அண்மையில் நீதிமன்றங்களில் இருக்கும் நீதி தேவதையின் கற்பனையான உருவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கண்கள் கட்டப்பட்ட நிலையில், தராசை ஒரு கையிலும், வாளை மறு கையிலும் பிடித்திருக்கும் நீதி தேவதைதான் இதுவரையில் நாம் பார்த்த வடிவம்!

கண்களின் கட்டு அவிழ்க்கப்பட்டு, வாள் பிடித்திருந்த கையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏந்தியபடி, இன்றைய புதிய நீதி தேவதை காட்சியளிக்கிறார்.srirangam periyar statueகாட்சி மாறி இருக்கிறது! ஆனாலும் அண்மையில் வெளிவந்துள்ள சில தீர்ப்புகள் நம்மை அச்சுறுத்துகின்றன. சென்னை உயர்நீதிமன்றமும், பெங்களூர் உயர்நீதிமன்றமும் மதம் தொடர்பான இரண்டு வழக்குகளில் தீர்ப்பு வழங்கி உள்ளன.

 ஸ்ரீரங்கம் கோயில் வாசலில் உள்ள தந்தை பெரியார் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என்று பேசியதற்காக திரைப்படத் துறையைச் சார்ந்த கனல்கன்னன் கைது செய்யப்பட்டார். ஆனால் அந்த வழக்கை ரத்து செய்திருக்கும் உயர்நீதிமன்றம், அந்தச் சிலையின் பீடத்தில் உள்ள, “கடவுளை நம்புகிறவன் முட்டாள், கடவுளை வழிபடுபவன் காட்டுமிராண்டி” என்னும் வரிகளைத்தான் அவர் நீக்கச் சொல்லி இருக்கிறார். அதற்காக அவர் மீது ஒரு வழக்கு தொடுக்க முடியாது என்று கூறி இருக்கிறது!

உண்மை என்னவென்றால் அந்தச் சிலையின் பீடத்தில் அப்படி வாசகங்கள் எழுதப்படவே இல்லை என்பதுதான்! இல்லாத வாசகங்களை எப்படி நீக்குவது என்பதை உயர்நீதிமன்றம்தான் சொல்ல வேண்டும்.

பெங்களூரில் கடந்த செப்டம்பர் 23ஆம் நாள் இரவு இருவர் மசூதிக்குள் நுழைந்து ஜெய்ஸ்ரீராம் என்று உரத்துக் குரல் எழுப்பி உள்ளார்கள். அதற்காக அவர்களைக் காவல்துறை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தி இருக்கிறது! ஆனால் நீதிமன்றமோ அதில் ஒன்றும் பிழை இல்லை. அப்படி ஜெய் ஸ்ரீ ராம் என்று மசூதிக்குள் முழக்கமிட்டால் என்ன தவறு என்று கேட்டு அவர்களை விடுதலை செய்திருக்கிறது.

நீதி தேவதையின் கண்கள் இப்போதும் கட்டப்பட்டுத்தான் இருக்கின்றனவோ என்று எண்ணத் தோன்றுகிறது.

- சுப.வீரபாண்டியன்