18-தாய்த்தமிழ்ப் பள்ளிகளின் கூட்டமைப்பு தமிழ்வழிப் பள்ளிகளை இணைத்துக் கொண்டு செயல்பட்டு வருகின்றது. இந்த 18 பள்ளிகளும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தற்சார்புப் பள்ளிகளாகக் குறைந்த கட்டணத்திலும் மக்கள் கொடுக்கும் சிறு உதவிகளாலும் நடைபெற்று வருகின்றன.

அரசு, இந்தப் பள்ளிகளுக்கு அரசாணை எண் 41 ஐ இந்த ஆண்டு வெளியிட்டுள்ளது. அதில், ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில் தமிழ்வழிக் கல்வி கற்று வரும் அரசு உதவி பெறாத 47661 குழந்தைகளுக்கும் 2023 ஆம் கல்வியாண்டில் சுவடிகள் புத்தகம் உள்ளிட்ட 11 வகையான நல உதவிகள் வழங்குவதற்கு 16. 02. 2023 அன்று ஆணை பிறப்பித்துள்ளது. இந்த 47 ஆயிரத்து 661 குழந்தைகளில் நமது அறக்கட்டளையில் உள்ள 18 பள்ளிகளில் படித்து வரும் 1108 குழந்தைகளுக்கும் 11 வகையான பொருள்கள் கிடைப்பதில் மகிழ்ச்சி நன்றி.

பள்ளிக் கல்வித் துறை இந்த அளவில் தமிழ் வழிக் கல்விக்கு ஆணை வழங்கியிருக்கிறது.

தாய்த் தமிழ்க் கல்விப் பணி அறக்கட்டளை கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பெருஞ்சுமையுடன் பள்ளிகளை நடத்தி வருவது எளிதான செயல் இல்லை. தாய்த் தமிழ்ப் பள்ளிகளை, கட்டணம் பெற்றுக் கொண்டு சுமையற்று நடத்தி வரும் மற்ற பள்ளிகளோடு அரசு இணைத்துப் பார்ப்பது கூடாது. அந்தப் பள்ளிகளுக்கும் தாய்த் தமிழ் பள்ளிகளுக்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்குமான வேறுபாடு.

இந்தக் கல்வியாண்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு மட்டும் அரசு ஒதுக்கி இருக்கும் தொகை 40 ஆயிரத்து 299 கோடியாகும். இந்தக் கோடிகள் அனைத்தும் தமிழ்வழிக் கல்வி வளர்ச்சிக்கானவையன்று. பெரும்பாலும் அரசுப் பள்ளிகளிலும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் தமிழ்வழிக் கல்வி என்பது மிக மிகக் குறைந்து வருகிறது.

அரசு, தனியார் பள்ளிகளுக்கு என்று இயக்ககம் நடத்தி வருகிறது. அதில் தமிழ்வழிக் கல்விக்கு என்று தனியே இயக்ககம் இல்லை. எமது பள்ளிச் சிக்கலைத் தீர்த்துக் கொள்ள பள்ளிக் கல்வித் துறையில் நுழைந்தால் எல்லாப் பள்ளிகளுக்குமானச் சட்டத் திட்டங்களையும் எமது தாய்த் தமிழ்க் கல்விப் பணி பள்ளிகளுக்கும் பொருத்திப் பார்க்கப்படுகிறது.

எமது சிக்கலைத் தீர்த்துக் கொள்ள பள்ளிக்கல்வித்துறை தனியாகத் தமிழ்வழிக் கல்வி இயக்ககத்தை உருவாக்க வேண்டும். தாய்த்தமிழ் பள்ளிகளில் கல்வி தொண்டாக நடைபெற்று வருகிறது. இங்கே பணத்தை மூட்டையாகக் கட்டும் பணி நடைபெறுவது இல்லை. எல்லாம் தெரிந்தே தாய்த் தமிழ்ப் பள்ளிகளைக் கையேந்தும் நிலையில் வைத்திருக்க அரசு எண்ணுகிறதோ என்றும் புலப்படவில்லை. தமிழ் வளர்ச்சித் துறையில் தாய்த்தமிழ்ப் பள்ளிகளுக்கான தேவை குறித்துக் கருத்துரு ஒன்றை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொடுத்துள்ளோம். அந்தக் கருத்துருவிற்கு இந்நாள் வரை எந்த விடையும் நாங்கள் பெறவில்லை.

ஆனால், தமிழ் வளர்ச்சித் துறையின் இயக்குநரகத்திடம் கேட்ட பொழுது "தலைமைச் செயலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை செயலர் அலுவலகத்தில் உங்கள் கோப்பு உள்ளாதாகத் தெரிகிறது. நாங்கள் தலைமைச் செயலகம் சென்று அணுகிய போது "அப்படி ஒரு கோப்பு இதுவரையிலும் எங்கள் அலுவலகம் வரவில்லை " என்பதாகவே அறிந்தோம்.

சரி போகட்டும் என்று தொடர்புடைய அமைச்சர் அவர்களை நான்கு முறை முயன்று ஐந்தாம் முறை கண்டோம். இதுகுறித்துக் கேட்டோம் அவர் நீங்கள் பள்ளிக் கல்வித் துறையில் முறையிட வேண்டும்.. நாங்கள் என்ன செய்ய முடியும் என்று முதலில் கூறிய பிறகு நாங்கள் படும் துன்பங்களை எடுத்துச் சொன்னபோது "எல்லாம் நாங்கள் அறிந்ததே ஆனால், நாங்கள் உங்களுக்கு எவ்வாறு உதவ முடியும் என்பதுதான் எங்களுக்கு இன்னும் விளங்கவில்லை " என்று கூறினார்.

மேலும் நாங்கள் அழுத்தம் கொடுத்துக் கேட்ட பொழுது "முயலுகிறேன் என்று சொல்லி அனுப்பிவிட்டார்.. தமிழ் வழிக் கல்வி வளர்ச்சிக்குத் துணைநின்றால் நல்லதே.

அரசுக்கு, தாய்த்தமிழ் கல்விப் பணி அறக்கட்டளை முன்வைக்கின்ற கோரிக்கைகள்

தாய்த் தமிழ் பள்ளிகள் அரும்பாடுபட்டு நடத்திவரும் தமிழ்வழிக் கல்வியைப் பாதுகாக்க வேண்டி ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க ஆணை பிறப்பிக்க வேண்டும்.

தாய்த்தமிழ்ப் பள்ளிகளைத் தரம் உயர்த்த ஐந்தாம் வகுப்பு வரையிலும் நடத்திக் கொண்டு வரும் 16 பள்ளிகளை நடுநிலைப் பள்ளிகளாக அறிவித்து நிலை உயர்த்த வேண்டும்.

தமிழ் வழிக் கல்விக்கென்று இயக்ககம் அமைத்திட வேண்டும்.

தமிழ் வளர்ச்சித் துறை, தாய்த் தமிழ்- தமிழ் வழிப் பள்ளிகளைத் தன்துறையின் கீழே கொண்டு சென்று எல்லா உதவிகளையும் செய்திடவேண்டும்.

அமைப்புகளுக்கு வேண்டுகோளாகத் தமிழ்வழிப் பள்ளிகள் சிலவற்றை முன் வைக்கின்றன..

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியில் அக்கறையுள்ள அமைப்பினர் அனைவரும் தமிழ்வழிக் கல்விக்குத் துணை நிற்க வேண்டும்.

- சிவ செந்தமிழ்வாணன், தாய்த் தமிழ்வழிப் பள்ளி, அம்பத்தூர்

Pin It