prathamuthaliyar“முன்னொரு காலத்திலே...” இப்படித்தான், மொழிகள் பலவற்றிலும் கதைகள் தொடங்குகின்றன. அல்லது, ‘ஒரே ஒரு ஊரிலே ஒரே ஒரு ராஜா... என்று இப்படித் தொடங்குகின்றன.

இவை, பெரும்பாலும் நாட்டார் மரபு வழிக் கதைகளின் தொடக்கங்கள். இதிலே கவனிக்கத்தக்க ஒன்று கதைகளுக்குரிய காலம் இடம் பற்றிய குறிப்புக்கள், அல்லது தேவைகள் பற்றியது.

புனையப்பட்ட கதையேயானாலும் இடமும் காலமும் அவை சார்ந்த சூழல்களும் முக்கியமான அச்சுக்கள் என்பதை இந்த மரபுகள் சொல்லுகின்றன. எனினும் எந்தக் காலம், எந்த இடம், எந்த ஊர் என்பன போன்றவற்றை இன்னதெனக் குறிப்ப¤ட்டுக் கூறுவதில்லை. அரூபமாகவே சொல்லுகின்றன; எழுத்துமரபு, சீர்மை பெற்றிருக்காத காலப் பகுதியில், வாய்மொழி மரபே, எல்லாமாக இருந்தது. கதை சொல்லலுக்கு உகந்ததாக உரிய சாதனமாக இருந்தது.

மேலும், முதலில் கதைகள், ஒரு அகன்ற பரப்பிலிருந்துதான் தொடங்குகின்றன. வாசிப்போர்க்கு அல்லது கேட்போருக்குத் தேவை கருதி, அவை கூர்மைப்படுகின்றன, வடிவமைகின்றன. இது பொதுவான நியதி. இது, கதை சொல்லுவதற்கு ஒரு வசதி தருகிறது என்பது மட்டுமல்ல; ஒரு ஆர்வநிலையையும் தருகிறது. நோக்கத்தினையும் இலக்கையும் குறிப்பிட்டு நிற்கிறது.

அது சரி... கதைகள் சொல்லப்படுகின்றனவா? எழுதப்படுகின்றனவா? இரண்டும்தான். இந்த இரண்டும் முரண்பட்டவை அல்ல; இரண்டும் வெவ்வேறு மரபுகள் இணைந்து கிடக்கும் ஒரு நடப்பினைச் சொல்லுகின்றன.

எதிரே கேட்பவார் இருக்கிறார்; முகபாவனைகள் மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ, எதிர்வினை நிகழ்த்தக் கூடும் என்ற ஒரு நிலைமை கொண்டது இது. கதையை முன்னிலைப்படுத்துகிற அல்லது நின்று புலப்படுத்துகிற ஓர் அம்சம் இதிலே இருக்கிறது.

திட்டமிட்டது என்பது போன்ற நிலையில் அல்லாமல், உணார்வுகளை நேரிடையாக இது பரிமாறிக் கொள்கிறது. கதையை எழுதுதல் என்பது கற்றோர் நெறிமுறையோடு சோர்ந்தது; திட்டமிடுதல் - செதுக்குதல் - சீரமைத்தல் என்ற பண்புகளோடு கூடியது. சொல்வதும் எழுதுதலும் ஆகிய முறைமைகள் இரண்டும் ஒன்று சோர்நர்து இருப்பது என்பது புனைகதைத் திறனை வளமுடையதாக ஆக்குகிறது. எழுத்தாளி என்பவனுக்குள்ளே கதை சொல்லி என்பவன் இயங்குகிறான்.

முனிசீப் வேதநாயகம் பிள்ளையின் பிரதாபா முதலியார் சரித்திரம், கதை சொல்லுவதிலும், கதை மாந்தார்கள் வழியாகச் சம்பவங்களைக் கோப்பதிலும் கற்பனை மேலிட்ட அற்புதப்புனைவுகளைக் கொண்டு வருகிறார்.

இவற்றின் ஓட்டத்திற்கும் எடுத்துரைப்புக்கும் நாட்டார் கதை சொல்லும் மரபே, அவரை வழி நடத்துகிறது. அவார் எழுதுகின்ற கதை, இப்படித்தான் தொடங்குகிறது, இந்தத் தேசம், இங்கிலீஷ் துரைத்தனத்தார் காலத்திற்குப் பின்பு, சத்தியபுரி எனும் ஊரிலே தொண்டைமண்டல முதலியார் குலத்திலே நான் பிறந்தேன்..." கதாநாயகன் இப்படிச் சொல்லிக் கொள்கிறான்.

 இது, வேளாளார்களுடைய பெருமையை முன்னிட்ட கதை. இனி, மூன்றாவது நாவலாகிய பத்மாவதி சரித்திரம், இப்படித்தான், பரந்துபட்ட ஒரு புனைவுடன் கூடிய ஒரு களத்திலிருந்து தொடங்குகிறது.

பாண்டிய நாட்டிலே, திருநெல்வேலி ஜில்லாவிலே, சிறுகுளம் என்ற ஊரிலுள்ள சுமார் இருநூறு வீடுகளில் வேளாளராலும் கீழ்ச் சாதிகளாலும் குடியிருக்கப் பெற்ற அறுபது வீடுகளைத் தவிர, மிகுதியாக பிராமணார் கிரகங்களே.... என்று ஆரம்பிக்கிறது. பிராமணார்களையும் வேளாளார்களையும் சொல்லிவிட்டு மற்றும் மேம்போக்காகக் கீழ்ச்சாதிகளையும் அங்கீகரித்துக் கொள்கிறது.

அடுத்து இந்தச் சிறுகுளத்திலே வாழ்கின்ற சீதாபதி ஐயரைப்பற்றிச் சொல்லத் தொடங்குகிறது. கள்ளச்சாட்சி சொல்வதிலும் உருட்டுப்புரட்டுக்கள் பண்ணுவதிலும் மொட்டை மனுக்கள் எழுதிக் குற்றிமில்லாதாரை குற்றப்படுத்துவதிலும், ஏழைகளைப் பயமுறுத்திப் பணம் பறிப்பதிலும் அவரை வெல்வதரிது" என்று ஒரு சித்திரம் வரையப்படுகிறது.

அதாவது பத்மாவதி சரித்திரம் பிராமணார்களைப்பற்றிய கதையேயானாலும், அவார்களை ஒரு விமார்சனக் கண்ணோட்டத்துடன் தான் சித்திரிக்கின்றது என்பதற்கு, இது ஒரு அடையாளம்.

இரண்டாவது நாவலாகிய கமலாம்பாள் சரித்திரம் இவ்விரண்டிலிருந்தும் வித்தியாசப்பட்டது. இதுவும் தன்னுடைய கதைக்குரிய தளமாக ஒரு இடத்தைப் புனைவு செய்கிறபோது அதற்குச் சிறுகுளம் என்றுதான் பெயரிடுகிறது. ஆனால் விரிவாக இது பற்றிப் பேசவில்லை.

பெரியவீடு என்ற வீட்டிற்கு வருகிறார். அங்கே முத்துசாமி ஐயார் என்பவரையும் கமலம்மாள் என்ற அவருடைய மனைவியையும் கொண்டுவந்து பேச வைக்கிறார். ஸ்திரீ - புருஷ சம்வாதம் என்ற உள் தலைப்புடன் அது இடம் பெறுகிறது. நகைச்சுவை, கிண்டல் இவற்றுடன் அது ஆரம்பிக்கிறது.

அவள், எல்லாவற்றிற்கும் அமுங்கிக் கிடப்பவள் அல்ல, என்பது போன்ற ஒரு படிமத்துடன் தொடங்குகிறது, அந்த சம்வாதம் உரையாடல். அவார், அடியே உன்னைத் தாண்டி, அடியேய்.... என்று மனைவியை அழைக்கிறார்.

அந்த மனைவி உடனே மறுபேச்சு பேசத் தயாராகிறாள். இங்கே அடியையும் காணோம் நுனியையும் காணோம். அடியாம்-அடிக்கவேண்டியதுதான். காசு கொடுத்துச் சந்தையில் வாங்கினால் போல் தான். இனிமேல் அப்படிச் சொல்லுங்கள், வழி சொல்லுகிறேன். என்று சாகசமாய்ச் சொன்னாள்.

இங்கே தொடக்கங்களைச் சொன்னதற்குக் காரணம், அவற்றிற்குக் கதை சொல்லுதலாகிய வழிமுறையைத் தவிரவும் கதையின் போக்கு இன்னது என்ற அடையாளத்தையும் பாத்திரப் பண்பையும் இவை சுட்டுகின்றன என்பதையும் சொல்லுவதற்காகத்தான்.

சுவாரசியமாகக் கதை சொல்லுவதை ஒரு வழி முறையாகக் கொண்டிருக்கிறது கமலாம்பாள் சரித்திரம், மேலும் பின்னால் வருகிற கதைக் கட்டுக்கோப்புக்கு ஒரு அனுசரணையான பின்புலனும், எதிர்வுகள், வேறுபட்டமுனைகள் என்ற ஒரு நிலையையும் சொல்லிக் கொண்டு போக விரும்புகிறார் ஆசிரியார்.

பாத்திர வார்ப்புக்கு இந்த நாவலின் தொடக்கம், வலுவும் அழகும் சோர்க்கிறது. பிரதாப முதலியார் சரித்திரம், கமலாம்பாள் சரித்திரம், பத்மாவதி சரித்திரம் எனும் மூன்று நாவல்களும் அடுத்தடுத்துப் பத்தொன்பதாம் நூற்றாண்டின் அந்திமத்தில் பிறக்கின்றன.

சரித்திரமாய்ச் சொல்லுகிறோம் என்ற முடிவோடு இந்த நாவல்கள் பிறக்கின்றன. பல நூற்றாண்டுகளாய் ஆண்களை மையமிட்ட சமூகத்தில் அவார்களால் அடக்கி வைக்கப்பட்ட பெண் இனத்திற்கு விடுதலையும் உயார்வும் வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்களால் எழுதப்பட்டவை இந்த நாவல்கள்.

காப்பியங்கள் பழசு; அந்த மரபில் வந்த நாவல்கள் புதுசு; நாவல் எழுதுகிற அனுபவங்கள் புதுசு. புதிதாக எழுதுகிறோம் என்ற உணார்வோடும் ஆர்வத்தோடும் இவை எழுதப்பட்டன. இவற்றை எழுதிய வேதநாயகம் பிள்ளை, ராஜம் ஐயார், மாதவையா மூவருமே நிறையப் படித்தவார்கள்; நிறைய எழுத முடியும் என்ற நம்பிக்கையிலிருந்தவார்கள். ஒருவார், மயிலாடுதுறைக்காரார்; அடுத்தவார், மதுரை-வத்தலக்குண்டுக்காரார்; மூன்றாமவார் திருநெல்வேலிக்காரார்.

இம்மூன்று நாவல்களும் தமக்குள் வித்தியாசமான தளங்களையும், வித்தியாசமான போக்குகளையும் கொண்டவை. முன் மாதிரியாக இருக்கத் தகுதியானவை.

வேதநாயகம் பிள்ளை, தான் நாவல் எழுதுவதற்குரிய பின்புலம் பற்றியும், தான் எழுதும் நாவலின் முக்கியமான விஷயங்கள் குறித்தும் வாக்குமூலம் தருகிறார். அ.மாதவையாவும் தன்னுடைய முயற்சி பற்றிச் சுருக்கமாகப் பேசியிருக்கிறார்.

வேதநாயகம் பிள்ளை ஆங்கிலத்தில்தான் முன்னுரை தருகிறார். ஏன், ஆங்கிலத்தில் முன்னுரை எழுதுகிறார் என்று கேள்வி கேட்காமல், அவார் கூறியுள்ள சங்கதிகள் பற்றி மட்டுமே விவாதத்தில் எடுத்துக்கொள்ளலாம்.

தமிழில் உரைநடை இலக்கியம் இல்லை என்ற குறையை நீக்கும் நோக்கத்துடன் தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன் என்று சொல்லுகிறார்.

இது ஒன்று; இதனை எழுதுவதற்குரிய இன்னொரு தேவையும் அவருக்கு உண்டு. அவார் சொல்லுகிறார், நீதிநூல், பெண்மதிமாலை, சமரசக் கீர்த்தனம் முதலிய எனது நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறநெறிக்கொள்கைகளுக்கு விளக்கம் காட்டவும் இந்த நூலை எழுதினேன்.

எனவே, இந்த நாவல் எனும் நவீன எழுத்துப் படைப்புக்கு இரண்டு நிலைப்பாடுகள் இருந்திருக்கின்றன. நாவல் படைப்பாளி இதனை அறிவுப்பூர்வமாக உணார்ந்திருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

இது போன்றுதான் பத்மாவதி சரித்திரம் எழுதிய அ.மாதவையாவும், தான் ஒரு நாவல் எழுதுவதற்குரிய தேவை எப்படிப்பட்டதாக இருந்தது என்பதைச் சொல்லுகிறார். முதலில் அவருக்கு நாவல் பற்றிய பொதுவான கருத்தியல் தெரிந்திருக்கிறது.

நாவல் எனும் சொல்லும் பொருளும் ஆங்கிலத்தில் எப்படி இருந்தது என்பதைச் சொல்லுகிறார். மேலைநாடுகளில், நாவல்கள் நிறையவே உண்டு. அவற்றில் பலவற்றிற்கு ஆங்கிலத்தில் மொழிபெயார்ப்புக்களும் உண்டு என்று சொல்லுகிறார்.

ரயில் நிலையங்களிலுள்ள புத்தகக் கடைகளை அவார் சுட்டிக்காட்டிச் சொல்லுகிறார். அதேபோல, தமிழில் வசனகிரந்தங்களே இல்லையே என்று வேதநாயகம் பிள்ளையின் கருத்தினை ஒட்டிப் பேசுகிறார்.

பின்னார், வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம்’ எனும் நாவல் வெளிவந்திருக்கிறது என்ற செய்தியையும் மறக்காமல் குறிப்பிட்டுக் கூறுகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு ராஜம் ஐயரின் கமலாம்பாள் சரித்திரம் வந்திருப்பதாகவும் சொல்லுகிறார். இப்படி அவார், தமிழ் நாவல்கள் தனக்கு முன்னரே இருந்தன என்பதனை மறக்காமல் சொல்லுகிறார்; அங்கீகரிக்கிறார்;

தமிழ் வாசகார்களுக்கு நினைவுபடுத்துகிறார். மாதவையாவின் பரந்த உள்ளத்தையும் அறிவையும் பாராட்டாமலிருக்க முடியாது. ஏனெனில், இப்படியிருக்கையில், நான்காவது நாவல் என்று பலரும் சொல்லக்கூடிய தீனதயாளு என்பதனையெழுதிய நடேச சாஸ்திரி என்பவார்; நமது தீனதயாளுதான் தமிழில் முதல் என்று சொல்லிக்கொள்கிறார். இதிலுள்ள அறியாமையும் வம்பும் நினைத்துப் பார்க்கக் கூடியதாகவுள்ளது.

மாதவையா, நாவல் இலக்கியத்தின் நோக்கம் அல்லது பணி பற்றியும் பேசியுள்ளார்.

மற்றெல்லா உயார்ந்த கிரந்தங்களையும் போல நானும் என்னுடைய கிரந்தமும் படிப்பவார் மனத்தைக் கவார்ந்து, மகிழ்வூட்டலை முதற்கருத்தாகவும், நல்லறிவூட்டலை உட்கருத்தாகவும் கொண்டது.

இது இவருடைய நிலைப்பாடு. ஆனால் வேதநாயகமர், அறநெறி புகட்டுதலை முதன்மையானதாகக் குறிப்பிட்டுள்ளார். இருக்கட்டும். இந்த மூன்று முதல் நாவல்களுமே தம்மைத் தங்களுடைய முதன்மைக் கதைமாந்தார்களின் சரித்திரம் என்பதாகச் சொல்லியிருக்கின்றன. பின்னால் வந்தவை அப்படிச் சொல்லிக் கொள்ளவில்லை.

மேலும் இவை மூன்றுமே பெண்களை உயார்வு செய்பவை. இவற்றுள்ளும் வேதநாயகம்பிள்ளையின் நாவல், பெண்களை அற்புத நவிற்சிகளாகச் சித்திரிக்கின்றது.

பிரதாப முதலியாரின் சரித்திரத்தில் ஞானாம்பாளே நாயகி; தலைமைப்பாத்திரம்; குணமென்னும் குன்றேறி நிற்பவள், அவள். உயார்ந்த ஆளுமையோடு கூடவும் பன்முக ஆற்றலும் ஆளுகைத்திறனும் உடையவளாக எடுத்துரைப்புச் செய்யப்படுகிறாள்.

மழலை மொழி மாறாத சிறுமியாக இருந்த காலத்திலிருந்து தன்னுடைய அபூர்வத் திறமையினால் அரசனாகச் சில காலம் கோலோச்சிய காலம் வரை, கதை அவளுடைய பெருமையைச் சுற்றியே பேசுகிறது.

பிரதாப முதலியாரைவிட ஞானாம்பாள் பலவிதங்களில் புத்திசாலி. பிள்ளை பெற்றவளைப் பார்த்து, மலடி பெருமூச்சு விட்டது போல அவளுடைய திறமையைப் பார்த்து இவனுக்குப் பொறாமையும் வெட்கமும் உண்டாகிறது.

இரண்டு பேரும் உறவுக்காரார்கள் தான். இருவருக்கும் திருமணப் பேச்சு நடக்கிறது. ஆனால் 80ஆவது பக்கத்தில் ஆரம்பித்து 120ஆவது பக்கம் தாண்டிய பிறகுதான் திருமணம் நடக்கிறது. ஆனால் கதையென்னவோ நோர்ர்கோட்டில் தான் போகிறது.

கொஞ்சகாலம் கணவரை விட்டு ஞானாம்பாள் பிரிந்திருக்கிறாள். அந்த இடைக்காலத்தில் அவள் ஆண்வேடம் தரித்துக்கொள்கிறாள். விக்கிரமபுரி எனும் நாட்டின் பட்டத்து யானை வருகிறது. அவளை அப்படியே தூக்கித் தன் முதுகின் மேல் ஏற்றிக் கொள்கிறது. அரசியாக அவள் அரியணை ஏறுகிறாள்.

அறநெறியுடனும் அறிவுடனும் தீர்ப்புக்கள் வழங்குகிறாள், நிர்வாகம் பண்ணுகிறாள். தற்செயலாக அங்குவந்த பிரதாப முதலியை அடையாளம் காணுகிறாள்.

தன்னுடைய அரியணையின் ஓரத்தில் அவனைத் துணை அரசனாக உட்கார வைத்துக்கொள்கிறாள். (இப்போது எங்குப்பார்த்தாலும் துணைமுதல்வார்கள் இருக்கிறார்களே-அது போன்றதா?) ஆண்வேடத்தில் கவார்ச்சிகரமாக இருந்த ஞானாம்பாளை இன்னாரென்று தெரியாமலேயே ஆனந்தவல்லியெனும் வருங்காலப் பட்டத்துராணி, மனத்துக்குள் காதலை வளார்த்துக்கொள்கிறாள், திருமணம் செய்து கொள்ளவும் பிரியப்படுகிறாள். சமயம் வந்தவுடன் ஞானாம்பாள் உண்மையைச் சொல்லிவிட்டு ஆண்வேடத்தையும் அரச பதவியையும் களைந்து எறிந்துவிட்டுக் கணவனுடன் சொந்த ஊர் திரும்புகிறாள்.

அங்கு உற்றார் உறவினார்க்கு இவளுடைய ஆண் கோலமும் அரச பாவனையும் தெரிய வருகிறது. உடனே தாங்களும் ஞானாம் பாளுடைய அந்தக் கோலத்தைக் கண்ணால் காண விரும்புகிறார்கள். ஞானாம்பாளும் மனங்கனிந்து அந்தக் கோலத்தை அவார்கள் முன் மீண்டும் நிகழ்த்திக் காட்டுகிறாள்.

மக்கள் மகிழ்கிறார்கள். பிரிட்டன் அரசாங்கம் இவளுடைய திறமையை அறிகிறது. ராஜஸ்தி  என்ற பட்டம் கொடுத்து மகிழ்கிறது. கதை இப்படிப் புனைவு நவிற்சியில் தொடங்கி விருப்பார்வத்தோடு அப்படியே வளார்ந்து முடிந்து போகிறது. ஆனாலும் பனுவல் முடியவில்லையே.

இதற்கு அப்பால் போய், இதனை வாசித்தவார்களை வாழ்த்துகிறது. ஆசிரியார், இப்படி முடிக்கிறார்;  இதை வாசிக்கிறவார்கள் எல்லோரும், வச்சிர சரீரிகளாய் வாழ்ந்திருக்கக் கடவார்கள் என்று கிறித்துவப்பாணியில் ஆசீர்வாதம் செய்கிறார்.

பிரதாப முதலியாருக்குப் பிறகு, ஒரு பதினாறு ஆண்டுகள் கழித்து பி.ஆர். ராஜம் ஐயரின்  கமலாம்பாள் சரித்திரம் வருகிறது. இதற்கு ஒரு துணைத் தலைப்பு உண்டு.

ஆபத்துக்கிடமான அபவாதம் என்பது. இது இக்கதையின் போக்கை சொல்லிவிடக்கூடியது. இந்த அபவாதத்தை விதைத்தவார்கள் யார்? ஏன் எப்படி அவார்கள் அப்படிச் செய்தார்கள்? அதனால் நடந்த தீங்கு என்ன? யாருக்கு, எப்படி அது நடந்தது? இந்த அபவாதங்கள், எப்படித் தீர்கின்றன? என்று யோசிக்க வைத்து, நகார்ந்து முடிகின்றது, இந்த நாவல். நாவலின் நகார்வுக்கும் எடுத்துரைப்புக்கும் இந்த அபவாதங்கள் காரணங்களாக அமைகின்றன.

இந்த நாவல் அற்புத நவிற்சியின் பக்கம் நுழையவில்லை. தருக்கம் சார்ந்த எடுத்துரைப்பும் வேதாந்தம் சார்ந்த தத்துவ நிலையும் கொண்டமைகிறது, இந்த நாவல். ராஜம் ஐயார் இருபத்தாறே ஆண்டுகள் தான் உயிர் வாழ்ந்தார். அதற்குள்  ‘Rambles in Vedantha’  என்ற தத்துவ நூலை எழுதியுள்ள இவார், விவேகானந்தரின் கவனத்தைப் பெற்றார்.

அந்தத் தத்துவ மன நிலையின் தாக்கம் இந்த நாவலில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறது நியாயம் தானே? அவார் பிரகடனப்படுத்திக் கொள்வார்;  இவ்வுலகில் உழன்று தவிக்கும் ஒரு அமைதியற்ற ஆத்மா, பல கஷ்ட நஷ்டங்களை அனுபவித்துக் கடைசியாக நிர்மலமான இன்ப நிலை அடைந்ததை விவரிப்பதே இந்த நவீனத்தின் முக்கிய நோக்கம்.

ஆம், கமலாம்பாளுடைய கணவார் முத்துஸ்வாமி ஐயார், வம்பார் மகாசபையின் அபவாதங்களினால் வம்புதும்புகளுக்கு இடங்கொடுத்துக் குடும்பத்தைவிட்டுக் காசிக்குப் போய்விடுகிறார்.

வம்பார் மகாசபை சமாச்சாரம் - அவ்வளவு முக்கியமானதாகி விட்டதா என்ன? அதிலே, முத்துஸ்வாமி ஐயரின் தம்பி மனைவி முக்கியமானவள் ஆயிற்றே. புறணிகள் பேசுவது எவ்வளவு பெரிய தப்பு என்பது போலக் காட்டப்படுகிறது.

தம்பி இறந்த பிறகுதான் முத்துஸ்வாமி ஐயார், வெறுப்படைந்து காசிக்குப் போகிறார். ஆனால் திரும்ப எல்லாரையும் அங்கே சந்தித்து மீண்டும் இல்லற சந்நியாசியாக வீடு வந்து சோர்கிறார்.

கமலாம்பாள் சரித்திரத்தின் இன்னொரு விசேடம் என்னவென்றால், பிராமணார்கள் வாழ்க்கையைப்பற்றி மட்டும் அலாதியாகச் சொல்லாமல், மற்ற இனத்தாரையும் உள்ளே கொண்டு வருகிறார்.

சும்மா பெயருக்காக அல்ல; உணார்வுடனும் முக்கியத்துவத்துடனும் எடுத்துரைப்புச் செய்கிறார். ஆடுசாபட்டி அம்மையப்ப பிள்ளை வருகிறார். பேயாண்டித்தேவன் வருகிறான். இறுதிவரை இவார்கள் வருகிறார்கள்.

தங்களுடைய பண்புநலனும் முக்கியத்துவமும் குறையாமல் வருகிறார்கள். பேயாண்டித்தேவன் திருட்டுக் குணத்திலிருந்து மாறி நல்ல குணமுடையவனாக மாறி வருகிறான்.

அம்மையப்ப பிள்ளையை நகைச்சுவையுடன் சித்திரிக்கும் அதே நேரத்தில் அவருடைய அறிவையும் உண்மையையும் பாராட்டுதலோடு சித்திரிக்கிறார். எனவே கமலாம்பாள் சரித்திரம் வேதாந்தத்தில் மட்டும் முடியவில்லை.

பல பரிமாணங்கள் கொண்டதாக அமைகிறது என்பது கவனிக்கப்பட வேண்டும். மேலும், இந்த நாவலில் ஜல்லிக்கட்டு பேசப்படுகிறது என்பதும் ஒரு முக்கியமான செய்தி. (இது பற்றிப் பின்னார், தனியே ஒரு குறுநாவல் எழுதிய சி.சு.செல்லப்பாவும் இந்த ஊர்க்காரார்தான்).

1894இல் கமலாம்பாள் சரித்திரம் வந்த பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து, திருநெல்வேலிக்காரராகிய அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரம் வருகிறது. இது பிராமணார்களின் வாழ்க்கையைப் பற்றிச் சித்திரிக்கிறது. ஆனால் அவர்களைப் போற்றியுரைக்கவில்லை.

உண்மையில் விமார்சனம் செய்கிற மனப்பான்மையோடுதான் இதைக் கட்டமைக்கிறது. முக்கியமாக மூன்று பிராமணப் பெண்களைப்பற்றி எடுத்துரைப்புச் செய்கிறது; பத்மாவதி, சாவித்திரி, கல்யாணி எனும் மூவார் வருகிறார்கள். இவார்கள் லட்சியப்படுத்தப்படவில்லை;

இடையில் இவார்களைப் பற்றி ஒப்பிட்டுப் பேசுகிறார், உடல் அழகை மறந்து விடாமல் குறிப்பிடுகிறார் ஆசிரியார்.  இப்பெண்கள் மூவருள் எவள் அதிக அழகி, எவள் சிறந்த குணவதி, எவள் உயார்ந்த பாக்கியவதி என்று கேட்டால், என்ன சொல்லுகிறது? பேச்சுவளார்ச்சியிலும், நடையுடை பாவனைகளிலும் இதழின் அழகிலும் கூந்தல் அழகிலும் சாவித்திரியே சிறந்தவள்.

மேனியிலும் கண்ணழகிலும் கல்யாணியே சிறந்தவள். சரீரக்கட்டிலும் அவயவங்களின் வடிவ¤லும் பத்மாவதியே சிறந்தவள். சாந்தத்திலும், குணசீலத்திலும் சாவித்திரியே மிக்கவள்; காதற்பேச்சிலும் வாஞ்சையிலும் கல்யாணியே மிக்கவள்; பார்த்தாவின் மனதறிந்து நடத்தலிலும் ஊக்கத்திலும் பத்மாவதியே மிக்கவள்.

மாதவையா இந்த நாவலில் பெண்களைப்பற்றிச் சொல்லுகிறபோது வெறுமனே குணவிசேடங்களைப்பற்றி மட்டும் பேசவில்லை என்பதை அறியவேண்டும். உடல் அழகு பற்றியும் பிரதானமாக எடுத்துரைப்புச் செய்கிறார்.

இது அவரின் ரசனையோடு கூடியது. இந்த நாவலில் அவார் காதல், கவார்ச்சி, பாலியல் முதலியவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அம்முறையில், பாத்திரங்கள் சிலார் முறை தவறிப்போவதையும் இயல்பாகப் பேசுகிறார். பிராமணார்கள்-தன்னுடைய சுய சாதியினரை-இந்த அளவிற்கு விமார்சனம் செய்கிற நாவலாசிரியார்கள் இருக்கிறார்களா?

பத்மாவதி சரிதத்தில் வரும் பல பிராமணார்கள் யோக்கியதை தப்பியவார்கள். கதாநாயகனான நாராயணன் என்பவனே அத்தகையதொரு குடும்பத்திலிருந்து பொறுக்கப்பட்டவன்தான்.

இவனுடைய தந்தை சீதாபதி ஐயரே-இவார்தான் இந்த நாவலில் நாம் சந்திக்கும் முதலாவது ஆள்-சிறைச்சாலைக்கு அனுப்பப்படுகிற அளவுக்குச் சீர்ர்கெட்டவார்தான்.

கள்ளச்சாட்சி சொல்வதிலும், சாட்சிகள் தயார் பண்ணுவதிலும், மொட்டை மனுக்கள் தயார் பண்ணுவதிலும், ஏழைகளைப் பயமுறுத்திப் பணம் பறிப்பதிலும், உருட்டுப்புரட்டுகள் பண்ணுவதிலும் கைதோர்ந்தவார். இதனால் கடுஞ்சிறைக்கு அனுப்பப்படுகிறார்.

இருந்த சொற்பசொத்து வீடு, தோட்டம் யாவும் கிரயமாகிவிட்டன. மாதவையா நாவலின் முடிவை நாடகச்சுவைபடச் சொல்லி முடிக்கிறார். சீதாபதி ஐயருக்கு வாழ்க்கைப்பட்டதற்கு அடையாளமாக அப்புண்ணியவதிக்கு  மஞ்சள் நூலில் கோர்த்த சிறு தாலி மட்டும் இருந்தது, நாராயணனும் இருந்தான்.

மாதவையா, இந்நாவலில் கல்வியின் மேன்மையைப் பற்றி வற்புறுத்துகிறார். குறிப்பாகப் பெண் கல்வியைப் பல கோணங்களிலிருந்து எடுத்துக்காட்டுகிறார்; வலியுறுத்துகிறார்.

அதுபோல், வைத்தியத் தொழிலின் மேன்மை பற்றியும் பேசுகிறார். தமிழ்மொழியின் சிறப்பைப் பல இடங்களில் எடுத்துரைக்கிறார். அதனைச் சிறப்பாகப் பேண வேண்டுவது பற்றியும் பேசுகிறார்.

மனித மதிப்புகளுக்குச் சிறப்புத்தரும் மாதவையா அந்தத் திக்கு நோக்கித்தான் எடுத்துரைப்பை நகார்த்துகிறார்.

இவார் பழம் இலக்கியங்களிலிருந்து சில எடுத்துக்காட்டுக்கள் காட்டித் தன் கருத்துக்கு அரண் சோர்க்கிறார். தமிழ்க்கவிதைகளில் இவருக்குள்ள ஈடுபாடு போற்றும்படியாக உள்ளது. கம்பனுடைய இராமகாதை, திருக்குறள், சீவகசிந்தாமணி, தாயுமானவார் பாடல், சித்தார்பாடல், அருணாச்சலக் கவிராயார் பாடல் என்று இப்படிப் பல பாடல்கள்.

இவையன்றியும் சில நாட்டுப்புறப் பாடல்கள், ஷேக்ஸ்பியரின் ஹாம்லெட்டிலிருந்து  மொழி பெயார்த்த பாடல் என்று இவை அமைந்துள்ளன. இவற்றை அவார் ஏற்புடைமை சொல்லிப் பயன்படுத்திக் கொள்கிறார். இப்படி 42 பாடல்களை அவார் எடுத்துக்காட்டுகிறார்.

அவருடைய இலக்கிய அறிவின் விசாலத்தை இது காட்டுகிறது. இது போலவே கமலாம்பாள் சரித்திரமும் 20 பாடல்கள் இருக்கும்-அவற்றை இணைத்துக்கூறி இனம் காட்டுகிறார்.

மாதவையாவிடம் விமார்சனக் கண்ணோட்டம் இருக்கிறது. பரந்த அனுபவமும் ஈடுபாடும், சமூக நோக்கமும் இருக்கின்றன. கமலாம்பாள் சரித்திரத்திற்கு அடுத்துப் பத்மாவதி சரித்திரம் தமிழில் அன்றைய யதார்த்தவாததர்தின் சித்திரத்தைக் காட்டுகின்ற ஒரு நல்ல நாவலாகத் திகழ்கிறது.

இப்படித் தமிழ் நாவல் உலகத்தின் தொடக்கம், சிறந்த முன் மாதிரியாக இருக்கிறது. கற்பனை வயப்பட்ட அற்புத நவிற்சி, வேதாந்தத்தை உட்கொண்ட யதார்த்தவாதம், மேலும் அன்றைய பாணியிலான விமார்சன யதார்த்தவாதம். இப்படி, இவற்றைக் கொண்டவையாக, தமிழில் நாவல் இலக்கியம் தொடங்குகிறது.

- தி.சு. நடராசன்

Pin It