ஒவ்வொரு நூலும் அல்லது மனிதரும் முதன்முதலில் நமக்கு எப்படி அறிமுகமானார்கள் என்பதை நினைவுக்கூர்ந்து எழுதினாலே அவை ஓர் அழகான புனை எழுத்தாக மலரும் எனத் தோன்றுகிறது. நானிங்கே நமது காலத்தின் மாபெரும் ஆளுமையான தொ.மு.சி.ரகுநாதன் (1923 - 2001) என்னுள் எப்படி உட்புகுந்தார் என்பதை முதலில் சொல்லிவிட்டுப் பிறகு அவரது விமர்சன எழுத்துக் குறித்துப் பேசலாம் என்று கருதுகிறேன். தமிழ் மரபில் இது மற்றொன்று விரித்தலாகக் கருதப்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றாலும் பின் நவீனத்துவ எழுத்து முறையில் பருமனை பொருளைவிட அதன் அரூபமான நிழல் உருவத்திற்கு பெரிய இடம் உண்டு என்பதால் இவ்வாறு எழுதத் தொடங்குகிறேன்.

நான் மதுரை தியாகராசர் கல்லூரியில் இளங்கலை படிக்கிற காலத்திலேயே (1967-1970) ப.காளிமுத்து அண்ணன் பழக்கமானவர், பின்பு சென்னை மாநிலக் கல்லூரிக்கு நான் படிக்கப் போனபோது (1970-1972) அங்கே அவர் பயிற்றுநராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். அது எனக்கும் பல வழிகளிலும் பக்கத் துணையாக அமைந்தது. அவர் திராவிடத் தலைவர்கள், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் என்று பலருடன் தொடர்பில் இருந்தார். எனவே அவர் எனக்கும் தூரத்துக் கிராமத்­திலிருந்து நகரத்திற்குள் போன என் போன்ற நண்பர்களுக்கும் நம்பிக்கை நட்சத்திரமாகத் தோன்றினார். என் வகுப்புத் தோழி ஒருவர் அவரது சுவடியின் முதல் பக்கத்தில் இப்படிப் பொறித்து வைக்கப்பட்டிருந்தார் என்றால் பாருங்களேன்,

மலர்களைப் போல் தங்கை உறங்குகிறாள் - அண்ணன்

வாழ வைப்பான் என்று அமைதி கொண்டாள்

ஏதோ ஒரு சூழலுக்காகப் படைக்கப்பட்ட வரிகள், எப்படி எப்படியான சூழலுக்கெல்லாம் பயன்படுப்படியாகப் பரிணாமம் பெறுகின்றன என்பதே பெரிதும் ஆர்வம் தரத்தக்க ஒன்றுதான்.

இவ்வாறு பிரம்மாண்டமாக எனக்குள் உயர்ந்து நின்ற அந்தக் காளிமுத்து அண்ணன்தான் ரகுநாதனை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கூறிய அந்த வாசகம்கூட எனக்குள் இன்றைக்கும் அழியாமல் அப்படியே இருக்கின்றது.

“தம்பீ! ரகுநாதன் என்றொரு எழுத்தாளர், இலக்கியம் என்றால் என்ன என்று எவ்வளவு அற்புதமாகக் கூறியிருக்கிறார் பாரு! ரசனைச் சுவை மேலிட லேசாகச் சிரித்துக் கொண்டே அந்த மேற்கோளைக் கூறுகிறார். இலக்கியம் என்பது இந்திய பீனல் கோடு மட்டுமல்ல; மனுநீதிச் சாத்திரமும் அல்ல; அது வரம்புகளைக் கடந்து நின்று இதயநீதி கூறுவது என்ன அற்புதம் பாரு!” என்றார்.

இப்படி மேன்மையான ஓர் ஆளுமையை எனக்குள் பரவி­யிருந்த ஒருவர் மூலம் அறிமுகமானதால் அவர் எழுத்துக்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் தேடிப்படிக்கும் பழக்கத்திற்கு உள்ளானேன். அவர் சிறுகதைகள் கவிதைகள் நாவல்கள், நாடகங்கள், ஓப்பீட்டு ஆய்வுகள் வாழ்க்கை வரலாற்று நூல், ஆராய்ச்சி நூல்கள், மொழிபெயர்ப்பு நூல்கள், பதிப்பித்த நூல், திறனாய்வு நூல்கள் எனப் பல நூல்கள் தமிழுக்கு வழங்கியுள்ளார். (காண்க-விக்கிபிபீடியா) ஏறத்தாழ அவருடைய நூல்கள் அனைத்தையுமே வாசித்திருக்கிறேன். ஆனாலும் நேரில் பார்க்கிற வாய்ப்பு தொண்ணூறுகளின் இறுதியல்தான் எனக்குக் கிடைத்தது. அதுவும் ஓர் அரிய ஆர்வம் தரத்தக்க நிகழ்வு.

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் காற்றில் கலந்த பேரோசை என்ற அருமையான கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்விற்கு (திருநெல்வேலியில் நிகழ்ந்தது) என்னையும் அழைத்திருந்தார்கள். சிறப்புரை சிதம்பர ரகுநாதன் என்றிருந்ததால் பெரிதும் ஆர்வத்தோடு கலந்து கொண்டேன். ஆனால் அவரைக் கூட்டத்தில் பார்த்து ஒரு வணக்கம் போடுவதோடு ஒதுங்கிக் கொண்டேன். பேசுவதற்குத் தயக்கமாக இருந்தது. பெரிதும் உடல்நலக்குறைவுக் காரணமாகத்  தளர்ந்து காணப்பட்டார். நீண்டநாள் நண்பர் சு.ரா. என்பதால் தட்டாமல் கூட்டத்திற்கு ஒத்துக்கொண்டு வந்திருக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன்.

அவரோடு பேசத் தயங்குவதற்குக் காரணம், அப்பொழுதுதான் என்னுடைய தமிழிலக்கியத் திறனாய்வு வரலாறு என்ற நூல் வந்த புதிது. அதில் மார்சியத் திறனாய்வாளர்கள் என்ற வரிசையில் ரகுநாதனைக் குறித்துக் கொஞ்சம் கடுமையாகவே மதிப்பிட்டு எழுதியிருந்தேன். மேலும் கூடுதலாக, சாமர்த்தியமாய் விமர்சன ஈடுபாட்டைத் தொழில்முறையாக எழுத்துக்கு அடகு வைத்து ஜீவனோபாயம் செய்யப் போய்விட்டார். நமக்கு நஷ்டம் ஒரு விமர்சன சாம்ராஜ்யம்.

- என்ற தமிழவனின் கூற்றையும் மேற்கோள் காட்டியிருந்தேன். ஆனாலும் அந்தப் பகுதியை முடிக்கும் பொழுது “இலக்கியத்தைச் சார்பற்ற ஒரு தனிப் பொருளாக கொண்டாடிக் கொண்டிருந்த சூழலில் இலக்கியத்திற்கும் சமூக இருப்பிற்குமுள்ள பிணைப்பைத் தன்னுடைய அழுத்தமான நடையினாலும் கடுமையான உழைப்பினாலும் தெளிவுப்படுத்திக் காட்டியவர் என்ற அளவில் அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது என்பதில் ஐயமில்லை.”

- என்றுதான் முடித்திருந்தேன். அவ்வளவு பெரிய ஆளுமையை இலக்கிய விமர்சனம் என்ற அந்த நூல் அவருடைய 22 வயதில் எழுதப்பட்டு 24 வயதில் வெளிவந்த கட்டுரைகள் அடங்கியது. என்பதைக் கணக்கில் கொள்ளாமல் மார்க்சிய அழகியல் அறிவோடு கூடிய திட்டவட்டமான பார்வையோடு எழுதிச் செல்கிறாரா என்பது ஐயமே என்றும், ஒன்றுக்கொன்று முரணான பல பார்வைகளை அவைகளுக்கிடையே உள்ள ஆழமான எதிர்நிலைகளைப் பற்றிய நுட்பமான புரிதலின்றி எழுதிச் செல்கிறார் என்றும் நான் மதிப்பிட்டு எழுதியது சரிதானா அவர் மனம் புண்பட்டிருக்காதா? அப்படி எழுதியிருக்கக் கூடாதோ? என்றெல்லாம் எனக்குள் பலவாறு எண்ணங்கள் எழுந்து அலைக்கழித்ததால் அவரோடு உரையாடுவதைத் தவிர்த்துவிட்டேன். இப்பொழுது நினைத்துப் பார்க்கும் பொழுது நல்லதொரு வாய்ப்பை இழந்திருக்கிறோம் என்று எண்ணி வருந்த நேர்கிறது.

2

ரகுநாதன், இலக்கியப் படைப்புகள் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரம் முதல் பாரதியார் வரை நிறைய எழுதி இருக்கிறார். ஆனால் அவற்றில் இலக்கியத் திறனாய்வு என்று சொல்லத்தக்க ஒன்றாக 1948ல் வெளிவந்த “இலக்கிய விமர்சனம்” என்ற நூலைத்தான் சுட்ட முடியுமென்று கருதுகிறேன். மற்றவை எல்லாம் ஆராய்ச்சி என்ற தளத்திற்குப் போய்விடுகின்றன. எப்பொழுதுமே திறனாய்விற்கும் ஆராய்ச்சிக்கும் நடுவில் ஒரு மெல்லிய கோடுதான் இருக்கிறது. எந்த நேரத்திலும் திறனாய்வு ஆராய்ச்சியாக மாறி­விடக்கூடிய விபத்து நடக்கலாம் என்ற சூழல்தான் நிலவுகிறது.

ஆராய்ச்சி ஓர் இலக்கிய பிரதிக்குள் நுழைவதற்கு முன்பே தனக்கென ஒரு கருதுகோளை நிர்ணயித்துக் கொண்டு, அதற்கேற்ப பிரதிக்குள் பயணிக்கிறது. அதற்குப் பிரதி பிரதானமல்ல; தன் கருதுகோள்தான் பிரதானம். ஆனால் திறனாய்வு எவ்விதமான நோக்கமோ கருதுகோளோ இல்லாமல் பிரதிக்குள் பாய்ந்து முழ்கிச் செல்கிறது. அங்கே பிரதிதான் பிரதானம். அதற்குள் புதைந்து கிடப்பவை ஏராளம்! ஏராளம்! மூழ்கிச் செல்லும் திறனாய்வாளன் தன் கைக்குக் கிடைத்ததை அள்ளித் வழங்குகிறான். அது அவனே எதிர்பார்க்காத ஒன்று இவ்வாறு எதிர்பாராதவைகளை ஒவ்வொரு திறனாய்வாளனும் தனது ஆற்றலுக்கேற்ப அள்ளி வழங்குகிறான். இப்படிப் பலரும் வழங்க வழங்க பிரதி பலவாறு எட்டுத்திக்கும் பதினாறு கோணமும் விரிந்துக் கொண்டே போகிறது. ஆராய்ச்சிபோல ஒன்றை நோக்கி அடைவதல்ல திறனாய்வு; பிரதிக்குள் பயணித்துக் கொண்டே இருப்பதுதான் திறனாய்வு அதன் மூலம் பல வாசல்களைத் திறந்துவிடுவதுதான் திறனாய்வு.

க.நா.சு. போன்றவர்கள் பிரதியை மதிப்பிடுவதும் தீர்ப்புக் கூறுவதும் பட்டியலிடுவதும் என்று செயல்பட்டுக் கொண்டிருந்த காலத்தில், ரகுநாதனும் சில மதிப்பீடுகளைத் தீர்க்கமாக முன்வைக்கிறார் என்றாலும் மிகவும் ஆச்சரியப்படுத்தும் விதமாக ஆங்காங்கே பிரதிக்குள் பயணம் செய்யும் முறையையும் பார்க்க முடிகிறது.

இலக்கிய விமர்சனம் என்ற அந்தச் சிறிய நூல் ஒன்பது தலைப்புகளில் பெரிய பெரிய விடயங்களையும் (அந்த காலம் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும் பொழுது) பேசுகிறது. முதல் பதிப்பு முன்னுரையில் (1948) இந்த நூலை வாசகர்கள் இலக்கிய விமர்சனமாகவே விமர்சன இலக்கியமாகவோ, எப்படி படுகிறதோ அப்படி ஏற்றுக் கொள்ளலாம் என்று பதிவு செய்கிறார். இதில் விமர்சனமும் ஓர் இலக்கியமே என்கிற அவர் புரிதல் மிகவும் எண்ணிப் பார்க்கத்தக்கது.

இந்த நூலின் இரண்டாவது பதிப்பு 32 ஆண்டுகள் கழித்து 1980 இல் வெளிவரும்போது துணிகரமான முயற்சி இலக்கிய விமர்சனத்துறையில் ஒரு பாலபாடமாகவும் மூலபாடமாகவும் மதிப்பிடப்பட்டது. என்று முன்னுரையில் எழுதுகிறார் 70 களில் இலக்கிய முதுகலைத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இலக்கியத் திறனாய்வை நாங்கள் கற்றபோது சொல்வதைப் போல இந்த நூலைத்தான் பாலபாடமாகவும் மூலபாடமாகவும் கற்றோம்.

3

இலக்கிய விமர்சனம் என்ற தலைப்பில் இப்படி எழுதுகிறார்

காமம் செப்பாது பொழிவதுதான் விமர்சனம்

காமம் செப்புவது சுலபம்; கண்டது மொழிமோ

என்றால் அதுதான் கஷ்டமான காரியம்

இதைவிட நன்றாக நறுக்கென்று அழகாகக் குறுந்தொகை வரியில் விமர்சனத்தை வரையறுத்துவிட முடியாதல்லவா! மேலும் மாத்யூ அர்னால்ட் இலக்கியம் என்பது வாழ்க்கையின் விமர்சனம் என்கிறார். அப்படியென்றால் அந்த விமர்சனத்தை விமர்சனம் செய்வது கஷ்டம்தானே என்று திறனாய்வு செயல்பாட்டின் அருமையையும் எடுத்துரைத்து விடுகிறார்.

ஓர் இலக்கியத்தை அதன் சமூக தேவை என்ன என்ற அடிப்படை­யில்தான் மதிப்பிட வேண்டும். விருப்பு வெறுப்புகளுக்கு இடமின்றி மதிப்பிட வேண்டும். எடுத்துக் கொண்ட கருத்தில் எந்த அளவிற்கு சாதித்துள்ளது என்று பார்த்து மதிப்பிட வேண்டும் என்றெல்லாம் எழுதி வரும்போதுதான் மேலே காளிமுத்து அண்ணன் சுட்டிக்காட்டிய இலக்கியமென்பது இந்திய பீனல் கோடும் அல்ல; மனுநீதிச் சாத்திரமும் அல்ல அது வரம்புகளைக் கடந்து நின்று இதயநீதி கூறுவது என்பதை எழுதிச் செல்லுகிறார்.

மேலும் இலக்கியயென்பது ஒப்புக்கொள்ளப்பட்ட, விரும்பப்பட்ட அபிப்பிராயம் என்பதையும் கடந்து நின்று, புதுப்புது விஷயங்களை, புரட்சிகரமான விஷயங்களைப் படைக்கக்கூடியது. அதை விமர்சகன் உணர்ந்து மதிப்பது, விமர்சகனின் கடமைஎன்றெல்லாம் எழுதுவதோடு, மேலை நாட்டினர் விமர்சனத்திற்கென்று தனிப் பத்திரிக்கைகள் கொண்டு வருவதுபோல தமிழிலும் கொண்டு வரவேண்டும் என்கிறார். அப்பொழுதுதான் தரம் தாழ்ந்து கிடக்கும் தமிழ் நூல் மதிப்புரைகளின் தரம் உயரும், தமிழ் நிலத்தில் ஆர்வத்தால் எழுந்து பயனற்று விளைந்துவிடும் காளான்களையும், கறைகளையும் விலக்க முடியும் என்று தமிழ்ச் சூழலையும் அக்கறையோடு கவனித்துப் பதிவு செய்துக் கொண்டு போகிறார்.

கலையும் கலை மரபும் என்ற தலைப்பில் கலை என்பது ஜனசமூகத்துக்கும் கலை உள்ளத்திற்கும் தொடர்பு ஏற்படுத்தும் ஓரு சாதனம் என்கிறார். இயற்கையின் அழகு கலை அல்ல மனிதர்களின் இதயம் அதை எப்படிப் பார்த்துப் பதிவு பண்ணுகிறது என்பதுதான். கலை தேனருவி கலை இல்லை ஆனால்

தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

செங்கதிரோன்

பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

என்று திரிகூட ராசப்பக் கவிராயர் பாடும்போது அது கலையாகிறது. இதையொட்டி ஓர் அழகான உரையாடலைப் பதிவு செய்கிறார். அவருடைய நண்பர் சொன்னதாக - 

ரயிலில் ஆயிரம் தடவை போயிருக்கிறாயே

ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் உனக்கு எதை ஞாபகத்திற்குக் கொண்டு வருகிறது?

நல்ல வாட்ட சாட்டமாக, சுண்டிவிட்ட பிரம்பு மாதிரி துவளும் 16 வயசுப் பெண் மாதிரித்தான் இருக்கிறது

இப்படிப் பல இடங்களில் நவீனத்துவவாதிகள் போல அழகை ஆராதனை செய்யும் எழுத்து முறையை ரகுநாதனிடம் கண்டு சுவைக்கலாம்

மேலும் கலை ஒரு மாயத் தோற்றம் உண்மையிலிருந்து இரண்டுமுறை விலகிவிட்ட ஒரு தோற்றம் என்றெல்லாம் பிளாட்டோ தன் குடி அரசு நூலில் விவாதிப்பதை அவர் பெயர் சொல்லாமலேயே எடுத்து வைத்து விவாதித்து அதை ஏற்க மறுக்கிறார் மேலும் கலை கலைக்காகவே, கலை மனித சமூகத்திற்காகவே, என்ற இருவேறுபட்ட போக்கினையும் சுட்டிக்காட்டுகிறார். கவின்கலைநுண்கலை பற்றியும் கலை மரபு நாட்டிற்கு நாடு மாறுபடுவது பற்றியும் பேசுகிறார். பிக்காசோவின் அரூபக் கலை பற்றியும் குறிப்பிடும் ரகுநாதன் அந்தக் கலையை அவர்கள்தான் விளக்க வேண்டும் என்று மொழியும் தெளிவும் என்ற தலைப்பில் அரியதொரு கருத்தை முன்வைக்கிறார். தமிழ் என்றால் ஒரு பாஷை ஒரு கலை, ஒரு கலாச்சாரம், ஒரு இசை, ஒரு சிற்பம், ஒரு மகத்தான சக்தி என்றெல்லாம் அவர் எழுதும்போது 22 வயது இளைஞருக்குள் இருந்த ஞான நெருப்பை அடையாளம் காணமுடிகிறது. மேலும் தெளிவடைய எளிமையான மொழி மட்டும் போதாது  அது பேசும் பொருள் குறித்த அடிப்படை அறிவும் இருக்க வேண்டும். என்று எழுதிவிட்டு, அதை விளக்குவதற்குக் கம்பனையும் மில்டனையும் பயன்படுத்திக் கொள்கிறார். வழக்கம்போல் நவீனத்துவவாதிகளைப் போலவே வைதீகத் தமிழ்ப் பண்டிதர்களை ரகுநாதன் ஒரு சாடு சாடுகிறார்.

கவிஞன் ஒரு குடிக்காரன் என்ற தலைப்பில் பகல் முழுக்க உழைக்கும் ரிக்க்ஷாகாரனுக்கு உடல் வலியைக் குறைக்க கள் பயன்படுவதுபோல கவிஞர்களுக்கு கவலையை மறக்க கவிதை பயன்படுகிறது என்கிறார். மேலும் பாரதியாரை கஞ்சாக் கவிஞர் என்றே துணிந்து எழுதியுள்ளார். மேலும் இப்படி எழுதிகிறார்.

நம் நாட்டுக் கவிதைகள் பலவுமே இம்மாதிரியான கஞ்சாவாகவே இருந்து வந்திருக்கின்றன கடவுள் மீது பாடினாலும் காதலி மீது பாடினாலும் நம் கவிதைகள் பலவும் கஞ்சா கவிதைகள் நமது புலவர்களும் கவிதைகளைப் புகலிடமாகக் கொள்ளும் வழி­யில்தான் சென்று விட்டனர். காரணம் நமது புலவர்களுக்கு ஈனக் கவலைகள் அதிகம்.

இந்த மாதிரி இடங்களில் ரகுநாதனின் இளமைத்துடிப்பையும் செயல்படும் விதத்தையும் உணர முடிகிறது.

இலக்கியம் பிறந்த கதை என்ற தலைப்பில் அவர் கூறும் மொழிமையவாதம் வியப்பாக இருந்தது எனக்கு.

11 பாஷையின் அடிப்படையாக எழுந்த கனவுகளே இலக்கியம்

என்கிறார் இன்றைக்கு அமைப்பியல் வாதம் முன் வைக்கும் ஒரு கருத்தைப் போகிற போக்கில் அவர் சொல்லிச் செல்கிறார் மேலும் இலக்கியம் கடவுள் இரண்டும் அவ்வளவு விசாலமானவை பரந்தவை அமைதியான தத்துவம்

- என்று எழுதும் போது நவீனத்துவம் அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தில் செயல்பட்டுள்ளதைப் பார்க்கமுடிகிறது.

இலக்கணத்தைச் செருப்போடு ஒப்பீட்டுப் பேசுகிறார் பாதம் வளர வளர அதுவும் வளர வேண்டும். அது வளராமல் காலைக் கடித்தது என்றால் அதைக் கழற்றி எறிந்து விடுவது மேல் என்கிறார். அதே நேரத்தில் காலுக்குத் தக்க செருப்பை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அரங்கின்றி வட்டாடக்கூடாது என்றும் கருதுகிறார். இந்த அடிப்படையில்தான் புதுக்கவிதையைப் புறந்தள்ளுகிறார் தந்தி பாஷை என்று கேலி செய்கிறார். இந்தப் போக்குதான் இடதுசாரிகளிடம் புதுக்கவிதைக்கு எதிரான தமிழ்ப் பண்டிதர்களோடு இணைந்து பயணித்துப் பிறகு கவிஞர் சிற்பி, கவிஞர் மீரா முதலிய கலை இலக்கியப் பெருமன்றத்தைச் சேர்ந்தவர்கள் மரபுக் கவிதை­யிலிருந்து புதுக்கவிதைக்கு மாறிய சூழலில், மீராவின் கனவுகள் கற்பனைகள்; காகிதங்கள் என்ற புதுக்கவிதை நூலுக்கு மதிப்புரை வெளிவந்த சூழலில், தமிழன்பனின் புதுக்கவிதைத் தொகுப்பு ஒன்றிற்கு மார்க்சிய அறிஞர் கைலாசபதி முன்னுரை தந்த சூழலில் இடதுசாரிகள் புதுக்கவிதையை ஏற்றுக் கொள்ளவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது என்பது வரலாறு.

கவிதை என்ற தலைப்பில் அமைந்துள்ள கட்டுரையில் பாரதியாரின் வசன கவிதை குறித்துக் கூடக் கடுமையான விமர்சனத்தைத்தான் முன்வைக்கிறார். அதுபோலவே பாவேந்தர் பாரதிதாசனின் முதல் கவிதை தொகுப்பிற்குப் பின்னால் வந்த தொகுப்புகளில் உள்ள கவிதைகள் வசனக் கட்டடமாகவே அமைந்து விட்டன. என்ற பார்வையையும் முன் வைக்கிறார். இளமையின் துடிப்பை இத்தகைய இடங்களில் பார்க்கமுடிகிறது.

சிறுகதை, நாடகம், வசனம், கட்டுரை என்றும் தனித்தனி தலைப்புகளில் கருத்துரைத்துள்ளார். தமிழ்நாட்டில் தெருவில் நிர்வாணமாக வருவதற்கு கூச்சப்படுகிறார்கள் ஆனால் நான் ஒரு சிறுகதை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ள யாரும் கூச்சப்படுவதில்லை என்று சிறுகதையாளர்களின் ஈசல் போன்ற பெருக்கத்தையும் வாழ்வையும் சுட்டிக் காட்டுகிறார்.நாடகம் பற்றி எழுதும்போது இது ஒரு தனிமனித விஷயமல்ல பலர்கூடிப் படைக்க வேண்டிய ஒன்று என்பதால் அது சரியாக விருத்தியடையவில்லை கூத்து மரபுதான் இங்கே நாடகத்தின் இடத்தை ஒரளவு நிரப்பி வந்துள்ளது எனக் கருத்துரைக்கிறார். வசனம் என்ற தலைப்பில் கட்டுரை எழுதுவது குறித்து அலசுகிறார் கட்டுரை எழுதுவதை ஏன் ஓர் இலக்கியமாக யாரும் கருதவில்லை என்ற முக்கியமான ஒரு கேள்வியை முன் வைக்கிறார்.

இவ்வாறு சிறுநூலில் பல சிந்தனைத் தொகுப்புகள் நிறைந்த மொழியாடலை தனது 22 வயதிலேயே நிகழ்த்திக் காட்டியவர் நூற்றாண்டுக் கண்ட சிதம்பர ரகுநாதன். பாரதியாரை ஷெல்லியோடும் தாகூரோடும் (கங்கையும் காவேரியும் 1966) ஒப்பிட்டு எழுதிய எழுத்துகளில் அவருடைய இலக்கிய நுண் ஆய்வினைக் காண முடியும். ஒப்பிலக்கணத்துறை என்ற ஒரு தனித் துறையே இங்கே அறிமுகமாவதற்கு முன்பே அத்துறை குறிப்பிடும் இணைவரை ஆய்வினை நடத்திக் காட்டியிருக்கிறார். அவருடைய இலக்கியம் குறித்த உரையாடல்களை எல்லாம் தனியாக முன்வைத்து ஒர் ஆழமான மறுவாசிப்பு நிகழ்த்துவதற்குப் பல்கலைக்கழக ஆய்வுத்துறையினர் முன் வரவேண்டும். என்று சொல்லி இக்கட்டுரையை இங்கே முடித்துக் கொள்கிறேன்.

................

(குறிப்பு - கனடாவிலிருந்து வெளிவரும் இலக்கியவெளி இதழ் “நூற்றாண்டு கண்ட ரகுநாதன்” என்ற தலைப்பில் நடத்திய இணையவழிக் கருத்தரங்கில் பேசிய பேச்சின் கட்டுரை வடிவம் 04.05.2024)

- க.பஞ்சாங்கம்