாலசுந்தரனார் எழுதியிருக்கிறார். தமிழ்ஒளி நாடகம் அரங்கற்றமாகிய அடுத்தநாள் கரந்தை திரும்பி­யிருக்கார். அந்நாளைய வழக்கப்படி முதல்நாள் வசூலான தொகையோடு சிறிது சேர்த்து 700 உருபா கொடுத்திருக்கிறார்கள். இன்றைய மதிப்பில் அத்தொகை ரூ. 70,000 ஆகும் என்று பாவலர் வியந்து எழுதகிறார்.அப்புறம் என்ன ? பெட்டி படுக்கை எல்லாம் பாவலர் பொறுப்பில் வைத்துவிட்டுப் போன தமிழ்ஒளி மீளவில்லை கரந்தைக்கு!

- ஈரோடு தமிழன்பன்