பிரளயன் நெறியாள்கையில் ஈரோட்டில் அரங்கேற்றப்பட்ட "வனப்பேச்சி என்கிற பேரண்டச்சி" எனும் காவியத்தை மேடையில் நாடகமாகக் காண முடிந்தது. ஈரோடு ஆட்சியரும், கவிஞ்ருமாகிய திரு.கந்தசாமி அவர்கள் தலைமையில் நடந்தேறிய இந்த நாடகத்தைக் கண்ட பார்வையாளர்கள் அறிவார்ந்த உணர்வில் கரைந்திருந்தனர். சூழலியல் கருவை மையமாகக் கொண்டு நெய்யப்பட்ட செய்நேர்த்தி மிக்க பிரளயனின் 95 நிமிட நேரப் படைப்பைக் கொண்டாடாமல் இருக்க முடியாது.kandasamy pralayan and rohini(ஈரோடு ஆட்சியரும் கவிஞருமாகிய கந்தசாமி, பிரளயன், ரோகிணி)

தவிரவும், மிகவும் காத்திரமான இரண்டு அரசியல் செய்திகள் இந்த நாடகத்தில் உள்ளுறையாகப் பதிந்து கிடக்கின்றன. இந்திய மக்களுக்கு முன்னால் இரண்டு எதிரிகள் உள்ளனர் என சோசலிசத் தலைவர் இராம்மனோகர் லோகியாவிலிருந்து அண்ணல் அம்பேத்கர் வரை தொடர்ந்து பலரும் நமக்குச் சுட்டிக்காட்டி உள்ளனர். "நமது மூளையைப் பார்ப்பனர்கள் ஆள்கின்றனர். நமது வயிறைப் பனியாக்கள் ஆள்கின்றனர்" என்றார் லோகியா. இதைப் பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தினார் அண்ணல் அம்பேத்கர். "முதலாளித்துவமும், பார்ப்பனியமும்தான் இந்திய மக்களின் முதன்மையான எதிரிகள் " என்பது அண்ணலின் பிரகடனம். இந்த இருபெரும் ஆபத்துக்களையும் தனது அடர்த்தியான வசனத்திலும், செறிவான உள்ளடக்கத்திலும் புதைத்து வைத்துள்ளார் தோழர் பிரளயன். கூடவே சமகாலத்தில் விசுவரூபம் எடுத்து நிற்கும் சூழலியல் பிரச்சனையையும் இணைத்திருப்பதில்தான் பிரளயனின் தனித்துவம் மிளிர்கிறது.

அண்மைக் காலத்தில் சூழலியல் சிக்கல் பெரும் சவாலாக மாறியது ஏன் என்ற கேள்வியையும் நாம் கேட்க வேண்டியுள்ளது. இது குறித்த எனது புரிதலைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். கடந்த நூற்றாண்டுகளில் முதலாளித்துவத்தில் மூவகைப் போக்குகள் இருந்ததைப் பாவிக்க முடிகிறது. தங்களது பாரம்பரியச் சொத்தை வைத்துக் கொண்டு, தங்களது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்ட முதலாளிகள் ஒருவகை. இதற்கு டாட்டா /பிர்லா போன்றோரை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். கல்வி / அறிவியல் தொழில்நுட்பத்தை வைத்துத் தங்களது மூலதனத்தைப் பெருக்கிக் கொண்ட முதலாளிகள் அடுத்த நிலை. நாராயண மூர்த்தி, சிவ் நாடார் - பில் கேட்ஸ் - உள்ளிட்டோரை இந்த வகையினத்தில் அடையாளப்படுத்தலாம். மூன்றாவதாக, இயற்கையைச் சூறையாடி உலகப் பணக்காரராக ஆனவர்கள். அதற்கு எடுத்துக்காட்டு அம்பானி, அதானி, வேதாந்தா போன்றோர்.

முதலிரண்டு வகைகளிலும் மனித உழைப்பைச் சுரண்டித்தான் மூலதனம் குவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இயற்கைக் கனிவளங்ளைச் சுரண்டுவதில் ஒப்பீட்டளவில் அந்த அளவு நச்சரிப்பும் தொல்லையும் இல்லை என்பதைக் கார்ப்பரேட்டுகள் உணர்ந்தனர். ஊதிய உயர்வு, போனஸ், பணி நிரந்தரம் போன்ற "எரிச்சல்" ஊட்டும் தடைகள் இதில் இல்லை என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். எனவே இயற்கைக் கனிவளங்களை அதிகாரத்தை வைத்துக் கொண்டு எவ்வளவு வேண்டுமானாலும் தடையின்றிச் சுரண்டலாம் என்பது அவர்களது கணக்கு ஆனால் இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், மக்களை விழிப்படையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதுதான் முதலாளிகளுக்கு முக்கியம். இந்த இடத்தில்தான் பிரளயன் போன்றோரது தேவையை நாம் புரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

முதலாளியம் (கார்ப்பரேட்) பார்ப்பனியம் / சூழல்நாசம் ஆகிய முப்பெரும் பகை சக்திகளை அழித்தொழிக்க வேண்டியதன் தேவையைத் தனது படைப்பு நேர்த்தியால் பார்வையாளர்களிடம் நன்கு கடத்தி விடுகிறார் பிரளயன். தாடகையும் விசுவாமித்திரனும் பேசும் உரையாடல் இந்தக் கோட்பாட்டுப் பின்னணியை எளிதில் தெளிவாக்கி விடுகிறது. பார்ப்பனர்கள் ஆயுதம் தூக்க மாட்டார்கள். ஆனால், பிறரைக் கொண்டு தங்களது காரியத்தைத் தந்திரமாகச் சாதித்துக் கொள்வார்கள் என்பதை மிக அருமையாக வெளிப்படுத்தும் அரிய காட்சி அது. அதே போல் தாடகை, ராட்சசி போன்ற சொற்களுக்குப் பின்னால் இருக்கும் சாதி அரசியலையும் நாடக ஆசிரியர் தோலுரித்துக் காட்டுகிறார். "ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னாலும் ஓர் அரசியல் உள்ளது" எனத் தோழர் மாவோ குறிப்பிட்டதை நாம் மறக்கலாகாது. தாடகையை இயற்கை அன்னையின் குறியீடாகக் கொண்டால், அவர் மீது ஏவப்படும் அம்புகள் என்பவை, இரும்புச்சுரங்கங்கள், தேயிலைத் தோட்டங்கள், மீதேன் / ஆற்றுமணல் கொள்ளை போன்றவற்றைக் குறிக்கிறது என்பதைப் பிரளயனின் உரையாடல் உடனடியாகப் புரிய வைக்கிறது.

"இயற்கையை வெல்ல மனிதன் முயன்றால், இயற்கை அவனுக்குக் கடுமையான பாடங்களைக் கற்றுத் தரும்" என்றார் ஏங்கெல்ஸ். ஆனால், தான் பால் குடித்த தாயின் மார்பகத்தைக்கூட அறுக்கத் தயங்காத மனச்சாட்சியற்ற மனிதர்களைக் கொண்டதாக இருக்கிறது இந்த உலகம். உலகின் ஓர் இருண்ட பக்கம் இது.

ஆனால் ஒளி மிக்க இன்னொரு பக்கமும் இருக்கிறது. தனது தாயகத்தின் இயற்கைக் வளத்தைக் காப்பதற்காக கென் சாரோ விவா (நைஜீரியா) சன் ரதா (கம்போடியா) போன்ற எண்ணற்ற புரட்சியாளர்கள் சூழலியல் காக்கத் தங்கள் உயிரையே காணிக்கையாகத் தந்தார்கள் என்பதுதான் நம்பிக்கை ஊட்டும் அந்த மறுபக்கம். வனத்தின் இயற்கை வளத்தைக் காக்கத் தமிழரான பாதிரியார் ஸ்டேன்சாமி ஊபா சட்டத்தில் கைது செய்யப்பட்டுச் சிறையிலேயே உயிர் நீத்தார். இருப்பினும், "பறவையைக் கூண்டில் அடைத்தாலும், அது பாடுவதை நிறுத்தாது " எனப் பிரகடனப் படுத்தினார். இத்தனை ஒப்பீடுகளையும் "வனப்பேச்சி" நாடகம் நம் உள்ளத்தில் கிளர்ந்தெழச் செய்கிறது.

ஒரு நாடகம் என்பது இலக்கியம் போன்றதல்ல! அதற்குத் தனிமனிதனின் உழைப்பு மட்டும் போதாது. அது ஒரு கூட்டு முயற்சி. நாடக ஆசிரியனின் ஆன்மாவை காட்சிப்படுத்தும் சக நடிகர்களின் ஒத்துழைப்புத்தான் அதன் வெற்றிக்குக் காரணமாக இருக்கும். அழகான மலருக்கு இனிய மணத்தைத் தருவது போல், வனப்பேச்சியாக வரும் திரைக்கலைஞர் ரோகிணி அவர்களின் நடிப்பு இந்நாடகத்தின் அடர்த்தியைக் கூட்டி நம்மைப் பிரமிக்க வைக்கிறது. அவரது திரை அனுபவமும், முற்போக்குக் கோட்பாட்டின்பாலான அவரது ஆத்மார்த்தமான ஈர்ப்பும் இந்த நாடகத்தின் சிகரம் என்றால் அது மிகை ஆகாது. கூடவே கவின்மலர் மற்றும் விசுவாமித்திரர் உட்பட பல்வேறு பாத்திரங்களில் நடித்த பலரது நடிப்பும் உயிரோட்டமாக அமைந்துள்ளது.

பழமையையும் புதுமையையும் இணைக்கும் பாலமாகத் திகழ்பவர் பிரளயன். இக்கலவை இந்த நாடகத்திற்குக் கூடுதல் ஈர்ப்பைத் தருகிறது. இந்நாடகத்தின் இசையும் நடனமும் அதற்கோர் எடுத்துக் காட்டு. தனது இருப்பைச் செயற்கையாகத் திணிக்காமல், இறுதிவரை நம்மோடு இயல்பாகப் பயணிக்கும் பின்னணி இசையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

உள்ளத்தில் கிளர்ச்சி ஊட்டிச் செயலுக்குத்தூண்டாத ஒன்று சிறந்த படைப்பாக இருக்க முடியுமா? 'செளந்தரிய உபாசகர்கள்" வேண்டுமானால், இதை ஒப்புக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் மக்களுக்காகச் சிந்திப்பவர்கள் அப்படி வாளாவிருக்க முடியாது. ஒரு படைப்புக்குள் நுழையும் போது உள்ள மனிதன், நுழைந்த பின் அதிலிருந்து வெளியேறும் போது மேம்பட்ட வேறோர் புதிய மனிதனாக வர வேண்டும். ஷெல்லி, வால்ட் விட்மன், பாப்லா நெரூடா, பாரதிதாசன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், இன்குலாப் போன்ற படைப்பாளிகள் இந்த இரசவாதத்தைத்தான் செய்தார்கள். அப்படிப்பட்ட உருமாற்றத்தைப் பிரளயன் இதில் உருவாக்கி உள்ளார்.

நாடக அரங்கை விட்டு வெளியேறும் போது, தொல்லைக்குள்ளாக்கும் கேள்வி ஒன்று நம்மைத் துரத்திக் கொண்டே வரும். இத்தகைய நாசகார சக்திகளை ஒழித்துக் கட்ட நாம் என்ன செய்ய,வேண்டும் எனும் அந்தக் கேள்வி மிகவும் பொருள் மிக்கது. அந்தக் கேள்வி அவர்களை நிச்சயம் செயலுக்குத் தூண்டும். அநீதியைக் கண்டு அமைதியாகக் கடந்து செல்லும் பார்வையாளனாக நாம் இருக்கக் கூடாது என்ற உணர்வை அவர்களிடம் அது தூண்டும். அப்பொழுது பிரளயனின் வெற்றி அங்கே நிலைநாட்டப்படும்.

- கண.குறிஞ்சி

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.