தமிழ் ஒளி யார்? பாவேந்தர் பாரதிதாசனின் சீடர் கவிஞர் தமிழ் ஒளியின் நூற்றாண்டை ஒட்டி...

இன்றைய இளந்தலைமுறையினர் தமிழ் ஒளியை அறியாதவர்களே! குவிந்து கிடக்கும் கண்ணாடி கற்களுக்கிடையே கோகினூர் வைரம் போன்றவர் தமிழ் ஒளி. தமிழ்க் கவிஞர்களில் சிறப்பு வாய்ந்தவர்.

மகாகவி பாரதி 39 ஆண்டுகள் வாழ்ந்தார். தமிழ் ஒளியும் 41 ஆண்டுகளே வாழ்ந்தவர். இருவருடைய மரணமும் தமிழ் இலக்கிய உலகிற்கு மிகப் பெரிய இழப்பாகும்.

பாரதியின் கவிதை சித்தர் மரபைச் சேர்ந்தது. பாரதிதாசனின் கவிதை சங்க மரபைச் சேர்ந்தது. தமிழ் ஒளியின் கவிதை காவிய மரபைச் சேர்ந்தது. ஒன்பது காவியங்களைப் படைத்தவர் தமிழ் ஒளி. மாதவி காவியம் அவருடைய தலை சிறந்த படைப்பாகும்.

21-09-1924-ல் தமிழ் ஒளி புதுச்சேரியில் பிறந்தவர். அவருடைய இயற்பெயர் விஜயரங்கம். பெற்றோர் பொ.சின்னையா- திருமதி செங்கேணியம்மாள்.

tamil oli 370தமிழ் ஒளி மாணவப் பருவத்திலேயே கவிதை மீது நாட்டம் கொண்டவர். அதனால் அவர் பாரதிதாசனோடு பழகினார். பாரதிதாசனின் உதவியோடு கரந்தை தமிழ்க் கல்லூரியில் புலவர் படிப்பில் சேர்ந்தார். ஆனால் படிப்பை நிறைவு செய்யவில்லை. சென்னைக்கு வந்த அவர் முழு நேரக் கவிஞரானார்.

தமிழ் ஒளி கொள்கைக் கவிஞர். பொதுவுடைமைத் தத்துவம் அவரை ஈர்த்தது. ‘மே தினமே வருக!’ என்று கவிதை எழுதினார். சோவியத் ரஷ்யாவைப் போற்றி எழுதினார். தமிழ் ஒளி ஏழை மக்களின் கவிஞர் ஆனார்.

தமிழ் ஒளி குழந்தைகளுக்காக எழுதினார். அவரது குழந்தை இலக்கியம் முக்கியத்துவம் வாய்ந்தது. 60 குழந்தைப் பாடல்களை எழுதியுள்ளார். குழந்தைகளின் அறிவைத் தூண்டும் விதத்தில் குட்டிக் கதைகளும் எழுதினார். அவை டால்ஸ்டாயின் குட்டிக் கதைகளுக்கு இணையானவை. அவை ‘வனமலர்கள்’ என்ற பெயரில் நூலாக வெளிவந்ததுள்ளன.

குட்டிக் கதைகளுக்கும் ஒரு மரபு உள்ளது. பாரதி, மாதவையா, விந்தன், அண்ணா, கலைஞர், கண்ணதாசன் என்று பலரும் குட்டிக் கதைகளை எழுதியுள்ளனர். கவிஞர் தமிழ் ஒளியின் குட்டிக் கதைகள் தனித்துவமும் நுட்பமும் வாய்ந்தவை.

தமிழ் ஒளி 105 குட்டிக் கதைகளை எழுதியுள்ளார். அவை அறிவூட்டல், மகிழ்வூட்டல் என்ற இரு நோக்கங்களைக் கொண்டுள்ளது. இக்குட்டிக்கதைகள் தாமரை, சரஸ்வதி, ஜனசக்தி, அமுதசுரபி ஆகிய பத்திரிகைகளில் வெளிவந்தன. இக்குட்டிக் கதைகளை பதின்ம வயதுக் குழந்தைகள் படித்துப் புரிந்து கொள்ள முடியும்.

இக்குட்டிக் கதைகள் மிகுந்த கற்பனை நயத்துடனும் இனிமையான நடையிலும் அமைந்துள்ளன.

‘புல்லாங்குழல்’ என்ற கதையைப் பார்ப்போம்:

மூங்கில், குயிலைப் போல் கூவ விரும்புகிறது. ஒரு நாள் அது நடக்கும் என்று காற்று சொல்லுகிறது. ஒரு மனிதன் வருகிறான். மூங்கிலை புல்லாங்குழல் ஆக்கி ஊதுகிறான். புல்லாங்குழலிலிருந்து குயிலின் ஓசை கேட்கிறது.

‘ஆகா, நான் குயில் போல் கூவுகிறேன். இதைக் காண்பதற்கு காற்று வரவில்லையே!’ என்று வருத்தப்பட்டது.

‘புல்லாங்குழலே! நான் தான் உன் இசையாய் மிதந்து செல்கிறேன்’ என்று கூறியது காற்று.

இந்த குட்டிக் கதை ஒரு சுவையான, அர்த்தமுள்ள கற்பனை.

‘முக்கியமான செய்தி’ என்ற ஒரு குட்டிக்கதை முக்கியமானது.

நீண்ட தூரம் பயணம் செய்து வந்த ஆறு கடலில் கலக்கிறது. ஆற்றைப் பார்த்து கடல் கேட்கிறது. ‘உன் பயணத்தில் பல ஊர்களைப் பார்த்திருப்பாய். அவ்வூர்களில் நீ கேட்டறிந்த செய்தியைக் கூறு.’

 ‘இப்போது தான் நான் உன்னுடன் சேர்ந்தேன். ஒன்று கலந்து விட்டோம். ஆனால் ஊர் மக்கள் ஒன்று கலந்து வாழ்வதில்லை என்பதுதான் முக்கியமான செய்தி’ என்றது ஆறு.

இவ்வாறு தமிழ் ஒளியின் குட்டிக்கதைகள் மகிழ்வூட்டவும் செய்கிறது; அறிவூட்டவும் செய்கிறது.

தமிழ் ஒளி குழந்தைகளுக்காக எழுதிய பாடல்கள் ‘பாடு பாப்பா’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. தலைப்பிற்கேற்றவாறு குழந்தைகளைப் பாடத் தூண்டுகிறது என்றே சொல்லலாம்.

தமிழ் ஒளியின் குழந்தைப்பாடல்கள் அறிவுப்பாட்டுகள், அழகுப் பாட்டுகள், ஆனந்தப் பாட்டுகள் என்று மூன்று பிரிவுகளாக அமைந்துள்ளன.

முதலில் அறிவுப் பாட்டைப் பார்ப்போம்:

கல்வியின் முக்கியத்துவத்தை திருக்குறளும் நாலடியாரும் ஔவையும் சொல்லி விளக்கியதை 12 வரிகளில் தமிழ் ஒளி எளிய சொற்களில் கூறி விடுகறார்.

‘பாடம் படியா ஒரு பையன்

பள்ளி செல்லா ஒரு பையன்

மூடன் ஆனான் முன்னாலே

மூட்டை சுமந்தான் பின்னாலே

சொல்லைக் கேளா ஒரு பையன்

துள்ளித் திரிந்த ஒரு பையன்

கல்லான் ஆனான் முன்னாலே

கட்டை சுமந்தான் பின்னாலே

சோம்பித் திரிந்த ஒரு பையன்

சுற்றித் திரிந்த ஒரு பையன்

தேம்பித் திரிந்தான் முன்னாலே

தெருவில் நின்றான் பின்னாலே’

முற்பகல் செய்யின் பிற்பகல் என்ன விளையும் என்பதைதான் கவிஞர் கன்னத்தில் அறைந்தது போல் சொல்லியிருக்கிறார்.

நகைப் பைத்தியம் என்பது பெண்களை வேதனை அடையச் செய்கிறது. குடும்பத்தில் குழப்பத்தை உண்டாக்குகிறது. சிறுமிகளுக்கு இதைப் பற்றிய அறிவுரையை ‘நகை வேண்டாம் பாப்பா’ என்று தமிழ் ஒளி பாடுகிறார்.

“பச்சைக் கிளிக்கு நகையில்லை!

பாடுங் குயிலுக்கு அணியில்லை!

இச்சை மைனாப் பறவைக்கும்

ஏதும் கழுத்தில் நகையில்லை!

கச்சை சதங்கை யில்லாமல்

காட்டில் ஆடும் மயிலுக்கும்

உச்சிக் கொண்டை நகையில்லை

உனக்கேன் பாப்பா நகையெல்லாம்!”

அருமையான பாடல். கருத்தும் கற்பனையும் கைக்கோக்கும் பாடல். எனக்குப் பிடித்த பாடல். என் மகள்களுக்கு நகைப்பைத்தியம் பிடிக்கக் கூடாது என்று வீட்டில் நான் அடிக்கடி சொல்லிய பாடல்.

குழந்தைகள் தெருவில் பிச்சைக்காரர்களைப் பார்க்கிறார்கள். எப்படி பிச்சைக்காரர்கள் உருவானர்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது. இந்தப் பாடலில் தமிழ் ஒளி காரணத்தைக் கூறுகிறார்.

“கந்தல் துணி உடுப்பான்

கையை ஏந்தி திரிவான்

............................

............................

வீடும் கிடையாது

வேலை கிடையாது

சொந்தக்காரர் இல்லை

சோறு துணி இல்லை

இந்த விதம் அவனை

இழிவு படச் செய்தோர்

பெரிய பணக்காரர்

பெரிய தீமை செய்தார்”

குழந்தைகளின் மனதில் இருக்கும் சமூகம் சார்ந்த ஒரு கேள்விக்கு விடையைக் கூறும் பாடல் இது. ஒருவன் ஓட்டாண்டியாக ஆக்கப்படுவது செல்வந்தர்களால்தான் என்பதை பாரதிதாசன் ஆத்திசூடியில் ‘கொடுத்தோன் பறித்தோன்’ என்று கூறுகிறார். குருவின் கருத்தைத்தான் தமிழ் ஒளியும் இப்பபாடலில் எதிரொலித் திருக்கிறார்.

குழந்தைகளின் குறுகுறுக்கும் விழிகளை விரிய வைக்கும் அழகான காட்சிகளை அழகுப் பாட்டு பிரிவில் தமிழ் ஒளி தந்துள்ளார்.

நிலவில் ஒரு நிழல் பகுதி தெரிகிறது. பாட்டி உட்கார்ந்து வடை சுட்டுக் கொண்டிக்கிறார் என்று அதைப் பற்றி குழந்தைகளுக்குச் சொல்லுவார்கள்.

தமிழ் ஒளி ஒரு புதிய கற்பனையை ‘ஆலமரம்’ பாட்டில் தந்திருக்கிறார்.

“நிலவில் உள்ள ஆலமரம்

               நீண்டு வளர்¢ந்த ஆலமரம்

ஆலமரத்தின் கீழே போய்

               அவ்வைப் பாட்டி உட்கார்ந்தே

உனக்குக் கதைகள் சொல்கின்றாள்

               ஊஊம் என்றே கேட்பாய் நீ”

தலை வாரி பூச்சூடிக் கொள்ள பெண்பிள்ளைகளுக்கு ரொம்பப் பிடிக்கும். இந்த உண்மை பூக்களுக்கும் தெரிந்திருக்கிறது.

பூ சொல்வதாக ஓர் அழகுப் பாடலை தமிழ் ஒளி தந்திருக்கிறார்.

“பச்சைக் கொடி வீட்டில்

பக்குவமாகப் பூத்தேன்

இச்சை கொண்ட நங்கை

என்னைக் கிள்ளி மோந்து

கொண்டையின் மேல் வைத்துக்

கொண்டு நடந்தாளே

அண்டையில் உள்ளோர்

ஆசையாய்ப் பார்த்தார்!”

அழகுப் பாட்டையும் அறிவுப்பாட்டையும் தந்த தமிழ் ஒளி குழந்தைகள் மகிழ ஆனந்தப்பாட்டையும் தந்துள்ளார்.

‘ஊர் போக வேண்டும்’ என்றாலே ஆனந்தம் துள்ளிக் கொண்டு வரும். தம்பியின் ஆனந்தத்தைக் கவிஞர் இங்கே சொல்லுகிறார்.

‘ஊரு போக வேண்டும்

               ஒரு கல்லுக்கும் அப்பால்

தேரு போல அங்கே

               தெரியும் தென்னஞ்சோலை!

ஆறு வரும் தம்பி

               அரைக் கல்லுக்கும் அப்பால்

ஏறு தோணி மேலே

               ஆட்டுக் குட்டி போலே’

தம்பியை ஆட்டுக்குட்டி போலே என்று கவிஞர் உருவகித்திருப்பது தான் இப்பாடலில் முக்கியமானது. துள்ளினால் ஆனந்தம் தானே!

கிளியைப் பற்றி தமிழ் ஒளியின் இந்தப் பாடலும் ஆனந்தம் தரும் ரகம்.

“அக்கா! அக்கா! கிளிப் பிள்ளை

               அது நம் வீட்டு மாப்பிள்ளை!

சொல்லிக் கொடுத்தால் தமிழ் பேசும்

               தொல்லை கொடுத்தால் நம்மை ஏசும்!”

என்று பாடுகிறார். இது ஒரு ஆனந்தப் பாட்டு.

கவிஞர் தமிழ் ஒளி ‘நாயும் பூனையும்’ என்று ஒரே ஒரு கதைப்பாடலை எழுதியிருக்கிறார்.

கவிஞர் அழ.வள்ளியப்பா ‘சிறுவர் கதைப்பாடல்கள்’ என்று 60 கவிஞர்களின் தொகுப்பை உருவாக்கும் போது தமிழ்ஒளிக்கும் இடம் தந்து சிறப்பு செய்திருக்கிறார்.

கதைப் பாடலின் கதை இதுதான்:

ஒரு குடியானவன் வீட்டில் ஒரு நாயும் பூனையும் வளர்கின்றன.

நாய் வீட்டைக் காவல் காக்கும். பூனை இரவில் எலிகளை வேட்டையாடும். பகலில் நன்றாகத் தூங்கும். தூங்கும் பூனையைப் பார்த்து நாய்க்கு பொறாமை வந்தது. சோம்பேறி என்று திட்டியது. பூனையை அடித்து விரட்டியும் விட்டது.

பூனை இல்லாமல் எலித் தொல்லை அதிகமானது. எலிகள் குடியானவனின் துணிகளைக் கடித்து வைத்து விட்டன. அதைப் பார்த்த குடியானவனுக்குக் கோபம் நாய் மேல் வந்தது.

எலியை ஏன் துரத்தவில்லை என்று சொல்லி நாயை அடித்தான்.

பூனையை விரட்டி விட்டது தவறு என்று நாய் உணர்ந்தது. பூனையை சமதானப்படுத்தி அழைத்தது.

‘நண்பனே! அவரவர் வேலை அவரவர்க்கு எளிது’ என்றது பூனை.

‘உணர்ந்தேன். இனி நாம் நண்பர்களாக வாழ்வோம்’ என்றது நாய்.

‘பூனையும் நாயும்’ என்ற கதைப்பாடலை குட்டிக் கதையாகவும் தமிழ் ஒளி எழுதியிருக்கிறார்.

தமிழ்க் குழந்தைகளுக்கு 65 ஆண்டுகளுக்கு முன்பே சுவையான குட்டிக் கதைகளையும் அருமையான பாடல்களையும் தமிழ் ஒளி தந்திருக்கிறார்.

கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளில் தமிழ் ஒளி வீசுகிறது. அது மங்காத ஒளியாய் நிலைத்திருக்கிறது. தமிழ்க் குழந்தைகளுக்கு என்றென்றும் வழிகாட்டும்; மகிழ்வூட்டும்.

வாழ்க தமிழ் ஒளியின் புகழ்! அவரது நூற்றாண்டில் அவருடைய படைப்புகளைப் படிப்போம், பயன் பெறுவோம்!

- சுகுமாரன்

Pin It