சென்னையின் வரலாறு என்பது மீனவ சிற்றூர்களிலிருந்து தொடங்குகிறது. சென்னையின் மண்ணின் குடிகள் மீனவர்களே. இந்நிலையில் சென்னைக் கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள் சாலையில் மீனவ மக்கள் பிடித்து வந்த மீன்களையும், வலைகளையும் பல ஆண்டுகளாக உலர்த்தியும், மீன்களை விற்றும் வருகின்றனர். இந்த சாலை என்பது முழுக்க முழுக்க மீனவ மக்களின் பயன்பட்டில் இருந்து வந்தது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் மாநகராட்சி நிர்வாகம் மீனவர்களிடையே பேசி சாந்தோம் சாலையின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்காகக் காலையும், மாலையும் இரண்டு மணி நேரம் மட்டும் பொது போக்குவரத்துக்கு அனுமதி பெற்றுள்ளனர்.chennai fishermenஆனால் தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் அரசும் கூட்டுச்சேர்ந்து எவ்வித முன்னறிவிப்பின்றி 12 ஏப்ரல் 2023 அன்று அக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் மீனவ மக்களின் வாழ்வாதாராமாக இருந்த கடைகளைச் சூறையாடியிருக்கிறது. உழைக்கும் மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை அழித்துவிட்டு. ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் சிங்கார சென்னை என்ற இலக்கை அரசு எப்படி எட்ட முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர் உயர்நீதிமன்ற நீதிபதிகள்? அவர்களுக்கு இங்குள்ள கட்டிடங்களும் கடற்கரையும் அழகாய்த் தெரிய வேண்டுமே தவிர மக்களின் வாழ்க்கை எக்கேடு கெட்டாலும் கவலை இல்லையா?.

சிங்காரச் சென்னை காப்பதற்குத் தாமாக முன்வந்து பொதுநல வழக்கு தொடுத்துக் கடைகளை அகற்ற ஆணை பிறபித்த நீதிபதிகள் கூடங்குளம் அணுமின் நிலைய அணுக்கிழிவுகளைக் கடலில் கொட்டப்படுவதைத் தடுக்க தாமாக முன்வந்து பொதுநல வழக்குத் தொடுக்குமா?

சிங்களக் கடற்படையும் இந்தியக் கடற்படையும்தான் தமிழ்நாட்டு மீனவனைச் சுட்டுத் தள்ளுகிறது. தமிழக அரசும் சிங்காரச் சென்னை என்கிற பெயரில் மண்ணின் குடிகளை ஆக்கிரமிப்பாளர்களாகக் கருதுவது கண்டனத்துக்குரியது.

தமிழக அரசு உயர்நீதிமன்ற ஆணை என்று காரணம் சொல்லாமல் மீனவ மக்கள் பக்கம் நிற்க வேண்டும். உடனே சென்னை கலங்கரை விளக்கம் முதல் பட்டினப்பாக்கம் வரை உள் சாலையை மீன்பிடி மண்டலமாக அறிவிக்க வேண்டும். உள் சாலையில் பொது போக்குவரத்தைத் தடை செய்து மீனவ மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

- பரத்

Pin It