இவ்வாரம் சிம்லாவில் நடந்த இந்திய சட்ட சபைக்கூட்டத்தில் இந்திய சுதேச சமஸ்தானங்களின் பாதுகாப்புக்காக என்று “இந்தியாவில் அரசர் பெருமானின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சமஸ்தானங்களின் பாதுகாப்புச் சட்டம்” என்பதாக ஒரு புதிய சட்டம் அரசாங்கத்தாராலேயே கொண்டு வரப்பட்டிக் கிறது.

இந்தச் சட்டம் இப்போது கொண்டு வருவதற்குள்ள அவசியத்தை இந்திய அரசாங்க ஹோம்மெம்பர் எடுத்துச் சொல்லும்போது “இந்தியாவில் அரசர் பெருமானின் சர்வாதிகாரத்திலுள்ள சமஸ்தானங்களின் நிர்வாகத்தைக் கவிழ்க்கவோ, அச்சமஸ்தானங்கள் விஷயமாய் பிறர் துவேஷங் கொள்ளும் படி செய்யவோ செய்யப்படும் முயற்சிகளைத் தடுக்க இச்சட்டம் செய்யப்படுகின்றது” என்று சொல்லியிருக்கிறார்.

சுதேச சமஸ்தானங்கள் என்பவைகள் பிடிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவுக்கு வந்தகாலம் முதல்கொண்டே இருந்து வருபவையாகும். சில அதற்கு முன்பு இருந்தே - இருந்து வருவனவுமாகும். அப்படியிருக்க இத்தனை காலம் பொருத்து இப்பொழுது அவைகளைக் காப்பாற்ற என்ப தாக புதியசட்டம் ஒன்று ஏன் செய்யப்பட வேண்டும் என்பதைக் கவனித்தால் அதில் ஏதோ ஒரு இரகசியம் இருக்க வேண்டுமென்பது விளங்காமல் போகாது. இதுபோலவே தான் சுமார் 5, 6 வருஷங்களுக்கு முன்னால் மதத் தலைவர்களைக் காப்பாற்ற என்று ஒரு சட்டம் செய்யப் பட்டது. மதங்களும், மதத் தலைவர்களும் ஏற்பட்டு ஆயிரக்கணக்கான வருஷங்கள் ஆகி இருக்கலாம். அப்படியிருக்க 1927ம் வருஷத்தில் மேல்கண்டபடி “மதத் தலைவர்கள் மீது துவேஷம் உண்டாகும்படியோ, ஒரு மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு மனவருத்தம் உண்டாகும்படியோ செய்யப்படும் காரியங்களைத் தடுக்க” என்பதாக ஒரு சட்டம் செய்து கொண்டார்கள். இது சமஸ்தான ஆதிக்கங்களைக் காப்பது போலவே மத ஆதிக்கத்தைக் காப்பாற்றவே செய்யப்பட்டதாகும். ஆனால் அக்காலத்திலேயே இதைப்பற்றி நாம் மதக் கொள்கைகள் அறிவுக்கும், மனிதனுடைய சுயேச்சைக்கும் விரோதமாய் இருக்குமானால் அதை ஆnக்ஷபிக்கவோ, கண்டிக்கவோ எவருக்கும் உரிமை இருக்கக்கூடாது என்று சட்டம் செய்வதானது பகுத்தறிவைத் தடுத்து மூடநம்பிக்கையையும், அடிமைத்தனத்தையும் வளரச் செய்வதாகுமென்று சொல்லி பலமாக ஆnக்ஷபித்திருந்தோம். அதுசமயம் இந்தியா முழுவதிலுமே நம்மைத் தவிர வேறுயாரும் இவ்விதமான கொடுங்கோன்மை அடக்குமுறைச் சட்டத்தை ஆnக்ஷபித்ததாகத் தெரியவில்லை. இந்திய சட்டசபையில் உள்ள எல்லா அங்கத்தினர்களும் அச்சட்டத்தை ஆதரித்தார்கள் என்றாலும் நம் ஆnக்ஷபணையின் பலனாக ஏதோ சில மாறுதல்கள் மாத்திரமே செய்யப்பட்டது.Periyar and Rajajiஒருவரையொருவர் தூஷித்தால், ஒருவர்மேல் ஒருவருக்குத் துவேஷம் உண்டாகும்படி நடந்து கொண்டால் அதைத் தண்டிக்க ஏற்கனவே சட்டம் இருந்துவந்தும் திடீரென்று “மதத்தலைவர் பாதுகாப்பு” சட்டத்தை உண்டாக்கி விட்டார்கள். அந்தப்படி ஒரு சட்டம் செய்ய வேண்டு மென்று அந்தக் காலத்தில் சர்க்காருக்கு முதன்முதலில் யோசனை சொன்ன வர் ஒரு சென்னை மாகாணத்து தமிழ்நாட்டுப் பார்ப்பனரேயாகும். சுயமரி யாதை இயக்கத்தின் போக்கைப்பற்றி அநேக பார்ப்பனர்கள் அக் காலத்தில் பத்திரிக்கையில் ஓலமிட்டதைப் பார்த்தே ஒரு சட்ட நிபுணப் பார்ப்பனர் ரங்கிலாரசூல் என்ற துண்டுப்பிரசுரத்தை சாக்காக வைத்து இம் மாதிரி யோசனை சொன்னவுடன் அரசாங்கத்தார் இதே சாக்கென்று ஒரு வாரத்தில் சட்டம் கொண்டு வந்து எவ்வித எதிர்ப்புமின்றி நிறைவேற்றிக் கொண்டார்கள்.

போதாக்குறைக்கு இப்பொழுது இந்திய சுதேச சமஸ்தானங்களைப் பற்றி யாரும் அந்த சமஸ்தானங்கள் மீதோ, சமஸ்தானாதிபதிகள் மீதோ துவேஷம் உண்டாகும்படி பேசவும், எழுதவும் கூடாது என்பதாக ஒரு சட்டம்கொண்டு வந்திருக்கிறார்கள். இதை எந்த தேசீயவாதிகளும் எதிர்த்து சரியாக ஆnக்ஷபிப்பதாகத் தெரியவில்லை.

ஒரு தேசத்தை, அல்லது ஒரு சமூகத்தை ஒருவர் ஆக்ஷி புரிவது என்பது அந்த தேசத்துமக்களின் நன்மைக்காகவே ஒழிய ஆக்ஷி புரிவோரின் நன்மைக்காக அல்லவென்பது எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட நியாயமாகும். அப்படியிருக்க ஒருவருடைய நன்மைக்காக செய்யப்படும் ஆக்ஷியில் உள்ள குறைகளைத் திருத்தவோ, மாற்றவோ ஒரு தேச மக்களுக்கோ, ஒரு சமூக மக்களுக்கோ உரிமை இல்லையென்று சொல்வதானால் அந்த ஆக்ஷியை மனிதத் தன்மை கொண்ட ஆக்ஷி என்று எப்படிச் சொல்லிக் கொள்ளமுடியும்? ஒரு ஆட்சியின் குறைகளை, கொடுமைகளை உண்மையாய் உள்ளபடி வன்மையாய் எடுத்துச் சொல்லும்போது குற்றமிருக்கிறவர்கள் மீது அதாவது குறை ஏற்படும்படியான ஆட்சி செலுத்துபவர்கள் மீது யாருக்கும் அதிர்ப்தியோ, வெறுப்போ, துவேஷமோ உண்டா வது இயற்கையேயாகும். அப்படியிருக்க ஒருவர் மீது துவேஷமுண்டாகும்படி ஒருவர் பேசினால் அது குற்றமென்றால் யார் என்ன செய்தாலும், எப்படி ஆட்சியை நடத்தினாலும் பேசாமல் சகித்துக் கொண்டு அடங்கி இருக்க வேண்டு மென்பதுதான் அதன் கருத்தாகும். அனாவசியமாய் பொய்யாய் ஒருவர்மீது துவேஷமுண்டாகும்படி ஒருவர் நடந்து கொண்டால் அதற்கு ஏற்கனவே சட்டமிருந்து வருகின்றது என்பதை மேலே காட்டி இருக்கின்றோம். அது போராது என்று இப்போது தனிச்சட்டம் செய்வதானது யோக்கியமான முறையல்லாமல் அடக்குமுறை மூலம் மக்களை அடக்கி ஆள சௌகரியம் செய்து கொள்வதேயல்லாமல் இதை நியாயமென்றோ, நல்ல அரசாட்சி முறையென்றோ சிறிதும் சொல்லமுடியாது.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான சுதேச சமஸ்தானங்களின் யோக்கியதையானது அனேக விஷயங்களில் பிரிட்டிஷ் இந்திய ஆட்சியை விட அனேக மடங்கு மோசமானதென்று தைரியமாய்ச் சொல்லுவோம். தெளிவாய்ச் சொல்ல வேண்டுமானால் அனேக சுதேச சமஸ்தானங் களின் ஆட்சியானது கொள்ளைக் கூட்டத்தாரின் காட்டு ராஜாங்க ஆட்சி போல் நடந்து வருகின்றன.

குடிகளுக்காக குடிகளின் நன்மைக்காக நாம் ஆட்சி செலுத்துகின்றோம் என்கின்ற உணர்ச்சியேயில்லாமலும், உணர்ச்சி ஏற்படுவதற்கே இடமில்லாமலும், அனேக சமஸ்தானங்கள் இருந்து வருகின்றன.

இந்தியாவில் ஏறக்குறைய மூன்றிலொரு பங்கு விஸ்தீரணத்துக்கு மேலாகவே சுதேச சமஸ்தான ஆட்சிகளின் கீழ் இருந்து வருகின்றது. அதாவது இந்தியாவின் மொத்தப்பரப்பு (விஸ்தீரணம்) 17,73000 பதினேழு லட்சத்து எழுபத்து மூவாயிரம் சதுரமைலாகும். இதில் 675000 ஆறுலட்சத்து எழுபத்தி ஜயாயிரம் சதுரமைல் விஸ்தீரணமுள்ள தேசம் சுதேச சமஸ்தானங்களின் ஆட்சியின் கீழ் ஆளப்பட்டு வருகின்றது.

சுமார் 80000000 எட்டு கோடி இந்திய ஜனங்கள் அவ்வாட்சியில் இருந்து வருகின்றனர்.

மேல்கண்ட 63/4¾ லட்சம் சதுரமைல் விஸ்தீரணத்தையும், 8 கோடி ஜனத்தொகையையும் கொண்டதான பரப்புகள் 562 ராஜ்யங்களாகப் பிரிக்கப் பட்டு அவை 562 சுதேச சமஸ்தானங்களாகி 562 அரசர்களால் ஆளப்பட்டு வருகின்றன. இந்த ராஜ்யங்களில் எல்லாம் பெரியது ஹைதராபாத் ராஜ்ஜியமாகும். இதற்கு விஸ்தீரணம் 82700 சதுர மைல். இதன் ஜனத்தொகை 12500000. இதன் மொத்த ரிவுனியூ வருமானம் 65000000 ஆரரைக்கோடி ரூபாய். இதில் ராஜாவாகிய ஹைதராபாத் நவாப்பு தன் சொந்த செலவிற்கு என்று எடுத்துக் கொள்ளும் தொகை 5000000 அரைக்கோடி ரூபாயாகும். இதுதவிர அந்த நவாப்புக்கு 400 கோடி ரூபாயுள்ள சொந்த சொத்திலிருந்து வரும் வரும்படி வருஷம் ஒன்றுக்கு ஒருகோடி ரூபாயாகும். ஆகவே வருஷம் ஒன்றுக்கு ஒன்றரைக்கோடி ரூபாயை வரும்படியாக உள்ள ஒரு பெரிய முதலாளியால் (பூஷ்வாவால்) ஹைதராபாத் தேசம் ஆளப்பட்டு வருவதாகும்.

மற்ற சமஸ்தானங்களில் சுமார் 40 சமஸ்தானங்கள்தான் வருஷம் 1-க்கு மொத்த ரிவினியூ வருமானம் 10 லட்சரூபாய்க்கு மேற்பட்டவைகளாகும். மற்றவைகள் எல்லாம் அதைவிட குறைந்த வரும்படியுடையவைகளேயாகும். சுமார் 400 சமஸ்தானங்கள் வருஷம் ஒன்றுக்கு ரிவினியூ வருமானம் ஒரு லட்ச ரூபாயைவிட குறைந்த வருமானமுடையவையாகும். இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால் இவற்றுள் 15 சமஸ் தானங்கள் ஒரு மைல் விஸ்தீரணத்துக்குக்கூட குறைந்த பரப்புள்ளவைகளாகும். மூன்று சமஸ்தானங்களில் ஒவ்வொன்றிலும் 100 பிரஜைகளைவிடக் குறைவாகயிருக்கின்றார்கள். ஐந்து சமஸ்தானங்களுக்கு ஒவ்வொன்றின் வருஷவரும்படி ரூபாய் 100 வீதம்கூட இல்லாமல் இருக்கிறது.

உதாரணமாக அவாச்சார் (Avachar) என்கின்ற சமஸ்தானம் 1-மைல் விஸ்தீரணம் 32 பிரஜைகளும் 72 ரூபாய் வருஷ ரிவினியூ வருமானமுடைய தேசமாகும்.

இப்படிப்பட்ட ராஜாக்கள் தங்கள் தேச ரிவினியூ வரும்படியில் 12ல் ஒருபாகம் முதல் சரிபகுதி வரையில் தங்கள் சொந்த செலவுகளுக்கு எடுத்துக் கொண்டு மீதியையும் தங்கள் இஷ்டத்திற்கு ஏற்றபடியே பிரஜைகளுக்கென்று செலவழித்துக் கொண்டு இருந்து வருகிறார்கள்.

ஒவ்வொரு சுதேச சமஸ்தான ராஜாக்களின் யோக்கியதைகளை அதாவது இந்தூர், ஆள்வார், மிஸ்டர் “A” முதலிய ராஜாக்களின் யோக்கியதையை நினைத்துப் பார்த்தோமேயானால் அவர்களது ஆட்சியின் கீழ் மக்கள் குடிகளாய் வாழ்வதைவிட மானம் கெட்ட வாழ்க்கை வேறு ஒன்றும் இல்லை என்றே தோன்றும். உலகில் உள்ள கூடா ஒழுக்கங்கள் எல்லாம் ஓருருவாய்த் திரண்டு வந்தது போன்ற அரசர்கள் எத்தனையோ பேர்கள் நமது சுதேச சமஸ்தானங்களில் இருந்து வருகிறார்கள் என்பது யாரும் அறியாததா?

இவர்களில் சில அரசர்கள் தங்கள் பெண்ஜாதிகளுக்கு செலவிடும் அளவில் மூன்றில் நான்கில் ஒருபாகம் தொகைகூட தனது பிரஜைகளின் கல்விக்குச் செலவு செய்யாதவர்களும் தங்களது மோட்டார்கார்களுக்காகச் செலவு செய்யும் தொகையில் பகுதி அல்லது 3-ல் ஒருபாகம்கூட தனது தேசப்பிரஜைகளின் சுகாதாரம், வைத்தியம் ஆகியவைகளுக்குச் செலவு செய்யாதவர்களுமாய் இருக்கிறார்கள் என்பதற்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. சுதேச சமஸ்தானப் பிரஜைகளுக்கு அவர்கள் தங்கள் தேச வரும்படியில் இத்தனையில் ஒருபாகம் தான் தன் சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்ளலாம். இத்தனை பெண்டாட்டிகள் கட்டிக் கொள்ளலாம் என்பதான நிர்ணயமே இல்லாதவர்களாய் இருக்கிறார்கள்.

“இந்தியா சக்கிரவர்த்தியின் சர்வாதிகாரத்துக்கு உள்பட்ட சமஸ் தானங்கள்! என்றுவெகு பெருமையாய் பிரிட்டிஷ் அரசாங்கத்தார் சொல்லிக் கொள்ளுகின்றார்களே ஒழிய அந்த சர்வாதிகாரத் தன்மையை ஒரு சிறிதாவது இந்திய சமஸ்தான அரசர்களின் ஒழுக்கத்துக்கோ, அவர்களது வாழ்கை நிலையின் தன்மைக்கோ குடிகளின் nக்ஷமத்தைக் கவனிக்க வேண்டிய அவசியத்துக்கோ செலவழித்ததாகச் சொல்லுவதற்கு இடமே காண முடியாமல் இருந்து வருகின்றது. இந்திய சமஸ்தான அரசர்களில் பெரும்பான்மையானவர்களுடைய நடவடிக்கையும், யோக்கியதையும் அரசாக்ஷிமுறையும் பார்த்த ஒருவன் எந்த விதத்தில் அவர்கள் நிலையை வெளியில் எடுத்துச் சொல்லாமல் இருக்கவோ, அவர்களை ஒழிக்க முயற்சி செய்யாமலிருக்கவோ முடியுமென்பது நமக்கு விளங்கவில்லை.

562 பேர் களில் யாரோ ஒன்று இரண்டு சமஸ்தான அரசர்கள் ஒருசமயம் “யோக்கியர் களாக” இருந்தாலும் இருக்கலாம் அதுவும் “கூரைவீட்டின் மீது இருந்து கொண்டு கொள்ளிக் கட்டையை எடுத்து விளையாடிக் கொண்டிருக்கிறானே அவனே எல்லோரிலும் யோக்கியன்” என்று சொல்லுவது போன்ற யோக்கியமாய் இருந்தாலும் இருக்கலாம். இதற்காக அரசர் பெருமானின் சர்வதிகாரத்துக்கு உள்பட்ட 562 “சமஸ்தான நிர்வாகத்தைப் பற்றி துவேஷங் கொள்ளும்படி யாரும் செய்யக் கூடாது” என்று சட்டம் செய்வது என்றால் லார்ட் வில்லிங்டன் துரை மகனாரின் அடக்குமுறைச் சட்டம் என்பவைகளிலெல்லாம் இதுவே தலைசிறந்த உண்மையான அடக்குமுறைச் சட்டம் என்றே சொல்ல வேண்டி இருக்கிறது.

பிரிட்டிஷ் இந்தியாவின் வரி ஆள் ஒன்றுக்கு 6 ரூபாய்வீதம் ஆகின்றது என்றால் அனேக சுதேச சமஸ்தானங்களின் வரி ஆள் ஒன்றுக்கு 20ரூ. வீதம் வசூலாக்கப்படுகின்றது. 1-ஆள் ஒன்றுக்கு 6-ரூபாய் வீதம் வரி வசூலிக்கும் பிரிட்டிஷ் இந்தியாவில் படிப்புக்காக நபர் ஒன்றுக்கு 8 அணாவீதம் செலவிழிக்கப்படுகின்றது என்றால் ஆள் ஒன்றுக்கு 20 ரூ. வீதம் வரி வசூலிக்கப்படும். சில சுதேச சமஸ்தானங்கள் படிப்பு விஷயத்தில் ஆள் ஒன்றுக்கு 6-அணா வீதமும், 3-அணா வீதமும் தான் செலவு செய்கின்றனர். இவர்கள் பெயரை வேண்டுமானாலும் பொதுநலத்தை உத்தேசித்து வெளியிட நமக்கு ஆnக்ஷபனை யில்லை. ஆதலால் முறையே நவ்நகர், கட்ச்சு முதலாகிய சமஸ்தானங்களாகும். இதுபோல் இன்னும் பல சமஸ்தானங்கள் இருந்து வருகின்றன.

தவிர இந்திய சுதேச சமஸ்தானத்தில் உள்ள எல்லா ராஜாக்களுமே தங்கள் சொந்தச் செலவுக்கென்று எடுத்துக் கொள்ளும் தொகையானது ஐரோப்பிய அரசர்களும், சக்கிரவர்த்திகளும் எடுத்துக் கொள்ளும் விகிதாச்சாரத்தை விட 60 பங்கு 70, 100 பங்கு 200, 1000 பங்கு அதிகமாக எடுத்துக் கொள்ளுகிறார்கள். உதாரணமாக ஐரோப்பா கண்டத்தில் டென்மார்க் தேசத்து அரசருக்கு இருபத்தி மூன்றரைக்கோடி ரூபாய் வரி வருஷ வருமானம். நமதுபிக்கானியர் சமஸ்தான அரசருக்கு வருஷம் 60 லக்ஷம் ரூபாய் வரி வருமானம் ஆனால் டென்மார்க்கு தேச அரசர் வருஷம் 7 லக்ஷம் ரூபாயே தனது சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்ளுகிறார். பிக்கானியர் தேசத்து அரசர் வருஷம் பதிமூன்றரை லக்ஷரூபாய் தனது சொந்த செலவுக்கு எடுத்துக் கொள்ளுகிறார். இதை விகிதாச்சாரம் பார்த்தால் டென்மார்க்கு அரசர் தனது தேச வருமானத்தில் 350ல் ஒரு பாகம் எடுத்துக் கொள்ளுகிறார். பிக்கானியர் சமஸ்தான அரசர் தனது தேச வரும்படியில் 4-ல் ஒருபங்கு தனது சொந்தச் செலவுக்கு எடுத்துக் கொள்ளுகிறாரென்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பொதுவாகப் பார்க்கப் போனால் ஐரோப்பிய அரசர்கள் தங்கள் வரும்படிக்கும், தாங்கள், தங்கள் சொந்தச் செலவுக்கும் எடுத்துக் கொள்ளும் தொகைக்கும், இந்திய சமஸ்தான அரசர்கள் வரும்படிக்கும் அவர்கள் தங்கள் சொந்த செலவுகளுக்கு எடுத்துக் கொள்ளும் தொகைக்கும் வித்தியாசத்தையும், மற்ற விஷயங்களையும் கணக்குப் பார்த்தால் இந்த சமஸ்தானங் =களையும், சமஸ்தானாதிபதியும் பாதுகாக்கச் சட்டம் வேண்டுமா அல்லது மாற்றவோ, கவிழ்க்கவோ சட்டம் வேண்டுமா என்பது நன்றாய் விளங்கும்.

அதற்காகவே சில புள்ளிவிபரங்கள் கீழே தருகிறோம். இது சர்க்கார் கணக்கேயாகும். அதாவது:-

தனது தேச மொத்த வரும்படியில் இங்கிலாந்து தேச ஜார்ஜ் அரசர் 1600 ல் ஒரு பங்கும், பெல்ஜியம் அரசர் 1000 ல் ஒரு பங்கும், நார்வே அரசர் 700ல் ஒரு பங்கும், நாதர்லேண்ட் அரசர் 600ல் ஒரு பங்கும், இட்டாலி அரசர் 500 ல் ஒரு பங்கும், ஜப்பான் சக்கிரவர்த்தி 400 ஒரு பங்கும் தான் தங்கள் சொந்த செலவுக்கு பெறுகிறார்கள்.

ஆனால் இந்திய சமஸ்தானாதிபதிகளோ என்றால், தங்களது மொத்த ரெவனியூ வரும்படியில் திருவாங்கூர் மஹாராஜா 17-ல் ஒரு பாகமும், மைசூர் மகாராஜா 14ல் ஒரு பாகமும், ஹைதராபாத் நவாப் 13ல் ஒரு பாகமும் பரோடா மஹாராஜா 12ல் ஒரு பாகமும், காஷ்மீர் மஹராஜா 5-ல் ஒரு பாகமும், பிக்கானியர் மஹாராஜா 4ல் ஒரு பாகமும் இன்னும் சிலர் 3ல் ஒரு பாகமும் சிலர் 2ல் ஒரு பாகமும் தங்கள் சொந்த செலவுக்கு எடுத்துக் கொண்டு அக்கிரமமான போகபோக்கியங்களை அனுபவிக்கிறார்கள். ஆதலால் இந்திய சமஸ்தானாதிபதிகளின் ஆட்சிகளென்பவை ஒரு பக்கா முதலாளித் தன்மை ஆட்சிகளென்பதில் யாருக்குமே ஆட்சேபனை இருக்காது. இவர்களுக்கு ஏழை மக்கள் சரீரத்தால் கஷ்டப்பட்டு வாழும் தொழிலாளி மக்கள் ஆகியவர்களின் வாழ்க்கையைப் பற்றியோ அவர்களது மனிதத் தன்மையைப் பற்றியோ ஒரு சிறிது ஞாபகமாவது, கவலையாவது இருக்கவே இருக்காது. இருக்க இடமுல்லை.

இந்த ராஜாக்கள் என்பவர்கள் ஒருவித சுகபோகங்களை அனுபவிக்கவே தோன்றியவர்கள் என்பது அவர்களது பிறப்பும் பதவியும் ஏதோ முன்ஜென்ம கர்மவசத்தால் புண்ணியத்தால் பூஜாபலத்தால் கிடைத்தது என்பதும் தவிர மற்றபடி அவர்களுக்கு ஆட்சியிலிருக்கும் பொறுப்பு என்ன தங்கள் நடவடிக்கைகள் எப்படியிருக்க வேண்டும் என்பனவாகியவைகள் தெரியவே தெரியாது. இந்த லக்ஷணத்தில் இந்த சுதேச சமஸ்தானதிபதிகளான ராஜாக்கள் தெய்வ அம்சம் பொருந்தியவர்களென்றும், விஷ்ணு அம்சமே உடகில் அரசனாய் அவதரிக்கின்றது என்றும் சொல்லப்படுவதோடு ஒவ்வொரு ராஜாங்கமும் ஒவ்வொரு கடவுளுக்குச் சொந்தமான தென்றும், அக்கடவுள்களின் பிரதிநிதிகளாகவோ, தாசர்களாகவோ இருந்து இந்த ராஜ்யங்கள் அரசாளப்படுகின்றன என்றும் சொல்லிக் கொள்ளவும் படுகின்றன.

இந்தப்படியெல்லாம் ஊரார் உழைப்பில் வயிறு வளர்க்கும் சோம் பேரிக்கூட்ட பார்ப்பனர்கள் கற்பித்து பிறருக்கும் அந்தப்படி பிரசாரமும் செய்து எப்படிப்பட்ட கொடுங்கோன்மை ஆட்சியிலும் தாங்கள் மாத்திரம் நோகாமல் சரீரத்தால் எவ்விதபாடும் படாமல் சோம்பேரி வாழ்க்கையை நடத்திக் கொண்டு அவ்வயோக்கிய அரசர்களுக்கு அடுத்தபடியில் இருந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

நமது தேச பக்தர்களுக்கோ, தேசீய வாதிகளுக்கோ, தேசீய தலைவர்களுக்கோ இவைகளையெல்லாம் பற்றி ஒரு சிறிதுகூட கவைலையே கிடையாது. அவர்களுடைய கவலை எல்லாம் “அன்னியன் ஏன் நமது தேசத்தை ஆளுகிறான், வைசிராய்க்கு ஏன் இவ்வளவு சம்பளம், இவ்வளவு அதிகாரமேன்” என்கின்ற பல்லவியும் பேச்சும்தான் தெரியுமேயொழிய வேறு ஒன்றையும் பற்றிய விபரமும் தெரியாது, கவலையே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். தேசிய பத்திரிகைகளோ பெரிதும் இம்மாதிரி ராஜாக்களிடம் பணம் வாங்கிக் கொண்டு அவர்களையும் அவர்களது நிர்வாகத்தையும் புகழ்ந்து எழுதுவதும், பணம் கொடுக்காதவனை வைவதும் தவிர வேறொரு கவலையுமில்லை.

மேற்கண்ட யோக்கியதை கொண்ட ராஜாக்கள் தங்கள் தங்கள் சமஸ்தானங்களைப் பாழாக்கி அந்நாட்டு மக்களை மிருகங்களாகப் பாவித்து அக்கிரம, அனியாய ஆட்சி புரிவது உலகம் அறிந்திருந்தும் போறாக் குறைக்கு இந்த “தர்ம ராஜாக்களை” பிரிட்டிஷ் இந்திய ஆட்சியிலும் கொண்டு வந்து கலக்கி அதுவும் எப்படி என்றால் அவர்களைப் பற்றியும் அவர்கள் தேசத்தைப் பற்றியும், அவர்கள் நிர்வாகத்தைப் பற்றியும் பேச நமக்கு எவ்வித அதிகாரமில்லாமலும், நம்ம தேச ஆட்சியின் தலையில் அவர்கள் வந்து உட்கார்ந்து கொண்டு ஆதிக்கம் செலுத்தும்படியாகவும் கொள்கை கொண்ட சமஷ்ட்டி (பிடரல்) ஆட்சியைக் காங்கிரசும், அதன் ஏக தலைவரான “மகாத்மா”க்களும் ஒப்புக்கொண்டு அதைப்பற்றி ஆnக்ஷபிப்பதில்லை என்கின்ற நிபந்தனையின் மீது வட்டமேஜை மகாநாட்டில் போய் கலந்து கொண்டார்கள் என்றால் தேசீயத்தின் அயோக்கியத்தனத்துக்கும், சூட்சிக்கும் வேறு என்ன அத்தாட்சி வேண்டும் என்பது நமக்கு தோன்றவில்லை.

பழய பழக்க வழக்கங்களையும், மதக்கொள்கைகளையும், வருணாச்சிரமத்தையும் காப்பாற்றும் விஷயத்தில் வெள்ளைக்கார அரசர்கள் அசார் சமாய் இருந்து விடுவார்கள் என்கின்ற கருத்துக் கொண்டே காங்கிரசுக்காரர்கள் அம்மகாநாட்டுக்குச் சென்றார்கள் என்றும், நமது நாட்டுப் பார்ப் பனர்கள் இந்திய ஆட்சியில் கருப்பு சமஸ்தானாதிபதிகளையும் கொண்டு வந்து கலக்கினதுமான காரியங்கள் செய்தார்கள் என்றும் இந்திய ஏழை மக்கள், தொழிலாளி மக்கள் ஆகியவர்களின் கிளர்ச்சிகள் வலுத்து விடுமேயானால் அதை அடக்க அதிக சிரமப்பட்டு நாம் ஏன் கெட்ட பேரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கருதி கருப்பு சமஸ்தானாதிபதிகள் மூலமே அடக்கச் செய்யலாம் என்கின்ற சூழ்ச்சி மீதே பிரிட்டிஷாரும் இந்த தந்திரம் செய்திருக்கிறார்கள் என்றும்தான் நாம் நினைக்க வேண்டியிருக்கிறது.

எப்படியிருந்த போதிலும் பிரிட்டிஷ் முதலாளித்தன்மை ஆட்சியும், அவர் களது ஏகாதிபத்திய ஆணவமும் ஒழிவதற்கு முன் இந்த இந்திய சமஸ்தான முதலாளித்தன்மை ஆட்சியும், அவர்களது பொருப்பற்ற கொடுங்கோன்மை கூடா ஒழுக்க ஆட்சியும் அழிந்து மறைந்து ஒழிய வேண்டியது அவசரமும் அவசியமுமான காரியமாகும் என்பதே நமதபிப்பிராயம். அப்படி இருக்க இப்போது அவர்களையும் சமஸ்தானங்களையும் காப்பாற்ற புதிதாக ஒரு சட்டம் செய்வது மிக மிகக் கொடுமையான காரியம் என்றே சொல்லுவதுடன் இச்சட்டம் அச்சமஸ்தானாதிபதிகளை இன்னமும் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்று சொல்லி லைசென்சு அனுமதிச்சீட்டு கொடுத்தது போலவும் ஆகிறது என்பதே நமதபிப்பிராயம்.

(குடி அரசு - தலையங்கம் - 03.09.1933)

Pin It