Ki ra“வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்”

என்னும் குறளடிகள் கி.ரா., வுக்கு மிகவும் பொருத்தப்பாடுடையன. அதனால்தான் தமிழ் எழுத்துலகின் பிதாமகர் எனப் போற்றப்பட்டவர்.

ஒரே ஊரில் பிறந்து வளர்ந்து (தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள இடைசெவல் என்னும் கிராமம்) தம்மோடு பழகிய கரிசல் மனிதர்களை, கரிசல் மண்ணைத் தம் படைப்புகளின் வழியே வெளிக் கொணர்ந்தவர்களில் முன்னோடிகள் கி.ரா.வும் (கோபல்ல கிராமத்து மக்கள் நாவல், 1991) கு.அழகிரிசாமியும். (அன்பளிப்பு சிறுகதை, 1970) இரண்டு பேரும் சாகித்ய அகாதமி பரிசுபெற்றவர்கள்.

கு.அழகிரிசாமியின் படைப்புகளைக் கதையாடும் களமாக “இலக்கிய அமுதம்” என்னும் அமைப்பைத் (செப்டம்பர் 23, 2018) தொடங்கி அதன் வழி தமது தந்தையின் படைப்புகளைப் பேசும் களம் கண்டிருக்கின்றனர் அவரின் புதல்வர்கள். கி.ரா.வுக்குப் படைப்புலகம், எழுத்துலகம், வாசகர் வட்டம், கல்வி நிறுவனங்கள் என அவரின் பிறந்தநாளில் அவரின் படைப்புகள் முன்னெடுக்கப்படுகின்றன, பேசப்படுகின்றன, ஆராயப்படுகின்றன.

இரண்டு பேருடைய பிறந்த நாளும் செப்டம்பர்த் திங்கள் தான். முன்னவர் செப்.16, பின்னவர் செப்.23. மாபெரும் ஒற்றுமை இருவருக்குள்ளும். சமகாலத்துப் படைப்பாளிகள். இவ்விரு படைப்பாளிகளின் கதையாளும் இடமாக இருந்தது கரிசல்மண்தான்.

கி.ரா., வரலாற்றையும் பண்பாட்டையும் தொன்மத்தையும் மக்களின் மொழியையும் படைப்புகளில் ஒளிரச் செய்தவர். கரிசல் வட்டாரப் படைப்பாளிகளுக்கு எல்லாம் முன்னத்தி ஏராக இருந்தவர், பாசமுடன் ‘நைனா’ என்று அழைக்கப்பட்டவர். கரிசல் இலக்கியத்தின் தந்தை எனப் பாராட்டப்பட்டவர்.

பல ஆளுமைகளைக் கொண்ட கரிசல் எழுத்தாளர் கி.ரா. இன்றைய இளைஞர்கள் கி.ரா.வைப் படிக்கவேண்டும் என்றால் எதிலிருந்து தொடங்க வேண்டும் எனும்போது அவரின் பெரும்பாலான சிறுகதைகள் யாவும் அதிகபட்சம் நான்கு பக்கங்கள்தான்.

சிறுகதைகளிலிருந்து தொடங்கலாம். கரிசல் மக்களின் மொழி, சொலவடைகள், நாட்டார் தெய்வங்கள், இடம்பெயர்வு, கண்ணீர், துயரம், விவசாயிகளின் நிலைப்பாடு இன்னும் பிற. வாழ்வியல் பாடுகளைத் தம்முடைய கதைகளினூடே கடத்தியவர்.

அவுரி, ஜடாயு, கதவு, அரும்பு, அங்கணம், கன்னிமை, நாற்காலி, கரண்ட், வேட்டி, நாற்காலி, இல்லாள், கறிவேப்பிலை, காய்ச்ச மரம், அம்மா பிள்ளை அப்பா பிள்ளை, பொம்மைகளும் குதித்தெழும், கனிவு, கோபல்ல கிராமம், கோபல்ல கிராமத்து மக்கள், அந்தமான் நாயக்கர், கிடை, கரிசல் காட்டு சம்சாரி, கோமதி, கொத்தைப் பருத்தி, கரிசல் காட்டு கடிதாசி இதுபோன்ற கதைகளின் வழி கரிசல்மக்களின் மனத்தையும் கரிசல் மண்ணின் மணத்தையும் மணம் வீசச்செய்தவர்.

வட்டார வழக்குச் சொற்களைப் பதிவு செய்த விதம், நாட்டுப்புறக் கதைகளுக்குப் பலவாறாக உதவி செய்த படைப்பாளி கழனியூரன், எஸ்.எஸ்.போத்தையா, பாரதி தேவி இப்படியாக உறுதுணையாக இருந்தவர்களைப் பற்றி என்றும் எங்கும் மனநிறைவோடு எண்ணிப் பார்க்கும் மாந்தநேயப் படைப்பாளி.

தமிழ் எழுத்துலகில் பொன்னீலன், சோ.தர்மன், பூமணி, மேலாண்மை பொன்னுசாமி, தமிழ்ச்செல்வன், உதயசங்கர், கோணங்கி, எஸ், ரா., பா.ஜெயப்பிரகாசம், அப்பணசாமி, நாஞ்சில் நாடன் போன்ற தெக்கத்திப் படைப்பாளிகள் எனும் மிக நீண்ட இலக்கியப் பரம்பரையைக் கொண்டவர் கி.ரா.

கி.ரா., வின் நூற்றாண்டை நோக்கிய மாபெரும் பயணம் நின்றுவிட்டது என்பது பெரும் வருத்தம். ஜனரஞ்சகமான படைப்பாளி தமிழ் இலக்கிய உலகுக்குக் கிடைப்பதற்கரிய பரிசு. பேச்சு வழக்கில்தான் உணர்வோடு உறவாட முடியும் என்பதை உணர்ந்தவர். பண்டிதன் சொன்னது பழமொழி, பாமரன் சொன்னது சொலவடை என்பதை நுட்பமாக எழுதியவர்.

மணம் இல்லாத, இயற்கை அழகு இல்லாத, வெற்றுக் காகிதப்பூதான் எழுத்து வழக்கு என்று அவர் எழுத்து வழக்கைச் சொல்கிறார். மக்களின் மொழி நடையை ரசித்தவர். மொழிக்கு உயிரூட்டியவர். எளிய சொற்களைக் கையாள்வது, மக்கள் மொழியில் கதை சொல்வது என வாசகனின் மனம் அறிந்தவராகத் திகழ்ந்தார். வாசிப்பவர்களை மேலும் வாசிக்கவும் வாசிப்பு அனுபவம் இல்லாதவர்களுக்கு வாசிப்பைத் தூண்டுவதிலும்தான் கி.ரா.வின் படைப்புலகம் வெற்றிபெறுகிறது.

பொடிக்கும் தாடிக்கும் இடையில் பிறந்தவர் எனச் சொல்வதுண்டு. பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளுக்கும் (செப்டம்பர், 15), தந்தை பெரியாரின் பிறந்த நாளுக்கும் (செப்டம்பர், 17), இடையில் கி.ரா.வின் பிறந்தநாள்(செப்டம்பர், 16) வருவதால் இப்படிச் சொல்வதுண்டு.

சின்னச் சின்ன நோய்களுக்கெல்லாம் மனம் தளர்கிறவர்களுக்குக் கி.ரா., ஒரு தன்னம்பிக்கை நட்சத்திரமாகப் பிரகாசித்தவர். 7 வயதிலிருந்து சுவாசக் கோளாறு பிரச்சினை, 60 ஆண்டு காலமாக இனிமா கொடுத்து காலைக் கடன் கழிப்பது என்று எண்ணற்ற உடல் உபாதைகளைக் கடந்து 99 அகவை கடந்து தன்னம்பிக்கை தந்தவர்.

(சின்ன வயசுலேர்ந்தே நான் பெரிய நோயாளி. ஐயோ எனக்கு வந்த வியாதி எல்லாம் இருக்கே.. அதுலெ ஒரே ஒரு வியாதியைக் கண்டாலே அவனவன் செத்துருவான். நான் சாகலை. ஆனா எல்லோருக்குமே பயம்தான். எப்ப போவேனோன்னு வந்து எட்டிப் பாத்துட்டு பாத்துட்டு போவானுக.) என்று தானே விவரிக்கிறார்.

அப்படிச் சொன்னவங்க எல்லாம் போயிட்டாங்க நான் இருக்கேன் என்று சொல்லிச் சிரிக்கிறார் வெள்ளந்தியாக. அவரின் உடல் நோய்க்கு மாமருந்தாக இருந்தவை அவரின் படைப்பாக்கச் சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழைச் சுவாசித்தாலும் நேசித்தாலும் வாழ்நாள்கள் அதிகரிக்கும் என்பதற்குக் கி.ரா. ஒரு உதாரணமாகத் திகழ்ந்தார்.

ராயங்குல ஸ்ரீ கிருஷ்ண ராஜ நாராயணப் பெருமாள் ராமானுஜம் எனும் நீண்ட பெயர் கொண்டவர்க்குக் கி.ரா. என்பதே எழுத்து உலகில் நிலைத்த பெயராகிவிட்டது. கரிசல் வட்டார அகராதியின் வழி கரிசல் மக்களின் பேச்சு வழக்குகளைப் பதிவு செய்தவர்.

கொரோனா தீநுண்மி பொது முடக்கக்காலத்தில் தனிமை என்பது பெரும் பாடு எனும்போது எழுத்தாளனுக்கும் இசை அறிவு உடையவனுக்கும் ஏது தனிமை என்று தனிமையை எழுத்துக்காக வசமாக்கிக் கொண்டவர். அச்சூழலிலும் பெண்களைப் பற்றிய “அண்டரெண்டப்பட்சி” எனும் புத்தகத்தைக் கைப்பட எழுதி அச்சுப் பிரதியாக இல்லாமல் கைப்பிரதியாகவே வாசகர்களுக்குப் படைத்தவர்.

ஆண் பெண் உறவு குறித்து படிக்க வேண்டிய புத்தகம் என்கிறார். மனித வளர்ச்சியின் ஒரு அங்கமாக பாலியல் உணர்வுகளைப் பார்க்க வேண்டும் என்பதே கி.ரா.வின் மனநிலைப்பாடு. நாங்கள் மறைந்து மறைந்து புத்தகங்களில் படித்தோம்; இன்று மறைந்து மறைந்து செல்போன்களில் பார்க்கிறார்கள். வடிவம்தான் மாறியிருக்கிறது; இந்த மானுடத் தேவை மாறவில்லை என்கிறார்.பறவைகளைப் போல வாழக் கற்றுக்கொள்ளுங்கள் என்கிறார். எதிலும் வெளிப்படையான பேச்சு. வெள்ளந்தியான மனசு.

சாதி குறித்து “சாவஞ்செத்த சாதிகள்” என்ற கதையினையும் தான் எழுதாமல் விட்ட கதைகளைத் தொகுப்பாகக் கொண்டு “மிச்ச கதைகள்” என்ற புத்தகத்தையும் எழுதி தம் வாழ்நாளில் நிறை வாழ்வு எய்திய கி.ரா.வுக்கு எழுத்துலகம், படைப்பாளிகள், வாசகர்கள் சார்பில் புகழஞ்சலியாக இக்கட்டுரைப் பதிவு.

சாவஞ்செத்த என்பதே வட்டார வழக்குதான். சாவஞ் செத்த கழுதை, சாவஞ் செத்த பயலுக என்று வசைபாடுவதுண்டு. ஒரு தங்கச் சங்கிலி செய்யும்போது சேதாரமாக தங்கம் விழும். அப்படி விழுந்தவற்றைக் கொண்டு மிச்ச கதைகள் உருவாக்குகிறேன் என்று ‘மிச்ச கதைகள்’ எழுதியதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

தாம் எழுதிய படைப்புகள் அனைத்தையும் தம்முடைய மகன்கள் மற்றும் அவருடைய வாசகருமான சங்கர் என்ற புதுவை இளவேனிலுக்கும் உரிமையுடையவை என திசம்பர் 26, 2020இல் எழுதி வைத்துள்ளார். தன்னுடைய படைப்புகள் மூலம் வரும் வருவாயில் ஒரு பகுதியைக் “கரிசல் அறக்கட்டளை” எனத் துவங்கி அதன் மூலம் எழுத்தாளர்களுக்கும் சிறு பத்திரிகைகளுக்கும் தன்னுடைய பெயரில் விருது வழங்க ஏற்பாடும் செய்துள்ளார். அதன்படி கி.ரா.வின் 99ஆவது அகவையில் எழுத்தாளர் கண்மணி குணசேகரனுக்கு கி.ரா. விருதும் ரூ. ஒரு இலட்சமும் அளிக்கப்பட்டன.

கரிசல் மக்களின் வாழ்வியல், இன்ப துன்பங்கள், நம்பிக்கைகள், ஏமாற்றங்கள், சொலவடைகள், பழக்க வழக்கங்கள் என அனைத்தையும் கி.ரா.வின் எழுத்துகள் மண் மணம் மாறாமல் மக்களின் மனத்தைப் பிரதிபலித்தன. தனக்கென தனி எழுத்து நடையை உருவாக்கிக் கொண்டவர்.

கிடை என்ற குறுநாவல் ஒருத்தி என்னும் பெயரில் திரைப்படமாக்கப் பெற்றது. நீங்கள் நூறு வயசு வாழவேண்டும் என்றால் “அதான் நூறைத் தொட்டுவிட்டேனே. ஏன் நூறு என்கிறீர்கள்' ஒரு 150, 200 வயது சொல்லுங்கள் என்பாராம். அவ்வளவு தூரம் வாழ்க்கையை ரசிக்கக் கற்றுக்கொண்டவர். வாழப் பழக்கிக் கொண்டவர்.

படிப்பு குறித்துப் பேசும்போது "படிக்க அக்கறை எல்லாம் இருந்திச்சு. ஆனா, படிப்பு ஏறலை. படிப்பை வாங்கிக்குற சக்தி எனக்கு இல்லைனு சொல்ல முடியாது. எனக்குப் படிப்பைக் கொடுக்கிற சக்தி வாத்தியார்களுக்கு இல்லைங்கிறதுதான் உண்மை. ஆனா, எந்த வாத்தியாரும் இதை ஏத்துக்க மாட்டாங்க" என்று சொல்லிச் சிரிக்கும் கி.ரா.ஏழாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர்.

கி.ரா. பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மதிப்புறு பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுத்துக்கும் படிப்புக்கும் தொடர்பில்லை என்பதை நிரூபித்தவர். 1958 இல் சரசுவதி இதழில் வெளியான மாயமான் என்னும் சிறுகதையே முதலில் வெளிவந்ததாகும். அதற்கடுத்து ‘சீப்பு’ கதை. இப்படியாகத் தொடர்ந்து படைப்புகள் வலம் வந்தன.

ரசிகமணி டி.கே.சிதம்பர முதலியாரின் வட்டத்தொட்டி மூலம் ரசனையைப் பெற்றவர். பொதுவுடைமை இயக்கங்கள் மூலம் முற்போக்கைக் கண்டவர். ஜஸ்டிஸ் மகாராஜன், மீ.ப.சோமு, ஆ.சீனிவாசராகவன் போன்ற ஆளுமைகளுடனான நேரடித் தொடர்பு மூலம் தமிழ் மரபிலக்கியத்தை அறிந்தவர். பேராசிரியர் நா.வானமாமலை போன்றோரிடம் உருவான நாட்டாரிலக்கியப் பார்வை எல்லாமும் பெற்ற ஆளுமை அவர் எழுத்துக்களில் மிளிர்ந்தன.

நூற்றாண்டை நோக்கிய கரிசலின் எழுதுகோல் எழுதுவதை நிறுத்திக் கொண்டது. அவருடைய எழுத்துகள் யாவும் மூன்று தலைமுறைகளைக் கண்டது. டி.எஸ்.எலியட் சொன்னதுபோல் “எழுத்தாளன் ஒரு மிகச் சிறந்த ஆற்றல் கடத்தி’ என்பது கி.ரா.வுக்குப் பொருத்தப்பாடுடையது.

வாழ்ந்த போதும் மறைந்த போதும் எழுத்தாளருக்குக் கிடைக்க வேண்டிய மரியாதையும் மதிப்பும் கி.ரா.வுக்குக் கிடைத்திருக்கிறது என்றால் அவர் நிறைவாழ்வும் பெருவாழ்வும் வாழ்ந்திருக்கிறார் என்றே பொருள்.

தமிழுக்குத் தொண்டு செய்வோர் சாவதில்லை. ஆம், தமிழ் எழுத்துலகில் 60 ஆண்டுகளுக்கு மேலாகப் பயணித்த கி.ரா.வின் மூச்சுப்பயணம் நின்றாலும் வாசகன் என்னும் பயணி வழியாக அவரின் எழுத்துக்கள் தொடர்ந்து பயணிக்கும். படைப்பாளிகளின் எழுத்துகள் சாகா வரம் பெற்றவை. கி.ரா., என்னும் தமிழ் எழுத்துலக சகாப்தம் தமிழ்கூறும் நல்லுலகம் இருக்கும் மட்டும் பேசப்படும்; ஆராயப்படும்; வாசிப்புக்கும் வசப்படும்.

- முனைவர் நா.சுலோசனா