இப்போது
நோய்க்காலம்
நெடுமரமென
வளர்ந்து நிற்கிறது.
விழிப்புநிலையில் இருக்க
முயன்ற போதும்
என் மனம்
அவ்வப்போது
சரிந்து விடுகிறது.
பிறரின் பிறழ் சொற்களோடு
இயைந்து போக முடியாமல்
நான்
விழுந்தும் விடுகிறேன்.
பிறழ்வில்
இருந்து விடுபடுதல்
நல்லதென்றே தோன்றுகிறது.
ஆனால்
பிறழ்வு என்று சொல்லி
குற்றங்கள் புரியும்போது
தண்டனைகளிலிருந்து தப்பித்துக்
கொள்ள முடிகிறது.
உறவுகளை
அறுத்தும்
தனிமைப்படுத்தியும் விடலாம்.
இப்போது
எனது கொடி
அரைக் கம்பத்தில்
பறக்கின்றது.
அப்போதும்
அது தலை நிமிர்ந்தே
பறக்கிறது.
அது அவமானமும் அல்ல.
வீழ்ச்சியும் அல்ல.
ஒருநாள் அது
உயரப் பறக்கும்
அப்போது
விடுதலைப் பாடலை
அனைவருடன்
இசைப்பேன்
நான்.
- ரவி குமாரசாமி