வட்டார மொழியைக் கண்டறிய முயன்றார்கள்.
உதிர்க்கும் வசைச் சொற்களை வைத்து
ஊர் எதுவாக இருக்கும் என்று ஆராய்ந்தார்கள்.
பெயரை வைத்து
சாதியின் மூலத்தை அறிய முற்பட்டார்கள்.
வடித்த போதையைக்
கோப்பைகளில் ஊற்றி
கொள்கைகளை
உளவு பார்த்தார்கள்.
கிடைத்த அளவைகளில் எல்லாம்
என்னை அளந்தும்
எடை போடவும் எத்தனித்தார்கள்.
புனிதனா என எனை நிழல்போல் தொடர்ந்தார்கள்.
கசக்கும் புகையிலையைத் துப்பும் போது
கடுகி ஓடினார்கள்.
பொய்யாடைகளைக் கழற்றி
ஒவ்வொன்றாக மேடைகளில்
அவிழ்த்தெறிந்த போது
அதிர்வடைந்தார்கள்.
அப்புறமென்ன ?
கழுத்து வலிக்க என்னை
அண்ணாந்து பார்க்கின்றார்கள்.
காற்று என்னைத் தழுவிக் கொண்டது.
கருணை என் முகத்தைத் துடைத்தது.
சிமிழுக்குள் அடக்க நினைத்தவர்கள்
சிதறி ஓடிக் கொண்டிருக்கின்றனர்.
இனி அன்பின் துணையால்
பயணம் செய்வேன் யான்.
- ரவி குமாரசாமி