சொத்து  விதி மீறலில் ஈடுபட்டதாக பி.டி.தினகரன்

கர்நாடக உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.டி.தினகரன் மற்றும் அவரது மனைவி வினோதினி ஆகியோருக்குச் சொந்தமாக சென்னையில் உள்ள ஒரு பல அடுக்குமாடிக் கட்டடம், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளதும், பத்திரப் பதிவின்போது தீர்வையைக் குறைத்துக் காட்டியும் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் புதிய புகார்  கிளம்பியுள்ளது.சம்பந்தப்பட்ட கட்டடம் சென்னை ஷெனாய் நகர் கிழக்கு பூங்காச் சாலையில் உள்ளது. ஐந்து அடுக்கு மாடிக் கட்டடம் இது. இதை கடந்த 1990ஆம் ஆண்டு நீதிபதி தினகரனும், அவரது மனைவி யும் சேர்ந்து வாங்கியுள்ளனர்.

இந்த விதி மீறல் குறித்து உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு நீதித்துறை மீதான நம்பகத்தன்மைக்கான அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வைகை அனுப்பி வைத்துள்ளார்.அதில், நான்கு மாடிகளை மட்டுமே கட்ட சென்னை  பெருநகர வளர்ச்சிக் குழுமம் அனுமதி அளித்திருந்தது. ஆனால் கூடுதலாக ஐந்தாவது மாடியைக் கட்டியுள்ளனர்.

இந்த ஐந்தாவது மாடி முழுக்க முழுக்க விதி மீறி கட்டப்பட்டதாகும். ஆனால் இதை அப்படியே மறைத்து விட்ட பெருநகர வளர்ச்சிக் குழுமம், கட்டடத்திற்கு கம்ப்ளீஷன் சர்டிபிகேட் கொடுத்துள்ளது.மேலும் முத்திரைத் தாள் மதிப்பையும் குறைத்துக் காட்டியுள்ளார் நீதிபதி பி.டி.தினகரன். இந்த இடத்தை தினகரன் தம்பதியினர் ரூ. 5.5 லட்சத்திற்கு (3236 சதுர அடி) வாங்கியதாக சார்பதிவாளர் அலுவக வில்லங்க சான்றிதழ் தெரிவிக்கிறது. பின்னர் 2001ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி, இந்த சொத்தில் தனது பங்கை வினோதினியின் பெயரில் நீதிபதி தினகரன் மாற்றியுள்ளார்.

2002ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி 2,688 சதுர அடி பரப்பளவை 2வது பர்ச்சேஸ் என்ற முறையில் வாங்கியுள்ளார். அதற்காக ரூ. 1.49 லட்சம் முத்திரைத் தாள் கட்டணத்தைக் கட்டியுள்ளார். ஆனால், அரசின் வழிகாட்டு மதிப்பீட்டின்படி, ஒரு சதுர அடியின் மதிப்பு ரூ. 1,069 ஆகும். அப்படிப் பார்த்தால் பத்திரப் பதிவுக் கட்டணம் ரூ. 28.73 லட்சம் வருகிறது. இதன் மூலம், ரூ. 27.24 லட்சம் குறைத்து கட்டப்பட்டு மோசடி செய்யப்பட்டுள்ளது.

மேலும் தினகரன் தம்பதியினரும், தினகரனின் மாமியாரும் அண்ணாநகரில் ரூ. 90.50 லட்சம் மதிப்பிலான இன்னொரு சொத்தை வாங்கியுள்ளனர். இதேபோல ஐடி காரிடார் சாலையில், சோழிங்கநல்லூரில், தமிழ்நாடு  வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான இடங்களை வினோதினி மற்றும் தினகரனின் இரு மகள்களான அமுதா, அம்ரிதா ஆகியோரின் பெயரில் வாங்கியுள்ளனர். முதலில் தனது மாமனார் ஜேம்ஸ் குப்புசாமி, மாமியார் பரிபூரணம் ஆகியோரது பெயர்களில் இந்த இடங்களுக்கு விண்ணப்பித்துள்ளனர். பின்னர் தனது மகள்கள் பெயரில் இவற்றை வாங்கியுள்ளார் தினகரன்.

தினகரனின் மாமனாரும், மாமியாரும் தாங்கள் கொடுத்த விண்ணப்பத்தில், தாங்கள் வருமான வரி கட்டுவதில்லை என்றும், வருடாந்திர வருமானம் முறையே ரூ. 55,668, ரூ 49,200 என்றும் காட்டியுள்ளனர். இதை வைத்துப் பார்க்கும்போது இருவரும் உயர் வருவாய் பிரிவினருக்கான நிலங்களை வாங்கத் தகுதி அற்றவர்களாகின்றனர். இதுதவிர சரளா, தினகரனின் சகோதரி விமலா, மைத்துனர் வில்லியம்ஸ் ஆகியோர் ஒன்றாக இட ஒதுக்கீடு கோரி விண்ணப்பித்துள்ளனர். பின்னர் மூன்று பேரும் ஒரே நாளில் தங்களது விண்ணப்பங்களைத் திரும்பப் பெற்றுள்ளனர். இறுதியாக, ஜேம்ஸ் குப்புசாமி, பரிபூரணம், வினோதினி ஆகியோரது பெயர்களில் முறையே ரூ. 6.9 லட்சம், ரூ. 5.15 லட்சம், ரூ. 5.15 லட்சம் மதிப்பீட்டிலான உயர் வருவாய் பிரிவினருக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இது முற்றிலும் விலை குறைத்துக் காட்டப்பட்டுள்ளது. இந்த விற்பனை முடிந்த அடுத்த 2 நாட்களிலேயே இந்த சொத்துக்கள், தினகரனின் மகள்கள் பெயருக்கு மாற்றப்பட்டுள்ளன. அந்த சமயத்தில் சொத்தின் மதிப்பு ரூ. 8.59 லட்சமாக காட்டப்பட்டுள்ளது. 2 நாட்களில் நிலத்தின் மதிப்பு ரூ. 3.5 லட்சம் உயர்ந்துள்ளது. அதுதான் அந்த நிலத்தின் உண்மையான மதிப்பாகும்.இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால், தினகரனின் மாமானார், மாமியார் பெயர்களில் சொத்துக்களை வாங்கி அவற்றை தனது மகள்களின் பெயருக்கு மாற்றி யுள்ளார். அதேபோல அண்ணா நகர் இடத்தையும் முதலில் பரிபூரணம் பெயரில் வாங்கி பின்னர் வினோ தினி பெயருக்கு மாற்றியுள்ளனர். இந்த அனைத்து சொத்துக்களின் மதிப்பும் பல கோடியாகும். இது தீவிரமாக விசாரிக்கப்பட வேண்டியதாகும் என்று கூறியுள்ளார் வழக்கறிஞர் வைகை.

 

Pin It