மதுரை இஸ்மாயில்புரத்தில் பிறந்த எஸ்;.அர்ஷியா, உருது மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். இவரது இயற்பெயர் சையத் உசேன் பாஷா. இவரது காலம் 14.4.1959 - 7.4.2018 ஆகும். இவரது தந்தை சையத் தாவூத், தாயர் ஆபில்பீ ஆவர். மூன்று ஆண்களும் நான்கு பெண்களும் இவரது உடன்பிறந்தோர் ஆவர். அர்ஷியாவின் துணைவியார் பெயர் அமீர்பேகம் ஆகும். இவர் தனது மகளின் பெயரான - அர்ஷியா என்பதையே எழுத்துலகில் தமது புனைபெயராகக் கொண்டு எழுதியவர்.s arshiya

அர்ஷியாவின்; முதல் படைப்பு ~அது இலக்கியம் தானா? என்ற சிறுகதையாகும். இச்சிறுகதை ஆனந்த விகடனில் வெளியாகியுள்ளது. மதுரை தியாகராசர் கல்லூரியில் முதுகலை படித்து முடித்தபின் தராசு வார இதழில் செய்தியாளராகப் பணியாற்றினார். பின்னர் 'புதிய காற்று' என்னும் இலக்கிய இதழின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றியுள்ளார். மேலும், கணையாழி, செம்மலர், தாமரை போன்ற இடதுசாரி கருத்துக்களைக் கொண்ட இதழ்களில் இவருடைய சிறுகதைகள் பல வெளிவந்துள்ளன. சுற்றுப்புறத்தைப் பார்ப்பதிலிருந்தும், அதிலிருந்து கேட்கும் குரல்களிலிருந்தும், தகுதியை மேம்படுத்தி வளர்ப்பதே படைப்பாளனாக்கியது2 மேலும், யாரும் ஆர்வத்தைத் தூண்டி எழுத வைக்க முடியாது. நம்மைப் பாதித்த விடயம் மனதிற்குள் தங்க மறுத்து, 'வெளியே சொல்' என்று உந்தி அதை வடிவுபடுத்தும்போது தான் ஒரு கவிஞனோ, ஒரு எழுத்தாளனோ பிறக்கிறான். அவனுடைய அனுபவங்களே கதைகளின் கருக்கள். எல்லாக் கதைகளிலும் அனுபவம் கதை மாந்தர்களின் வடிவில் இருக்கிறது3 என்று அர்ஷியா கூறுகிறார்.

ஏழரைப் பங்காளி வகையறா (2016) நாவல் மூலம் தமிழ் வாசகப் பரப்பில் கவனம் பெற்ற இவர், அப்பாஸ்பாய் தோப்பு (2011), பொய்கைக் கரைப்பட்டி (2016), கரும்பலகை (2014), அதிகாரம் (2016), சொட்டாங்கல் (2016), நவம்பர் 8, 2016 (2016) ஆகிய ஏழு புதினங்களையும் கபரஸ்தான் கதவு (2011), மரணத்தில் மிதக்கும் சொற்கள் (2014) முதலான இரு சிறுகதைத் தொகுதிகளையும் எழுதியுள்ளார். மேலும், ஒரு புனைவாளராக மட்டுமின்றி வரலாற்றின்மீது அக்கறை கொண்டவராகவும் வரலாற்று நூல்கள் எழுதுபவராகவும் வரலாற்று நூல்களை மொழிபெயர்ப்பவராகவும் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார். குறிப்பாக, இவருடைய மொழிபெயர்ப்புகளான மதுரை நாயக்கர் வரலாறு (ஆர். சத்தியநாதய்யர் எழுதிய ஹிஸ்ட்ரி ஆப் மதுரை நாயக்) நிழலற்ற பெருவளி, திப்பு சுல்தான், பாலஸ்தீன், பாலைவனப்பூ, கோமகட்டுமாரு ஆகியவை குறிப்பிடத்தக்கன.

தொடக்கத்தில் சிறுகதைகள் எழுதி வந்தாலும் பின்னர் தனித்துவம் மிக்க நாவல்களை எழுதியவர் அர்ஷியா இந்த நாவல்களின் வாயிலாக வெளிப்படும் இஸ்லாமியர்களின் வாழ்வியலையும் அவர்தம் வரலாற்று பங்களிப்பையும் புனைவாக்கியது இவருடைய பெரும் பங்களிப்பாக அமைந்துள்ளது எனலாம். சமகாலத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் மீது நடத்தப்படும் தாக்குதல்களில் இருந்து அம்மக்களை காக்க வேண்டிய சமூகச்சூழலில் வெறுப்புக்குப் பதிலாக இணக்கமான உரையாடலுக்கானவையாக அமைந்திருப்பவை அர்ஷியாவின் படைப்புகள் ஆகும். 'ஏழரைப் பங்காளி வகையறா' என்னும் நாவல், அதுவரை தமிழ்ச் சமூகத்தில் பெரிதும் பேசப்படாத எண்ணிக்கைச் சிறுபான்மையினராகவும், தனித்த வாழ்வியல் மற்றும் பண்பாடுகளைக் கொண்டு விளங்கும் உருது முஸ்லீம் மக்களின் அன்றாட வாழ்வியலையும் சடங்கு முறைகளையும், வரலாற்றுப் பாங்கான நாவலாக விவரித்துக் காட்டுகிறது.

மதுரை இஸ்மாயில்புரத்தில் வாழும் உருது மொழி பேசுகிற இஸ்லாமியரில் ஒரு குறிப்பிட்ட வகையறாக்களின் வரலாற்றை இந்நாவல். நேரடியாக இறந்த காலத்திலிருந்து தொடங்கி சமகாலத்திற்கு வருகிறது. ஏழரைப் பங்காளி வகையறாக்களின் மூலத்தந்தை இஸ்மாயில். அவரிலிருந்து கதை தொடங்குகிறது. இஸ்மாயில் எப்படி மதுரைக்கு வந்தார் என்று தெரியாது. ஹைதர் அலி ஆட்சி செய்த காலத்தில் குதிரை வீரராக வந்து தங்கியிருக்கலாம்: வந்த இடத்தில் ஒன்றிவிட்டார். உள்ளுர்க்காரர்கள் இவருடைய மொழி பற்றியோ, மதம் பற்றியோ பொருட்படுத்தாமல் வசதி செய்து கொடுத்திருந்தனர். ஊரில் பெரிய கௌரவத்தோடும், சொத்துக்களோடும் வாழும் இவருக்கு ஊர்க்காரர்கள சைவப் பிள்ளைமார்ப் பெண்ணைத் திருமணம் செய்து வைக்கின்றனர். இதன்மூலம் இவருக்கான குடும்பம் உருவாகி, தலைமுறை வரிசை ஒன்று உற்பத்தியாகிப் பெருகுகிறது. இவருக்கு ஏழு ஆண்பிள்ளைகள். ஒரு பெண்பிள்ளை என எட்டுப் பிள்ளைகள் பிறக்கின்றனர். சொத்தை இரண்டாகப் பிரித்து சரிபாதியை மகளுக்கும் மீதமிருக்கும் பாதியை ஏழு பங்குமாக்கி அதனை ஏழு ஆண்களுக்கும் பிரித்துக் கொடுக்கிறார். அரைப்பங்கு மீதியை ஏழாகப் பிரித்துக் கொடுத்த காரணத்தினால் 'ஏழரைப் பங்காளி வகையறாவாக' சையத் இஸ்மாயிலின் பரம்பரை பெயர்க்காரணம் பெறுகிறது.

அப்பாஸ்பாய் தோப்பு எனும் நாவல் வழியே மதுரை வைகை ஆற்றங்கரையோரத்தில் வசிக்கும் பலவகையான மனிதர்கள் அவர்கள் குணநலன்கள், விளிம்பு நிலை மக்களின் துயரங்கள் பதிவு பெறுகின்றன. பலவகையான மரங்கள் வாழும் அல்லது மரங்கள் அடர்ந்த பகுதியை நாம் தோப்பு என்கிறோம். இவ்வாறான தோப்பைப் போலவே ஓபுளாபடித்துறை செல்லும் சாலையில் வைகையின் தென்கரையில் அப்பாஸ்பாய் தோப்பு அமைந்திருக்கிறது. அப்பாஸ்பாய் தோப்பு முழுக்க வெவ்வேறு குணங்களைக் கொண்ட பல்வேறு மனிதர்கள், வாழ்கிறார்கள். இஸ்மாயில்புரத்துக்குப் பின்னால் அப்பாஸ்பாய் தோப்பு போல பல தோப்புகள் இருக்கின்றன. ஏழரைப் பங்காளி வகையறாவில் ஏழையானவர்களில் சிலரும் அவர்களைச் சார்ந்த பிற சமூகத்தவருமாக இத்தோப்பில் இருக்கின்றனர். வெள்ளப்பெருக்கால் கரையோரங்கள் சேதப்படாமலிருக்க சாலைகள் போட்ட போது, அப்பாஸ்பாய் தோப்பும் அதில் பாதி காலியாகிறது. அந்தச் சாலை வருவதற்கு முன் அங்கு வாழ்ந்த மக்களின் கதையை வரைந்து போகிறது இந்நாவல். அதாவது, அப்பாஸ்பாய் தோப்புக்குள் வாழும் இருநூறுக்கும் மேலான குடும்பங்களின் கதை இது.

அதிலும் தோப்பு மாந்தர்களாகச் சித்திரிக்கப்பெறும் உசேன், நெக்லஸ்காரம்மா, ரோசாப்பூ பாய், அழுக்கு மூட்டை ராமையா, பூசா என்ற பூவராகவன், ஒடுக்கி ஆகியோர்; நம்மைக் கவர்ந்து விடக்கூடியவர்கள். திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் சுல்தான் அவுலியா தர்ஹாவின் மேல் இஸ்லாமியர்களுக்கு உள்ள அதீத நம்பிக்கை. எந்தப் பிரச்சனை என்றாலும், வியாழன் இரவு தர்ஹாவில் தங்கியிருந்தால் வேண்டியது நடக்கும் என்ற எண்ணம்;. மலை மீதிருந்து தெரியும் மதுரைக் காட்சிகள், மலையேறும் பாதை, வழியில் பயமுறுத்தும் குரங்குகள், இரவு மலையில் தங்குபவர்களின் அனுபவங்கள் என ஒவ்வொன்றும் விரிவாகப் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் அர்ஷியா4.

மேலும், இஸ்லாமியர்களுக்கும், நாயக்கர்களுக்குமான உறவு முறைகள், தினமணி திரையரங்கம் மற்றும் அங்கு திரையிடப்படும் எம்.ஜி.ஆர் திரைப்படமும் அதன் ரசிகர்களும், கலக்குமுட்டி, கஞ்சா, என அக்கால போதைப் பொருட்கள், தெப்பக்குளத்தில் நடக்கும் படகுப் பயணம், இஸ்லாமியக் குடும்பங்களின் வாழ்க்கை முறைகள், ஆற்றில் துணி துவைக்கும் பெண் எதிர்கொள்ளும் சிரமம், விளிம்பு நிலை மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று பலவிடயங்களை இந்நாவலினூடாகப் பதிவு செய்திருக்கிறார் அர்ஷியா.

இவரது 'பொய்கைக்கரைப்பட்டி' நாவல் பன்னாட்டுத் தொழில் பெருக்கத்தினால் விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விற்கப்படும் அவலத்தையும் இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் சுருங்கிச் செல்வதையும் இந்நாவல் விவரிக்கிறது. அதாவது விவசாய நிலங்கள் பெருமுதலாளிகள் வசம் போய்ச் சேர்வதையும் அதனால் குடும்பங்களுக்குள்ளாகவும் ஊருக்குள்ளாகவும் எழும் மோதல்கள் காலத்தின் சூழலில் தள்ளப்பட்டு அவதியுறும் மக்களின் நிலை முழுவதுமாகப் படம்பிடித்துக் காட்டப்படுகிறது. அர்ஷியா இந்நாவல் மூலம் தன் சமூகச் சார்பையும், படைப்பு மூலத்தையும் வெளிப்படுத்துகிறார். சராசரி வாழ்க்கையில் இருக்கும் கஜேந்திரகுமார் சொற்ப முதலீட்டில், எத்தனங்கள் மிக்க, சூட்சுமங்கள் நிறைந்த ரியல் எஸ்டேட் தொழில் ஈடுபட்டு, அத்தொழில் மூலம் கொள்ளை லாபம் கண்டு, மிகப்பெரிய நிலையில் வளர்ச்சியடைந்து, மனைவி, துணைவி, மக்கள், வசதிகள் என உல்லாச வாழ்வுக்கு தயாராகிறார். வசதிகள் பெருகியதும் எடுபிடிகள், தொழில் விரிவாக்கம் செய்ய தரகர்கள், பாதுகாப்புக்கு அரசியல்வாதிகள், அதிகாரிகள் என சுற்றம் பெருகுகிறது.

முதலில் கஜேந்திரகுமார் நிலம் வாங்கவும், விற்கவும் உள்ளுர் மக்களோடு தொடர்புள்ளவர்களைத் தரகர்களாக்க முயலும்போது சமுத்திரக்கனி எனும் மனிதன் சிக்குகிறார். கிராமத்து டீக்கடையில் வெட்டிப் பேச்சுப் பேசி காலம் கடத்தும் இவர் தொடக்கத்தில் 'நிலம் வாங்கித் தந்தால் கமிஷன் கிடைக்கும்' என கஜேந்திரகுமார் கூற, புரோக்கர் வேலையா? என சீறி ஒதுங்குகிறார். பின்னர் 'மீடியேட்டர்னு சொல்லுங்க கம்பீரமாக கௌரவமாக' இருக்கலாம் என பசப்பு வார்த்தைகள் கூற அவரது பேச்சு சாதுர்யத்தால் சமுத்திரக்கனி மீடியேட்டராகி நிலங்களை வாங்கித் தருவதில் தன் வாழ்நிலையையும் உயர்த்திக் கொள்கிறார்.

பெற்ற மகனே படிப்பறிவற்ற பெற்றோரை ரேஷன் கார்டு வாங்கித் தருவதாய் அழைத்து வந்து நிலத்தை வஞ்சகமாக எழுதி வாங்கி கஜேந்திரகுமாரிடம் பணம் பெற்றுக் கொள்கிறான். பலரும் நிலத்தை விற்று விட்டு குடும்பம் குடும்பமாக திருப்பூருக்குப் பிழைக்கப் போகிறார்கள்.

மேலும் ஓரு விவசாயி நிலத்தை விற்கமாட்டேன் என கடைசிவரை போராடுகிறார். எதற்கும் பணியாத அவரது வயலுக்கு வரும் வாய்க்காலின் குறுக்கே கட்டிடம் கட்டி தண்ணீர் வராமல் தடுக்கிறார்கள். மனம் தளராது ஆழ்துளைக் கிணறு அமைத்து விவசாயத்தைத் தொடர்கிறார். உடனே அவரது வயலருகே பெரியதொரு போர் அமைத்து அவரது போரில் தண்ணீர் வராமல் தடுக்கிறார்கள். கட்டிடங்கள் உயர உயர அவரது வாழைத்தோட்டம் கருகியது. வேறு வழியின்றி அவ்விவசாயியும் நிலத்தை விற்கிறார்.

மதுரையின் புறநகர் பகுதியே நாவலின் களமாக அமைகிறது. அழகர்மலை அடிவாரத்தின் இயற்கை வனப்பும் சூழலும் அழகுற 'பொய்கைக் கரைப்பட்டி' விளங்குகிறது. விதவிதமான மரங்கள், ரகரகமானப் பறவைகள், நீர் நிலைகள், ரீங்கார ஒலிகள் என இயற்கையின் மடியில் தாலாட்டப்பெறும் கிராமம் மெல்ல மெல்ல நிலவணிகக் கொள்ளையர்களால் சிதைக்கப்படுவதை நாவலாக வரைந்திருக்கிறார் அர்ஷியா.

'கரும்பலகை' நாவல் ஆசிரியர்களின் பணியிடமாற்றம் குறித்தும் அவர்களின் அலைக்கழிப்பு, அதிகார வர்க்கத்தின் லாப நோக்கு போன்றவற்றைப் பேசுகிறது. எல்லைவரைவுகள் எதுவுமில்லையென்றாலும் எளியவர்களின் குரலை வரலாறு பதிவு செய்து கொள்வதில்லை. எழுபது தொடங்கிய காலந்தொட்டே இதுதான் நிலை. அதிகாரத்தில் இருப்பவர்கள் யாரும், வாழும் காலத்தில் பிரச்சினைகளைப் புரிந்துகொள்பவர்களாக இருப்பதில்லை. இதுவும் அதிகாரம் உருப்பெற்ற காலத்திலிருந்தே தொடர்வதுதான். நெறி தவறுவதை மீறலெனக் கொள்ளாமல் ஒழுக்க இயல்பாய் ஏற்றுக்கொண்டுவிட்ட கருத்தியலுக்கு எதிராய், வாழ்வியல் போராட்டம் நடத்தும் ஒரு பெண்ணின் கதை. ஒரு பெண் ஆசிரியையின்; பள்ளி வாழ்க்கையையும் பணி மாறுதலையும் மையமாகக் கொண்டு அதனூடான மற்ற பிரச்சனைகளையும் குறித்துப் பேசியிருக்கிறார் அர்ஷியா.

'நவம்பர் 8, 2016' - இதில் இந்திய தேசம் பண மதிப்பிழப்பினால் சந்தித்த பெரும் அவலம், பல குடும்பங்களின் இன்னல்கள், தடைபட்ட திருமணங்கள் அதனால் ஏற்பட்ட மரணங்கள், வங்கி வாசலில் சாமான்யர்கள் பட்ட துயரங்கள் எனச் சொல்லிச் செல்கிறது இந்நாவல்.

'சொட்டாங்கல்' நாவல் மேலோட்டமான வாசிப்புக்கு அரசியல் களம் சார்ந்த படைப்பு என்ற தோற்றத்தை உருவாக்கினாலும், உண்மையில் இது மனிதர்களுக்கு தங்கள் மண் மீது இருக்கும் தீராப் பிரியம் பற்றிய கதைதான். சூழ்நிலை காரணமாக மதுரை மண்ணை விட்டுப் பிரிய நேர்ந்தவர்களின் மீள்வருகையைப் பேசுவது ஒரு புறம் என்றால், உள்ளுரில் அடையாளமற்றுச் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் தங்களை நிலைநிறுத்தவும் தங்கள் அதிகாரத்தை வலுப்பெறச் செய்யவும் அதற்காக நிலங்களைக் கையகப்படுத்துவதையும் இந்நாவல் அடையாளப்படுத்துகிறது.

எஸ்.அர்ஷியாவின் 'கபரஸ்தான் கதவு' மற்றும் 'மரணத்தில் மிதக்கும் சொற்கள்' எனும் இரு சிறுகதை தொகுப்புகளில்; மரணம் மற்றும் இறுதிச் சடங்கு செய்யும் நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளார். மானுடத் துரோகம், சாவு குறித்த நம்பிக்கை, உறவுகளால் ஒதுக்கப்படுதல், சமூகத் துரோகம், ஹஜ் பயணம் குறித்த நம்பிக்கை, சகோதர பாசம், மதம் மாறி திருமணம் செய்து கொள்ளும் மகளைக் குறித்த தந்தையின் பாசப் போராட்டம், ஒரு திருடனின் மனிதாபிமானம், ஆண் பெண் தாம்பத்ய உறவின் சிக்கல்கள், உணவுக்குப் போராடும் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை முறை, காலமெல்லாம் உறவுகளுக்காக வாழ்ந்து இறந்து போனவர் அனைவருக்கும் நல்லவராகக் காணப்படும் போது சொந்த மனைவிக்கு மட்டும் அந்நியமாய்ப் போன அவலம் என புலம்பும் மனைவியின் துயரம் உட்பட அனைத்து விடயங்கள் குறித்தும் மிக நுட்பமாக இத்தொகுப்புகளில் பேசியிருக்கிறார் எஸ்.அர்ஷியா.

முடிவாக:

இஸ்லாமிய சமூகமானது பிற சமூகங்களிலிருந்து பழக்கவழக்கங்கள், பண்பாட்டு நடவடிக்கைகள், வழிபாடுகள், சடங்குகள், ஆடை ஆபரணங்கள் என்று தனித்து விளங்குகிறது. எனவே, அச்சமூகமானது ஒருவாறு மூடுண்ட தன்மையிலேயே இருக்கின்றது. எழுத்தாளன் என்பவன் மூடுண்டு கிடப்பதைத் திறந்து காட்டுகிறான். அந்த வகையில் எஸ். அர்ஷியா இஸ்லாமியர்களும் மிகவும் எண்ணிக்கைச் சிறுபான்மையினராக உள்ள உருது முஸ்லீம்களின் வரலாற்றினையும், அவர்களது இடப்பெயர்வு மற்றும் குடியேற்றத்தினை புனைவின் வழியாக வெளிக்காட்டுகிறார். அதுபோலவே உருவ வழிபாட்டிற்கு எதிராக இஸ்லாமிய சமயம் இருந்தபோதும் அவர்களிடையே உள்ள இறந்தோர் வழிபாடானது தர்கா வழிபாடாக உள்ளது. கோரிப்பாளையம் தர்கா வழிபாடு பற்றியும், தர்காவைச் சுற்றி நகர் உருவாக்கம் பற்றியும் சிறப்பாக பதிவு செய்துள்ளார். மேலும் தனித்துவமான இஸ்லாமியர்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ள அர்ஷியா அதேவேளையில் பொது சமூகம் பற்றி மிகநுட்பமாகப் பதிவு செய்துள்ளது தனித்து குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, ஆசிரியர் சமூகம் குறித்தும், விவசாய நிலங்களை வீட்டடி மனைகளாக்கி வெகுஜோராக விற்பனை செய்து வரும் ரியல் எஸ்டேட் முதலாளிகளின் அசுர வளர்ச்சியினையும், ஒரே நாளில் அச்சடித்த ரூபாய் நோட்டுகள் யாவும் செல்லாது என்று சொல்லி மக்களை பெரும் அவதிக்குள்ளாக்கிய அரசின் நிர்வாகத்தின் போதாமையையும், இறப்பு, அடக்க முறை தொடர்பான சடங்குகள், நம்பிக்கைகள், பரிகாரங்கள் பற்றியும், மதுரை உசிலம்பட்டி பகுதியில் இன்றுவரை பெரிய அளவில் நடந்துவரக்கூடிய மொய் விருந்து விழா குறித்தும், இந்நிகழ்வு அச்சமூகங்களிடையே ஏற்படுத்தி வருகின்ற தாக்கம் மற்றும் பாதிப்புகளையும் பதிவு செய்துள்ளார்.5 மேலும், இன்னும் ஒருபடி மேலாக சமூகத்தில் நடைமுறையில் இருந்து அருகிவிட்ட அல்லது முற்றிலும் மறைந்து போன 'வரப்புத் தாண்டுதல்' என்ற வழக்கம் பற்றி மிக நுட்பமான அவதானிப்புடன் எழுதியுள்ளார். அதற்கு இரு காரணிகள் முக்கியப் பங்கு வகித்துள்ளன. ஒன்று அவரது அரசியல் பார்வை, மற்றது பத்திரிக்கைத் தொழில். எஸ். அர்ஷியா இடதுசாரி தத்துவத்தைத் தனது அரசியல் கொள்கையாக ஏற்றுக்கொண்டவர். தமிழ்நாடு எழுத்தாளர்கள் சங்கத்தில் அங்கம் வகித்த இவர், அவ்வமைப்பு ஏற்படுத்திக் கொடுத்த மேடைகளின் மூலம் தனது கருத்தியல்களைக் கூர்தீட்டிக் கொண்டவர். எந்த விடயத்தையும் சொல்வதற்கும் எழுதுவதற்கும் உரிய மொழி வளமும், சுவாரஸ்யமான நடையும் கொண்டவர். மதுரை நிலத்திற்குரிய காட்சிப் பின்புலங்களைக் கொண்டவையாக, இஸ்லாமிய இன மக்களின் வாழ்க்கைச் சிக்கல்களை உள்ளது உள்ளபடி சித்திரிக்கும் இவருடைய படைப்புகளை இஸ்லாமிய இலக்கியத்தின் தனித்துவமான பங்களிப்பு என்றே கூறலாம்.

சான்றெண் நூல்கள்:

1.      நாவலாசிரியர் அர்ஷியாவின்; பேட்டி

2.      மேலது.,

3.      இ.பேச்சிமுத்து, மு.செல்வக்குமார், பா.சத்யாதேவி (தொ. ஆ.), 2017, மதுரை-இலக்கியங்களில், ஆவணங்களில் வாழ்வியலில் ~அப்பாஸ்பாயின் தோப்பின் நிழல்கள் நீளமானவை|, மதுரை: மணிவாசகர் பதிப்பகம்.

4.      ஆ.பூமிச்செல்வம் (தொ.ஆ.), 2015, மதுரைச் சிறுகதைகள் 2015, தஞ்சாவூர்: அன்னம் வெளியீடு.

ரா.ரமேஷ்
முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ் உயராய்வு மையம்
அமெரிக்கன் கல்லூரி, மதுரை

&

சே.பாலகிருஷ்ணன்
உதவிப் பேராசிரியர், தமிழ் உயராய்வு மையம்
அமெரிக்கன் கல்லூரி, மதுரை