உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அவர்கள் பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவை ஒட்டி தமிழக சிறையில் உள்ள மரண தண்டனை சிறைவாசி ஏ.ஜி.பேரறிவாளனுக்கு மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி தமிழக முதல்வர் மாண்புமிகு கருணாநிதி அவர்களுக்கு 19.8.08 தேதி எழுதிய கடிதத்தின் தமிழாக்கம்.

வணக்கத்திற்குரிய திரு.கருணாநிதி அவர்களுக்கு, நான் உங்களில் சிறப்பான நிர்வாகத் திறமை மற்றும் மிடுக்கான செயல்பாடுகளின்மீது மிகப் பெரிய மதிப்பும் மரியாதையையும் கொண்டுள்ளேன். நான் தங்களுக்கு அரிதாகவே கடிதங்கள் எழுதியுள்ளேன்.

ஆனால், தற்போது ஒரு உயிரைக் காப்பாற்றக் கோரி இக்கடிதம். மகாத்மா காந்தியில் தொடங்கி மனிதாபிமானமுள்ள எல்லா மனிதர்களும் மரண தண்டனையை இரத்து செய்யக் கோரி வந்துள்ளனர். ஐக்கிய நாடுகள் சபை இந்த தண்டனைக்கு எதிராக இருந்து வருகிறது. இந்திய பண்பாடும் மரண தண்டனைக்கு எதிரானதே. நீதிமன்றங்கள் மரண தண்டனை வழங்கியபோதும் அதனை மாற்றுகின்ற அதிகாரத்தையும் நம் அரசியல் அமைப்பு கொண்டுள்ளது.

நீதிமன்றம் விதித்த மரணதண்டனையை மாநில முதலமைச்சர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சரின் பரிந்துரைகளால் மாநில ஆளுநரும், நாட்டின் குடியரசுத் தலைவரும் மாற்ற முடியும். உச்சநீதிமன்றத்தில் மரணதண்டனை உறுதி செய்யப்பட்ட பலர் மாநில ஆட்சியாளர்களின் கைகளிலுள்ள மன்னிக்கும் அரசியல் அமைப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவிக்கப்பட்டுள்ளதை நான் நன்கு அறிவேன்.

இந்த மன்னிக்கும் அதிகாரம் மாநில ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவரின் கைகளில் இருக்கின்ற போதும் அது மாநில முதல்வர் மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் மூலம் நிறைவேற்றப்படக் கூடியது. தங்கள் மாநிலத்தின் மரணதண்டனை கைதிகளாக உள்ள ஏ.ஜி.பேரறிவாளன் என்பவருக்கு அரசியல் அமைப்பு வழங்கிய அதிகாரத்தை பயன்படுத்தி தாங்கள் அவரை மரணதண்டனையில் இருந்து காப்பாற்ற வேண்டும்.

தங்களின் கருணையைக் காட்ட நல்ல பல காரணங்கள் இந்த வழக்கில் உள்ளது. திரு.ஏ.ஜி.பேரறிவாளன் கடந்த 17 ஆண்டுகளாக தனிமைச் சிறையில் வாடி வருகிறார். நான் முன்பு ஒருமுறை குறிப்பிட்டுள்ளது போன்று, தனிமைச் சிறைவாசம் என்பது கொடுமையான சித்திரவதையாகும்.

கடந்த 17 ஆண்டுகளாக இந்த நிலையில் அதுவும் மரண தண்டனை எதிர்நோக்கிய ஒருவரின் துயரம் மிகக் கொடியது. உச்சநீதிமன்றம் இவ்விதமான நிலைக்கு உட்பட்டவர்களை மரண தண்டனையில் இருந்து விடுவித்துள்ளது.

ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில், ஒரு உணர்வு மிக்க நீதிமானாக, உச்சநீதிமன்றத்தில் பணியாற்றிய அனுபவமிக்க நீதிபதியாகிய நான், 17 ஆண்டுகளாக தனிமை சிறையில் வாடும் திரு.ஏ.ஜி. பேரறிவாளனின் மரண தண்டனையை மாற்ற வேண்டுகோள் வைப்பது எனது கடமை எனக் கருதுகிறேன். அவர் வெகுநாட்களாக சிறைப்பட் டுள்ளார். அவரின் வயதான பெற்றோர்கள் வேதனை யில் வாடி வருகிறார்கள்.

உலகம் மாறுகிறது. ஆனால் அவருக்கோ நான்கு சுவர்களும், இரும்புக் கம்பி களும் மட்டுமே பார்க்கவும், உணரவும் மிச்ச முள்ளது. இதுவே கனமான, கண்ணீரை வரவழைக்கும் சோகமாகும்.

தற்போது நல்ல தருணம் வந்துள்ளது. அது சிறந்த மனிதாபிமானவாதியான திரு.அண்ணாதுரையின் நூற்றாண்டு. அவர் ஒரு சிறப்பான தலைவர். அரிதான முதலமைச்சர். அச்சிறந்த மனிதர் தன் நிறை வாழ்வினை வாழாது, நோயினால் இயற்கை எய்தியவர்.

அவரின் நூற்றாண்டின் பிறந்த நாளில் மாண்புமிகு கருணாநிதி அவர்களே! மனிதாபிமான மிக்க முதல்வரான தாங்கள் தங்களின் வழியே மாநில ஆளுநருக்கு வேண்டுகோள் வைத்து திரு.ஏ.ஜி.பேரறி வாளனை விடுவிக்க வேண்டுகிறேன். தாங்கள் கருணை மிக்கவர். தங்கள் மாநில ஆளுநர் மாண்புமிகு சுர்ஜித் சிங் பர்னாலா மென்மையான மனிதர். எனக்கு தற்போது தொடர்பு விடுபட்டுப் போயிருந்தாலும் எனது பழைய நண்பர்.

மனிதத் தன்மை அடிப்படையில் நான் தங்களுக்கும், மாநில ஆளுநர் பர்னாலாவுக்கும் வைக்கும் வேண்டுகோளானது, ஒரு உயிரைக் காப்பாற்றுங்கள் என்பதுதான். அந்த உயிர் பல ஆண்டுகளாக தனிமைச் சிறையில் சொல்ல முடியாத பல துயரை அனுபவித்து வருகிறது. அந்த மனிதர் சுதந்திரமான காற்றை தனது தாய் மண்ணில் சுவாசிக்க தகுதியுள்ளவர்.

அவர் சிறையாளி மற்றும் என்னை சந்தித்த அவரின் தாயாரின் கண்ணீரின் கனத்த பாதிப்புகளுடன் நான் தங்களுக்கு மேற்கண்ட வேண்டுகோளை வைக்கின்றேன். மனிதாபிமான உணர்வும், கருணையைக் காட் டும் செயலும் “கருணா” என்ற சொல்லுக்கு உரியது.

நன்மதிப்புகளுடன்...
தங்கள் நேர்மையுள்ள
வி.ஆர்.கிருஷ்ணய்யர்
(முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி)

Pin It