தோளில் துண்டணிந்து
உங்களது வீதிகளில் நடப்பதற்கு
அனுமதிக்க மறுத்தீர்கள்.
கொல்லைப் புறவழியாக
வரச்சொல்லி
தேங்காய்ச் சிரட்டைகளில்
தேநீரை ஊற்றினீர்கள்.
இரட்டைக் குவளைகளைக்
காகிதக் கோப்பைகளாக மாற்றி
நவீனப்படுத்திக் கொண்டீர்கள்.
பண்ணைகளில் விளைவித்த பயிருக்கு
கூலிதனைக் கொஞ்சம் கேட்டதற்கு
குடிசையையே எரித்தீர்கள்.
காதல்தனை நாடகம் என்று பகர்ந்து
இயல்பாய் மலர்ந்த காதல் மலர்கள்மீது
அரிவாளால் குருதிமழை பொழிந்தீர்கள்.
சேரிக்காரர்கள் என இகழ்ந்து
ஆலயத்துக்கு உள்ளே
வழிபட அனுமதி மறுத்தீர்கள்.
இயல்பாகப் படித்து முன்னேறினாலும்
இடஒதுக்கீட்டு பயல்கள் என
சொற்களால் சுட்டீர்கள்.
காலத்தின் நதி கரைபுரண்டு ஓடும்
ஒரு காலம் விரைவில் வரும்போது
நீங்கள் கரைந்து போவீர்கள்.
உரிமைகளின் குரல்வளையைப்
பூட்டுகள் போட்டு பூட்டினீர்கள்.
ஆனால்
நாளை எழுதப்படும் வரலாற்றில்
உங்கள் பூட்டுகள்
சுக்கல் சுக்கலாக
உடைத்தெறியப்படும்
விரைவாக
உணர்ந்து கொள்வீர்கள்.
- ரவி குமாரசாமி