மயிர்நீப்பின் உயிர்வாழாக்
கவரிமான் அல்ல என்பதால்
அவமானங்கள் ஒன்றும்
புதியது அல்ல.
மேலும்
கழிவிரக்கத்தை என் இதயச் சுவற்றில்
வரைந்து கொள்பவனும் அல்ல.
கல்விச் சாலையில்
கடன் பெற்ற இடத்தில்
அன்பற்ற உறவில்
பணியிடத்தில்
அறிவுப் பற்றாக்குறையில்
பாகுபாடான பயணங்களில்
இப்படி அவமானங்களை
வெகுவாக ஈட்டி வைத்துள்ளதை
நான் அறிந்தே வைத்துள்ளேன்.
அதன் தடயங்களை
அழித்துவிட
எனக்கு விருப்பமும் இல்லை.
ஏனென்றால்
அவை
அறிதலை
ஆன்மாவை
பற்றறுதலை
மென்மேலும் மேம்படுத்தக்கூடும்.
உனது வாய்க்கு
அவ்வப்போது
நான் இரையாகவும் கூடும்
- ரவி குமாரசாமி